சிந்தனையாளன்!!!!

எனக்கும் இந்த நூல்களுக்கும் வாஸ்து சரியில்லை என நினைக்கிறேன். என்னை பொருத்தவரை ஒரு விஷயத்தினை முழுதும் அறிந்து கொண்டால் தான் அதனை எதிர்த்தோ அல்லது பாராட்டியோ எழுத முடியும். இந்த கோட்பாட்டினை எழுத்திற்கு அஃதாவது நூல்களுக்கு கொண்டு வந்தால் அது என்னிடம் சாத்தியமற்று போகிறது. ஒரு எழுத்தளனை பொருத்தவரை அவனை பற்றி அறிந்து கொள்ள அவனின் அனைத்து நூல்களையும் வாசிக்க வேண்டும். நானோ எந்த எழுத்தாளரை எடுத்துக் கொண்டாலும் சரியாக இரண்டு நூல் தான் வருகிறது! எதற்கு அத்தனை நூல்களையும் வாசிக்க வேண்டும் எனில் ஒரே விஷயத்தினை மறுபடியும் வெவ்வேறு கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருக்கிறாரா அப்படி சொல்லவில்லை எனில் சூப்பர். அதே எழுதியிருக்கிறார் எனில் அவர் ஒரு சம்பவத்தினை கையினில் எடுத்திருக்கிறார் என்பது அர்த்தம். ஒரு சம்பவம் நிகழ்கிறது எனில் அதன் மூலம் நாம் தெரிந்து கொள்வதோ அநேகம். ஒரு புதினத்தினை படைக்கும் போது அதற்கு பல்வேறு கிளைகளை நம்மால் நிச்சயம் வைக்க முடியும். இதை வெவ்வேறு நாவல்களில் வைத்தால் நிச்சயம் பாராட்டலுக்குரியதே. இதை இன்னமும் தெளிவாக்க வேண்டுமெனில் ஆய்த எழுத்து திரைப்படம். ஒரு சம்பவம் நிகழ்கிறது. அதிலிருந்து கதை பல்வேறு பரிணாமம் எடுக்கிறதே அதே தான்.

Thermodynamics இல் இரண்டு முக்கிய கோட்பாடுகள் இருக்கிறது. system மற்றும் surroundings. இங்கு எதற்கு இதனை முன்னிறுத்துகிறேன் எனில் ஒரு படைப்பு படைக்கப்படும் போது எழுத்தாளன் என்பவன் முதலில் சொன்னதாகிறான். அவனை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் surrounding ஆகிறது. இவ்விரண்டும் சேர்ந்தது தான் பிரபஞ்சம் என அதே கற்பிதம் கற்றுக் கொடுக்கிறது. படைப்புகளில் பொருத்தவரை எழுத்தாளனின் கருவிற்குள் தன்னை சுற்றி நிகழும் விஷயத்தினையும் கொண்டு வர முயலுவான். அந்த முயலுதலில் அவன் வாசிப்பது அவன் தெருவில் நடந்த சண்டை, பேசப்பட்ட பேச்சு, நாட்டில் நடந்த திடிர் மாற்றம் திடிர் மரணம் என எத்தனையோ விஷயங்கள் கருவிற்கு தொடர்பற்று இருந்தாலும் எழுத்தாளன் தொட்ர்புடையதாக மாற்றுகிறான். அதனால் தான் சாமான்யனைக் காட்டிலும் எழுத்தாளன் வித்தியாசமாக தெரியப்படுகிறான்.

இந்தக் கோட்பாட்டினை நம்மால் அதிகம் உணர முடியாது. ஏன் எனில் சிலர் இங்கு நடக்கும் சம்பவங்களை இடம் மாற்றி வெளிநாட்டில் நடப்பது போலவே  எழுதியிருக்கலாம் சிலர் அப்படியே எழுதினாலும் அதை நம்ப முடியாத மாதிரி எழுதியிருக்கலாம். ஆனால் அப்படி நாம் இது உண்மைதான் என உணரும் போது இப்படியும் கதைகளை எழுதலாமா என நினைப்போம். அப்படி நான் உணர்ந்த ஒரு படைப்பு தான் “அசுரகணம்”. மீண்டும் க.நா.சு வின் கானகத்தின் வழியே. . .


