Black Swan - 2010

The reader பற்றிய என் பார்வையின் பதிவில் நான் திரைக்கலை என்பது மைம் என்பதிலிருந்து மருவி வந்தது என்பதனை பதிவு செய்திருந்தேன். இது அனைத்து ரக படாங்களிலும் எடுபடுமா என்பது அந்த படம் பார்த்ததிலிருந்தே எனக்குள் இருந்து வந்த சந்தேகம். இந்த சந்தேகம் கூட ஏனெனில் ரீடர் படம் காதல் வகையறா படம். அதனால் முக பாவனைகள் இந்த அர்த்தத்தினை தான் சொல்கிறது என யூகித்து விடலாம். காதலின் பாஷைகள் அனைத்து இடங்களிலும் ஒன்று போலவே இருப்பது தான் இந்த புரிதலின் வெற்றி. ஆனால் இதனை, வசனங்களை தவிர்த்து நடிப்பின் மூலம் மட்டுமே கதையினை உணர்த்துவது சைக்கோ படங்களில் சாத்தியமா ? இந்த கேள்விக்கான பதில் தான் Black Swan.


கருந்தேளின் விமர்சனம் - க்ளிக்கி வாசிக்கவும்.

இந்த கருந்தேளின் விமர்சனம் படம் பார்க்கும் முன் வாசிப்பது நல்லது. இப்படத்தினை நான் இவரது விமர்சனங்களை வாசிக்காமல் பார்த்ததால் அதிகம் புரியவில்லை. அதற்கு காரணம் நாம் பாலே என்னும் வகை நடனங்களை அதிகம் அறிந்ததில்லை. இந்த முழுப்படமே அந்த நடனத்தினை வைத்து தான் நகர்த்தப்பருகிறது. அது என்ன என்பனவற்றை அவரின் எழுத்திலிருந்து சொல்லி எனது பார்வைக்கு செல்கிறேன்.

//ஓடெட் என்பவள், ஒரு இளவரசி. வான் ரோத்பெர்ட் என்பவன் ஒரு மந்திரவாதி. இந்த இளவரசியைக் கடத்திவிடும் மந்திரவாதி, அவளை ஒரு அன்னப்பறவையாக மாறுமாறு சபித்துவிடுகிறான். பகலில் அன்னமாகவும் இரவில் இளவரசியாகவும் வாழ்ந்துவருகிறாள் ஓடெட்.
ஸிய்க்ஃப்ரைட் என்பவன் ஒரு இளவரசன். ஓர் நாள், தனது வருங்கால மனைவியைத் தேர்ந்தெடுக்கச்சொல்லித் தனது தந்தை வற்புறுத்தியதால், இதுவரை யாரையும் காதலிக்காத இந்த இளவரசன், கோபமுற்று அரண்மனையை விட்டு வெளியே வந்து, காட்டுக்குள் செல்கிறான். அங்கே இந்த அழகிய அன்னப்பறவையைப் பார்க்கிறான். அதை நெருங்கி, அது பெண்ணாக மாறும் அதிசயத்தைக் கண்ணுற்று, அதனிடம் பேசி, உண்மையை அறிந்துகொள்கிறான். அதேநேரத்தில் அங்கே வரும் மந்திரவாதியைக் கொல்ல முயலும் ஸிய்க்ஃப்ரைடிடம் பேசும் ஓடெட், மந்திரவாதி இறந்துவிட்டால், சாபத்தை முறிக்க இயலாது என்று சொல்லி அவனைத் தடுத்துவிடுகிறாள். ஓடெட் மீது காதல் வயப்படும் இளவரசன், அரண்மனைக்குத் திரும்புகிறான்.
அரண்மனையில், தனது தந்தையிடம் தனது காதலைத் தெரியப்படுத்தும் இளவரசன், அங்கே ஓடெட் போன்ற மாறுவேடத்தில் வரும் மந்திரவாதியின் பெண்ணை (இவள் கறுப்பு உடை அணிந்திருப்பாள்), உண்மையான ஓடெட் என்று நினைத்து, தந்தையிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறான். அதன்பின் காட்டுக்குத் திரும்பிச் செல்லும் இளவரசன், அங்கே உண்மையான, வெள்ளுடை தரித்து அமர்ந்திருக்கும் ஓடெடைப் பார்த்து, தனது தவறை உணர்ந்து ஓடெட்டிடம் மன்னிப்புக் கேட்கிறான். ஓடெட்டும் அவனை மன்னித்து விடுகிறாள். இதன்பின், தன் மீது உள்ள சாபம் தீர வழியேயில்லை என்று உணரும் ஓடெட், ஒரு மலையில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதோடு இந்தப் பாலே முடிகிறது (இது, ஒரு முடிவு. இன்னும் வேறுபட்ட பல முடிவுகள் இந்தக் கதைக்கு உள்ளன).//

