கற்றுத் தர மறந்த கல்வி


சற்று பெரிய பதிவு பொறுமையுடன் வாசிக்கவும்.
டிமிட்ரி மெண்டலீஃப் மூன்று நாட்களாக தூங்கவே இல்லை. அவரை சுற்றி பேப்பர் கத்தைகள்.
புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது.

அவருடைய பிரச்சனை இருக்கும் 63 தனிமங்களை(Elements) தொகுக்க வேண்டும்.

இப்போது நாம் பீரியாடிக் டேபிள் என்று படிக்கிறோமே ( ஆறாங்கிளாஸ்ல படிச்சிருப்பீங்க) அதன் முதல் வடிவத்தை கொடுத்தது இதோ தூங்காமல் முழித்து கொண்டு குழம்பிகொண்டிருக்கும் ரஸ்ய விஞ்சானி டிமிட்ரி மெண்டலீஃப்தான்.
அறுபத்தி மூன்று தனிமங்களையும் எப்படி தொகுக்க வேண்டும்.

வாயுவுக்கள், உலோகங்கள் என்று தொகுக்கலாம்.

இது மாதிரி எந்த அடிப்படையில் தொகுக்க வேண்டும் என்று உலகமே குழம்பி கொண்டிருந்தது.

கொஞ்சம் பின்னாடி போகலாம்.

தனிமங்களே பொருண்மையின்( Matter) அடிப்படை கூறுகள் என்று முதலில் விஞ்ஞானிகள் நம்பி கொண்டிருந்தார்கள்.

இப்போ ஹைடரஜன், ஆக்சிஜன் எல்லாம் தனிமங்கள்.

தண்ணீர் ஒரு Compound.தண்ணீரை ஹைடரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரிக்கலாம்.

ஆனால் ஹைட்ரஜனை(தனிமம்) அதற்கும் மேலாக பிரிக்க முடியாது என்று நம்பி கொண்டிருந்தார்கள்.

இல்லை இல்லை தனிமங்களையும் பிரிக்க முடியும் என்று 1803 ஆம் ஆண்டு உலகிற்கு சொன்னவர் ஜான் டால்டன்.

அவர் தனிமங்கள் அணுக்களினால்(Atoms)செய்யபட்டதுஎன்றார்.

அந்த அணுக்களின் எடையை கண்டறியும் முறையையும் டால்டன் கண்டுபிடித்தார்.அதில் பல தவறுகள் இருந்தாலும் அணுக்களின் எடையை கண்டுபிடிக்கலாம் என்று சொன்னது அவர்தான்.

இருப்பதிலே எடை குறைவான ஹட்ரஜனின் அணு எடையை ஒன்று என்று எடுத்துக்கொண்டு, அதனுடன் ஒப்பிட்டு ஆக்சிஜனின் அணு எடையை கண்டுபிடித்தார்.

அதுவரை கண்டுபிடிக்கபட்ட எல்லா தனிமங்களின் அணு எடையையும் கண்டுபிடிக்கும் மறுமலர்ச்சி ஆரம்பமானது.

1817 ஆம் ஆண்டு டொபரினர் என்னும் ஜெர்மானிய விஞ்ஞானி சில தனிமங்கள் ஒரே மாதிரியான குணங்களை கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்.

லித்தியம்,சோடியம், பொட்டாஸியம் இந்த மூன்றும் அயோடின், குளோரின், புரோமின் போன்ற தனிமங்களோடு கலந்து பல உப்புக்களை (Salts) கொடுக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்.

ஆக இது மாதிரி உப்பு கொடுக்கும் தனிமங்களை ஒரு தனி குரூப்பாக போடலாம் என்று ஒரு குரூப் சொல்கிறது.

1834 இல் Tobolsk என்னும் மாஸ்கோவில் இருந்து இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் தூரத்தில் டிமிட்ரி மெண்டலீஃப் பிறந்தார்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த மெண்டலீஃப்ஃபை, அவர் தாயார் மாஸ்கோ அழைத்து செல்ல அங்கு எந்த கல்லூரியிலுமே இடம் கிடைக்கவில்லை.

