இருத்தலின்மையின் உருவம்

இப்பதிவிற்குள் செல்வதற்கு முன் ஒரு விஷயத்தினை சொல்லியே ஆக வேண்டும். சேலத்தில் இப்போது புத்தக கண்காட்சி போடப்பட்டிருக்கிறது. அசோகமித்திரனின் வேறு ஏதாவது நூலினை வாங்கலாம் என சென்றால் ஒரு ஸ்டாலில் கூட அவரின் பெயர் இல்லை. கிழக்கு பதிப்பகத்தில் தானே நாம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் நூல் என அங்கு சென்று கேட்டால் அங்கு அமர்ந்திருந்தவருக்கு அங்கிருக்கும் நூலின் பெயரே தெரியவில்லை. கேட்டால் வேறு ஒருவருக்கு பதில் அமர்ந்திருக்கிறேன் என சமாளித்தார்!!!

அசோகமித்திரனை வாங்காமல் வீட்டிற்கு போகக் கூடாது என குறியாய் பாலம் என்னும் புத்தக கடைக்கு சென்றேன். சேலத்தில் இக்கடை இருப்பதே எனக்கு முதலில் தெரியாது. பிற்பாடு தான் தமிழில் வெளியாகும் நூல் நிறைய இங்கே இருக்கிறது என தெரிய வந்தது. அங்கு வாங்கிய நாவலினை பற்றியே இப்போது சொல்ல இருக்கிறேன்.

அசோகமித்திரனின் படைப்பில் நான் வாசித்திருந்தது 18வது அட்சக்கோடு தான். ஒன்றே ஒன்றினை வாசித்து விட்டு அது தான் அவரின் சிறந்தது என மனதில் பதிந்துவிட்டது. இத்தகைய சூழலில் அல்லது உளவியலில் நான் அவரின் வேறொரு படைப்பினை அணுகுகிறேன் எனில் முந்தயதை விட என்னை ஈர்க்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பேன். அதை நிறைவேற்றியதா எனில் ஆரம்பத்தில் தோற்று இடையில் ஒரு தத்துவ போக்கினை கதை மாந்தர்களின் மூலமாக தூண்டி கடைசியில் ஒரு விதமாக முடித்திருக்கிறார். ஒரு விதமாக என்று சொல்வதைவிட பல்வேறு கோணங்களில் வாசகன் அணுகலாம் என்னும் நிலையில் முடித்திருக்கிறார். அப்படியொரு நாவல் தான் “ஆகாயத் தாமரை”


தலைப்பில் தான் நாவலே அடங்கியுள்ளது. ஆகாயத் தாமரை எனில் நம் அனைவருக்கும் தெரியும் அது ஒரு பூ என. நான் அதனை கோயிலில் தான் பார்த்திருக்கிறேன். நிறைய நாட்கள் தாமரையினையே ஆகாயத் தாமரை என சிலரை ஏமாற்றியதும் உண்டு.

இந்த ஆகாயத் தாமரை பூவினை பற்றி நிச்சயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்நாவலில் அந்த பூவிற்கும் என்ன வேலை ? இது சாமான்ய வாசகனின் மனதினுள் தோன்றும் கவலை. ஆனால் அசோகமித்திரனோ மொழியினை அணுகுபவன் இதற்கு என்ன அர்த்தம் கொள்வானோ அதனை கையில் கொண்டிருக்கிறார். ஆகாயத் தாமரை - ஆகாயத்தில் இருக்கும் தாமரை.

இந்த பொருள் சாத்தியமா எனில் இதன் சாத்தியமற்ற தன்மை தான் கதையினை நகர்த்தி செல்கிறது. இந்த நாவலிலேயே ஒரு வாக்கியம் ஆகாயத் தாமைரைக்கு வருகிறது. அது,
இல்லாத ஒன்றினை கூட இல்லாத பொருளாக சொல்ல வேண்டியிருக்கிறது  என்பதே அது.

நான் கொண்ட அணுகுதலினால் இப்படி எனக்கு படுகிறதா என்றும் என்னால் சொல்ல முடியவில்லை. போகிற போக்கில் வரும் மாந்தர்கள் அவர்களிலான் ஏற்படும் நிகழ்வுகள் என கதை கட்டமைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு முழுக்க உடன் வருவது பகடி. நாவல் முழுக்க சிரிக்கலாம். அத்தனை தூரம் பகடியினை விளையாட விட்டிருக்கிறார்.

கதையில் ரகுநாதன் என்று முக்கிய பாத்திரம் வருகிறது. அதன் ஆரம்பம் அந்நியச் சூழலில் தொடங்குகிறது. கதை போகிற போக்கில் அந்த சூழலே அவனுடன் ஒன்றுகிறது. கடைசியில் அந்த மாந்தர்கள் அல்லது ஒன்றிய அந்நிய சூழல் காணாமல் போகிறது. இதைத் தான் இருவேறு முடிவினை என ஆரம்பத்தினில் சொல்லியிருந்தேன். மேலே சொன்ன ஆகாயத் தாமரையின் விளக்கத்துடன் இணைத்தால் ஒரு வித முடிவினையும் அசோகமித்திரனின் வார்த்தை படி ஒரு முடிவும் நமக்கு கிடைக்கிறது. அவரோ சாதாரண நாவலினை போல கதையினையும் கதை மாந்தர்களையும் முடித்திருக்கிறார். இது கதையினை சார்ந்து இருக்கும் நாவலல்ல. கதை மாந்தர்களை மட்டுமே சார்ந்திருக்கும் படைப்பு. இந்த தோற்றத்திற்கு முடிவிற்கும் இடையில் இருக்கும் ரகுநாதனின் மனம் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது.

தொடக்கத்தில் ஒரு அந்நியச் சூழல், அவர்களினால் ஏற்படும் சின்ன அவமானங்கள், வேலை பார்க்கும் இடத்தில் பொய் சொல்லி லீவு போட்டதால் ஏற்படும் விளைவு, வேலை சஸ்பென்ஷன் ஆனதை  வீட்டில் சொல்லாமல் மறைப்பது, அதற்கு செய்யும் முயற்சிகளில் புது முகங்கள் என மனதினால் நாவல் பல பக்கங்கள் கடக்கின்றன.

அசோகமித்திரனின் தீவிர விசிறிகள் சொல்லப்போவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். இந்நாவல் அட்சகோட்டினை என் மனதிலிருந்து தகர்க்கவில்லை. அதிலிருக்கும் அந்த கதையின் பலம், நேர்கோட்டு நாவலாக இருப்பினும் அதில் அசோகமித்திரன் பிரயோகித்திருக்கும் நடைத் திறன் இதில் இல்லாதது போலவே சாதாரண நாவலாக எனக்கு தோன்றியது. இந்நாவலில் அதிகம் பிடித்தது பகடியும் நாவலின் முடிவையும். அதை வாசித்தால் மட்டுமே உணர முடியும். அதனால் தான் அதிகம் எழுத முடியவில்லை.

இன்னமும் என்னிடம் அசோகமித்திரனின் சில நாவல்கள் இருக்கிறது. அதையும் வாசித்து என் கருத்துகளை பகிர்கிறேன். ஒன்றுடன் ஒன்று இணைத்து பார்ப்பது தவறுதான். மாறமுடியவில்லை என்ன செய்ய!!!

Share this:

CONVERSATION