நேனோவும் அரைவேக்காட்டு புரிதலும். . .

இக்கதையினை பொருத்தவரை என்னால் விமர்சனம் செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அது ஏன் என்பது தலைப்பிலேயே இருக்கிறது. இக்கதையினை தங்களிடமே ஒப்படைக்கிறேன். பிறகு என்ன எழுதப்போகிறேன் எனில் நான் தனியே வாதம் செய்யப் போகும் பகுதிகளை.

இக்கதையினை பார்ப்பதற்குமுன் நான் செய்த சிறுதவறை சொல்லியே ஆக வேண்டும். சிறிது நாட்களுக்கு முன் கருந்தேள் பின்நவீனத்துவத்தினை பற்றி எழுதியிருந்தார். நான் லிங்க் கொடுத்திருந்தேன் இருந்தாலும் மறுபடியும் கொடுக்கிறேன். http://karundhel.com/2012/12/necrophiles-morgue-keeper-1.html. இங்கேயே என் அரைவேக்காட்டுத் தனம் தொடங்கியது. அதுவும் இந்த லிங்கிலேயே இருக்கிறது. பின்னிருக்கும் பின்னூட்டங்களில். இங்கும் அதனை இடுகிறேன். அவரின் கருத்துப்படி நேநோ ஒரு பின்நவீனத்துவ படைப்பு. அதில் மையம் இல்லை. உடனே நான் மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் நூலினை எடுத்தேன் கட கடவென வாசித்தேன். தாங்கள் வாசிக்க அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு

http://issuu.com/tfqm/docs/tfqm_-_august_2012/1

இதில் பதிமூன்றாம் பக்கத்தில் இருக்கிறது. இக்கதையில் முழுக்க ஜனனம் நடக்கும் அல்லது சம்பவிக்கும் இடத்தில் எத்தனையோ வாதைகள் நிகழ்கிறது என்பதை சொல்கிறது. ஆரம்பத்திலும் சரி கடைசியிலும் சரி இடையிலும் சரி. அப்படியிருக்கையில் இது மையம் தானே!!! பின்நவீனத்துவமோ மையத்தினை உடைப்பது. இந்த இரண்டும் ஒருசேரவே இல்லையே என தலையினை பிய்த்துக் கொண்டேன். கருந்தேளிடமே கேட்டேன்.

கரு வேறு மையம் வேறாம். கரு என்பது ஒரு கதையில் அதன் படைப்பாளி என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை சொல்வது. அதே மையம் என்ன எனில் படைப்பாளியின் கருவினை வாசகனிடம் கொண்டு செல்ல தனக்குள் ஏற்கனவே கட்டமைத்து வைத்திருக்கும் வழியினை வாசகனுக்கு கொடுப்பது அல்லது திணிப்பது. இது நவீனத்துவத்தில் அதே பின்நவீனத்துவத்திலோ ஒரு வழியல்லாமல் பல வாழிகளை அப்படியே கொடுக்காமல் இது தான் வழி என காட்டி செல்வது.

இதனையும் சரிவர புரிந்து கொள்ளாமல் கருவினை வழிநடத்துவது தான் மையமா எனக் கேட்டேன். அவரோ சில இடங்களில் மட்டும் தான் அந்த கோட்பாடு நிறைவேறும் அநேகம் இடங்களில் அதற்கு வாய்ப்பில்லை என்றே சொன்னார். மேலும் அடாவடித் தனமாக அந்த வரிகளிலேயே இருந்ததால் அதை நிரூபனம் செய்தே தீருவேன் என்றிருக்காதீர்கள் என சொல்லி சென்றுவிட்டார்.

எனக்கு தான் மனக் குழப்பமெல்லாம். நேனோ கதையினை பொருத்தவரை மேலே சொன்னது போல் ஒரே ஒரு கரு அது ஜனனமும் மரணமும் ஒரே இடத்தில் நிகழ்வது. கதையின் ஆரம்பத்தில் நேனோ முனியாண்டி மற்றும் நம்மையும் கதையில் இழுக்கும் வண்ணம் இழுத்து அனைவரின் ஜனனமும் ஒன்று போல் தான் நிகழ்கிறது என்கிறார். உடனே உருவானது நேனோவா முனியாண்டியா என ஒரு கேள்வி. நாம் மீண்டும் வாசித்து வந்ததை வாசிக்க வேண்டிய நிலைமை வருகிறது ஆனால் வாசிக்க முடியாது. எப்படியெனில் இக்கதையில் எந்த ஒரு இடத்திலும் நிறுத்தற்குறியீடுகள் இல்லை. ஆதலால் எந்த இடத்திலும் நாம் நிறுத்த முடியாமல் கதையினை தொடர்ந்து கொண்டே செல்கிறோம்.

