மெல்லிய இழை

எனக்கு ஏற்பட்டிருக்கும் மனக்குழப்பத்தினால் இதனை கூறி என் பதிவிற்கு செல்கிறேன். நான் இணையத்தினில் எழுதும் எதுவும், அஃதாவது நூல்களை பற்றியோ திரைப்படங்களை பற்றியோ எழுதும் அனைத்தும் என் பார்வைகள் மட்டுமே. நான் அதிலிருந்து கற்றுக் கொள்வதும் எனக்கு பிடித்ததும் இருக்கும். ஒப்பிடுதல்களும் சில பதிவுகளில் இருக்கலாம். அதற்காக அவை விமர்சனம் என்னும் தளத்திற்கு செல்ல முடியாது. சிலர் என்னுடைய பதிவிற்கு நல்ல விமர்சனம் என்கிறார்கள். அப்போது இது போன்ற சரியான எண்ணங்கள் தோன்ற மறுக்கிறது. அதே விமர்சனம் செய்பவன் நல்ல படைப்பாளியாக வர முடியுமா என ஒருவர் முகநூலில் போட்டதற்கு, அதற்கு முன் நான் ஒரு நூலினை சிலாகித்ததற்காக தான் என்னை சாடுகிறார் என நானாக கற்பிதம் கொள்கிறேன். பகுத்தறியும் புத்தி என்று வரும் என எனக்கு தெரியவில்லை. இருந்தும் சொல்ல நினைத்தேன் சொல்லிவிட்டேன் - நான் விமர்சகன் அல்ல பார்வையாளன் மட்டுமே. இப்போது பதிவிற்கு போகலாம்.

தலைப்பினை மெல்லிய இழை என்று போட்டிருக்கிறேன். இந்த மெல்லிய இழை இசையில் அதிகம் பார்க்க முடியும். எப்படி என சொல்ல வேண்டுமெனில் உலக இசைகளை அதிகம் ரசித்தவர்கள் தமிழில் வரும் படைப்புகளில் அந்த இசையில் இந்த நாட்டில் இசை இழையோடுகிறது என கண்டுபிடிப்பர். இதனை நாம் அதிகம் கேட்டிருப்போம். ஆனால் இந்த மெல்லிய இழை என்பது அதிகம் குறிப்பிட வேண்டியது.

ஏன் எனில் இந்த மெல்லிய இழையானது ஒன்று உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் அல்லது யாரும் கண்டுக்கப்படாமல் உன்னதத்தின் உச்சத்தில் இருக்கும் அல்லது மாபெரும் படைப்பில் குறிப்பிட்டு சில இடங்களிலோ அல்லது ஒட்டு மொத்த படைப்பிலும் காணப்படும் அபூர்வத் திறனாக இருக்கும்.

இதில் எதை நான் சொல்லப்போகிறேன் எனில் அந்த கடைசி ஒன்றினைத் தான். அதை எழுத்துடன் இணைப்பதற்கு முன் நான் திரைத்துறையுடன் இணைக்க நினைக்கிறேன். இதை நான் என் நண்பர்களிடம் அதிகம் கேட்டும் இருக்கிறேன். ஒரு திரைப்படத்தினை பார்க்கிறோம் எனில் அதில் நடக்கும் சம்பவங்கள் நம் வாழ்க்கையுடன் இணைந்திருப்பது போல் ஒரு மாயை நமக்குள் தோன்றும். அந்த மாயையானது நம்மை திரை என்னும் பிம்பத்தினை தாண்டி இழுத்து செல்கிறது.

இதுவும் இருவேறு வகைப்படுகிறது. ஒன்று நம்முடன் இணைப்பது மற்றொன்று யதார்த்த வாழ்க்கையுடன் இணைப்பது. நம்முடன் இணைப்பது எனில் காட்சிக்கு காட்சிக்கு இது என் வாழ்க்கைல நடந்திருக்கு இது என் வாழ்க்கைல நடந்திருக்கு என்பர். மற்றொரு வகையினர் இது நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்வர். அதுவோ திரைக்குள் நடக்கும் படம் என்பதை மறந்து விடுகின்றனர்.

சில கட்டுரைகளுக்கு முன் “நான்” என்பதில் இருக்கும் சிறப்புகளை கூறியிருந்தேன். தெரியாதவர்கள் இதை க்ளிக்கி வாசிக்கவும். இதை இங்கு எதற்கு சொல்கிறேன் எனில் இந்த “நான்” என்னும் விஷயமும் மேலே சொன்ன மெல்லிய இழையும் ஒன்றை தான் செய்கிறது - வாசகனின் சுயத்தினை அபகரித்தல்.

