அட்சக்கோடும் அசோகமித்திரனும்

ஒவ்வொரு எழுத்தளரினை வாசிக்கும் போது புதுவிதமான சொல்வொண்ணா அனுபவம் நமக்கு கிடைக்கிறது. மூன்று வித விதமான எழுத்தாளர்களை வாசித்தாலும் கூட நம்மால் அதனை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த முறை நான் பயணம் மேற்கொண்டது அசோகமித்திரனுடையது. மிகவும் வித்தியாசமான கதை சொல்லல் முறை என்று தான் சொல்ல வேண்டும். கொஞ்சம் விளக்க வேண்டுமெனில் நாவலின் பிரதியில் அல்லது கதை ஓடும் பக்கத்தினில் ஒரு சம்பவம் நடக்கிறது. அதனை எழுத்தாளர், இவர் மட்டுமல்ல பொதுவாகவே அனைவரும் விளக்குகின்றனர். ஆனால் இந்த விளக்கம், விளக்கம் என்பதை தாண்டி இதனை வர்ணனை என சொல்லலாம். வர்ணனை என்பதில் ஆசிரியர் நிச்சயம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஏன் என சொல்கிறேன். கதையின் நாயகனை வர்ணிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். வாசகனுக்கு அந்த வர்ணனை பக்கங்களை தாண்டியும் அந்த கதையின் நாயகனை பற்றி சொன்னது மட்டும் தான் நினைவில் இருக்க வேண்டும். அதை விட்டு அந்த காட்சியில் அவனுடனிருந்த கதாபாத்திரம் என்ன ஆயிற்று என சிந்திக்கக் கூடாது.

சிந்திக்கக் கூடாதா ? சிந்தித்தல் தான் பின்நவீனத்துவத்தில் முக்கியமான ஒன்று என ஒரு சாரார் கேட்கலாம். அதையும் சொல்கிறேன். பிரதியில் வார்த்தைகளின் மூலமோ அல்லது கதையின் மூலமோ வாசகனை குழப்பி வாசகனை சிந்திக்க வைக்கும் அளவு புனைவு இருக்க வேண்டும் ஆனால் வாசகனை சிந்திக்கவிடாமல் எழுத்து நடை கதையின் முடிவிற்கு வாசகனை இழுத்து செல்ல வேண்டும்.

அப்படி செய்வதன் மூலம் என்ன நடக்கப் போகிறது ? ஒரு எடுத்துக் காட்டுடன் விளக்குகிறேன். வார்த்தையின் வேகத்தில் ஒரு ஐந்து பக்கக் கதை போய்க் கொண்டே இருக்கிறது. அப்படி செல்லும் போது இடையில், தோராயமாக ஒரு ஏழாவது பத்தியில் ஒரு பகுதி புரியவில்லை, புரிந்ததாகவும் இருக்கிறது. அதனை நிறுத்தி வாசித்து புரிதலை கொள்ளாமல் அடுத்து சென்றுவிடுகிறோம். கதையும் முடிந்து விடுகிறது. கதை முடியும் போது நமக்கு இடையில் நிறுத்தப்பட்ட இடங்களில் தோன்றிய கேள்விகளெல்லாம் மீண்டும் எழும். அப்படி எழும் போது கதையின் மீள்வாசிப்பு நிகழ்கிறது. புது உருவம் கிடைக்கிறது.

புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இந்த கோட்பாடுகளெல்லாம் இப்போது நமக்கு தேவையில்லை. இப்போது சிலாகிக்க இருக்கும் நாவல் நவீனத்துவம் ஜாதியினை சேர்ந்தது. நவீனத்துவம் என்பது அனைத்தினையும் நமக்கு ஊட்டிவிடுவது போல் இருக்கும். அந்த இடத்தில் இந்த வர்ணனையின் பிரச்சினை நிச்சயம் இருக்கிறது. பின்நவீனத்துவத்தில் நாம் பிரதிக்குள் இருக்கும் கடந்த காலத்தினை கவனிக்க தேவையில்லை. அதே இந்த மாதிரி நாவல்களில் அதன் தேவை அதிகம். நேர்கோட்டு கதை என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதற்கென ஒரு வரைமுரையினை வைத்துக் கொண்டுள்ளது. ஆக இது போன்ற நேர்கோட்டு கதைகளில் வாசகன் கடந்து வந்த பக்கத்தில் ஒரு கதாபாத்திரம் பாதியில் நிற்கிறதே என எண்ணினாலே அது எழுத்தின் வீழ்ச்சிக்கு இட்டு செல்லும். சில நேரங்களில் அது வாசகனின் புரிதலில் இருக்கும் கோளாறாகவும் இருக்கலாம்!!!

