என்று தணியும் இந்த நினைவுகள் தாகம். . .

எனது போன பதிவில் கற்றுத் தர மறந்த கல்வி என நான் அனுபவித்த சில கசப்பான அனுபவங்களை எழுதியிருந்தேன். ஆனால் அவைகளை ஏன் திடிரென எழுதினேன் என்பது கொஞ்சம் சுவாரஸ்யமானதும் வசந்த காலத்துடன் தொடர்புடையதும் கூட.

அதனை அன்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய பழக்கம் என்ன எனில் நான் ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும் போது என் பள்ளிக்கு செல்வது பழக்கம். அது எனக்கு சின்ன சொர்க்கத்தினை போல. அது என்ன சின்ன சொர்க்கம் எனில் சிறுவயதில் நான் வாசித்த கதைகளிலெல்லாம் சொர்க்கம் மிகப்பெரியது என்பர். அதனை கண்டது கிடையாது. நினைவுகளில் மட்டுமே சித்தரித்துள்ளேன். இப்போது தான் தெரிகிறது அது என் பள்ளி என்று.கல்லூரி சேர்வதற்கு முன் கல்லூரி இப்படித் தான் இருக்கும் என நிறைய முன்முடிவுகள் அநேகம் மாணவர்களிடம் இருப்பது வழக்கம். நான் மட்டும் என்ன விதிவிலக்கா ? இந்த மீடியாவின் ஊடுருவளால் நமக்குள் அந்த எண்ணம் வளரத் தான் செய்கிறது. நிறை வேறாமல் போகும் போது ஏதோ ஒரு கடந்த கால கட்டிடம் நமக்கு உன்னதமாய் படுகிறது அப்படி பட்டது என் St.John's.

என் பள்ளியிக்கு மொத்தம் நான்கு வாசல்கள். இரண்டு அருகாமையிலேயே இருக்கிறது. அந்த இரண்டிற்கும் இடையில் முன் தென்னை மரங்கள் இருந்தது. இப்போது ஒரு கட்டிடம் வந்திருக்கிறது. அந்த இரண்டும் சப் வாசல்களே. அதில் ஒன்றின் ஆரம்பத்தில் என் பள்ளிக்கென இருக்கும் Federal bank இன் கிளை மற்றும் பள்ளியின் ஆடைகளை தைக்கும் இடம். மற்றொன்றின் ஆரம்பத்தில் தேவாலயம். சற்றே பெரியது தான். இந்த தேவாலயத்தின் காப்பில் முதியோர் இல்லமும் என் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. இந்த தேவாலயத்தினை கடந்த உடன் இரண்டு சப் வாசல்களும் இணைந்து பள்ளியின் பிரதான வாசலுக்கு செல்லும்.  அப்படி செல்லும் பாதையில் வலது பக்கம் முழுக்க eco park. அங்கு முழுக்க மரங்களும் செடிகளும் மற்றும் ஒரு முறை அங்கு அறிவியல் பொருட்காட்சி நடந்தது. அதற்காக நிரந்தரமாக சில செய்முறை பொருட்களை வைத்தனர். மேலும் இந்திய வரைபடம் கூட அங்கு கீழே தரையில் ஒற்றைக் கல்லினால் செய்து வைத்துள்ளனர். இதனைத் தாண்டி பள்ளிப் பேருந்திற்கான இடமும் வாகனங்கள் நிறுத்தும் இடமும். இது முழுக்க வலது பக்கம். அதே இடது பக்கம் தேவாலயத்திலிருந்து பிரதான வாசல் வரை மைதானம் தான். அதுவும் கைப்பந்து, டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து என வரிசையில் அதே அளவில் இருக்கும். கூடைப்பந்து பள்ளி வளாகத்திற்குள்.

நான் இந்தப் பள்ளியில் சேர்ந்த போது மேலே சொன்ன அனைத்தும் மற்றும் ஒரே ஒரு வளாகம். நான் சேர்ந்த பிறகு புதிதாக ஒன்று கட்டப்பட்டது. நான் சேரும் போது என் பள்ளி முழுக்க மரங்கள் மற்றும் செடிகளாக இருக்கும். சுருங்கச் சொன்னால் ஒரு பசுமை அங்கே எப்போது குடி கொண்டிருக்கும்.

இரண்டு வாசல்களை பற்றி சொல்லவேயில்லை பாருங்கள். இன்னும் இரண்டு வாசல்கள் இருக்கிறது. ஒன்று விளையாட்டு மைதானங்களுக்கு அருகில். இன்னுமொன்று பள்ளி கேண்டீனுக்கு அருகில்.

இவையனைத்தினையும் சொல்கிறேனே தவிர இப்போது நான் போனபோது இவையனைத்தினையும் பார்க்கவில்லை. சில ஆசிரியர்களை கண்டுவிட்டு திரும்பிவிட்டேன்.

ஏன் எனக் கேட்கலாம். நான் மிகைபடுத்தி சொல்லவில்லை. அங்கு நுழைந்தவுடனேயே தினம் தினம் வந்து போகும் இடம் போல் தான் எனக்கு உணர்ச்சி வந்தது. இத்தனைக்கும் பள்ளியில் மாறுதல்கள் நடந்திருக்கிறது. எனக்கோ சொல்லத் தெரியாத காற்றின் தீண்டல் இன்னும் நினைவலைகளாய் என்னுள் வதை செய்கிறது. . . மறக்க முடியாததால் பகிர்ந்து கொண்டுள்ளேன். . .

இன்னுமொரு விஷயம். இத்தனையினையும் சொல்லி அந்த இடத்தினை காண்பிக்காமல் போனால் அது நன்றாக இராது. என் பள்ளியினை சார்ந்து நல்ல போட்டோக்கள் கிடைக்குமா என நண்பனிடம் கேட்டேன். நானும் தேடினேன். அப்போது எனக்கு முன் படித்த மாணவர்கள், என்னைவிட ஒரு வருடம் சீனியர்கள் ஒரு பாடலையும் என் பள்ளியின் போட்டோக்களையும் இணைத்து வீடியோவாக்கி இருக்கின்றனர். தங்களின் பார்வைக்கு. . .

http://www.youtube.com/watch?v=GIRozlgZQrA&feature=share

பின் குறிப்பு : இது பாய்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கான்வெண்ட்!!!!!

Share this:

CONVERSATION