திரைத்துறையினையும் இலக்கியத்தினையும் இணைக்கிறேன், அதனால் இலக்கியத்தின் புனிதத்தன்மை போகிறது என யாரும் எண்ண வேண்டாம். தமிழர்களிடையே ஒன்றினை கொண்டு சேர்க்க திரைத்துறை நிச்சயம் தேவை. ஏனெனில் தமிழ்ச் சமூகமே அடிமையாகிக் கிடக்கும் ஒரு இடம் - சினிமா!

சரி இந்த மெல்லிய இழை நாவலில் எப்படி வருகிறது எனப் பார்ப்போம். ஒரு கதை எழுத்து என்னும் தளத்திற்கு வரும் போது பன்முகத்தினை கொள்ளும் சக்தியினை பெற்றுவிடுகிறது. நாவலில் ஒரு விஷயம் எழுதப்பட்டிருக்கிறது எனில் அது நம் வாழ்வில் நடந்திருக்கலாம் அல்லது நடந்தால் இப்படித்தான் நடக்கும் என யதார்த்தத்தினை தொடலாம் அல்லது அதே விஷயம் வேறு ஒரு உருவில் அதே போல் நடந்திருக்கலாம் என எண்ணங்கள் சிந்தனைகள் நம்முள் எழும். அப்படியொரு நிலையில் அந்த படைப்பாளி வெற்றியடைகிறான். அப்படி இந்த மெல்லிய இழையினை அழகுற கையாண்டு எழுதப்பட்டிருக்கும் நாவலினை இன்று வாசித்தேன். அசோகமித்திரன் எழுதிய “ஒற்றன்!”.


இதை வாசிக்கும் போது சாரு நிவேதிதா அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் தான் நினைவிற்கு வந்தது. தான் நிறைய விஷயங்களை கட்டுரையாக எழுதி வீணடித்துவிட்டேன் என்று. இங்கு தான் விஷயமே அடங்கி இருக்கிறது.

சராசரி வாசகனாக இந்த வாக்கியத்தினை அணுகினால் தான் இந்த ஒற்றன் என்னும் ஆகச் சிறந்த படைப்பினை கொண்டாட முடியும். சாமான்யனுக்கு கதை எனில் அது கற்பனையினை சார்ந்தது. கட்டுரையெனில் அது பயணங்கள், வாழ்நாளில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள், பிறரை ஒரு வெளியில் சாடுதல், தான் அனுபவித்தவை, வாசித்த நூல்கள், ரசித்த திரைப்படம், ஓவியம் என செல்லும். அப்படியிருக்கும் பட்சத்தில் ஒரு கட்டுரை எப்படி கதை ஆக முடியும் ?

இந்த கேள்வியிக்கான பதிலினை தேடுவதற்கு முன் நம் வாழ்க்கையின் அமைப்பு கதையா கட்டுரையா என பார்க்க வேண்டும். இது என்ன முரணான கேள்வி என சிந்திக்கலாம். டைரி எழுதுபவனுக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் அன்று நடந்தவை. எழுத்தாளனுக்கு அந்த சம்பவங்களை சொல்லும் விதத்தில் தான் அனைத்தும் இருக்கிறது. கதாபாத்திரங்களுடன் கட்டுரை என வெளியிட்டால் அது கட்டுரை, அதே கதாபாத்திரங்களின் பெயரை மாற்றியோ மாற்றமலோ வெளியிட்டால் அது கதை. இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் தாங்கள் எழுதும் ஒரு பயணக்கட்டுரையினை யாரோ தெரியாத மூன்றாவது மனிதனிடம் கொடுத்தால் அவனின் பதில் ‘கதை சூப்பர்’ என்பதாகத் தான் இருக்கும்.

இந்த கதை சூப்பர் என்பதில் தான் அடுத்த விஷயம் அடங்கியிருக்கிறது. நீங்களே சென்று அந்த அந்நியனிடம் இது கதையல்ல நிஜம் என சொன்னாலொழிய அவனுக்கு அது தெரியப்போவதில்லை. அப்படி சொல்லிவிட்டால் அதே கதை அந்த வாசகனுக்குள் பல்வேறு பரிணாமங்கள் கொள்ள ஆரம்பிக்கிறது. நம்மை அந்த இடத்தில் சிந்திக்க ஆரம்பிக்கிறான். வேறு சில சம்பவங்கள் அவனுக்குள்ளாகவே அந்த கட்டமைப்புகளுக்குள் நுழைகிறது. கதை பல புது உருவங்கள் பெறுகிறது. அந்த இடத்தில் புனைவானது ஆட்டோ ஃபிக்‌ஷனாக மாறுகிறது.

