நன்றிக்கான தருணம்

சிறிது நாட்களுக்கு முன்னர் நானும் என் முகநூல் நண்பரும் சின்ன விவாதம் ஒன்றில் இருந்தோம். அவரின் பெயர் நிர்மல். அந்த விவாதத்தின் முக்கிய விஷயமாக நான் அறிந்து கொண்டது மேலை நாட்டு தத்துவங்களை நாம் வாசிக்கவே மறுக்கிறோம் என்பதே. இது நிதர்சனமான ஒன்றும் கூட.

அப்படி ஒரு மனநிலையினில் இருப்பதற்கு நமது கற்பிதம் தான் காரணம். சீத்தோஷன நிலையினை நமது கற்பிதம் நமக்கு கொடுக்கிறது. தத்துவ விசரணைகளுக்கு செல்வதற்கு முன் நமது உள்ளூரில் இருக்கும் இதன் பாதிப்பினை பார்ப்போம். சமூகத்தினை குறை சொல்லும் அளவிற்கு நான் சமூகத்துடன் ஒன்றவில்லை அதனால் நான் என் அனுபவத்தினை சொல்கிறேன்.

நான் படித்த பள்ளியில் தினம் ஏதாவது ஒரு ஆசிரியர் மைக்கில் பேச வேண்டும். அதனை அநேகம் நாட்கள் நாங்கள் கவனிப்பதே இல்லை. என்றாவது ஒரு நாள் கவனிப்பேன். அப்போது இப்படியெல்லாம் விஷயங்கள் இருக்கிறதா என ஆச்சர்யப்படுவேன். இதனை தினமும் செய்திருந்தால் ஏதேனும் ஒன்றினை என்னால் அறிந்திருக்க முடியும ஆனால் செய்யவில்லை!

இவர்களாவது ஆசிரியர்கள், வயதுக்கு மரியாதை அதே மாணவர்கள் எனில் பாவம். மானாவாரியாக மனனம் செய்து மைக்கின் முன் சொல்லிக் கொண்டிருப்பார்கள். காது கொடுத்து கேடக நாதியிருக்காது. நிறைய நேரங்களில் நானும் பேசியிருக்கிறேன்! அதே பேச்சு போட்டி போன்ற இடங்களில் பேசுபவர்க்கு இந்த பிரச்சினை இல்லை. காரணம் அங்கே சிலரே அமர்ந்திருப்பர். அவர்களும் பேச வந்திருப்பவர்களே. அதனால் நாம் பேசுவதை கவனிப்பர் எனும் நம்பிக்கையில் தாராளமாக கக்கலாம்.

நீ எனக்கு சொல்றன்னா நீ என்ன விட பெரிய பருப்பா என்பது போன்ற தொனியெல்லாம் நமது ஈகோவினை வெளிப்படுத்துகிறது. ஏதோ ஒரு வகையில் இதனை நமக்கு கற்பிதம் தான் கற்றுக் கொடுக்கிறது. அல்லது கற்பிதத்தில் குறை ஏதோ இருக்கிறது என்று தான் அர்த்தம்.

இதன் மூலம் நான் சொல வரும் விஷயம் மிகவும் சாதாரணமான ஒன்று. அடுத்தவன் சொல்வதை காது கொடுத்து கேட்போம். அடுத்தவனின் கருத்து சுதந்திரத்தினை பறிப்பானேன்! இந்த விஷயம் அல்லது எண்ணம் எதனால் வந்தது என்பதனை இப்போதும் இதனை அடுத்து இப்பதிவின் நோக்கத்தினையும் சொல்கிறேன்.

என் நண்பன் கோயமுத்தூரில் cit இல் படிக்கிறான். அவனுக்கும் ஒரே பெயர். அவனது கல்லூரியில் இன்னமும் தமிழ் சார்ந்த போட்டிகள் இருக்கிறது. எனக்கு தெரிந்து என் நண்பர்கள் பயிலும் கல்லூரியில் படிப்பு சார்ந்து இருக்கிறதே தவிர மொழி சார்ந்து இல்லை. அங்கே ஒரு பட்டி மன்றம். தலைப்பு என்னவெனில் “பட்டம் பெற்ற பின் உறவுகள் உதவியா உபத்திரமா ?”! அவர்களின் தமிழ் மேம்பாட்டு பட்டிமன்றத்தினை பற்றி பேசும் போது தான் இந்த விவாதத்தினை சொல்லிக் கொண்டிருந்தேன்.