சோர்ந்து போகாமால் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் கெமிஸ்டரி பிஸிக்ஸ் மேத்ஸ் படிக்கும் குரூப்பில் சேர்கிறார்.

கல்லூரியில் முதல் மாணவனாக தங்கபதக்கம் வாங்கும் போது, டிமிட்ரியின் அம்மா உயிரோடு இல்லை.

டிமிட்ரி லெக்சரராக வேலை பார்க்கிறார்.கெமிஸ்டரி மேல் தீராத ஆர்வம் கொண்டிருக்கிறார்.

அதற்கிடையில் தனிமங்களை கண்டுபிடிப்பதில் ஐரோப்பாவில் பெரிய புரட்சியே நடக்கிறது.

ராபர் பன்சேனும், கிர்சாஃப்யும் சீசியம் மற்றும் ருபிடியத்தை கண்டுபிடிக்கிறார்கள்.அதை சோடியம், லித்தியம்,பொட்டாசியம் பக்கத்தில் வைக்கிறார் டிமிட்ரி.

இப்படி தனி தனியாக் குரூப் குரூப்பா இருக்கே தவிர எல்லாவற்றையும் எப்படி ஒன்று சேர்பது என்ற கவலையில்தான் டிமிட்ரி மெண்டலீஃப் ஆராய்ந்து ஆராய்ந்து இதோ இரவு முழுவதும் தூங்காமல் இருக்கிறார்.

டிமிட்ரி கவலையோடு தன் நண்பரிடம் இப்படி சொல்கிறார்.இவைகள் என்ன என்னது என்பது என் மனதுக்கு புரிகிறது. ஆனால் மற்றவர்களுக்கு புரியும்படி வெளிப்படுத்த முடியவில்லை

ஒரு அற்புதமான விசயம் தனக்கு புரிந்து அதை மற்றவர்களுக்கு புரிய வைக்கமுடியாமல் அல்லது உணர வைக்கமுடியாமல் வெதும்பும் ஒரு தவயோகியைப்போல் டிமிட்ரி மெண்டலீஃப் வருந்தினார்.

முதல் பத்தியில் சொன்னது மாதிரி மூன்று நாட்கள் தூங்காமல் இருந்து யோசித்து கொண்டே இருந்த டிமிட்ரி மெண்டலீஃப் நான்காம் நாள் காலையில் தன் டேபிளிலேயே கவிழ்ந்து கண்மூடி தூங்கினார்.

சட்டென்று எழுந்து தாளை எடுத்து பென்சிலை எடுத்து வேகமாக இப்போது நாம் எல்லோரும் உபயோகிக்கும் பீரியாடிக் டேபிளின் முன்னோடியை வரைய தொடங்கினார்.

சர சரவென்று அறுபத்தி மூன்று தனிமங்களையும் வரிசைபடுத்தினார்.

ஜான் டால்டன் கண்டுபிடித்த அணு எடை அடிப்படையிலும், பொருட்களின் வினை புரியும் தன்மையும் கலந்து அடுக்கினால்தான் தனிமங்களை அடுக்க முடியும் என்று கண்டுகொண்டார்.

பீரியாடிக் டேபிள் உருவாக்கபட்டது.

விஞ்ஞான உலகமே டிமிட்ரியை வணங்கியது.

இரண்டாம் ஜார் அலக்சாண்டர் டிமிட்ரியை கொண்டாடினார். டிமிட்ரிக்காக ரஸ்ய அரசு தன் கொள்களைகளை தளர்த்தி கொள்ளும் அளவுக்கு.

முதல் விவாகரத்தாகி ஏழுவருடம் பிறகே இரண்டாம் திருமணம் செய்ய வேண்டும். ஆனால் டிமிட்ரிக்காக அந்த விதி தள்ர்த்தப்பட்டது.

வெறுமே பீரியாடிக் டேபிளை மட்டும் டிமிட்ரி கண்டுபிடிக்கவில்லை.

அமெரிக்கா சென்று , எப்படி குரூட் ஆயில் எடுக்கிறார்கள் என்பதை கற்று, ரஸ்யாவின் எண்ணெய் பொருளாதாரத்தையே நிர்ணயத்தார்.

