கேட்டிராத கிரேக்க கதை

நேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி பார்ப்பேன் என்றும் சொல்லியிருந்தேன். அதனை தங்களுடன் பகிரலாம் என்னும் சின்ன ஆசையின் விளைவே இந்த பதிவு.

அதன் படி முதலில் அக்ரான் என்னும் நதியினை தேடினேன். அந்நதியினை வருத்தத்தின் அடையாளமாக பார்க்கின்றனர் என போட்டிருந்தது. நிச்சயம் இதற்கென சில வரலாறு அல்லது ஏற்கனவே இருக்கும் வரலாற்றில் இந்நதியும் இடம் பெற்றிருக்கலாம் என்னும் நப்பாசையில் அதை தேடினேன்.

அந்த பஞ்ச நதிகளுள் ஒன்றாம். அதுவும் பாதாள உலகம் என மதிக்கப்படும் நம்பிக்கையில் இருக்கும் ஐந்து நதிகள். அந்த பாதாள உலகத்திற்கு அரசன் ஹட்ஸ். அவர் குரோனஸ் மற்றும் ரியா என்பவர்களுக்கு பிறந்தவன். அவர்கள் யாரெனில் கிரேக்க புராணங்களில் புகழ்ந்து பேசப்படும் டைட்டன்ஸ்.

அவர்களை பற்றியும் சொல்கிறேன். அதற்கு கயா என்னும் பாத்திரத்தினை சொல்லியே ஆக வேண்டும். இக்கதையினை புதிதாக கேட்டிருப்பதால் சின்ன க்ம்பேரிசன். நமது இந்து மதத்தில் ஐம்பூதங்கள் என பிரித்து அதற்கு ஒரு கடவுளை நியமித்திருப்பது போல கிரேக்கத்திலும் இருக்கிறது. கயா ஒரு பெண் கடவுள். அவள் தன்னை சுற்றி இருக்கும் வானமாக உருவாக்கியது யுரேனஸ். கடல் பகுதியின் கடவுள் பெயர் போண்டஸ்.

இதில் யுரேனஸிற்கும் கயாவிற்கும் பிறக்கும் குழந்தைகள் பன்னிரெண்டு அவர்கள் தான் டைட்டன்ஸ். அவர்கள்,

ஓஷனஸ் - ஒட்டு மொத்த கடலிற்கான கடவுளாக மதிக்கின்றனர். ஓஷனஸினை சிலையெட்டுகும் போதோ கிடைத்த ஆவணங்களிலும் அவனின் உடல் மேல் பாதி கட்டு மஸ்தான ஆணின் தேகமும், நீண்ட தாடியும், கொம்பும், கீழ்பாதி உடல் ஒரு பாம்பினை போலவும் இருக்கிறது. இதில் கீழ் பாதி பாம்பினை போல தானே தவிர பாம்பு அல்ல. அது நல்லது, கெட்டது இரண்டினையும் பொதுவாக குறிக்கும் தன்மையினை கொண்டது.

கோயஸ் - வட துருவத்தில் சொர்கத்தின் அருகாமையில் இருக்கும் நட்சத்திரமாக கருதப்படுகிறான். ஞானம், தொலைநோக்கு பார்வை போன்றவற்றிற்கான கடவுள் கோயஸ்.

ஹைப்பீரியான் - இவனை கிரேக்க இலக்கியங்களில் ஹெலியோச் என்கின்றனர். முன்னர் சொல்லப்பட்டிருக்கும் பெயரோ அஃதாவது ஹைப்பீரியான் என்பது கவனம், ஞானம் மற்றும் ஒளிக்கான கடவுளாக கொள்ளப்பட்டது. பின்னர் வைக்கப்பட்ட ஹெலியோஸ் என்னும் பெயரோ சூரியனின் உருவமாக கொள்ளப்பட்டது. கிரேக்க கலாச்சாரங்களிலும் கோட்பாடுகளிலும் அதிகம் இடம்பிடித்ததும் ஹைப்பீரியானே.

