மானசரோவர் - திரையுலகை மையம் கொண்ட நாவலா ?

தோல் நாவல் வாசித்ததால் தான் நான் பொய்த்தேவு நாவலினையும் மானசரோவர் நாவலினையும் காத்திருப்பில் வைத்திருந்தேன். இன்று அதில் மானசரோவரினை வாசித்தேன்.

நாவலின் பின்னட்டையில் முதல் வாக்கியமாகவே இந்நாவல் திரையுலகை மையமாக வைத்து எழுதப்பட்ட மகத்தான நாவல் என சொல்லப்பட்டிருந்தது. இது கூட நான் இந்த நாவலினை வாங்குவதற்கு காரணமாக இருந்தது. அது ஏன் என சொல்கிறேன். திரைத்துறையினையும் இலக்கியத்துறையினையும் ஒரே தரத்தில் தான் இச்சமூகம் வைக்கிறது.

எனக்கு சொல்லப்பட்ட சின்ன விஷயத்தினை சொல்கிறேன். எழுத்துகள் பற்றி அப்போது எனக்கு அதிகம் தெரியாது. நாவல் என்னும் பதத்தினையே நான் ஹிந்தி கற்றுக் கொள்ளும் போது தான் அறிந்து கொண்டேன். அப்போது ஹிந்தி கற்றுக் கொடுத்தவர் சொன்ன விஷயம் சிறுகதை என்பது குறும்படம், நாவல் என்பது நீளப்படம், பாகங்களாக வரும் நாவல்கள் நாடகங்கள் என. அந்த வயதில் என் மனதில் பதிந்த விஷயங்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயமும் கூட. ஆனால் இப்போது அது சரியா என சிந்திக்கிறேன்.

ஆரம்ப நிலையில் அஃதாவது இன்னதென்றே அறியாத ஒரு நிலையில் அந்த சம்னபாடு சரியே. ஆனால் இரண்டும் கலையளவில் சமன்பாடு பெறுமா ? இது இரு துறைகளுக்கு சண்டை மூட்டும் பதிவல்ல. நான் சொல்ல வ்ரும் கருத்தினை நன்கு கவனியுங்கள். இலக்கியங்கள் வாசகனை சிந்திக்க வைக்கிறது. அதே திறைத்துறையில் பார்வையின் மூலம் பார்வையாளன் சிறைபடுத்தப்படுகிறான். இயக்குனரின் கவலைகள் திறமைகள் அனைத்தும் காட்டப்படுகிற திரையில் அடங்கி அதனை நம்பியாக வேண்டிய கட்டாய சூழலுக்குள் அகப்படுகிறோம். இதை சற்று மாற்றியவராக நான் நினைப்பது(பார்த்தவரையில்) கிறிஸ்தோபர் நோலன். காட்சிகளினை மாற்றிப்போடும் யுக்தியினை கையாண்டார். இவரைத் தவிர நான் அனுபவித்தது டாம் டைவரின் ரன் லோலா ரன் திரைப்படத்தில். இதன் மூலம் நான் சொல்ல வ்ரும் விஷயம் மிக எளியது. திரைத்துறையில் படத்திற்கு படம் கதை மாறுபடுகிறதே தவிர அதனை எடுத்துச் செல்லும் விதம் மாறவில்லை. அதே இலக்கியங்களில் இந்த நிலை இல்லை. காலத்திற்கு காலம் ஏதோ ஒரு புது நடை இருக்கிறது அல்லது பிறக்கிறது. அதற்கேற்றாற் போல இஸங்களும் உருவாகிறது. எப்போது திரைத்துறையில் இது போல பல மாற்றங்கள் நிகழ்கிறதோ அப்போது கலைத்துறையில் பல சவால்மிகு நேரம் பிறக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அண்மையில் கூட the raven என்னும் படத்தினை ஒரு அரை மணி நேரம் தான் பார்த்தேன். அதற்கு மேல் ஏன் திருட்டு டி.வி.டி வாங்குகிறாய் என நின்றுவிட்டது என நினைக்கிறேன்! அந்த அரை மணி நேரத்தில் தான் மேலே உள்ள பத்தியினை எழுத தெம்பு என்னுள் எழுந்தது. அப்படத்தில் எட்கர் ஆலன் போ என்னும் எழுத்தாளர். அவர் க்ரைம் கதைகளை எழுதுபவர். அவரின் சிறுகதைகளின் படியே கொலைகள் நடக்கிறது. இது வரைக்குமே கதையில் இந்த கதைகள் அனைத்தும் வாய்வழியாகவே சொல்லப்படுகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் படத்தில் இல்லை. அருமையாக போன பகுதிகளில் எனக்கு இந்த சின்ன வருத்தம். எழுத்தாளனின் வருத்த நிலையினையும் அந்த காலாகட்டத்தில் எழுத்தாளனுக்கும் பத்திரிக்கைக்கும் இடையில் இருக்கும் உறவினை படத்தில் நன்றாக காட்டியிருந்தாலும் அந்த படைப்பினை காட்டியிருக்கும் முறை இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது என் சின்ன ஆசை. ஒரு வேளை முழுபடத்தினையும் பார்த்திருக்க வேண்டும் அல்லது இதே போல் வேறு படங்கள் இருக்கிறதா என நான் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் தோன்றியது எழுதுகிறேன்.

