uzak - 2002

இப்படத்தினை பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி ஒன்றினை சொல்ல வேண்டும். அஃதாவது இப்படத்தினை ஏன் வாங்கினேன் எதற்காக வாங்கினேன் போன்றவற்றினை. சில நாட்களுக்கு முன் ‘தலாஷ்’ படத்தினை பற்றி சாரு நிவேதிதா விண் டி.வியில் பேசினார். அதில் உலகத்தில் திரைக்கலையினை இரண்டாக பிரிக்கிறார்கள் என்றார்.
1.ஹாலிவுட்
2.யூரோப்பியன் சினிமாக்கள்
இதில் இந்தியர்கள் இந்த ஹாலிவுட்டினை மட்டுமே பின்பற்றுகிறார்கள் என்பது அவர் வாதம். யூரோப்பியன் சினிமாக்களிலும் நல்ல நல்ல சினிமாக்கள் இருக்கிறது என்பதை அவர் சொன்னார். என்னுடைய முந்தைய கட்டுரைகளிலும் நான் சொல்லியிருந்தேன் இண்டெலெக்சுவல் பிம்பத்தினை அடைய நான் செய்கிறேன் என. சில நேரங்களில் இந்த பிம்பமே என்னிலிருந்து உடைந்து விடுகிறது. இந்த உசாக் என்னும் படம் நான் இதுவரை பார்த்ததில் மிகவும் வித்தியாசமான திரைப்படம். கதை சொல்லலிலும் சரி எடுத்த விதத்திலும் சரி.

அதனை சொல்வதற்கு முன் சிறுவயதில் நடந்த ஒரு விஷயம் எனக்கு நினைவிற்கு வந்தது. சிறுவயதில் வீட்டில் நல்ல படம் என சிலவற்றினை வகுப்பார்கள். அப்போதெல்லாம் நான் ‘விஜயகாந்தின்’ தீவிர ரசிகன். இப்போதும் கூட ஆனால் அது வேறு பார்வையில். அவர் மட்டுமல்ல நாட்டினை காப்பாற்ற பறந்து பறந்து எதிரியோடு சண்டையிடும் யாராயினும் நான் அவர்களின் ரசிகன். அப்படியிருக்கையில் அவர்கள் இந்திரா ரோஜா நாயகன் போன்ற படங்களை போட்டு இது தான் நல்ல படங்கள் என்பர். அதுவோ மிக மிக மெதுவாக செல்லும். உடனே நான் நினைப்பேன் மெதுவாக செல்லும் அனைத்து படங்களும் நல்ல சினிமாப் போல என்று.

இதனை ஏன் சொல்கிறேன் எனில் நான் பார்த்த உசாக் என்னும் படம் மிக மிக மெதுவான திரைப்படம்.


இந்தப் படத்தினை சந்தொஷமாக கொண்டாவெல்லாம் முடியாது. முழுக்க நடிப்பின் மூலம் மட்டுமே அஃதாவது வசனங்கள் அதிகமின்றி நடிப்பின் மூலம் மட்டும் சொல்ல வரும் விஷயத்தினை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.(குறிப்பு : நான் ஒரு முட்டாளுங்க. . . என்னும் எனது பதிவில் நான் சினிமா விமர்சனங்களில் கதையினை ஒப்புவிக்கிறேன் என ஒத்துக் கொண்டிருந்தேன். மாறுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன். இது போன்ற உன்னத படைப்புகளில் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. என் கருத்தாக கொள்ளுங்கள். சொல்வதற்கு ஆள் இல்லை என்பதாலேயே பதிவுதளத்தில் எழுதுகிறேன். . .)

உசாக் துருக்கி மொழி திரைப்படம். கதை இருவரை சுற்றியே நகர்கிறது. ஒருவன் மஹ்மூத். அவன் டைல்ஸ் கற்களை போட்டோ பிடித்து கொடுப்பவன். அதனை மட்டுமே கொடுப்பவனல்ல. பொதுவில் அவன் ஒரு புகைப்படம் எடுப்பவன். டைல்சிற்காக தன் திறமையினை செலவு செய்ய வேண்டுமா ஏன் தன் திறமையினை கலையாக மாற்றக் கூடாது என நினைப்பவன் அவன். அவனுடைய ஆசையெல்லாம் இயற்கையினை புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது. அதற்கு அவனுக்கு தடையாக இருப்பது கடந்தகால சோகங்கள். பிரிந்த தன் மனைவியின் மீது அவனுக்கு காதல் இருக்கிறது ஆனால் அவனுக்கோ அதனை வெளிப்படுத்த தெரியவில்லை. கதைக்கு முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று அவன் பணம் படைத்தவன்.

