120 ரூபாய்!

அண்மைக்காலமாக சில விஷயங்கள் என்மனதினை அதிகம் பாதித்தது அவை அனைத்தினையும் ஒருங்கே பார்த்தால் ஒரே மையத்தினை கொண்டுள்ளது போல் இருக்கிறது. அதற்கு பிரதனமாக இருப்பது எனக்கும் எழுத்திற்கும் சினிமாவிற்கும் இடையே இருக்கும் தொடர்பு

முதலில் புத்தகத்தினை பற்றி சொல்கிறேன். சிறிது நாட்களுக்கு முன் எனக்கு ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரின் பெயர் தமிழ்ச்செல்வன். அவருக்கு என் நம்பர் எப்படி கிடைத்தது என்பது தனிக்கதை.

என் பள்ளி கிறித்துவ பள்ளி. அங்கு எனக்கு ஏழாவது தமிழ் எடுக்க ஒரு ஆசிரியை வந்தார். அவர் நான் பன்னிரெண்டாவது படிக்கும் போது ‘துடிப்பு’ என்னும் இதழினை பற்றி சொன்னார். அதில் மாணவர்கள் முக்கியமாக பள்ளி மாணவர்கள் எழுதும் கதை கவிதைகள் சிந்தனை துளிகள் போன்றது இடம்பெறும். மேலும் மாணவர்களுக்கு சிந்தனையினை தூண்டும் அளவிற்கு அதில் சில பத்திகள் இடம்பெறும்.

இந்த இதழின் இன்னுமொரு அம்சம் என்ன எனில் அதன் பின்னட்டையில் அடுத்த இரு இதழுக்கான தலைப்புகளை அளிப்பர். அதன் சாராம்சத்திலேயே மேலே சொன்ன அனைத்தினையும் எழுத வேண்டும். அந்த இதழுக்கு நான் ஒரு கதையினை எழுதி அனுப்பியிருந்தேன். அதன் தலைப்பினை நான் மறந்து விட்டேன்.

இப்போது நிகழ்காலத்திற்கு வருகிறேன். அந்த தமிழ்ச்செல்வன் என்னை பார்க்க வேண்டும் என்றார். அவர் யாரெனில் அந்த துடிப்பு நூலின் ஆசிரியர் குழுமத்தில் இருக்கும் ஒருவர். அவர் அழைத்த போது நானும் வெளியில் இருப்பதால் நானும் அவரை பார்க்க செல்லலாம் என முடிவெடுத்தேன்.

அவர் கிறித்துவத்தில் பெரிய இடம் என நினைக்கிறேன் சேலத்திலேயே பெரிய தேவாலயமான குழந்தை ஏசு ஆலயத்தின் ஒரு அங்கமாய் இருக்கும் மூவேந்தர் அரங்கத்தின் தங்கும் இடத்தில் அவர்கள் இருந்தனர். உடன் ஒருவரும் வந்திருந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை. இவர்கள் வந்ததன் முக்கிய பொருட்டே என்னை தமிழ் சார்ந்து உருவாக்கும் ஏதோ ஒரு அமைப்பில் சேர்க்கத் தான். என்னிடம் அவர் கேட்ட் வார்த்தை நீங்கள் உறுப்பினர் ஆகிறீர்களா அல்லது பார்வையாளனாக இருக்கிறீர்களா. நான் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தேன்.

இதைத் தாண்டி என் நாவலினையோ அல்லது ஏதேனும் நூலினை வெளியிடவோ எனக்கு அவரிடம் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரின் பதிப்பகத்தின் பெயர் பூபாலம். இது வரை பத்து நூல்கள் வெளிவந்திருக்கிறதாம். அவர் சொன்னார் 64 பக்கங்கள், 1000 காப்பிக்கு 25000 ரூபாய் ஆகும் என. மேலும் அதே 64 பக்கங்கள் 500 காப்பி எனில் 20000 ஆமாம். இது என்ன முரண்பாடாக இருக்கிறதே எனக் கேட்டேன். அவர் சொன்னது பக்கங்கள் குறைந்தால் தான் பணம் குறையுமே தவிர எண்ணிக்கையினால் குறையாது!!! காந்தி கணக்கு தான் போலிருக்கிறது.

நான் எழுதியிருக்கும் நாவல் 120 பக்கம். அதற்கு 500 காப்பிகள் எவ்வளவு எனக் கேட்டேன் 27500 என்றார். அப்பாதான் எனக்கு செய்தாலும் செலவு செய்ய முடியும் என  அவரிடம் கேட்டேன். அவர் தரக்கூடிய சூழ்நிலையில் இல்லை. கைக்கு கிடைத்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என எனக்கு வருத்தம் தான். இருந்தாலும் அதை பிற்காலத்தில் செய்து கொள்ளலாம் என இணையதளத்தினை ஆரம்பித்தேன்.