இதனை போர்கீஸிய முறை என்கின்றனர். அது என்ன போர்கீஸிய முறை எனில் வார்த்தைள் காகிதத்தில் வழிகிறது என வைத்துக் கொள்வோம். அதில் தொடர் வாக்கியங்களுக்கோ அல்லது வார்த்தைகளுக்கோ தொடர்பு வெளிப்படையாக இல்லையெனினும் தொடர்பு இருக்கிறது. அவ்வாறு புனைவினை எழுதினால் அது தான் போர்கீஸிய முறை.

இக்கதையில் நிறுத்தற்குறியீடு இல்லையென்பதால் நம் இஷ்டத்திற்கு அதனை வடிவமைத்துக் கொள்ளலாம். அதன்பின் நேனோ உருவான கதையினை பிரதி சொல்கிறது. அங்கிருந்து கதை கிரேக்க நாட்டிற்கு பயணம் கொள்கிறது. இந்த இடம் தான் ஆங்கிலத்தில் என்னை திக்குமுக்காட வைத்தது. தமிழில் சில பகுதிகள் இல்லையாம். அவை மூலப்பிரதியில் மட்டும் இருந்திருக்கிறது. அதனையும் மேலே உள்ள லிங்கில் காணமுடியும். அதில் ஏகப்பட்ட வரலாறுகளை ஒரு வரிகளில் அல்லது வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். கிரேக்கத்தினை பற்றி எனக்கு என்ன தெரியும். . .ஒண்ணும் தெரியாது என்பதால் அடுத்து சென்றேன். தமிழ்ப்பிரதியில் அடுத்து நேநோ பேசுவது போல் வரும் அதில் நேனோ கவிதை ஒன்று சொல்ல அது கவிதையே அல்ல என வாசுகி புகார் செய்ய அங்கு மீண்டும் குழப்பம். அதனை யோசிப்பதற்குள் வாசுகி அதே கதையின் முழுமையினையும் சொல்ல அதன் நீட்சியில் கதை முடிகிறது.

இது நிச்சயம் விமர்சனம் கிடையாது. விமர்சனத்தினை செய்ய நிச்சயம் நான் கதையினை புரிந்திருக்க வேண்டும். அது எனக்கு மிகப்பெரிய சவால். ஜனரஞ்ஜகமான கதையும் அல்ல இது. இக்கதையினை வைத்து பொருளீட்ட முடியுமா என்பது தமிழ்நாட்டில் சந்தேகம் அதே உலகளவில் புகழீட்டமுடியும். இக்கதையில் குறைபாடு இருக்கலாம் ஆனாலும் அந்த குறைபாடும் கதையாக இருப்பின்??? இது தான் இக்கதை என சொல்ல வருகிறேன். இது ஒரு வகையான illusion. நமது உணர்வுகளை சிந்தனைகளை தூண்டிவிடுகிறது. அந்த தூண்டுதல் சில தேடல்களை நம்முள் விதைக்கிறது. உதாரணம் சொல்கிறேன். கதையில் நேநோ கவிதை என சொல்லி ஒன்றினை சொல்கிறது. அதனை வாசுகி எதிர்த்து ஒன்பது கேள்வியினை கேட்பதாக சொல்கிறாள் ஆனால் ஐந்து கேள்விகளே கேட்டாள். அங்கிருந்த ஒரு பார்வையாளன் உடனே ஒன்பதில் ஆறு கேள்விகள் தான் கேட்டிருக்கிறாய் என கேட்க the hermit of the 69th street என்னும் நாவலினை வாசி என வாசுகி சொல்கிறாள்.இங்கிருந்து கதை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இது ஒரு வகையில் இருத்தல் சார்ந்த இலக்கியம். நம் வாசிப்பு எந்த இடத்தில் நிகழ்கிறதோ அங்கு மட்டுமே நமது இருத்தலை அனுமானிக்கிறோம். அதற்கு எடுத்துக் காட்டே மேலே சொன்னது.

நான் ஆரம்பத்திலேயே சொன்னது போல் இது என் அரைவேக்காட்டு புரிதல் தான். இதனை விமர்சனம் என கொள்ளாதீர்கள். அந்த கிரேக்க கதைகளையெல்லாம் தேடுகிறேன். முழுது புரிந்து கொண்டால் நிச்சயம் பகிர்கிறேன்.

இந்த போர்கேஸ் பற்றி தேடும் போதும் சில சுவாரஸ்யமான பதிவுகள் கண்ணில் சிக்கியது. அதனையும் புரிந்தால் பகிர்கிறேன்.

Share this:

CONVERSATION