விவாதம் என்னவென்றால் தனது மற்றுமொரு பாதியினை அல்லது துணையினை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே உரியது என்பதே. இது சற்று பெண்ணியம் சார்ந்து தோன்றினாலும் அதனை சார்ந்தது அல்ல. இதனை மேலை நாடுகளில் அழகுற சொல்லியிருக்கிறார்கள். பெண்களுக்கு உரிமை சுதந்திரத்திற்கெல்லாம் போராட தேவையில்லை ஆனால் ஆண்களுக்கு அன்பினை பற்றி கற்றுத்தர வேண்டும். பெண்களுக்கு தேவை அன்பு தானே தவிர பெண்ணியவாதிகள் சொல்வது போல சுதந்திரம் அல்ல என நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதனை பற்றி தனிப்பதிவே இடலாம். இதனை நன்கு உணர ZORBA THE GREEK என்னும் நாவலினை வாசியுங்கள். இந்த விஷயத்தினை நம்மால் இங்கே பிரகடனப்படுத்த முடியாது. காரணம் சிறு வயதிலிருந்து நமக்கு சொல்லப்பட்டு வரும் கதைகள் யாவும் கணவனுக்கு அடங்கிப்போகும் மனைவியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதன் நீட்சியாகத் தான் இன்றைய கற்பழிப்புகள் நாட்டில் நிலவுகிறது. அதற்காக பெண்களின் சுதந்திரத்தில் கைவைக்கும் மனப்பாங்கும் நம்மிடம் தழைத்தோங்கி நிற்கிறது.

சாரு நிவேதிதாவின் எழுத்துகளில் வாசித்திருக்கிறேன் ஒரு சீன மனோதத்துவ நிபுணர் சொன்னாரென - ஈவ் டீசிங் ஏன் நடக்கிறது எனில் தமிழ்ச் சூழலில் சிறு வயதிலிருந்தே பெண்ணுக்கு ஆணின் உடையினை தருவித்தும் ஆணிற்கு அவன் ஆண்மையுடன் இருக்க வேண்டும் என பெண்கள் சார்ந்து எந்த விஷயத்தினையும்(ஆடைகள்) அவனிடமிருந்து ஒரு தூரத்தில் தள்ளியே வைக்கின்றனர். இதன் உள்ளொளி தான் அவன் வாழ்க்கையினை சிந்தனை போக்கினை ஈவ் டீசிங் வழிகளில் தள்ளுகிறது என்கிறார்.

இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது ஆனால் எதனையும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள நடைமுறை படுத்த தயாராக இல்லை. தேடி சென்று அறிந்து கொள்ள ஆர்வமில்லாதவர்களாக இருக்கின்றனர். வாசித்தலை ஏதோ கொடிய நோய் என கருதி தூர தேசம் செல்கிறார்கள். நமது கலாச்சாரத்தினை ஒரு பின் தங்கிய கலாச்சாரம் என சொல்லுவேன். ஒரே காரணம் நாம் செவி மடுக்க தயங்குகிறோம்.

இந்த செவி மடுத்தல் என்னும் கொடிய நோய் நமது பள்ளிகளில் கல்லூரிகளில் விதைக்கப்படுகிறது. விதைக்கப்பட்டது. ஆனால் இது போலவே தான் அனைத்திலும் இருகிறோமா எனில் சில விதிவிலக்குகள் இருக்கிறது. கொண்டாட்டங்கள் என்னும் விஷயத்தில் உலகெங்கும் களை கட்டுகிறது. இந்த உலகத்தில் எல்லையற்ற ஒன்றும் இந்த கொண்டாட்டம் தான். கொண்டாட்டமே வாழ்க்கை என்ற தத்துவமும் இவ்வுலகில் இருக்கிறது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதி தான் நன்றியும் மன்னிப்பும். இந்த நன்றி என்பதற்கு அர்த்தம் செய்த உதவியினை மறவாமல் இருக்கும் ஒரு பாராட்டல். நட்பினிடையே இந்த நன்றி விரோதி என்னும் உருவத்தினையும் கொண்டுள்ளது. அதே போல் தான் மன்னிப்பும் அது செய்த தவறுக்கு உச்சரிக்கும் சொல்லாடல். இது இரண்டும் நட்பில் தீயமையினை சம்பாதித்ததற்கு காரணம் நட்பு இலக்கியங்களின் மூலமாகவும் செவி வழிகளின் மூலமாகவும் உடன்பிறவா உறவு என்னும் நிலையினை எய்திவிட்டது. அப்படி இருக்கையில் இந்த இரண்டு வார்த்தைகளும் நட்பில் இருக்கும் இருவரையும் அந்நியப்படுத்துகிறதாம்.

இந்த நன்றியும் மன்னிப்பும் தேவை அல்லது முக்கியமானவை என கருத வேண்டிய நாள் வருடத்தின் கடைசி நாளே. forward message களை பார்த்து எழுதுகிறேன் என நினைத்தால் அதனை அழி ரப்பரால் அழித்து விடுங்கள். அதற்கு காரணம் இருக்கிறது. அனைத்து ஆரம்ப நாட்களினையும் கொண்டாட்டமாகவும் அனைத்து இறுது நாட்களை சோகமாகவும் கழிக்கிறோம். அந்த சோகத்தினை மாற்றி ஏன் நன்றி அல்லது மன்னிப்பு கோரும் தருணமாக மாற்றக் கூடாது ?

அப்படி நான் நன்றி சொல்ல வேண்டுமெனில் என் நன்றி அனைத்தும் கூகிலுக்கும் அதை விட முக்கியமான முகநூலிற்கும் தான் செல்லும்.

