The motorcycle diaries - 2004

போன பதிவான அட்சக்கோடும் அசோகமித்திரனையும் இப்பதிவினையும் இணைக்க விரும்புகிறேன். இதுவும் இருவேறாக பார்வையாளனுக்கு பிரிந்து நிற்கிறது.

ஏன் என்று பார்த்தோமானால் இது  சேகுவேராவின் வாழ்க்கையின் ஒரு பகுதி. வரலாறு தெரிந்தவர்களுக்கு ஒரு விதமாகவும் வரலாற்றினை அறியாதவர்களுக்கு ஒருவிதமாகவும் இது நிற்கிறது. எந்தப்பார்வையில் இப்போது இதனை சிலாகிக்க இருக்கிறேன் எனில் முதல் ரகத்தில். அப்படி செய்தால் தான் திரைப்படம் என்னும் கலையின் அனுபவத்தினை சொல்ல முடியும்.

நாம் அனைவருக்கும் பயணம் செல்ல வேண்டும் என எண்ணம் இருக்கத் தான் செய்கிறது. அது நம் ஊரின் அருகே இருக்கும் ஒரு மலைப்பிரதேசம், அல்லது சின்ன நதி, அருகாமையில் இருக்கும் அணை, பயணம் என்பதே ஆன்மீகத்தின் நிலையினை பெரியவர்களால் தொட்டு சில நேரங்களில் ஆன்மீகப்பயணமாகவும் போய்விடுகிறது. இப்படி பயணம் என்பது பலவித உருவங்களை நம் சமூகத்தில் பெறுகிறது. அதன் ஒரு உருவத்தின் அல்லது அனைத்து உருவங்களும் ஒரு பயாணத்தில் அமைந்தது போன்றொரு உணர்வினை அளிப்பது தான் The motorcycle diaries. ஸ்பானிஷ் திரைப்படம்.


இப்படம் மொத்தம் இருவரினை கொண்டே கதையினை அமைக்கிறது. ஒருவன் எர்னஸ்டோ கதையில் மற்றொருவனால் அதிகம் ஃபுஸர் என்றே அழைக்கப்படுகிறான். அந்த மற்றொருவனின் பெயர் ஆல்பர்ட்டோ.

எனக்கு திரைப்படங்களை பற்றி எழுதச் சென்றால் நான் பெரிய சிக்கல்களுக்குள் சென்றுவிடுகிறேன். அஃதாவது கதையினை ஒப்புவிப்பது! இந்த விஷயத்தினை தாண்டி சொல்லவும் முடியாது. எனக்கிருக்கும் வாசகர்கள் சிலருள் இது போல வெளிநாட்டு திரைப்படங்களை பார்ப்பவர்களும் இருக்கின்றனர் தமிழ்ப்படங்களை மட்டுமே பார்ப்பவர்களும் இருக்கின்றனர். அதனால் இந்த கதை என்னும் விஷயம் இடையில் புகுந்து கொள்கிறது. இனி திரைப்படங்களை பற்றி ஒற்றை பத்தி எழுதினாலும் அதில் சந்தோஷம் கொள்ளலாம் என்னும் நிலைக்கு சென்றுவிட்டேன்.

பயணப்படங்கள் எனில் நம்மூர் அன்பே சிவத்தினை சொல்லலாம். ஆனால் அது போன்ற பயணத் திரைப்படத்திற்கும் இதற்கும் திரையின் கட்டமைப்பில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பொதுவாக பயணம் பற்றிய படங்கள் எடுப்பின்(நான் ஹிந்தி மற்றும் தமிழ்ப்படங்களை மட்டுமே பார்ப்பதால் இந்த முடிவிற்கு வந்திருக்கலாம்) கதை ஓடும் போது நாயகனுக்கோ அல்லது நாயகனுடன் வரும் நபருக்கோ ஊர் ஞாபகம் வரும். அப்படி வரும் போது அதை மிகைப்படுத்தி, திரையில் மிகைப்படுத்துதல் என்றாலே இது போன்ற இடத்தில் flash back தான். இப்படத்தில் இது போன்ற nostalgic தன்மையினை தொனிக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அது மிகைப்படுத்தி காட்டப்படுவதாக இல்லை.

நான் ஒப்பிடுவதை முழுதும் வெறுப்பவன். சில இடங்களில் மனதில் இந்த ஒப்பிடுதல் தானாக நிகழ்ந்துவிடுகிரது. அப்படி தோன்றி அதனை மறைத்து எழுதுவதில் எனக்கு இஷ்டமே இல்லை. வெளிநாட்டு படங்களை பார்க்கும் போது என் மனதில் தமிழ்ப்படங்கள் ஏன் இப்படியில்லை என ஒரு வித மனோபாவம் ஏற்படுகிறது. அது முழுதும் தவறு. வேறு மொழி படங்களை பார்க்கும் போது அந்தப்படங்கள் மீது புது விதமான கவர்ச்சி ஏற்படுகிறது. அதனால் தான் இங்கிருக்கும் படங்களினை அசூயையினை கொண்டு பார்க்கிறோம். பார்க்கிறேன். இனி அதனை நிறுத்தப்போகிறேன்.