1897 இல் ஜான் தாம்ஸன் அணுக்கள்தான் பொருண்மையின் (Matter) அடிப்படை இல்லை. அணுவையும் பிரிக்கலாம் என்று சொல்லி, எலக்டிரான்கள் நியூக்கிளியஸை சுற்றுவதை சொன்னார்.

விஞ்ஞானிகள் டிமிட்ரி கண்டுபிடித்த பீரியாடிக் டேபிளே தவறு என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

அப்போது நியூக்கிளியஸ் உள்ளே இருப்பது புரோட்டான் என்பதும், அந்த புரோட்டான்களின் எண்ணிக்கையும் அணு எடையும் ஒன்றுதான் என்று இன்னொரு கண்டுபிடிப்பு பீரியாடிக் டேபிளைகாப்பாற்றுகிறது.

பின்னால் வந்த விஞ்ஞானிகள் எல்லோரும் டிமிட்ரி மெண்டலீஃப்பின் பீரியாடிக் டேபிள் அடிப்படையிலேயே தங்கள் கண்டுபிடிப்பை கொண்டுபோனார்கள்.

கணிதத்தில் எண்கள் எப்படியோ அப்படியேத்தான் கெமிஸ்டிரியில் பீரியாடிக் டேபிள்.
1907 ஆம் ஆண்டு தன் 72 வயதில் பீட்டர்ஸ்பக் நகரத்தில் மறைந்தார் டிமிட்ரி மெண்டலீஃப்.
ஜீயோ பத்திரிக்கையில் வந்த கட்டுரையில் நான் புரிந்து கொண்டதை எழுதியிருக்கிறேன்.

இது என் முகநூல் நண்பர் விஜயபாஸ்கர்  இட்ட பதிவு. இந்த பதிவினை இட்டவுடன் நான் எனக்கு கற்றுத் தரப்பட்ட சில வாய்வழி கல்வியினை மனத்தில் கொண்டுவந்து என் சார்பாக பதிவினை இட்டேன். என்னதான் போட்டிக்காக பதிவினை போட்டாலும் இப்பதிவு என்னுள் சில விஷயங்களை தூண்டியது. கருத்து சொல்கிறேன் என தவறாக நினைக்கவேண்டாம்.

இப்பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டத்தினையும் நான் எழுதியே ஆக வேண்டும். நான் பன்னிரெண்டாம் வகுப்பில் டியூஷன் செல்லும் பழக்கம் கொண்டிருந்தேன்(யார் தான் போகாமல் இருக்கிறார்கள்). அங்கு எனக்கு வேதியியலினை எடுத்தவர் ஒரு ஐயங்கார் வாத்தியார். அவருக்கு ஆகப்பிடித்தவர் இந்த மெண்டலீஃப். அவர் மெண்டலீஃபினை பற்றி சொல்லும் போதெல்லாம் “அவன் தான் கெமிஸ்டிரியோட ஜாதகத்தையே கணிச்சவன் என்பார்”. மெண்டலீஃப் அவர்காலத்தில் எழுதிய அட்டவணையில் இருக்கும் பல தாதுக்களை அவர் இறந்த பின் தான் கண்டே பிடித்தனர் என்பது ஆச்சர்யத்தின் பக்கம் நிற்க வேண்டிய ஒன்று. இதையும் எனக்கு சொன்னவர் அந்த ஐயங்கார் தான். அவரைப் பற்றி நிறைய சொல்லலாம். நடைமுறையுடன் வேதியியலை எப்படி இணைப்பது என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர். அவர் பெயர் கோவிந்தாச்சாரி.அப்பதிவு அவரின் ஞாபகத்தினை என்னுள் எழுப்பியதால் அவரை குறிப்பிட்டேன்.