இந்நாவல் என்னுள் அதிகம் தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஏன் என்பது முக்கியமான விஷயம். ‘வாழ்ந்தவார் கெட்டால்’ என்னும் நாவலினை பற்றி எழுதும் போதே இவரின் நடையினை பற்றி சொல்லியிருந்தேன். அது எனக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை பின்னர் பழகியது என. இப்போது தான் அவரின் நடையினை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

நீங்கள் டைரி எழுதும் பழக்கமுடையவர் ஒரு டைரியினை எழுதுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது நடந்து கொண்டிருக்கும் மாதம் டிசம்பர். ஜூன் மாதம் எழுதிய ஒரு சம்பவத்தினை இப்போது மாற்றியமைக்க நினைக்கிறீர்கள். எழுத்தினை டைரியில் மாற்ற முடியுமா ? அதே போல் தான் இவரின் நாவலினை அணுக வேண்டும் என கண்டுகொண்டேன்.

நாவல் எணும் பட்சத்தில் வாசகன் எதிர்பார்ப்பது அனைத்தும் கதை மட்டுமே. அப்படியிருக்கையில் அதன் கட்டமைத்தலில் எழுத்தாளர்கள் இருவகையாக பிரிந்து இருக்கிறார்கள். ஒன்று நாவல் என்பது பிரதிக்குள் இருக்கும் வாழ்க்கை என அதை எதுவும் மாற்றாமல் எழுதியதை அப்படியே பிரதியாக்குவது. இன்னுமொரு வகை மாற்றம் தேவையான இடங்களில் மாற்றத்தினை வைப்பது. க.நா.சுவின் எழுத்து நடை ஒரு டைரியில் கதை எழுதப்பட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வினை கொடுக்கக் கூடியது.இது அசுரகணத்திற்கு மட்டுமல்ல இப்போது மீண்டும் வாழ்ந்தவர் கெட்டால் நாவலினை வாசித்தாலும் இதைத் தான் சொல்வேன்.

இந்நாவலினை பொருத்தவரையில் இதனை நான் கொண்டாடினேன். அனைவராலும் கொண்டாட முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. நான் ஏன் இதனை கொண்டாடினேன் என்பது முக்கியமான விஷயம். ஒரு கமர்ஷியல் திரைப்படம் பார்த்தாலோ அல்லது சண்டை, திகில், சஸ்பென்ஸ் படம் பார்த்தாலோ அதில் என் கவனம் முழுக்க அக்கதையின் வில்லன் மேல் தான் இருக்கும். இவ்வுலகத்தில் மிகவும் பிடித்த மனிதன் யாரெனில் நான் ஹிட்லரினை தான் சொல்வேன். இப்போது இங்கு ஹிட்ல்ர் என எழுதும் போது கூட ஹிட்லர் தானாகவே மேடையில் ஏறி நான் தான் இனி உங்களின் மேயர் தேர்தலெல்லாம் தேவையில்லை என்று சொன்னதன் கம்பீரம் தான் நினைவிற்கு வருகிறது.

இதனை ஏன் சொல்கிறேன் எனில் இவ்வுலகில் உள்ள அனைத்தினையும் இரண்டு கணங்களாக பிரிக்கிறார்கள்.ஒன்று தேவகணம் மற்றொன்று அசுரகணம். அர்த்தங்கள் ஒரு பிரச்சினையும் இல்லை. தேவகணம் எனில் அது நல்லதுகளை குறிப்பது அசுரகணம் எனில் அது தீயதுகளை குறிப்பது. இந்த அசுரகணங்களின் மீது நமக்கு காலங்காலமாக ஒருவித மையல் இருக்கத் தான் செய்கிறது. இது நிராகரிக்க முடியாத ஒரு விஷயம். உதாரணம் கொசுவினை சாகாடிப்பது. இக்கதையில் சொல்வதோ கரப்பான்பூச்சியினை கவிழ்த்தி போடுவது. கொசுவினை சாகடிக்காமல் அழகு பார்க்க முடியாது தான் ஆனால் வதை என்னும் பிரிவின் கீழ் அது வந்து விடுவதால் அது அசுரகணத்தின் பாற்பட்டதே!

