jab tak hai jaan(hindi) - 2012

தீபாவளியில் வெளியான படத்தில் ஒன்று தான் மேலே தலைப்பில் கூறப்பட்டுள்ள ஒன்றும் தான்.துப்பாக்கி படத்திற்கான கூட்டத்தினுள் சிக்கி முக்கி இந்த படத்திற்கு டிக்கெட்டினை எடுத்தேன். ஷாருக் கானின் ரசிகனாக இந்த படத்தினை பார்க்க வெகுவாக ஆசைப்பட்டேன். சென்ற தீபாவளியிலேயே ra one என்னும் அரத மொக்கையினை அளித்து அருமையாக திரையரங்கிலேயே தூங்க வைத்தார். இந்த முறை ஏமாற்றமாட்டார் என்னும் நம்பிக்கையிலேயே சென்றேன். . .


இந்த படத்தினை எழுத வேண்டும் என நினைக்கவே இல்லை. என்னுடைய முகநூல் நண்பரான கணேசன் அன்பு என்பவர் இதுவரை இப்படத்தினை பற்றி எந்த பதிவரும் எழுதவில்லை என சொல்லியிருந்தார். அதனால் முதலில் எழுதி பெருமையினை தட்டிக் கொள்ளலாம் என எழுத இருக்கிறேன். ஷாருக் கானின் தீவிர ரசிகனாக இருந்தாலும் நடுநிலையாக விமர்சிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.

இந்தப்படம் ஹிட்டா இல்லையா என்னும் கவலை மட்டும் தேவையே இல்லாத ஒன்று. கண்டிப்பாக ஹிட் தான். படத்தின் வாயிலாகவா எனில் இல்லை. அனுதாப அலைகளில். படத்தினை இயக்கிய யாஷ் சோப்ரா இறந்ததே அந்த அனுதாப அலைகளுக்கு காரணம். எண்பது வயதில் தனது திரையுலக வாழ்வின் கடைசி திரைப்படம் என சொல்லியிருந்தார் ஆனால் அவரின் வாழ்வின் கடைசி படமாகவே மாறிவிட்டது.

அரங்கில் அமர்ந்து படம் ஆரம்பித்த உடனேயே தமிழில் விஜயகாந்த் படம் வெகு நாட்களாக வரவில்லையே என்னும் கவலையினை யாஷ் சோப்ராவும் ஷாருக் கானும் போக்கிவிட்டனர். எப்படியெனில் இப்போது இருக்கும் லடாக்கில் ஒரு வெடி குண்டு. அதனை bomb squadஇல் இருக்கும் ஒருவர் suit போட்டு அதனை தடுக்க பார்க்கிறார். முடியவில்லை. அப்போது பைக்கில் வருபவர் தான் மேஜர் சமரந்த்(ஷாருக் கான்). அவர் வந்தவுடன் suit இனை கொடுக்க ஒருத்தர் செல்கிறார். அவரை தடுத்து மற்றொரு ராணுவ வீரர் சொல்கிறார் “அவர் என்னிக்கும் இதை பிரயோகிக்க மாட்டார்”. மேலும் இது சமரந்தின் 98வது வெடிகுண்டு. அவருக்கு வெடிகுண்டுகள் எல்லாம் கேர்ள் ப்ரெண்டு போல. . .