யூசுஃபினை பற்றி சொல்ல வேண்டுமெனில் அவன் தன் ஊரில் ஒரு பேக்டரியில் வேலை பார்க்கிறான் ஆனால் ஏதோ பொருளாதார பின்னடைவினால் அங்கிருந்து இஸ்தான்புல்லில் இருக்கும் சொந்தக்காரனான மஹ்மூத் வீட்டிற்கு வருகிறான். எப்படியாவது கப்பலில் ஒரு வேலையினை வாங்கிவிட வேண்டும் என்னும் எண்ணத்துடன். அது அவனுள் யாரோ விதைத்திருக்கிறார்கள். படிப்பினையும் சுமார் தான். அங்கு இஸ்தான்புல்லில் வேலை தேடி செல்லும் இடங்களில் கூட சிலர் கப்பலிலெல்லாம் வேலையும் கிடைக்காது சம்பளமும் கிடைக்காது என சொல்லுகிறார்கள். தன் குடும்பச் சூழ்நிலைக்கென அவன் மஹ்மூத்துடன் போட்டோ பிடிக்க செல்லும் இடமெங்கும் உடன் சென்று உதவுகிறான். ஆசையோ கப்பல் வேலையில் தான். கதையின் ஆரம்பத்திலிருந்து ஒரு பெண்ணினை பார்க்கிறான். அவளை பின் தொடர்கிறான். பேச அவனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை.

இந்த இரு கதைகளும் இணைந்து பயணிப்பது தான் உசாக். இயக்குனர் தலைப்பிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு கதாபாத்திரத்திடையே தூரத்தினை அழகுற உணர்ச்சிகளின் வாயிலாக காண்பித்திருக்கிறார். இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் இருவருக்கும் இடையே இருக்கும் ஈகோ. ஒரு குறிப்பிட்ட காட்சியுடன் சொல்கிறேன். மஹ்மூத் எதனையோ தேடுகிறான். எதனை என கேட்கும் போது ஒரு மாதத்திற்கு முன் வைத்த வாட்சினை என்கிறான். யூசுஃபும் எங்கு வைத்தீர்கள், மறந்து வேறெங்காவது வைத்திருப்பீர்கள், நணபனிடம் கொடுத்திருப்பீர்கள் என்கிறான். இப்படி கேட்டுக் கொண்டிருக்கும் போது மஹ்மூத் தேடிக் கொண்டிருந்த பெட்டியில் தான் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே யூசுஃப் தான் திருடியிருப்பானோ என சந்தேகம் செய்துவிட்டபடியால் அதனை எடுக்காமல் அப்படியே வைத்துவிட்டு தொலைந்தது தொலைந்ததாக இருக்கட்டும் என விட்டுவிடுகிறான். ஆனால் யூசுஃபின் மனதிலோ தன்னை திருடன் என நினைத்துவிட்டாரே என்னும் எண்ணம். அங்கிருந்து அடுத்த உணர்ச்சியினை நோக்கி இயக்குனரின் நாட்டம் செல்கிறது.

இப்படி சொல்லிச் சென்றால் நீண்டுகொண்டே செல்லும். இக்கதை முழுக்க உணர்ச்சிகள் மட்டுமே. ஒன்று மற்றொன்றினை ஆரம்பிக்கிறது. அதனை அழகுற அமைத்திருக்கிறார். போரடிக்கும் வாழ்க்கை அடையமுடியாத ஆசை சொல்ல முடியாத காதல் மீண்டும் சேர முடியாத சொந்தம் கண்ணெதிரே இருந்தும் அடைய முடியாத பெண் புரிந்து கொள்ள முடியாத உலகம் தன்னை விட்டுதர முடியாத எண்ணம் என ஒரு மெல்லிய இசையாக உசாக் செல்கிறது.

மஹ்மூத் மற்றும் யூசுஃபாக நடித்த இருவரின் நடிப்பும் அருமையாக இருந்தது. தேடி பார்க்கும் போது தான் தெரிந்தது இருவரும் கேன்ஸில் சிறந்த நடிகருக்கான அவார்ட் ஜெயித்துள்ளனர்.

உசாக்கின் டிரைலரை காண இங்கே க்ளிக்கவும்

Share this:

CONVERSATION