கவிதை - புரிதல் - சிருஷ்டி

மெய் தொட்டு பயில்தல்
சூன்யத்தில்
சூன்யம் கொண்டிருந்தாள்
சக்தி
சூன்யச் சுமை கனக்க
வாதை தவிர்க்க
அண்டமும் பிண்டமும்
ஆக்கினாள்
கிரகங்களும்
நட்சத்திர மண்டலங்களும்
அக்னியும்
கடலும்
காற்றும்
மண்ணும் மலரும்
வனமும் பாலையும்
மிருகங்களும் பட்சிகளும்
அநேகம் அநேகம் 
ஆக்கினாள் சக்தி
வனத்தில் திரிந்தாள்
கடல்களின் கரைகளில்
தனித்து அமர்ந்திருந்தாள்
நட்சத்திரங்களை துணைக்கழைத்தாள்

சூன்யப் பாலையின்
பாழ்வெளி வாதை

சேதனும் அசேதனமும்
உதவிக்கு வாராதெனப் புரிதலுற்று
ஆணைப் படைத்தாள்
அவனும் உடல் வர
வனங்களில் திரிந்தாள்
கடல்களில் கரைகளில்
அவனோடு அமர்ந்திருந்தாள்
நட்சத்திரங்களை காட்டினாள்

பொருள் விளங்கா
ஜடத்துளையை விட்டுவிட்டு
வனன்மேகிய ஒரு நாள்
அந்திப் போதில்
சர்ப்பங்கள் ரெண்டு
கலவியுற்றுக்
கூடி கிளர்ந்தன
அண்ட சராசரமும்
கிடுகிடாய்த்துப் போக
ஊழிப்புயலோ
பரவச தாண்டவமோ
பேரழிவுக் கூத்தோ
என வியந்து
சூன்யப் பாலையின்
காரணம் புரிந்து
ஆணை அழைக்கலானாள்
கலவி கொள்ள்லாமென                                                                                                                                                                                     கூடித் திளைக்கலாமென
பீதியுற்று மறுத்தான்
ஆணாகப்பட்டவன்

சலிபுற்ற சக்தி
வேறோர் ஆணைப் படைத்து
அவனை அழைக்கலானாள்
சர்ப்பங்களின் கதையை சொல்லி                                                                                                                                                        கலவி கொள்ளலாமென
கூடி திளைக்கலாமென
அவனும் பீதீயுற்று
விலகிச் செல்ல
மூன்றாவது ஆணும் படைக்கப்பட்டான்
அழைப்புக்கு மறுத்து
ஓடிப்போனான் அவனும் கூட

இருப்பின் தனிமை நொந்து
விலகிச் சென்றாள் சக்தி

முன்றாமவன் முதலாமவனிடம்
கூறலானான்
முத்தொழில் புரிந்து
வல்லமைதனை
தன்னில் கொண்டிருக்கும்
சக்தியை புணர்
சக்தியை அபகரி
சக்தியற்றவளாக்கு
சக்தியை புணர்ந்து
தந்திரம் புரிந்து
முத்தொழில் சக்தியை
ஏமாற்றி பிடுங்கி
பகிர்ந்துகொண்ட
ஆண்கள் மூவரும்
முத்தொழில் புரிந்து
களைப்புற்று திரும்பி
சக்தியிடம வினவியது
சப்பாத்தி எங்கேயென.


(இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து மட்டும் தான். தங்களின் கருத்துகளையும் இப்பதிவின் கருத்துகள் முரணாக பட்டாலும் எனக்கு எழுதுங்கள்)
மேலே இருக்கும் கவிதை ஸீரோ டிகிரி என்னும் நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த நூலில் நிறைய கவிதைகள் காணக்கிடைக்கிறது. இதில் இதை ஏன் எடுத்தேன் என கடைசியில் சொல்கிறேன்.