லேபடஸ் - இவனை ஜேபடஸ் என்றும் சொல்கின்றனர். இது அழியும் தன்மையினை உடைய இவ்வாழ்க்கைக்கான கடவுள்

இதுவரை சொல்லாமல் வந்த இன்னுமொரு பெயர் க்ரியோஸ். க்ரியோஸ் தென் துருவம். அது என்ன தென் துருவம் எனில் இப்பூமியினையும் சொர்க்கத்தினையும் நான்கு திசைகளிலும் நான்கு தூண்களை கொண்டு பிரித்தனர். அந்த நான்கு தூண்கள் தான் க்ரியோஸ்(தெற்கு), கோயஸ்(வடக்கு), லேபடஸ்(கிழக்கு), ஹைப்பீரியான்(மேற்கு).

தியா -  இது பெண் கடவுள்கள். பெண் டைட்டன்ஸ். இவள் பார்வைக்கும், கண்கூச்வைக்கும் ஒளிக்கும், தங்கம் மற்றும் விலை மதிக்கத்தக்க கற்களுக்கு கடவுள். இவள் ஹைப்பீரியானினை மணந்து கொண்டு ஹெலியோஸ் என சூரியனுக்கும், இயோஸ் என அஸ்தமனத்திற்கும், செலின் என நிலவிற்கும் என மூன்று குழந்தைகளை ஈன்றெடுத்தாள்.

ரியா - கடவுள்களுக்கெல்லாம் தாய். பெண்ணின் தாய்மை, ஈன்றெடுக்கும் தன்மை, மாதவிடாயின் போது வரும் இரத்தம், பிரசவத்தின் போது வெளிவரும் நீர் என பெண்மைக்கு மட்டுமே உரிய அனைத்திற்கு கடவுள் தான் ரியா. இந்த ரியா கடவுளிற்கு பின்னால் சூப்பர் கதை இருக்கிறது. மீதி டைட்டன்ஸினை சொல்லி சொல்கிறேன். இவ்வளவு ஏன் இன்னும் டைட்டன்சிலேயே ஒரு சுவாரஸ்யக் கதை இருக்கிறது.

நெமொசின் - இதனை ஞாபக சக்திக்கான கடவுளாகவும் பயன்படுத்தும் மொழிக்கான கடவுளாகவும் கருதுகின்றனர். அந்த காலத்தில் இருந்த கவிகள் கூட தங்களின் கவித்திறமைக்காகவும் ஞாபக சக்திக்காகவும் இக்கடவுளையே வேண்டினர் என சொல்லியிருக்கிறார்கள்.

போய்ப் -  இவளை அறிவாளித்தனத்திற்கும் புனிதத்தன்மைக்கும் கடவுளாய் கருதுகின்றனர். 

டேதிஸ் - இவ்வுலகத்தினை சுற்றியிருக்கும் நீரின் மூலத்திற்கு கடவுளாய் டேதிஸ் கிரேக்கத்தில் கருதப்பட்டாள்.

இந்த பதினோரு பேருக்கு பின் தான் டைட்டன்ஸிலேயே சிறந்த குரோனஸ் படைக்கப்பட்டான். குரோனஸ் பிறந்த பிறகு யுரேனஸ் உடலுறவிற்காக கயாவினை நெருங்கி அதற்கு பிறகு இடி மின்னல் போன்றவற்றிற்கான கடவுள்களை படைத்து அதனை கயாவின் உடலிலேயே பதுக்கி வைத்தான். வலி தாங்க முடியாத கயா நம் ஊரில் அறுவடை செய்ய ஒரு கொடுவாளை பயன் படுத்துவார்களே அதை எடுத்து குரோனஸிடம் கொடுத்தாள். குரோனஸ் அதை வைத்து யுரேனஸ்ஸுடன் சண்டையிட்டு அவனின் விரைகளை அறுத்து கடலில் எறிந்தான். அதை அறுக்கும் போது யுரேனஸின் உடலிலிருந்து வழிந்த இரத்தத்தில் உருவானவர்கள் எரின்ஸ் ஜெயிண்ட்ஸ் மெலியே அப்ரோடைட் இன்னும் பலர். 

இதில் எரின்ஸ் பழிவாங்கும் கடவுளாக கருதப்பட்டான். இன்னும் நிறைய பேர் அசுரர்களாக அசுர குணங்களோடு படைப்பக்கப்பட்டனர். யூரேனஸின் விரைகளை அறுத்தவுடன் அதனை கடலில் எறிந்தான் குரோனஸ். அதிலிருந்து உருவானவன் தான் அப்ரோடைட்.