இந்த அசுரகணத்தின் மேல் இருக்கும் ஈர்ப்பினை அழகுற ராமன் என்னும் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் க.நா.சு. அந்த நாயகனின் வடிவமைப்பினால் தான் இப்பதிவிற்கு சிந்தனையாளன் என்று பெயரிட்டிருக்கிறேன்.

ஈகோ என்னும் விஷயத்தினை முன்னிலை படுத்தி நிறைய நாவல்கள் வந்திருக்கிறது. நான் சிலாகித்திருக்கும் ஒன்றிரண்டு நாவல்கள் கூட அதன் பிண்ணனியில் இயற்றப்பட்டதே. இந்நாவலோ அந்த ஈகோ என்னும் குணத்திற்கு புதிய பெயர் இடுகிறது. அது தான் சிந்தனையாளன். இந்த பிம்பத்தினை க.நா.சு இந்நாவலிலேயே உருவாக்கி இதிலேயே உடைக்கிறார். கதையின் நாயகன் மற்றவர்களைப் போல் தாம் இருக்கக் கூடாதே என்பதற்காக தன்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் மாற்றிக் கொள்கிறான்.

இந்த மாற்றம் என்னும் விஷயமே ஒரு புதிரான ஒன்று தான். எப்படி சொல்லலாம் எனில் நமக்கு குணாதிசியங்களாக மாறிப்போன விஷயம் சிலருக்காக, அது நன்மையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது தீமையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது மாற்றும் போது அது செயற்கைத் தன்மையினை அடைகிறது. இதைத் தான் சென்ற வாரம் விஜய் டி.வி நீயா நானாவிலும் பிரச்சினையாக ஓடியது. இதைத் தான் கதையின் நாயகன் கதை முழுக்க செய்கிறான். தன்னை ஒரு சிந்தனையாளன் என மாற்றிக் கொள்ள தனக்குள்ளேயே எவ்வளவோ  விஷயங்களை சித்தரிக்கிறான். அதோடு நின்றுவிடாமல் அந்த சித்தரிப்பினை வெளிக்கொணர, அல்லது பிறரிடம் நான் சக மனிதனை போல் அல்ல என நிரூபிக்க வெளிக்காட்ட முயற்சிக்கிறான். ஆதவன் இதை பிம்பம் என்கிறார் க.நா.சு சிந்தனையாளன் என்கிறார். சற்று தெருவில் இறங்கி நம்மை சுற்றி இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என உற்று கவனித்தாலே இந்த பிம்பங்களை நன்கு உள்வாங்கிக் கொள்ள முடியும்.

இந்நாவலின் கதை. ஒரு சிறுகதை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதுவும் ஆறு பக்க சிறுகதை. அக்கதையினை நூறு பக்க நாவலாக மாற்ற வேண்டும் ஆனால் வாசகனுக்கு சலுப்பே ஏற்படக்கூடாது எனில் அதன் விளைவு தான் இந்நாவல். இதில் கதை என்பது சிறுகதை அளவு தான் இருக்கிறது. அதில் நாயகன் சிந்தனையாளன் என்னும் போர்வைக்குள் செய்யும் வாத விவாதங்களை சற்று விரிவாக்கி சிறிதும் வாசகனை சோர்வடைய வைக்காமல் அந்த சிறுகதை நாவலின் அம்சத்தினை பெறுகிறது. அந்த வாத விவாதம் தான் நான் மேலே சொன்ன thermodynamics கோட்பாடுகள். க.நா.சு அந்த நாவல் இயற்றும் நேரத்தில் எழுந்த சந்தேகங்களா அல்லது அப்போது வாசித்த சிக்மண்ட் ஃப்ராய்டா என தெரியவில்லை ஆனால் நாவலில் அசாதாரணமாக நுழைத்திருக்கிறார்.

வாசிக்காதவர்கள் வாசித்து பாருங்கள்.விலை கம்மிதான். எழுத்தின் ஒருவகை பரிணாமம் “அசுரகணம்”. இந்நாவலுக்கு தனியே தலைவணங்குகிறேன். க.நா.சு உண்மையில் நல்ல சிந்தனையாளன் தான். என்ன இப்போது உயிருடன் இல்லை!!!

Share this:

CONVERSATION