பெல்ட்டினால் ஏற்பட்ட வடு!

http://most-expensive.net/belt.

இந்த லிங்கினை மறக்காமல் வாசியுங்கள். இந்த லிங்கில் இருப்பது அனைத்தும் இந்த உலகத்தில் விலையுயர்ந்த பெல்ட்டுகள். போன வருடத்திற்கு முந்தின வருடம் டிசம்பர் மாதம் இந்த பெல்டுகளினை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அப்போது கைவசம் லேப்டாப் இல்லை. இம்முறையும் அப்படி தோன்றியதால் அதனை பகிர்கிறேன்.

முதலில் டிசம்பர் மாதம் நடந்த விஷயத்தினை சொல்கிறேன். அப்போது தான் நான் சாருவின் எழுத்துகளுக்கு அடிமையான நேரம். அவரின் ஆறாவது நாவலான எக்ஸைல் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அப்பா அம்மாவும் கோயில் புத்தக கடை என சுற்றிவிட்டு வெளியீட்டு விழாவிற்கு சென்றோம். அது தேனாம்பேட்டைக்கு அருகில் இருக்கும் காமராஜர் அரங்கத்தில். அந்த அரங்கத்திற்கு நான் போகும் போது மணி நான்கினை சுற்றி இருக்கும். நான் ப்ரௌன் நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும் நீலமும் கறுப்பும் கலந்த பென்சில் கட் ஜீன்ஸும் அணிந்திருந்தேன்.

பென்சில் கட் என்றாலே இடுப்பிற்கருகில் டைட்டாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் தான் எனக்கும் இருந்தது. அந்த அரங்கத்தின் முதல் படியில் காலினை வைத்தவுடன் எனது பெல்ட்டின் பக்கில் உடைந்தது. உடைந்தது மட்டுமல்லாமல் ஜீன்ஸில் இருக்கும் பட்டனும் பிய்ந்து அந்த படிகட்டின் வழியே உருண்டு ஓடிக் கொண்டிருந்தது. எப்படியும் விழா இரவு தான் முடியும் அது வரை தாங்கிக் கொள்ளலாம் என உட்கார ஆரம்பித்தேன். யாருடனும் அன்று நான் பேசவில்லை. இப்போது போல் சாருவின் வாசகர்களில் நிறைய பேரினை அப்போது எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் சாருவும் அவரின் ஒரு வாசகர் ஞான பாஸ்கர் ராஜாவும் தான். அவர் என்னுள் தனிக்கலகம் செய்து கொண்டிருந்தார். அவர் எப்படி இருப்பார் என போட்டோவில் தான் நான் பார்த்திருக்கிறேன். அதில் மீசை முடி என வைத்திருந்தார். ஆனால் அந்த போட்டோ எப்போது எடுத்தது என தெரியவில்லை நேரில் மொட்டைத் தலை ப்ரெஞ்சு தாடி! எனக்கு அடையாளமே தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் தான் அன்று நிகழ்ச்சியின் முகவுரையும் ஆற்றினார்!

இந்த பெல்ட் பிரச்சினையால் அந்த பேண்ட்டில் இன்னுமொரு பிரச்சினையும் எழுந்தது. அஃதாவது அதில் பட்டனும் இல்லை. நான்கடி எடுத்து வைத்தால் சிப் அவிழ ஆரம்பித்தது! முதல் படியில் பெல்ட்டும் பட்டனும் எனில் ஐந்தாவது படியில் இந்த சிப் விவகாரத்தினை அறிந்து கொண்டேன். சமைந்த பெண் போல் அமர்ந்தே இருக்க வேண்டியது தான் என வாசலில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டேன். உள்ளே சாருவிடம் ஆட்டோகிராஃப் வாங்கும் வரை எங்கு யாரேனும் இதை கண்டுபிடித்து விடுவார்களோ என பதறியது அனைத்தும் தனி மனிதனான நான் மட்டும் அறிந்ததே!

விழா முடிந்து எங்களுக்குள் அடுத்த பிரச்சினை இரயிலில் செல்வதா பேருந்தில் செல்வதா என. முதலில் இரயில் என சென்றால் இரயில் இரவு இரண்டு மணி என்றனர். செண்ட்ரலிலிருந்து கோயம்ப்பேட்டிற்கு அப்போது பேருந்து இல்லை நீங்கள் ப்ராட்வே சென்று விடுங்கள் என்று ஒரு போலீஸ் கூறினார். ப்ராட்வே சென்று முதலில் நான் செய்த வேலை ஒரு பெல்ட்டினை வாங்கினேன். அதை அணிந்தவுடன் தான் வெறும் வயிற்றில் இளநீரினை அருந்தினால் வயிற்றினில் ஒரு ஜிலுப்பு ஏற்படுமே அது போல் ஒரு உணர்வு. ஒரு வித மனநிறைவே அப்போது தான் ஏற்பட்டது. உலகின் சிறந்த விலையுயர்ந்த பெல்ட்டுகளெல்லாம் பிய்ந்துவிடாதா அல்லது அதற்கும் வாரண்டி காராண்டி சமாச்சாரமா ?

அந்த மனநிறைவு கூட இன்று இல்லை. அந்த சம்பவத்திலிருந்து பெல்ட்டிற்கு ஏதாவது ஆனாலே உள்ளூர பயம் தொற்றிக் கொண்டுவிடும். இன்றும் அதே போல் ஆனது. நான் சினிமாவிற்கு செல்வதென்றாலே அதிவேகமாக இருப்பேன். சாப்பாடு, படிப்பு, நூல்கள் என எதில் மெதுவாக இருந்தாலும் தியேட்டர் சென்று படம் பார்க்கிறேன் என்றால் மட்டும் அத்தனை வேகம் காட்டுவேன். திரைப்படத்திற்கு முன் போடப்படும் விளம்பரத்திலிருந்து எனக்கு பார்க்க வேண்டும். நண்பர்களுடன் போவதென்றால் அவர்களை அவசரப்படுத்தும் ஒரே ஜந்து அடியேன் தான். இன்றோ நான் தனியாகாத் தான் சென்றேன். தியேட்டரினை அடையும் போது தான் தெரிந்தது நான் ரொம்பவே சீக்கிரமாக வந்துவிட்டேன் என. என்ன செய்ய என தெரியாமல் அப்படியே நடந்து கொண்டு என் தோழியிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ரீசார்ஜ் செய்யலாமே என பர்ஸினை வெளியே எடுத்தேன். பெல்ட் காலி. என்ன தோன்றியதோ தெரியவில்லை வேகமான நடையுடன் தியேட்டருக்கு சென்றுவிட்டேன். ஆறே காலிற்கு தான் தியேட்டருக்குள் விடுவார்கள். நான் போனதோ ஐந்தரைக்கே. உள்ளே விடும் வரை ஒரு மரத்தில் முட்டு கொடுத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். இன்று அணிந்திருந்ததோ வேறு பேண்ட். இருந்தும் பயம். உள்ளே அனுமதிக்க ஆரம்பித்தவுடனேயே முதல் ஆளாய் போய் அமர்ந்தேன்.

கறுப்புத்திரை. டியூப்லைட்டின் வெளிச்சமும் ஃபேன் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அப்படியே அதனுடன் என் பெருமூச்சு. எப்படியோ வீட்டிற்கும் பயத்துடனேயே வந்து சேர்ந்தேன்.

பின் குறிப்பு : நான் பார்த்தபடம் - matru ki bijili ka mandola. விஷால் பரத்வாஜ் தமிழக இயக்குனர் ஹரியின் படங்களை அதிகம் பார்ப்பாரோ ???

Share this:

CONVERSATION