க.நா.சு - ஒரு புதிய உலகம்

ஒவ்வொரு எழுத்தாளரை வாசிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கிறது. ஒரு எழுத்தாளரின் பள்ளியினை நாங்கள் பின்பற்றுகிறோம் என சிலர் சொன்னாலும் அதன் சாயல் அவ்வளவு எளிதில் நம்மால் அறிந்து கொள்ள  முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்றும் சொல்கிறேன். ஒரு நாவலை அணுகுகிறோம் எனில் முதலில் நாம் கணக்கில் கொள்ளும் விஷயம் கதை. கதை இதுவரை படித்திறாத கதையாக இருந்தால் அதனை நன்று என சொல்கிறார்கள். வேறு எங்கோ தமக்கு தெரிந்த எழுத்தாளரின் படைப்பினை போல் இருந்தால் அதன் சாயல் என முத்திரை இடுகிறார்கள். இந்த பள்ளி என்னும் விஷயமோ கதை சார்ந்த விஷயம் அல்ல. முழுக்க முழுக்க நடை சார்ந்த விஷயம். இது சிலர் மட்டுமே கவனிப்பது. என்னை பொருத்தவரை அது ஒரு புதிரான அனுபவம். அதை “நான்” இல் விளக்கப் பார்க்கிறேன்.

அது என்ன நான் ?
இலக்கியங்களில் நான் என்று உலவ விடப்படும் பாத்திரங்கள் வாசகனுடன் அதிகம் விளையாடுகிறது. இதை நான் எப்போது உணர்ந்தேன் எனில் ஓரான் பாமுக் என்னும் துருக்கிய எழுத்தாளர் எழுதிய My name is red நாவலில். அந்நாவலின் சிறப்பு அம்சமும் இந்த நான் என்றே சொல்லலாம். நாவல் எனில் நிச்சயம் அதில் நிறைய அத்தியாயங்கள் வரும். அந்த அத்தியாயங்களுக்கு சில எழுத்தாளர்கள் பெயர் வைப்பர் சிலர் எண்களை மட்டும் வைப்பர். இந்த நாவலிலோ பெயர் தான் அதுவும் எப்படியெனில் i am corpse, i am black, i am stark என்று. இதில் முதலாமாவதை எடுத்துக் கொள்வோம் i am corpse. corpse எனில் பிணம். இந்தப்பகுதியில் வரும் அனைத்து நானுமே இந்த பிணத்தினை மட்டுமே குறிக்கும். அந்த அத்தியாயத்தில் முன்னிலையில் இருப்பது பிணம் தான். இப்படி ஒவ்வொரு அத்தியாயமாக செல்லும். இதில் என்ன புதிர் இருக்கிறது என கேட்கலாம். சொல்கிறேன். அப்படி அந்த நான் எதையாவது பிரதிக்குள் தேடுகிறது அல்லது புலனாய்வு செய்கிறது எனில் அதனை நாம் தான் செய்கிறோம் என்ற புரிதலே நமக்கு ஏற்படும். வாசகனாக வாசிக்கும் போது நாம் பிரதிக்குள் இருக்கும் நானாக மாறுகிறோம். இந்த நான் என்னும் திறனையே பின்நவீனத்துவத்தின் குறியீடாக பார்க்கிறேன். பின்நவீனத்துவத்தினை பற்றி அண்மையில் தான் கருந்தேள் எழுத வாசித்தேன். அதன் லிங்க் - பின்நவீனத்துவம் என்றால் என்ன ? மையத்தினை உடைத்தல் என்பது பின்நவீனத்துவத்தின் பிரதானம் என்பது என் எண்ணம். இதில் ‘நான்’ ஆனது வாசகனின் வாசிப்பில் அந்த பிரதியினை கதை என்னும் தளத்திலிருந்து தூக்கி எறிகிறது.
இதனை ஓரான் பாமுக்கினை வாசித்த பிறகு இப்போது தான் க.நா.சுப்ரமண்யம் எழுதிய “வாழ்ந்தவர் கெட்டால்” என்னும் நாவலில் உணர்கிறேன்.

இதை நிச்சயம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். தஞ்சாவூரினை பற்றி லேசாக இந்நாவலின் ஓட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதையின் பிரதான பாத்திரம் “நான்”.