இதனை கதை பிரதானமாக்குகிறது. கருந்தேள் முழுப்படத்தினையும் எழுதிவிட்டார். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. இக்கதையினை எத்தனை முறை பார்த்தாலும் கதை தன் தாக்கத்தினை(குழப்பத்தினை) எப்படியும் கொடுக்கும். மேலே சொன்ன கதைப்படி பெண் அன்னமாக மாற வேண்டும். அந்த நடனத்திற்கு ஸ்வான் குவீன் என்றொரு பட்டம் இருக்கிறது. அதில் ஏற்கனவே இருந்தவள் பெத் என்பவள். இந்த முறை அவளை நடனத்திலிருந்து நீக்கி புதிதாக ஒரு பெண்ணை நியமிக்கலாம் என நினைக்கிறார். அவள் தான் கதையின் நாயகி நீனா.

இந்த முறை நடனத்தினை சொல்லிக் கொடுக்கும் மாஸ்டர் புதியதாய் ஒரு நியமனம் செய்கிறார். அஃதாவது யார் வெள்ளை அன்னமாக ஆடுகிறார்களோ அவர் தான் கறுப்பு அன்னமாகவும் ஆட வேண்டும். இந்த கறுப்பு அன்னத்தினை தான் நான் அதிகம் சொல்ல நினைக்கிறேன். கதாபாத்திர வடிவமைப்பெல்லாம் எப்போதும் போல் அவளை சரி செய்ய இன்னுமொருத்தியினை வைப்பது - இப்படத்தில் அவளின் சகோதரி. அவர்களுக்கு இடையில் நடக்கும் முரண்பாடு என கதை செல்கிறது. மேலும் முன்பு அந்த இடத்தில் இருந்தவளுக்கும் நீனாவிற்கும் இருக்கும் கருத்து முரண்பாடு என.

சிறிது நாட்களுக்கு முன் கலையாகும் காமம் என பதிவு ஒன்று இட்டிருந்தேன். இப்படத்தில் காமத்தினை இயக்குனர் அழகுற கையாண்டிருக்கிறார். காமமும் கலையும் பிரிக்க முடியாதது என்பதனை அவர் படத்தில் வைக்கிறார். இலக்கியங்களில் உணர்வுகளின் உச்சமாக உணரப்படுவது காமம் தான். உச்சம் என்னும் விஷயத்தினை அதிகம் நாம் சிரிப்பு அழுகை வாதை என எதிலும் உபயோகிக்க மாட்டோம். காமத்தில் மட்டுமே உருவகமாக்கப்பட்டிருகிறது. அந்த உச்சம் என்பது ஒரு transitional state. அந்த நிலையில் நாம் என்னவாக இருப்போம் யாராக இருப்போம் என்பது தெரியாது. அதனை நம்மால் பிரதியாக்கவும் முடியாது. அந்த நிலையில் நாம் ஒருவராக மாறுகிறோம் என சொல்லியிருந்தேன் அல்லவா அது இக்கதையில் கறுப்பு அன்னமாக உருவகப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கறுப்பு அன்னத்தின் நடனமும் வெள்ளை அன்ன நடனமும் சற்று உளவியல் சார்ந்த ஒன்று. குணம் சார்ந்ததும் கூட. நீனா வெள்ளை அன்ன நடனத்திற்கு சரியாக ஒத்துப் போகிறாள். அவளுடைய குணமும் பயந்தாங்கொள்ளியாக இருக்கிறது. அவளுக்கு கறுப்பு அன்னமாக தன்னால் ஆட முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும் மாஸ்டருக்கு அது ஒத்துக் கொள்ளும் படி இல்லை. அது ஏன் என்பதற்கு அவர் சொல்லும் விஷயங்கள் பிரமிப்பூட்டியது. கறுப்பு அன்னம் என்பவள் ஒரு காமகெளுத்தி. அவள் மேடையில் வருகிறாள் எனில் அவளின் நடனத்தினை பார்க்கும் போது பார்வையாளனுக்கு காமத்தினை அள்ளிக் கொடுக்க வேண்டும். அப்படி அவளின் அசைவுகள் இருந்தால் மட்டுமே கறுப்பு அன்னத்தினை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது கலை முழுமைப் பெறும்.