கதை என்னவெனில் தண்ணீரில் விழும் அகிரா(அனுஷ்கா ஷர்மா)வினை காப்பாற்றுகிறார். நீச்சலுடையில் இருப்பதால் தன்னுடைய ராணுவ சட்டையினை அளிக்கிறார். அதிலுள்ள டைரியினை வாசிக்க ஆரம்பிக்கும் போது நாம் லண்டனில் இருக்கிறோம். அங்கு மீரா(கட்ரீனா கைஃப்)வினை சந்திக்கிறார். இனிமேல் புது கதையினை காணவே முடியாது. காலங்காலமாக தமிழிலும் ஹிந்தியிலும் சொல்லப்பட்டு வரும் அதே திரைக்கதை. சமர் சாதாரணமாக காய்கறி கடைகளில் மீன் கடைகளில் மீத நேரத்தில் கிதாரினை எடுத்துக் கொண்டு தெருக்களில் பாட்டு பாடி வாழ்க்கையினை ஓட்டுபவன். மீரா பணக்கார வீட்டுப் பெண். அவளுக்கு பணக்கார பையனுடன் நிச்சயதார்த்தம். அங்கு தான் மீராவும் சமரந்தும் சந்திக்கின்றனர். சமர் மீராவிற்கு இத்திருமணத்துடன் இஷ்டம் இல்லை என்பதை உணர்கிறான். மேலும் மீராவின் மேல் காதலும் வருகிறது. இவன் கிதார் வாசிப்பவன் எனபதை அறிந்ததனால் தனக்கு ஒரு பஞ்சாபி பாடலை கற்றுக் கொடுக்க சொல்கிறாள். பதிலுக்கு அவன் ஆங்கிலம் கற்றுத் தர சொல்கிறான்.
இப்படியே காட்சிகள் பாடல்கள் என செல்கிறது. மீராவின் வழக்கம் எதுவெனில் தேவாலயத்திற்குச் சென்று எதையாவது வேண்டிக் கொள்வாள். அதற்கு ஈடாக எதையாவது அர்ப்பணமும் செய்வாள். அதன் படி சமரை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று இனி நாம் நண்பர்களாகவே இருப்போம் என வாக்குறுதி செய்யச் சொல்கிறாள். அவன் மறுத்தவுடன் தான் உண்மையினை சொல்கிறாள் நான் உன் மேல் காதல் வயப்படுவேனோ என்னும் பயத்தில் தான் இப்படி செய்யச் சொல்கிறேன் என. இருவரும் செய்கிறார்கள். அதற்கு ஈடாக அஃதாவது இந்த வாக்குறுதியினை மீறினால் கடவுள் எந்த தண்டனையினை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் என சபதம் செய்கின்றனர்.

அப்போது மீராவின் கல்யாணத்திற்கு அவளின் அம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது. அம்மாவிற்கு தனிக் கதை. மீரா நான்கு வயது இருக்கும் போதே தன்னுடைய காதலன் இம்ரான்(ரிஷி கபூர்)உடன் ஓடி விடுகிறாள். அவளை காண மீராவும் சமரும் செல்கின்றனர். அப்போது இம்ரான் மீராவிடம் ஒவ்வொரு உறவிற்கும் ஒரு காலம் இருக்கிறது. எங்களுக்கு அப்போது தான் அமைந்தது என சொல்கிறார். இதனால் மீராவும் தன் காதலையும் சமரிடம் சொல்லி விடுகிறாள். அதன் பின் வீட்டில் அப்பாவிடம் சம்மதம் கேள் என சொல்லி சந்தோஷத்தில் பைக்கினை ஓட்டும் போது விபத்து ஏற்படுகிறது. உடனே மீரா கடவுளிடம் சத்தியத்தினை மீறியது எங்கள் தவறுதான் இம்முறை மட்டும் காப்பாற்று இல்லையெனில் உன்னை சந்திக்கவே வரமாட்டேன் என்கிறாள். சமரும் காப்பாற்றப்படுகிறான். ஒரு நான்கு நாட்கள் கழித்து சமரிடம் சொல்கிறாள். சத்தியத்தினை மீறியதால் தான் இப்படி நடந்தது அதனால் கடவுளிடம் வேறு ஒரு சத்தியத்தினை செய்துள்ளேன் என்கிறாள். எதை வேண்டி என்றவுடன் உன் உயிர் எப்போதும் இருக்க வேண்டும் அதற்காக நான் அதிகம் நேசிக்கும் உன்னையே கொடுத்து விடுகிறேன் என பிரிந்து விடுகிறார்கள். சமர் அதே தேவாலயத்தில் எந்த உயிரினால் என் காதல் என்னை விட்டு போனதோ அதே உயிரினை பணயம் வைக்கிறேன் என இந்திய ராணுவத்தில் பாதுகாப்பு உடைகள் அணியாமலேயே வெடிகுண்டுகளை தகர்க்கும் அதிகாரியாகிறார். எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. மேலும் இங்கு தான் இடைவேளை. இரண்டாம் பாதியினை பார்க்கும் போது இங்கேயே முற்றும் போட்டிருந்தால் கூட படம் நன்றாக இருந்திருக்கும். முதல் பாதியிலேயே ஐந்து பாடல்கள் வேறு. படம் சரியாக மூன்று மணி நேரம்!!!