இந்நாவலின் ஆரம்பத்தில் க.நா.சு - இந்நாவல் ஒரு ருஜுவாகாத விஷயம் ஒருவர் மனதை அரித்து அவர் கண்முன் நடந்த கோர சம்பவம் அவர் சாவுக்கும் காரணமாக அமையலாம் என்ற தத்துவத்தினை தழுவியது என்கிறார். இந்த கோட்பாட்டினை சராசரி வாசகனால் நாவலின் கடைசியில் மட்டுமே காண முடியும். நான் முன்னரே சில பதிவுகளில் எந்த பதிவு என ஞாபகம் இல்லை சொல்லியிருக்கிறேன்,அஃதாவது ஒரு தத்துவத்தினை சார்ந்தோ மையத்தினை சார்ந்தோ ஒரு படைப்பு அமைகிறது எனில் அந்த கருவின் தாக்கம் படைப்பின் ஒவ்வொரு அங்கத்திலும் நூலிழையாக ஓடிக் கொண்டு தானிருக்கும். அதன் படி தான் க.நா.சு சொன்ன இந்த தத்துவமானது ஒவ்வொரு அடியிலும் ஓடுகிறது.

வெளிப்படையாக சொல்லவேண்டுமெனில் ஆரம்பத்தில் இவரின் எழுத்து நடையே எனக்கு பிடிக்கவில்லை. சிறிது பக்கங்கள் கடந்தபின் யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே இருக்கும் தூரத்தினை கடந்து இரண்டும் ஒன்று தான் என்பது போல் இணைத்து, அதுவும் பிரதான பாத்திரம் நான் என்று வேறு சொல்லிவிட்டேன் அதனால் இரண்டிற்கும் வேறுபாடின்றி நம்மை கதைக்குள் ஆழ்த்தியவுடன் இந்த நடைப்பிரச்சினை என்னைவிட்டு அகன்றது. இதை மனத்தில் வைத்து வாசித்தால் நான் சொன்ன விஷயம் நன்கு புரியும். இந்நாவலில் மெல்லிய திகில் இருக்கிறது. அதனை அவிழ்க்காமல் கதையினை சொல்கிறேன்.

மொத்த கதையே மூன்றே கதாபாத்திரம் தான் - நான், ரகு, மம்மேலியார். முதலில் மம்மேலியாரினை பற்றி சொல்லிவிடுகிறேன். ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்று ஒரு மனோதத்துவ வியாதி இருக்கிறது. அது என்ன எனில்
(காலங்காலமாக சொல்லப்படுவதால் நானும் அதனையே சொல்கிறேன்)ஒரு பெண்ணை கடத்தி பணயக் கைதியாக சில வாரம் வைத்திருந்தால் கடத்தி வைத்தவன் மீதே அன்பு ஏற்படும் என்கிறது அந்த வியாதி. நமக்கு தகுந்தாற்போல சொல்லவேண்டுமெனில் feeding bottle. அதனை பெற்றோர் நிறுத்திய பின்னும் அதில் தான் குடிப்பேன் என நிறைய குழந்தைகள் அடம் செய்யும் அப்போது அதனைப் போலவே நினைத்து இதில் குடி எனபர். அதே தான் மம்மேலியாரும். ஊரிலேயே பணக்காரராய் வாழ்ந்தவர். பணம் அனைத்தும் கட்டிய மனைவியின் தவறான பழகலினால் இழந்தார். அவரின் வாரிசுகள் தான் கதையின் ஓட்டத்தில் வருகின்றனர். அவர்களுக்கு ஆடம்பரமாகவே வாழ்ந்து பழகியதால் அதே போல் இப்போதும் போடும் போலி வேஷங்கள் தங்கள் வயிற்றிற்கு அடுத்தவனை பேசி கவிழ்ப்பது என விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத அளவு அவரின் கதாபாத்திரம் செய்யப்பட்டுள்ளது.

ரகு மற்றும் ‘நான்’ இரண்டையும் சேர்த்து தான் சொல்லவேண்டும். நான் என்பவன் எழுத்தாளன். ரகு அவனின் பால்யகால சிநேகிதன். ரகுவிற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் மனைவி இல்லை. ரகுவினை சந்திக்க தஞ்சாவூர் செல்கிறான். அங்கு ரகுவுடன் சந்தோஷமாக கழிக்கிறான். தஞ்சை மஹாலில் சில நூல்களை பார்த்து வாசிக்கவும் முடிவு செய்கிறான்.