இந்த எதுவுமே, அஃதாவது எந்த குறைபாடுமே அற்று அதீத வர்ணனைகளுடனும் உருக்கமான கதை அமைப்புடனும் நான் வாசித்த நாவல் “18வது அட்சக்கோடு”


இந்நாவலினை எத்தனை நேரமானாலும் சிலாகிக்கலாம். வாழ்வின் நேரங்களில் அடுத்து நடக்கப்போவது இது தான் என்பதை எப்படி தீர்மானமாக சொல்ல முடியாதோ அதே போல ஒரு மனநிலையினை மெல்லிய அதிர்வுகளை இந்நாவல் எழுப்புகிறது.

அசட்டுத் தனமான ஒரு விஷயம் என்னவெனில் இந்நாவலின் தலைப்பில் இருக்கும் ‘அட்சக்கோடு’ என்பதற்கு அர்த்தம் தெரியாமலேயே தான் நாவலினை வாசித்தேன்! இப்போது தெரிந்து கொண்டேன். அதி அற்புத தலைப்பு.

நாவலின் கட்டமைப்புகளுக்குள் செல்வதற்கு முன் இந்நாவலினை ஏன் வாங்கினேன் என சொல்ல வேண்டும். தமிழில் நிறைய நாவல்களினை வாசிப்பவர்களிடத்தில் அதிகம் இடம் பிடித்த மனிதர், எழுத்தாளர் அசோகமித்திரன். எனது வாசிப்புலகில் இன்னமும் இடம்பிடிக்காமல் இருந்தார். அவரை பற்றி நான் இருக்கும் முகநூல் குரூப்புகளிலும் அதிகம் எந்நாவலும் சிலாகித்து எழுதப்படவில்லை(நான் பார்க்கவில்லையா என்றும் தெரியவில்லை). இதனால் அசோகமித்திரனின் வாசத்தினையும் அறிந்து கொள்ளலாம் என்னும் எண்ணத்தில் அந்த நூல் நிலையத்தினில் நுழைந்தேன். அங்கு ஏகப்பட்டது இருந்தன. ஆனாலும் பணம் என்னும் ஒரு விஷயம் இருக்கிறதே. ஏற்கனவே க.நா.சு வேறு. அதனால் பல நூல்களில் எதனை தேர்வு செய்யலாம் என யோசிக்கும் போது பழைய ஞாபகம் தொற்ற அட்டைப்படம் பார்த்து தேர்வு செய்தேன். அதில் எனக்கு ஆகப்பிடித்தது இது! கிறுக்குபுத்தி கூட சில நேரங்களில் நல்லதினை காட்டுகிறது. இனி நூலுக்குள் செல்வோம்.

முதலில் வர்ணனைகளை பற்றி சொல்லியிருந்தேன். இக்கதை வர்ணனை என்னும் தளத்தின் பீடத்தில் இருக்கிறது. ஒரு நாவலில் வர்ணனை எதற்கு எனில் வாசகனின் இருத்தலை அந்த கதை நடக்கும் தளத்திற்கு கடத்தி செல்வதற்கே. பொன்னியின் செல்வனை வாசிக்கிறோம் எனில் அந்த காலத்து காஞ்சியினையும் தஞ்சையினையும் இது தான் என சொல்ல முடியும். அது எப்படி நிகழ்ந்தது எனில் படைப்பாளியின் வர்ணனை திறமையில் தான் இருக்கிறது.

இந்நாவலும் வரலாற்று நாவலே. எந்த வரலாற்றினை பேசுகிறது எனில் சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் தெலுங்கான பிரச்சினை தழைத்தோங்கி இருந்தது. அப்படி செய்திகளை பார்க்காதவர்கள் கூட அவ்வப்போது சேனல்களை மாற்றும் போது காதுபட கேட்டிருப்பீர்கள். அந்த பிரச்சினையின் ஆரம்ப கட்டம் மற்றும் அதன் வீரியத்தினை இந்நாவல் உரைக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னும் ஹைதராபாதில் இருந்த நிஜாம்கள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என அரசினை எதிர்த்து போராடினார்கள். அந்த போராட்டத்தில் காங்கிரஸினை எதிர்த்து போராடுவதால் கம்யூனிஸ்டுகளும் தங்கள் பக்கம் நினைத்து தங்களது படை பெரியது என்பது போல பெரிய போராட்டமே இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது. அந்த போராட்டத்தின் முடிவு என்ன ஆனது என்பது கதையின் முடிவுடன் சேர்ந்து நமக்கு தெரிய வருகிறது. அப்படியெனில் இது மட்டும் கதையில்லையா ?????

இந்நாவல் வாசகனிடம் சேரும் போது இருவிதமான உருவத்தினை எடுத்துக் கொண்டு சென்று சேருகிறது. ஒன்று இந்திய வரலாற்றினை நன்கு அறிந்தவர்களுக்கு, மற்றொன்று என்னைப்போல் அறியாதவர்களுக்கு. அறியாதவர்களுக்கு இந்நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் இப்படியும் இந்தியா இருந்திருக்கிறதா என்னும் வியப்பினை அளிக்கிறது. இந்த அரசியல் பிரச்சினையில் ஹிந்து முஸ்லீம் பிரச்சினையும் இருப்பதால் அதன் வீரியம் கதையில் நன்கு தெரிகிறது.