இப்போது இதன் மறுபக்கத்தினை பார்ப்போம். அஃதாவது சிறுகதையில் திரைத்துறை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தரவேண்டுமெனில் சுஜாதா இயற்றிய “கனவுத் தொழிற்சாலை”. எப்போதோ வாசித்தது. இன்று அசோகமித்திரனின் “மானசரோவர்” வாசித்தவுடன் என் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட அதன் ஆதிக்கத்தாலும் இந்நாவலின் மேல் எனக்கு ஆசை வந்தது என சொல்லலாம்.


பொதுவாக திரைத்துறையினை பிரதியில் கொண்டு வர வேண்டுமானால் முதலில் மனதுக்கு தட்டும் விஷயம் அத்துறையில் இருப்பவர்களின் நிஜவாழ்க்கை. அதன்பின் சினிமா எடுப்பதையே ஒரு பண்டமாக்கி கதையாக்குவது. உதாரணம் வெள்ளித்திரை போன்ற படங்கள். அஃதாவது கதை உருவாவதை கதையாக்குவது. இதே போல் நாவலின் உருவாக்கத்தினை கதையாக்கிய நாவல் எனக்கு தெரிந்து எக்ஸைல் சில பக்கங்களில் அதனை செய்கிறது.

சுஜாதா இவையனைத்தினையும் தன் ஒரே நாவலில் அழகுற செய்திருப்பார். இந்த மானசரோவர் நாவலினையோ திரைத்துறை நாவல் என்று சொல்ல என்னால் முடியவில்லை. இது முழுக்க முழுக்க உளவியலினை மட்டுமே பேசும் நாவல்.

நாவல் என்னும் வகையில் எனக்கு இந்த நாவலில் குறை தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட கடைசி வரை விறுவிறுப்புடன் சென்ற நாவல் தத்துவம் என்று ஒன்றினை கடைசியில் அசோகமித்திரனால் தெளிக்கப்படுகிறது. அது முழுக்க முழுக்க அபத்தமாக தெரிகிறது. அது தத்துவத்தினை புரியாமல் நான் வாசித்திருக்கிறேனா ? உண்மையில் அபத்தமா என்பதையும் என்னால் ஊகிக்க முடியவில்லை.

கதை என்பது இரு நபருடைய உளவியல் மட்டுமே. ஒருவர் திரையில் கதை எழுதும் கோபால் மற்றொருவர் நடிகர் சத்யன் குமார். உடம்பு சரியில்லாமல் போகும் கோபால் மகன் இறக்கிறான். அதனை தொடர்ந்து மனைவி பைத்தியம் போல் ஆகிறாள் இதனைத் தொடர்ந்து திரைத்துறையில் நடக்கும் சம்பவங்கள் என பிணைக்கப்பட்டு அழகுற எழுதியிருக்கிறார் அசோகமித்திரன்.