நான் அனைவரிடமும் குறிப்பாக மாணவர்களிடம் வாசிக்க சொல்லும் நூல் சுஜாதா எழுதிய “கடவுள்”. இப்பதிவுதளத்தின் ஆரம்பத்தில் நானே அதனைப் பற்றி எழுதியுள்ளேன். இப்போது ஏன் இதன் ஞாபகம் எனில் இப்பதிவுதான். இப்போது மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியானது அதன் முக்கிய தேவையினை பூர்த்தி செய்ய மறக்கிறது. அது என்ன முக்கிய தேவை எனில் சிந்தித்தல்.

எனக்கு நடந்த விஷயத்தினை சொல்கிறேன். பன்னிரெண்டாம் வகுப்பில் எனக்கு கணக்கு எடுத்த வாத்தியாரின் பெயர் செந்தில்நாதன். அருமையாக எடுத்தார். அவர் நடத்திய அனைத்து கணக்குகளும் புரிந்தது. கணக்கும் குழப்பவில்லை அவரும் எங்களை குழப்பவில்லை. பொதுத் தேர்வில் கேள்வி என்னை குழப்பியதால் மார்க் குறைந்தது. எப்படி எப்படியோ விமானப் பொறியியல் சேர்ந்தேன். இங்கு வந்தவுடன் இங்கும் கணக்கு என்னை துரத்தியது. இரண்டு மூன்று நாட்கள் வகுப்பு கழிந்தவுடன் தான் பாடம் நடத்த ஆரம்பித்தனர். அப்போது பொதுவாக அனைவரிடமும் differentiation என்றால் என்ன எனக் கேட்டார். நானும் செந்தில்நாதன் தான் நமக்கு நன்றாக நடத்தியிருக்கிறாரே என d/dx என்றேன். உடனே அவர் நான் தேற்றத்தினை கேட்கவில்லை differentiation என்றால் என்ன என்று தான் கேட்கிறேன் என. தூக்கிவாரி போட்டது. சொல்லித் தராதது செந்தில்நாதனா என்பது எனக்குள் தோன்ற ஆராம்பித்தது. இந்த மனக் கேள்விக்கு உண்டான பதிலினை நானே கடைசியில் சொல்கிறேன்.

இதை பாதியில் விட்டு செல்கிறேன் என நினைக்க வேண்டாம் இதனுடன் இணைக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் சம்பாதிக்க வேலை தேவை அதற்கு எஞ்ஜினியரிங் தேவை அங்கு இயற்பியல் வரும் அங்கங்கு திரவங்கள் அஃதாவது தண்ணீர் பெட்ரோல் போன்று நாம் வேலை செய்யும் இடத்திலும் ஏதாவது திரவம் இருக்கும் அதைப் பற்றி படிக்க வேதியியல் தேவை டாக்டருக்கு மட்டும் தான் உயிரியல் தேவை. ஆனால் எதற்குள்ளும் சிக்காமல் இருக்கும் இந்த கணக்கு எதற்கு தேவை என்பதே அப்போது என்னுடைய கேள்வி.

இந்த கேள்விக்கு நிறைய நாள் பதிலே கிடைக்கவில்லை. கிடைக்காமலேயே பன்னிரெண்டாம் வகுப்பும் முடிந்தது. அதற்குபின் நான் நாவல்கள் கட்டுரைகள் என வாசிக்க ஆரம்ப்த்தேன். அப்போது நான் தெரிந்து கொண்ட விஷயம் தான் முகநூலில் போட்டிக்காக போட்டேன் என சொன்னது.

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பல விஷயங்கள் ஏன் தோன்றியது எப்படி தோன்றியது என்னும் கேள்விக்கு பதிலாக பல தத்துவங்களை விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். அவை யாவும் கணிதம் இல்லையெனில் உண்மையாகியிருக்காது. எப்படி என உதாரணம் கொண்டு விளக்குகிறேன்.