இந்த விஷயத்தினை நண்பர்களிடம் சொன்னால் 27500 புக்கு போடவா என உச்சு கொட்டினர். சிலர் எங்கோ பம்பாயில் நடந்த கோர விபத்து போல ஓ. . . என்றனர். empathy என்னும் விஷயம் பொய்யோ ???? இந்த கேள்வியினை பதிவினை வாசித்து முடித்து ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

சிறிது நாட்களுக்கு முன் ஹாபிட் படம் சென்றிருந்தேன். முகநூலிலும் அந்த படத்தினை பற்றி எழுதியிருந்தேன் அந்த படம் தமிழில் போடப்பட்டிருக்கும் என்றே நம்பி போயிருந்தேன் ஆனால் ஆங்கிலத்தில் போட்டுவிட்டார்கள். சப்டைட்டிலும் இல்லை. ஏதோ தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் ஓரளவு புரிந்து கொண்டேன்.

அதனை என் நண்பர்களிடம் சொல்லும் போது நீதான் 120 ரூபாய் குடுத்து புரூக்ஃபீல்ட்ஸிலேயே போய் ஆங்கிலம் படம் பார்ப்பியே என்றார்கள். எனக்கு அருவருப்பாக இருந்தது. நான் அந்த மாலில் படம் பார்ப்பவன் தான். அங்கு ஆங்கில படங்களில் சப்டைட்டில் போடுவார்கள் இங்கு போடவில்லை என்பதால் அந்த சின்ன வருத்தத்தினை பகடியாக பகிர நண்பனுக்கு அழைத்தேன் ஆனால் அதே எனக்கு மன உளைச்சலை அளிக்கும் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு நான் பகட்டு பணக்காரனாக தெரிகிறேன்.

எனக்கு அது கூட பிரச்சினையாக தெரியவில்லை ஆனால் அவர்கள் மனதில் தோன்றும் விஷயங்களினை என்னிடமே சிலாகிக்கிறார்கள்.

குறிப்பிட்டு அந்த மாலிற்கு சென்று நான் பகட்டு ஆடம்பரத்தினை காண்பிக்கிறேன் என அவர்கள் நினைக்கிறார்கள். பொதுவாக பிடித்த படங்களை தனியாக சென்று காணும் பழக்கமுடையவன் நான். அப்படி போகும் போது நான் எத்தனையோ தியேட்டர்கள் இருந்தும் அந்த மாலிற்கு மட்டுமே செல்வேன். அப்படி போனால் அன்று மதியம் உணவு எனக்கு கிடையாது. அதையும் ஏன் என சொல்கிறேன். என் கல்லூரிக்கும் அந்த மாலிற்கும் இடையே இருக்கும் தூரமே பேருந்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். எப்படியாகினும் நான் மதிய உணவிற்கு விடுதிக்கு செல்லவும் முடியாது படமும் முடியாது. பேருந்து செலவு மற்றும் படத்திற்கான டிக்கெட் மட்டுமே 170 மேலாகும். இப்படி பட்டினி கிடந்தால் தான் என்னால் ஒரு சினிமா பார்த்த சந்தோஷம் அடைய முடிகிறது. அந்த தியேட்டரில் எனக்கு கிடைக்கும் சினிமா அனுபவமும் வேறு எதிலும் கிடைக்கவில்லை.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இருந்த கிருஷ்ணா இப்போது அப்படியே வேறு. நாவல்கள் என்றால் ஒன்பது ருபாய்க்கு விற்கும் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் மட்டுமே. அவர்களை கேவலப்படுத்தவில்லை அவர்கள் எல்லாம் அப்போது எனக்கு இலக்கியத் தந்தை. அப்போது இலக்கியம் என்றாலே என்ன என தெரியாது. வார்த்தை மட்டும் அறிந்திருந்தேன். சினிமா எனில் தமிழ் சினிமா மட்டுமே உன்னதங்களின் அறிகுறி. ஆங்கில சினிமாக்களையெல்லாம் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டுமா என்னும் திமிர். இப்போது நல்ல படைப்புகளை தேடி செல்கிறேன்.

இப்பதிவின் ஆரம்பத்தில் நானும் சிலவற்றினை அபத்தமாக சிலாகித்ததும் உண்டு. இப்போது அப்படியில்லை. நல்ல சினிமா நல்ல நாவல்கள் என்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அதற்காக என்னால் முடிந்த வரை செலவு செய்வேன்.

வாசிப்பின் சுகம் அறியாதவர்கள் கூட என்னை பார்த்து இந்த விடுமுறையில் உனக்கென்ன புக்கு இணையதளம்னு உக்காந்திருப்ப என்றார்கள். நான் விசனப்படவில்லை. தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இப்படி கைக்கு கிடைக்கும் வாய்ப்பு சிலருக்கு அங்கலாய்ப்பாக இருக்கிறது சிலருக்கு 120 ரூபாய் உறுத்தலாக இருக்கிறது. நான் பணக்காரன் என்பது சிலர் எனக்கு கொண்டுள்ள அடையாளம்.

சிரிக்கவா அழவா எனத் தெரியவில்லை ஆனால் ஒன்று அவர்களின் வார்த்தைகளால் பணக்காரனாய் வாழ ஆசைப்படுகிறேன்.

பின் குறிப்பு : தமிழ்ச்செல்வன் சொன்னார் “நீங்க துடிப்புக்கு அனுப்பியிருந்த கதையின் பெயர் ‘எனக்கு ஒருத்தி தேவைப்படுகிறாள்’”!

Share this:

CONVERSATION