இன்னுமொரு விஷயம் மக்களின் ரசனை. தமிழ்நாட்டில் பேரரசு இன்னமும் இயக்குனராக இருக்கிறார். இத்தனைக்கும் தன் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு புதுமையினை தர நினைக்கிறார். அவரே இசையமைப்பது, பாடுவது போல. ராஜமௌளி பத்திரிக்கையிலேயே சொல்கிறார் ஒரு படமெனில் முதல்பத்து நிமிடங்கள் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் பரவாயில்ல்லை ஏனெனில் அது மக்கள் செட்டில் ஆவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம். பத்தாவது நிமிடம் முடிந்த உடன் கதையினை ஆரம்பித்து குத்து கானா ஐட்டம் பாடல் சண்டை என களை கட்டி கதையினை முதல் பாதியிலேயே சொல்லி இரண்டாம் பாதியினை அவர்களை யோசிக்க விட்டுவிட்டு நாம் நினைப்பதை வைத்து முடிக்க வேண்டும் என்கிறார். இதைத் தான் நான் வித்தியாசமாக பார்க்கிறேன். இயக்குனருக்கும் படத்திற்கும் இடையில், இயக்குனர் பார்வையில் மக்களின் ரசனையும் இங்கே சேர்கிறது. அங்கேயும் இப்படித்தானா என ஒரு கேள்வியினை மனதில் எழுப்புகிறது.

இதனையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் எனில் படத்தில் குவேரா காந்தியவாத கொள்கைகளை கொண்டு உண்மை பேசுவது, நேர்மையாக இருப்பது, ஏதாவது நல்லது செய்யணும் என்பது, அநியாயத்தினை கண்டு பொங்குவது என செய்யும் போது அதை மிகைபடுத்தி காட்டாமல் சாதாரணமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். ஹீரோயிக்கான பாத்திரத்தினை கையினில் கொண்டு அவர் செய்யும் ஹீரோயிக் வேலைகளை கூட சாதாரண மனிதன் செய்வது போல் எடுத்திருப்பது தான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

கொஞ்சம் சே குவேராவின் வாழ்க்கையினை இப்படத்துடன் நான் சேர்க்க நினைக்கிறேன்.
சே குவேராவின் வாழ்க்கையினை மூன்றாக பிரித்திருக்கின்றனர் சினிமா இயக்குனர்கள். ஒன்றுதான் இந்த The motorcycle diaries. இதில் ஆல்பர்ட்டோ என்னும் தன் நண்பனுடன் சே மேற்கொள்ளும் பயணம். இந்த பயணம் தான் அவனை அவனுக்குள் இருக்கும் அந்த போராளியினை அடையாளம் காட்டியது. அதுவும் குறிப்பாக சூக்கி கமாட்டா என்னும் சுரங்கம். அந்த சுரங்கத் தொழிலாளிகளுடன் சே பேசும் போது தான் அங்கு நடக்கும் கொத்தடிமைத்தனத்தினை அறிந்து கொள்கிறார். அதன் பின் ஆல்பர்ட்டோவுடன் அமேசான் நதிக்கரை தொழு நோயாளிகளுடனான நாட்கள். இவை சேர்ந்து கூட்டு கலவையாக இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

சூக்கி கமாட்டாவின் காட்சிகளை படம் பார்க்கும் போதே அதீத ஆர்வத்துடன் பார்த்தேன். நினைத்ததை விட அவர்களின் வசனமும் காட்சியமைப்பும் அநாயாசமாக இருந்தது.

படத்தில் பகடி அதிகமாக இருக்கிறது. கூர்ந்து வசனங்களை, சாரி சப்-டைட்டிலினை கவனித்தால் நன்கு சிரிக்கலாம். தமிழ் நாட்டில் இருப்பதால் அதிகம் லத்தின் அமேரிக்க நாடுகளை பார்க்க முடிவதில்லை. நமது நாட்டில் எடுக்கும் படங்களும் அமேரிக்கா ருஷ்யா போன்ற நாடுகளையே காண்பிக்கிறது. அதனால் இதில் காண்பிக்கப்படும் சீலே, அர்ஜெண்டினா, பெரூ அதில் அவர்கள் சொல்லும் வசனங்கள் அங்கு இருக்கும் நடைமுறைகள் நம்மை ஆச்சர்யம் கொள்ள வே வைக்கிறது.

மீதி இரண்டு che என்னும் தலைப்பில் இரண்டு பாகமாக வந்திருக்கிரது. ஒன்று கூபப் பிரட்சி மற்றொன்று பொவீலிய போராட்டம். இதில் நான் பொவிலிய போராட்டம் இருக்கும் படத்தினை பார்த்திருக்கிறேன். இடையில் இருக்கும் படம் கிடைத்தால் பார்ப்பேன். தேடிக் கொண்டிருக்கிறேன்.
கருந்தேளின் சே பற்றிய விமர்சனம்

சே குவேராவின் மரணம் வரை எடுத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு பின்னும் சின்ன உருக்கமான ஒரு விஷயம் இருக்கிறது. சே குவேரா இறந்தது 1967 இல். அதற்கு பின் அவரின் உடலை கூப மக்கள் அமேரிக்காவிடம் கேட்டனர். அவர்கள் தர மறுத்து விட்டார்கள். அதன் பின் 1997 இல் சே வின் உடலை எலும்பும் சிறு தோளுடனும் கண்டெடுத்தார்களாம். அதை கூபாவின் நாட்டு மத்தியில் வைத்து ஊரே வருத்தம் தெரிவித்ததாம்.

இந்த படத்தினை(The motorcycle diaries)அருமையான படம் என சொல்வதை விட அருமையான பயணம் என சொல்ல ஆசைப்படுகிறேன்

இப்படத்தின் டிரைலரை காண இங்கே க்ளிக்கவும்

பி.கு : இப்படத்தின் இசை மெல்லியதாக படம் முழுதும் வருகிறது. கேட்கவே பயணத்திற்கு ஒன்றியது போலவே இருந்தது. அதைவிட இதை எங்கோ தமிழ்ப்படத்தில் கேட்டிருக்கிறோமே என்றும் தோன்றியது. பார்த்தவர்கள் யாருக்காவது இதே சந்தேகம் வந்து தெளிந்திருந்தால் சொல்லுங்கள்.

Share this:

CONVERSATION