விளையாட்டிற்கு நாம் நியூட்டன் தன் தலையில் விழுந்த ஆப்பிளினை தின்னத் தெரியாமல் அதை வைத்து தத்துவம் கண்டுபிடித்து நம் தாலியினை அறுக்கிறான் என சொல்லியிருப்போம். உண்மையில் நியூட்டனினால் சொல்லியிருக்க முடியாது. சிந்திக்க மட்டுமே முடியும். மேலே ஒரு பொருள் போகிறது எனில் அது மீண்டும் மீழே வரும்படி ஒரு விசை இருக்கிறது என சிந்தித்திருப்பார். ஆனால் அதன் அளவு 9.81 என எப்படி சொல்ல முடிந்தது ? அந்த அளவு இல்லையெனில் நாம் இப்பூமியில் இருக்க முடியாது என்று கூட ஒரு தத்துவம் இருக்கிறது. நான் அறிவியலினை குறை சொல்லவில்லை. அறிவியல் கருத்து எனில் அதன் எழுத்து வடிவம் அதன் மொழி அதன் லிபி கணிதம்.

கணிதத்தினில் அதிகம் படிக்கும் விஷயம் differentiation  மற்றும் integration. இரண்டுமே உற்பத்தியின் விஷயத்தில் தேவைப்படுகிறது. முதலாவது எதற்கு எனில் ஒரு பெரிய பொருளினை சிறு சிறு கூறாக பிரித்து அதில் தேவையான மாற்றங்களை செய்வது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிறார்களே அது தான் முதலாவது. இரண்டாவது அப்படியே நேர் எதிர். ஒருங்கிணைத்தல். சோற்றை பருக்கையாக்குவது முதல் எனில் பருக்கையினை இணைத்து சோறாக்குவது இரண்டாவது. அவ்வளவே!

இதற்கு எதற்கு கடவுள் புத்தகத்தினை எடுத்தேன் என நினைக்கலாம். நாம் படிப்பது நமது வாழ்க்கைக்கு. அப்படியிருக்கையில் நமக்கு கற்றுத் தரப்படும் கல்வியும் அந்த வாழ்வியலின் சம்மந்தமாகத் தானே இருக்கும். அப்படி தான் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரியாமலே. அதை அறிந்து கொள்ள உதவும் நூல் தான் கடவுள்.

பன்னிரெண்டாம் வகுப்பில் படித்த ஹைசன்ப்ர்ஹ் தத்துவம் எனக்கு புரிந்த போது நான் விடுமுறையில் இருந்தேன். தெரிந்து கொண்டேன் என மறுபடியும் தேர்வு எழுதவா முடியும்!!!

தவறு எனக்கு எடுத்த ஆசிரியரிடமா எனக் கேட்டிருந்தேன். நிச்சயம் இல்லை. நம்மிடம் தான். ஒரு விஷயம் நடத்தப்படுகிறது அது புரியவில்லை அப்போது சந்தேகம் கேட்கலாமே என தோன்றும். ஆனால் கேட்டாலும் அதையே தான் சொல்லப்போகிறார் அல்லது நண்பர்கள் கிண்டலடிப்பார்கள் என்னும் எண்ணத்தில் கேட்காமல் இருப்போம். இருந்தேன். அங்கு தான் புரிதலில் தவறு இருக்கிறது. இப்போது மீண்டும் அந்த கடந்தகாலத்திற்கு சென்று படிக்க ஆசைப்படுகிறேன்.

இந்த தலைப்பினை நான் வைத்தது இப்போதிருக்கும் கல்விக்கு மட்டுமே. சிந்திக்க நிச்சயம் அது தூண்டவில்லை. பள்ளிப்பருவத்தில் ஒரு மாணவன் என்ன செய்தாலும் அது அவன் படிக்கும் கல்வியினையே சாரும். ஆக என் குற்றச்சாட்டும் ஒரு வகையில் உண்மைதான். என்னைப் போல் நால்வர் நாளை முழிக்கக்கூடாது என்பதால் இதை பதிவிடுகிறேன்.

இப்போது கூட முன்பு நான் வாசித்த ஸோர்பாவின் கதை நினைவிற்கு வருகிறது. அதில் ஸோர்பா சொல்வான் - நான் அறுபது வயதுக்காரன் உன்னிடம் தவறுசெய்யாதே என சொல்கிறேன் ஆனால் உன் வயதில் நானும் இதைத் தான் செய்துகொண்டிருந்தேன்.

Share this:

CONVERSATION