அப்படி அவர்கள் என்ன செய்தார்களெனில் நான் எழுதுவதே கடந்த ஏப்ரலிலிருந்து தான் - இணையதளத்தில். ஆனால் அதற்கு முன்னரே நான் நோட்டு புத்தகங்களிலும் காகிதங்களிலும் எழுதிவந்தேன். எனக்கு ஒரு இணையதளத்தினை அளித்தது கூகிளில் இருக்கும் ப்ளாக் தான். அதில் தான் எழுதினேன் ஆனால் வெகு நாட்களாக எப்படி மக்களிடம் சேர்ப்பது என தெரியவில்லை. அப்போது எனக்கு பெரும் உதவியாக இருந்தது முகநூல் மட்டுமே. இப்போது நான் எந்த பதிவுகள் இட்டாலும் முப்பது பேர் வாசிக்கிறார்கள். பத்து மாதங்களில் முப்பது வாசகர்களை என்னால் பெற முடிந்தது.

இதில் வருத்தத்திற்குரிய விஷயமும் இருக்கிறது. என்னை சில நண்பர்கள் ஒதுக்கி வைத்தது. என் பெயரினை நான் முகநூலில் தமிழில் மாற்றினேன். அதற்கு பின் என் முகநூல் முழுக்க எனது வலைதளத்தின் லிங்குகளால் நிறைந்தது. என் முகநூலே தமிழால் நிறைந்திருக்கும் என என் வயதினையொத்த மாணவர்கள் என்னை நிராகரித்தனர். என் நண்பர்கள் சிலர் நிராகரித்தனர், யாரென்றே தெரியாத சிலரால் என் எழுத்துகள் வாசிக்கப்பட்டது. அதில் சிலர் என்னை பாராடினர்.

எதற்காக இந்த நன்றியுடன் முகநூலிற்கான பாராட்டுமெனில் கல்லூரியில் அறிவு என்னும் பெயரில் என்னுடன் படிக்கும் சக மாணவன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு முகநூல் என்றாலே அது அசூயையின் அறிகுறியாக இருந்தது. என்னிடம் மட்டுமல்லாமல் அநேகம் பேரிடம் அது நல்லதா கெட்டதா என டைனோசரினை விசாரிப்பது போல் விசாரித்தான். நான் ஒஸ்தி படத்தின் பஞ்ச் டைலாக்கினை தான் சொன்னேன் “ஃபேஸ்புக் கண்ணாடி மாதிரி”.

நமது பிரச்சினையினை நமக்கே காண்பிக்கும் ஒரு விஷயம் இந்த முகநூல். பிரச்சினை முன்பு விவரித்த செவி மடுத்தல் தான். இங்கு முகநூலில் பார்ப்பார்களா பார்க்க மாட்டார்களா நல்லவராக இருக்க வேண்டுமா கெட்டவராக இருக்க வேண்டுமா என எந்த நிர்பந்தமும் இல்லாமல் கட்டட்ட சுதந்திரம் முக்கியமாக கருத்து சுதந்திரம் மனிதர்களுக்கு அளித்தால் என்ன ஆகும் என்பதை இந்த சமூக வலைதளம் காட்டுகிறது. கருத்து சுதந்திரத்தினை முழுது உணரும் ஒரே இடம் முகநூல் தான். இங்கே எப்படி செவி மடுத்தல் நிகழ்கிறது எனில் நாம் கேட்காமல் இருக்கிறோம் என்பதற்காக சமூகத்தில் இருக்கும் அனைவரும் அப்படியே இருக்கிறார்களா என்ன ? எப்படியும் அதனை வாசித்து லைக் அடிப்பவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். அதன் எண்ணிக்கை கூடும் போது நானும் அதில் ஒரு லைக் அடித்தேன் என்னும் பிம்பத்தினை அணிய லைக் அடிப்பவர்களும் உள்ளனர் வாசித்து லைக் அடிப்பவர்களும் உள்ளனர். நானோ இரண்டாவது ரகம்.

நான் சிறிது நாட்களுக்கு முன் எழுதியிருந்த the social network என்னும் படத்தினை பாருங்கள். முகநூல் என்னும் அமைப்பு நமக்கு எதை அளிக்கிறது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். சுதந்திரம் தரக்கூடியதோ பெறக்கூடியதோ அல்ல நாமாக எடுத்துக் கொள்ளக் கூடியது என சாரு அடிக்கடி சொல்லுவார். அதை பரிபூரணமாக நான் உணர்வது முகநூலில் மட்டும் தான்.

நமது பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் இல்லாத ஒரு விஷயமே இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அடுத்தவனின் வார்த்தைகளை கேட்கமாட்டோம் என இருக்க வேண்டாம். யார் சொன்னாலும் அதனை காது கொடுத்து கேட்போம். ஏதேனும் நல்லது இருக்கத் தான் செய்யும் என்னும் நம்பிக்கையில். . .


செவி மடுப்போம்
புலன் வளர்ப்போம்
ஞானம் பெறுவோம்
நல்லதே செய்வோம்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். . . .

Share this:

CONVERSATION