இந்த வதையினை அரசியலில் மட்டும் சேர்க்காமல் கொஞ்சம் உள்ளுணர்விலும் இணைத்திருக்கிறார் அசோகமித்திரன். அதை சொல்லத் தான் வர்ணனை என்னும் பகுதியினை எழுத நினைத்தேன் அதற்குள் கதையின் கருவிற்கு சென்றுவிட்டேன். கதையின் நாயகன் சந்திரசேகரன் ஹைதராபாத்தில் குடியேறுபவன். அங்கு ஏற்படும் புதிய நட்புகள் அதன் விரிசல்கள் என கதை தொடர்கிறது. இதில் அந்த அரசியல் பிரச்சினை எங்கு சேர்கிறது என்பது தான் 18வது அட்சக்கோடு.

இக்கதையில் வர்ணனை என்பதை முழுதாக நாம் உணரும் போது நாவல் முடிந்திருக்கும் என்பதே என் எண்ணம். கதை ஆரம்பத்திலிருந்து ஏதோ கிரிக்கெட்டினையே பலநூறு ஆண்டுகள் ஆடி அதை ஒரு பாத்திரம் கொண்டு வர்ணிப்பது போல் அழகுற நாவல் ஆரம்பிக்கிறது. ஆரம்பிக்கிறது எனில் கிட்டத்தட்ட ஐம்பது பக்கத்திற்கும் மேல். அப்படியே ஒவ்வொன்றாக வர்ணிக்கிறது. அந்த வர்ணனையே கதை என்னும் உருவினையும் கொள்கிறது அல்லது உருவம் பெறுகிறது.

இதில் உள்ளுணர்வில் வதையினை அசோகமித்திரன் சொல்லியிருக்கிறார் என்றிருந்தேன். இது நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத பக்கங்களாக இருக்கும் என்பது என் எண்ணம். சிறுவயதிலிருந்தே நம்முள் வதை என்னும் விஷயம் நன்கு பதிந்திருக்கிறது. நாம் விளையாடும் போது பிறரை வதைத்திருக்கிறோம். அது அப்போது நமக்கு நிச்சயம் தெரியாது. நாமே வதைப்பட்டிருந்தாலும் அதனை வெளியில் காண்பிக்காமல் உள்ளூர அழுதிருப்போம். உளவியல் ரீதியான வதைத்தலும் வதைப்படுதலும் சிறுவயதில் கொடூரமாகவே நிகழ்ந்திருக்கிறது என்பதை இந்நாவலினை வாசிக்கும் போது உணர்ந்து கொள்ளமுடிகிறது. அதானை மாற்ற முடியாது என்பதும் மாற்ற முடியாத கருத்தாக கதையின் ஓட்டத்திலேயே புரிந்து கொள்ள முடிகிறது.

நிர்வாணம். இதனை சிலாகிக்காமல் யார் இந்நாவலினை பற்றி எழுதினாலும் அது முழுமையடையாது. நிர்வாணம் என்னும் விஷயம் நமது இலக்கியத்தில் பலவித உருவம் எடுத்துள்ளது. மதங்களில் தியான நிலையாகவும், சில இடங்களில் காமத்தின் வெளிப்பாடகவும், வதைக்கூடமாகவும் இன்னபிற. இந்நாவலில் வதைக்கூடமாகத் தான் அசோகமித்திரன் கையாண்டிருக்கிறார். ஆனால் அதன் வெளிப்பாடு, வெளிப்படுத்திய முறை எழுத்து நடை எப்படி சொன்னாலும் அது அசோகமித்திரனால் மட்டுமே செய்யக்கூடியது என்பது என் எண்ணம்.

ஹைதரபாத் மற்றும் செகண்ட்ராபேடினை பிரதியில் காட்டியிருக்கும் முறை சுற்றுலா அளவு, ரசித்து மேற்கொண்ட பயணத்தின் குறிப்புகள் போல அழகுற அமைந்திருக்கிறது. கதையில் முஸ்லீம்களை சித்தரித்திருக்கும் முறை வெறும் கதையாக வாசிப்பதால் நம்பமுடியாத மாதிரி இருக்கிறது. வரலாற்று நாவல் என்பதால் அப்படியும் இருக்கலாம் என்பதே நாம் கடைசியில் வரும் முடிவு.

தலைப்பினை சொல்லியிருந்தேனே - 18வது அட்சக்கோடு ???
பூகோலத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் latitude மற்றும் longitude என இடத்திற்கான அளவுகோல் இருக்கிறது. அதன்படி ஹைதராபாத்தும் செகண்ட்ராபாத்தும் பதினெட்டிற்கு அருகில் வருபவை. இதனை அவ்வளவு சிறப்பாக சொன்னதன் காரணம் இந்நாவலின் நாயகன் சந்திரசேகரன் அல்ல ஹைதராபாத்தே!!!!

Share this:

CONVERSATION