இதன்பின் குரோனஸ் ரியாவினை மணந்து கொண்டான். அப்படி மணந்த பின் அவர்கள் இருவரும் அனைத்து உலகங்களையும் ஆண்டனர். அந்த காலத்தினை தான் The golden age என்கின்றனர். அப்படி அரசாண்டு வரும் போது அசரீரியின் வார்த்தையில் உன் குழந்தையாலேயே நீ அழிவாய் என்பதை கேட்கிறான். இதனை கேட்டவுடன் அவனுக்கும் ரியாவிற்கும் இடையே பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் அவன் சாப்பிடுகிறான். ஆறாவதாக பிறக்கும் குழந்தை தான் ஜீயஸ். அவனை க்ரீட் தீவிற்கு அனுப்பபட்டு ஆடுகளுடன் ஆடுகளால் வளர்கிறான். குறிப்பிட்ட வயது வந்த பின் அவன் தன் தந்தையான ஜீயஸினை கொள்கிறான்.

அதற்கு பின் உருவானவர்கள் தான் ஒலிம்பியன்ஸ். அதன் பிரதான ஆறு கடவுள்கள் யாரெனில் ஜீயஸ், ஹட்ஸ், பொஸடியன், டெமெடர்ம் ஹெஸ்தியா, ஹெரா என்பவர்கள். இந்த ஒலிம்பியன்ஸ் ஏற்கனவே இருக்கும் கடவுளரான டைட்டன்ஸுடன் போர் புரிகின்றர். அதனை புனிதப்போர் என்று சொல்கின்றனர்.(clash of the titans என்று ஒரு படம் வந்தது. இன்னும் பார்க்கவில்லை. இதைப்பற்றித் தான் பேசும் என்பது என் எண்ணம்). பத்து வருடங்கள் போர் நடந்தது. அந்த போரில் வென்றபின் ஒலிம்பியன்ஸ் கடவுள் ஆகின்றனர்.ஜீயஸ் வானத்தினையும் பொஸ்டியன் கடலினையும் ஹட்ஸ் பாதாள உலகத்தினையும் ஆள ஆரம்பித்தனர். பாதாள உலகம் என்ன எனில் மனிதன் மாண்ட பின் அவனின் ஆன்மா இந்த உடலினை விட்டு அந்த பாதாள உலகத்திற்கு தான் செல்லும் என்பது கிரேக்கர்களின் நம்பிக்கை. ஹட்ஸ் மரணத்தின் கடவுளாக கருதப்பட்டான்.

சேரோன் என்ற ஒருவனை சொல்லியே ஆக வேண்டும். பூலோகத்தில் இறந்து போகும்  மனிதனை இந்த பாதாள உலகத்திற்கு அழைத்து வரும் படகோட்டியே இந்த சேரோன். அந்த ஹட்ஸின் ராஜ்ஜியத்தில் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஐந்து நதிகள் இருக்கிறது. அதில் பாதாளத்தில் நுழைய உதவும் நதி அக்ரான். அக்ரான் நதியினை மனிதன் செய்த பாவங்களை துடைக்கும் இடமாக கருதப்படுகிறது.

அடுத்த நதியான காகிடஸ் சோகத்தினை இசையுடன் கலந்து கதறும் ஒரு இடமாக சொல்லப்படுகிறது.

ப்ளெகத்தான். இந்த நதியினை நெருப்பின் தன்மையினை கொண்ட நதி என சொல்கிறார்கள்.

லீத் என்னும் நதி. இந்த நதியினை பொருத்தவரை ஒரு ஆன்மா அடுத்த பிறவியினை எடுப்பதற்கு முன் இந்நதியில் இருக்கும் நீரினை அருந்தினால் தன் புணர்ஜன்ம ஞாபகங்களை மறந்துவிடலாம் என்கின்றனர்.

ஸ்டிக்ஸ். இந்த இடத்தினை அல்லது நதியினை நரகமாக சித்தரிக்கிறார்கள். சேரோனின் வேலையே இறந்தவர்களின் உடலை இந்த ஸ்டிக்ஸினை தாண்டி எடுத்து செல்வதே. . .

போரடிக்காமல் நான் வாசித்ததை பகிர்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன் கூடிய சீக்கிரம் ஒரு நாவலினை பற்றி எழுதுகிறேன். பதிவில் தவறு இருந்தால் எழுதுங்கள். . .


Share this:

CONVERSATION