இதனால் எழுதும் எழுத்தாளர்களுக்கு பெரிய நஷ்டம் என வெகு நாட்களுக்கு நினைத்து கொண்டிருந்தேன். அதன் காரணிகளையும் சொல்கிறேன். ஒரு எழுத்தாளன் தன் சிந்தனைகளை திரட்டி எழுதுகிறான் ஆனால் அதை பின்பற்றாமல் வாசகன் சித்தரிக்கும் அளவு அவர்களே இது ஆட்டொ ஃபிக்‌ஷன் என சொல்லிவிடுகிறார்களே என்று. பிறகு தான் புரிய வந்தது அதுவும் எழுத்தாளர்களின் பொறி என. அப்படி சொல்வதன் மூலம் வாசகன் சிந்திக்க தொடங்குகிறான். கதைக்குள் அவனது வாழ்க்கை கூட பாத்திரம் ஆகிறது. கதை புது உருவம் பெறுகிறது. பின்நவீனத்துவம் என்னும் நிலையினை அடைகிறது.

அப்படி எழுத்தாளர்களோ அல்லது பதிப்பவர்களோ அல்லது அணிந்துறை எழுதுபவர்களோ இது படைப்பாளியின் வாழ்க்கையில் நிகழ்ந்தது புனைவாக எழுதப்பட்டிருக்கிறது என சொல்வதையே நான் அந்த குறிப்பிட்ட நூலின் பகுதியாக பார்க்கிறேன். நூல் இன்னமும் சுவாரஸ்யம் அடைய ஆராம்பிக்கிறது. ஆனால் சராசரி வாசகனோ அங்கேயே ஏமாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறான்.

ஒற்றன் நாவலும் இது போல பல பொறிகளை தன்னுள் கொண்டுள்ளது. கதையினை பற்றி அந்நாவலின் பின்னட்டையில் இருக்கும் முதல் சிறு பத்தியினை மட்டும் நானும் இங்கே எழுத நினைக்கிறேன்.
அமேரிக்காவிலுள்ள அயோவா பல்கலைகழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை புனைகதையுருவில் முன்வைக்கிறார்.

வாசிப்பதற்கே அவ்வளவு அருமையாக இருந்தது. அசைக்கமுடியாமல் இருக்கும் அட்சக்கோடினையும் கொஞ்சம் ஆட்டம் காணவைத்தது இந்த ஒற்றன்.

இந்நாவலிலிருந்து குறிபிட வேண்டுமெனில் நான் அநேக பக்கங்கள் எழுத வேண்டியதிருக்கும். அத்தனை பகடி அத்தனை அனுபவங்கள். ஆனால் ஒரு விஷயத்தினை நான் சொல்லியே ஆக வேண்டும் என குறித்து வைத்திருந்தேன். இந்நாவல் வெளிவந்த ஆண்டு 1985. அப்படியெனில் அவரின் அனுபவம் நிச்சயம் அதற்கு முன் தான் நடந்திருக்கும்.

இதுவரை நான் பிரதியினை பார்க்கும் போது எழுத்தாளனை மறக்க வேண்டும் என சொல்லிவந்தேன். இப்போது மீண்டும் எழுத்தாளனின் அனுபவத்திற்கே செல்கிறேன் என என்னை சாட வேண்டாம். ஒரு நாவலெனில் அதன் மூலம் தன் கருத்துகளை முன் வைப்பது எழுத்தாளனின் எண்ணம். அதன் படி இதை நான் அணுகுகிறேன். பிரதி எழுத்தாளனின் அனுபவத்தினை வாழ்க்கையினை பிம்பமாக்கும் மீடியம் அவ்வளவே தவிர அது வாழ்க்கையாகாது!!!

நான் சொல்ல வந்தது இந்நாவலில் பிராவோ என்னும் பாத்திரம் வருகிறது. அவனின் நாவலினை கதையின் நாயகன் மொழிபெயர்க்கிறான். அதன் நடையினை பார்த்து தமிழ்நாட்டு நடைரசனையினை பிராவோவுடன் சிலாகிக்கிறான்
‘. . .உரைநடையினை புராதண பாணியில் எழுதினால் தான் ஒத்துக் கொள்கிறார்கள். சற்று விலகி எழுதினால் கூட புரியவில்லை என்று கூறிவிடுகிறார்கள். . .’

பாவம் இன்னமும் இந்த நிலை தமிழ் நாட்டில் மாறவில்லை. இந்த நாவலே சாதாரண நாவலிலிருந்து மாறுபட்டு இருக்கும் ஒன்றாக எனக்கு படுகிறது. எழுத்தாளர்களும் சாதாரண மனிதர்களே எனினும் அவர்களுக்குள் இருக்கும் திறமை பிரபஞ்சத்தில் சிலருக்கு கொடுக்கப்படும் வரம். அதனை அழகுற பயன்படுத்தியிருப்பவர்களில் ஒருவர் அசோகமித்திரன்.

Share this:

CONVERSATION