இந்த இடத்தில் மொழியின் இன்னுமொரு தாக்கத்தினை நான் சொல்லியே ஆக வேண்டும். க.நா.சு இந்த இடத்தில் ஒரு த்த்துவத்தினை அவர் நான் பாத்திரத்தின் மூலமாக சொல்கிறார். ஐதீகம் - முறை. ஐதீகம் என்பது மனிதனுக்கு தேவைதான். ஐதீகம் சில நேரங்களில் ஒரு உருவத்தினை பற்றி வெவ்வேறு உருவங்களை சித்தரிக்கும் சக்திகளை பெறுகிறது என்கிறார். நான் சொல்ல வ்ருவது இதற்கு எடுத்துக்காட்டாய் இதே நாவலில் சொல்லியிருக்கும் மன்னன் என்னும் சொல் தான். மன்னன் என்னும் சொல்லிற்கு அகராதியில் என்ன அர்த்தம் இருக்கும், ஒரு பிராந்தியத்தினை அல்லது நாட்டினை ஆள்பவன் என இருக்கலாம் வேறுவிதமாகவும் இருக்கலாம். ஆனால் நாம் அதனை வாசிக்கும் போது நமக்கு என்ன என்னவெல்லாம் தோன்றுகிறது. அரண்மனை அந்தப்புரம் படை சேவகர்கள் இன்னும் சின்ன வயதில் நாம் அறிந்த தொலைக்காட்சியில் பார்த்த ராஜாக்களை உருவகம் செய்கிறோம். நமக்குள் சிந்தனை தோன்றுகிறது. அப்படி தோன்றும் போது படைப்பாளி சொல்லும் மன்னன் இறந்து வாசகனின் மனதில் இருக்கும் மன்னன் எழுந்துவிடுகிறான். இதைத் தான் சார்த்தரும் சொல்கிறார் சாருவும் சொல்கிறார். எனக்கான ஆச்சர்யம் எத்தனையோ வருடங்களுக்கு முன் இவர் சொன்னதே. மேலும் அப்படி பேசவைப்பது தான் உன்னத இலக்கியம் என்றும் அவர் முன்வைக்கிறார்.

சரி கதைக்கு வருவோம். இப்படி தஞ்சை மஹால் தான் படித்தது என அலுக்காமல் கதை நகரும் போது மம்மேலியார் கதைக்குள் வருகிறார். மம்மேலியாரினை எங்கு பார்த்தாலும் ரகு விசனமும் பயமும் கொள்கிறான். அது ஏன் என நமக்கும் தெரியவில்லை கதையின் முக்கிய பாத்திரத்திற்கும் தெரியவில்லை. யதேச்சையாக ‘நான்’உம் மம்மேலியாரும் சந்திக்கின்றனர். அப்போது மீண்டும் யதேச்சையாக இருவரும் ரகுவினை சந்திக்கின்றனர். ரயில் நிலையத்தில். ரகு எதையோ மம்மேலியாரின் காதில் சொல்ல மம்மேலியார் வரும் ரயிலில் விழுந்து இறந்துவிடுகிறார். ரகு என்ன சொன்னான் ? ரகுவிற்கும் மம்மேலியாருக்கும் என்ன பிரச்சினை ? இதன் பிறகு ரகுவின் நிலை என்ன ? என்பது இக்கதையின் முடிவு.

“நான்” என்னும் விஷயத்தினை கையாண்டவிதம் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. மொழி மட்டுமே இது எழுதிய காலம் இதுவல்ல என சொல்லவைக்கிறது. இதனை நாகராஜனிடமும் ஆதவனிடமும் கரிச்சான்குஞ்சுவிடமும் இப்போது க.நா.சுவிடமும் கண்டுவிட்டேன். அந்த மொழியில் லேசாக பிராமணர்களின் வாடை தெரிகிறது. அதற்கு காரணம் தெரியவில்லை. ஆனால் கரு மற்றும் கதை சொல்லும் விதம் எழுதப்பட்ட காலம் தாண்டி நிற்கிறது. மொத்தத்தில் க.நா.சு - ஒரு புதிய உலகம்.

Share this:

CONVERSATION