எழுத்து எனும் போது தான் நாவலின் அசைக்கமுடியாத அழகியல் நினைவிற்கு வருகிறது. இதன் நடை இதற்கு முன் தமிழில் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் சொல்லியிருக்கும் “மை நேம் இஸ் ரெட்” என்னும் நாவலில் இருக்கிறது. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் இருந்தாலும் சொல்கிறேன். இந்நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும்  i am black, i am butterfly, i am olive என பெயரிடப்பட்டிருக்கும். அந்த அத்தியாயத்தினை நடத்துபவன் அல்லது ஆட்சி செய்பவன் அந்த குறிப்பிட்ட கதாபாத்திரம் தான். இப்போது i am black என்னும் பகுதியினை எடுத்துக் கொண்டால் அதில் வரும் ‘நான்’ அனைத்தும் black. அல்லது அவன் வாயிலாக அந்த பகுதிகள் சொல்லப்படுகிறது என்றும் சொல்லலாம்.

இந்த வகையறா எழுத்தினை இதில் நன்கு காணலாம். இந்நாவலில் ஒற்றைப்படை பகுதிகள் அனைத்திலும் நான் கோபாலாகவும் இரட்டைப் படை பகுதிகள் அனைத்திலும் நான் சத்யன்குமாராகவும் செய்திருக்கிறார். இந்நாவலில் ‘நான்’ என்னும் விஷயத்தில் இருக்கும் வீரியம் என்றே சொல்லுவேன். இது ஒப்பிடும் மனப்பான்மையல்ல. மை நேம் இஸ் ரெட் நாவலின் அந்த தாக்கம் இன்னமும் என்னிடம் இருக்கிறது. ஆக எந்த நாவலிலெல்லாம் நான் நாவலினை நடத்துகிறதோ அப்போது அந்த தாக்கத்தினை நிச்சயம் எதிர்பார்ப்பேன்.

இந்த அத்தியாயம் அமையப்பெற்றிருப்பதை சொன்னேன். அப்படி அமைந்ததில் மிக எளிமையான திகில் முறையினை கையாண்டிருகிறார். இந்த வாக்கியம் கூட மேலோட்டமாக வாசிக்க தான். ஆனால் அதனுள் எனக்கு நோலன் சொல்லியிருந்த வார்த்தை தான் நினைவிற்கு வந்தது. அஃதாவது ஒரு விஷயத்தினை நாம் பாதியில் விடுகிறோம் எனில் அதன் தொடர்ச்சியினை மக்கள் மறந்திருப்பர். அதனோடு தொடர்புடைய வேறு காட்சிகளை காண்பித்தாலும் அவர்களாகவே ஒரு பிணைப்பினை உண்டு செய்து கொள்வர். இந்த விஷயத்தில் அறுபடும் இடத்தில் திகிலினை வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்நாவலில் கொடுத்திருக்கிறார்.

ஒரு பகுதி என எடுத்துக் கொண்டால் அதில் சில அத்தியாயங்கள் வருகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அவர் ஒரு திகிலினை தொனிக்கிறார். அடுத்தும் ஏதேனும் திகில் இருக்குமா என தொடரும் நமக்கு சம்மந்தமே இல்லாமல் அதே கதாபாத்திரம் சொல்லும் ஒரு கதை வருகிறது. இந்த இரண்டு அத்தியாயங்கள் இடையிலும் சிறு இடைவெளி தான் இருக்கிறது. ஆனால் அவை புதையப்பட்டுள்ளது. இனமும் ஆச்சர்யகரமான விஷயம் ஒரு பகுதியில் ஏகப்பட்ட திகில்களை கொடுத்து உடனே அடுத்த பகுதிக்கு தாவுகிறார். அந்த பகுதிகளில் அதற்கான விடைகள் கிடைக்கிறது.

நடை உண்மையில் அநாயாசமாக இருக்கிறது. எளிமையான maze என்று தான் சொல்ல நினைக்கிறேன். மானசரோவர் நல்ல நாவல். தமிழ் இலக்கியத்தில் தனித்து நிற்கும் அளவு அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது ஆனால் திரையுலகை மையப்படுத்தும் படைப்பு என்பதை என்னால் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

பின் குறிப்பு : க்ளைமாக்ஸில் இருக்கும் தத்துவத்தினை யாரேனும் புரிந்திருந்தால் எனக்கு முகநூல் மெஸேஜ்களிலோ அல்லது மின்னஞ்சலிலோ சொல்லுங்கள். புரிகிறதா என பார்ப்போம்.

Share this:

CONVERSATION