அகிரா டிஸ்கவரி சேனலில் வேலை பார்ப்பவள். அவள் கம்பீரத்தினை மையமாக வைத்து அஃதாவது சமரின் சாகசங்களை ஆவணப்படமாக எடுக்க முடிவெடுத்து வருகிறாள். அவளுக்கும் சமரின் மீது காதல் வருகிறது. அதை சமர் நிராகரிக்கிறான். ஆவணப்படம் முடிந்தபின் மீண்டும் லண்டன் செல்கிறாள். அங்கு சமர் லண்டன் வர வேண்டும் எனச் சொல்கிறார்கள். முதலில் நிராகரித்து பின் லண்டன் செல்கிறான். சென்றவுடன் மீண்டும் விபத்து. இதில் amnesia நோயாளியாக சமர் மாறி அவரின் நினைவுகள் பத்து வருடங்களுக்கு முன்பே அமைகிறது. அவருக்கு மீண்டும் நினைவு வருகிறதா ? சமர் மீரா காதல் சேர்ந்ததா ? அல்ல சமர் அகிரா காதல் சேர்ந்ததா ? படத்தின் இறுதியில் அவர் 108 வெடிகுண்டுகளை தகர்த்ததாக வருகிறது அதற்கு இந்திய சர்கார் ஏதாவது செய்தார்களா ??? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலினை நானே சொல்லலாம். புது படம் என்பதால் வெள்ளித் திரையில் பாருங்கள்.

படத்தின் இரண்டாம் பாதியில் முக்கால் வாசி பகுதிகள் bomb diffusion ஆகவே இருப்பதால் அவர் செய்து முடித்த பின் அழையுங்கள் என்பது போல் தூக்கம் வருகிறது.

இரண்டாம் பாதி கிட்டதட்ட இந்திய ராணுவத்தினை கேவலப்படுத்துகிறது என்றே சொல்வேன். அகிரா ஆவணப்படம் எடுக்க ராணுவ முகாமிற்கு வருகிறாள். அவளுடைய ஆடை படத்தின் ஆரம்பத்திலிருந்து குறைச்சலாகவே தான் இருக்கிறது. அதை பார்த்தவுடன் அனைத்து ராணுவ வீரனும் ஜொள்ளு வழிவது போல காட்டப்படுகிறார்கள். இது ஒரு அருவருப்பினையே தருகிறது.

படத்தில் கடைசியினை நெருங்கும் போது லண்டனில் ஒரு இரயிலில் வெடிகுண்டு இருக்கிறது. அங்கு யதேச்சையாக இருப்பவர் சமர். போலீஸ் பொதுமக்களை காப்பாற்ற அனைவரையும் வெளியனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சமருக்கு தன் இராணுவ நினைவுகள் மீண்டுவர அங்கு வெடிகுண்டுக்கு அருகில் நிற்கும் வெளிநாட்டு போலீஸ் அதிகாரிகளிடத்தில் ஏதோ வெடிகுண்டின் பெயரினை சொல்கிறார். இத்தனைக்கும் அது மூடிய பைக்குள் தான் இருக்கிறது. சமர் பெயரினை சொன்னவுடன் அவர்களும் வெடிகுண்டுகளை தகர்க்க அனுமதிக்கிறார்கள். இன்னும் இது போன்று நம்ப முடியாத காட்சிகள் நிறைய இருக்கிறது. காசு கொடுத்து பார்ப்பதால் நம்பித் தான் ஆக வேண்டும். இப்படி படத்தில் முதல் பாதி கடவுளுடனும் இரண்டாம் பாதி வெடிகுண்டுகளுடனும் மேஜர் சமரந்த் நமது பணத்தில் நன்கு விளையாடுகிறார்.

படத்தில் நல்லது எதுவும் இல்லையா எனில் இசை. ஏ.ஆர் ரகுமானின் இசை உண்மையில் அதகளம்.முக்கியமாக challa பாடல். படத்தில் பல முறை இப்பாடல் இடம்பெறுகிறது. அத்தனை இடங்களிலும் நெஞ்சினை தொடும் அளவு அமைந்திருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டுமெனில் எப்போதும் இருக்கும் ஷாருக் கானின் படத்தினை போல் காலி இரயில் நிலையம், செண்டிமெண்டல் வசனத்திற்கு பின் க்ளோஸ் அப் ஷாட், டைரி ஃப்ளாஷ் பேக். . . .

முகநூலில் சொன்னதையே சொல்கிறேன் ஷாருக் கான் ரசிகர்கள் இதையெல்லாம் கவனிக்காமல் ஷாருக் கான் என்ன சொன்னாலும் என்னைப் போல் கத்துங்கள் விசிலடியுங்கள் ஏனையோர் பாருங்கள். பாருங்கள் என்பதைத் தாண்டி எதுவும் சொல்லத் தெரியவில்லை.

Share this:

CONVERSATION