காமமே இந்த கலையினை முழுமை செய்கிறது. கன்னிகழியாத காமத்தினை பற்றி ஒன்றுமே அறியாத பயந்தாங்கொள்ளியாக இருக்கும் நீனா எப்படி கறுப்பு அன்னமாக மாறுகிறாள் என்பதே கதை. இதனை horror உடன் அளித்திருக்கிறார் இயக்குனர். இதில் என்ன horror இருக்கும் என்பனவற்றையெல்லாம் திரையில் பாருங்கள்.

இப்பதிவின் ஆரம்பத்தில் தி ரீடர் படத்துடன் ஆரம்பித்தேன் அப்படியெனில் இப்படத்திலும் வசனங்களை தாண்டி நடிப்பின் ஆளுமை இருக்கத் தான் செய்யும். அதே போல் தான் இயக்குனர் தன் திறமையினை கொட்டி தீர்த்திருக்கிறார். இதே படத்தினை ஒரு டாக்டரின் பாத்திரத்தினை நுழைத்து நேரத்தினை குறைத்து எடுத்திருந்தால் இதுவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் சைக்கோ படமாக இருந்திருக்கும். அப்படியெடுக்காமல் சைக்கோ படத்தினை படத்தின் கரு போல நடனமாக எடுத்திருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் நீனா மனதளவு கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பு அன்னமாக மாறுகிறாள். அப்படி மாறுவதை அவள் உணர்கிறாள். அல்லது கற்பனை கொள்கிறாள். இந்த கற்பனையும் கதையில் உருவமாக வருகிறது. படத்தினை ஆழ்ந்து கவனித்தால் இந்த வெளியினை அழகாக உணர முடியும். யார் நீனா யார் நீனாவின் கற்பனை என அறிந்து கொள்வதிலேயே கதையின் ட்விஸ்ட் அதகளம் செய்கிறது.

இந்தப்படம் அவார்ட் நிச்சயம் வாங்கியிருக்கும் எனும் யூகத்தில் பார்த்தேன். பல நாடுகளில் குவித்திருக்கிறது. முக்கியமாக நீனாவாக நடித்திருக்கும் போர்ட்மேன். கதையில் அதனை நன்கு உணரலாம்.

பாலே நடனத்தினை பற்றி அதிகம் தெரியாததால் நான் எழுதவில்லை. கருந்தேளின் விமர்சனத்தில் வாசியுங்கள். உண்மையில் அதி அற்புத விமர்சனம் அது. அதில் பாலே பற்றி அதிகம் வருகிறது. நடனம் இதுவரை பார்த்திராமல் இருப்பதால் அழகாகவும் நுட்பமாகவும் இருக்கிறது.

படத்தின் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக நீனாவின் மன உணர்ச்சிகளுக்கேற்ப படத்தில் இசையின் டெம்போ ஏற்ற இறக்கங்களுடன் இணைத்திருக்கிறார். படத்தின் ஓட்டத்தில் இசை அதிகம் கை கொடுக்கிறது.

மொத்தத்தில் Black Swan படத்தில் நம் சுயத்தினை இழந்து படத்திற்குள் நுழைந்தால் மட்டுமே அதன் நுட்பமான கருவினை உணர முடியும். இந்த இயக்குனரின் ஏனைய படங்களையும் பார்க்க ஆசைப்படுகிறேன். மேலும் கருந்தேள் தன் கட்டுரையில் இந்த இயக்குனர் the double என்னும் நாவலினை வாசித்தும் இப்படத்தினை எடுக்க ஈர்க்கப்பட்டாராம். அது எனக்கு ஆகப்பிடித்த வெளிநாட்டு(ருஷ்யா) எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கி எழுதிய நாவல். அந்த நூலினையும் வாசித்து அனுபவத்தினை பகிர்கிறேன்.

Share this:

CONVERSATION