இந்நூலினை மட்டும் ஆறு முறையாவது வாசித்திருப்பேன். முக்கியமாக இந்த கவிதைகளினை கடக்கும் போது அதன் வேகத்தில் செல்வேன். இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமெனில் நடையின் தாக்கத்தினில் அப்படியே சென்று மொத்தகவிதையினில் என்ன சொல்கிறார் என்பதையே அறிந்து கொள்ளாமல் அது தரும் சந்தோஷத்தினை மட்டும் அப்படியே சுமந்துகொண்டு அடுத்த கவிதைக்கு செல்வேன்.

இப்படி கவிதானுபவத்தினை(வேறு எப்படி சொல்வது) கொண்ட என்னிடம் நிர்மல் ஒரு கேள்வியினை கேட்டார். அந்த கவிதையில் என்ன சொல்கிறார் என சாட் ஆரம்பித்தது. அந்த உரையாடலின் வழியே நான் அறிந்த விஷயங்கள் அநேகம். அதை இங்கு பதிவிடலாம் என்றொரு சிறு முயற்சி.

இக்கவிதையினை ஒரு முதனிலை வாசகன் வாசிக்கிறான் எனில் அவனிற்கு இக்கவிதையிலிருந்து என்ன கிடைக்கும் என சற்று யோசிப்போம். முதனிலை வாசகன் என்னும் பட்சத்தில் சிறு பிரச்சினை இருக்கிறது. பள்ளி கல்லூரி காலத்தில் நமக்கு நிறைய பேர் அறிவுரை செய்திருப்பார்கள். கடைசி நேரத்தில் எதையும் படிக்காதே அப்படி செய்தால் அது மட்டும் தான் நினைவில் இருக்கும் முந்தைய விஷயங்கள் மறந்து போகும்  என. இந்த ஃபோபியா தான் இக்கவிதையிலும் அரங்கேறும். ஆம் கவிதையினை எப்படி வாசித்தாலும் அந்த வாசகனுக்கு கடைசியில் நிதர்சனமாக தெரியும் விஷயம் சக்தியிடமிருந்து சக்தியினை ஆணாகப்பட்டவன் அபகரிக்கிறான். அஃதாவது சிருஷ்டியின் தந்திரத்தினை ஆண் பிடுங்கிக் கொள்கிறான். இது சரியான புரிதலா ????

கவிதையின் கடைசி பத்தியினை மட்டும் வாசித்து நாம் வரும் முடிவே இந்த கருத்து. ஆனால் அதே பத்தியில் சிருஷ்டியின் தந்திரத்தினை அபகரித்த ஆண்கள் களைப்புற்று மீண்டும் சக்தியிடமே வருவதாக இருக்கிறது அப்படியெனில் மீண்டும் அந்த சிருஷ்டிகரத் தன்மை சக்தியிடமே கொடுக்கப்பட்டதா ? இக்கேள்வி கவிதையில் எப்படி முடிகிறதெனில் அவர்கள் சக்தியிடம் சப்பாத்தி எங்கே என கேட்பதாக முடிகிறது. அந்த சப்பாத்தி என்னும் வார்த்தை எதை குறிக்கிறது ? இக்கேள்விக்கு பதில் கவிதையிலேயே அடங்கியிருக்கிறது. சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்.

சக்தி இயற்கையினை படைக்கிறாள். உலகத்தின் சகலத்தினையும் படைக்கிறாள். இந்த படைத்தலின் காட்சி கவிதையில் முடியும் போது தான் சூன்யம் ஆரம்பிக்கிறது. அப்போது ஆண் படைக்கப்படுகிறான். அவனுடன் அவள் அனைத்து இடத்தினையும் சுற்றுகிறாள். அவன் ஒரு “பொருள்விளங்கா ஜடத் துணை” என நினைக்கிறாள். அவனை விட்டுவிட்டு தனியே வனத்தினுள் செல்லும் போது பாம்பின் கலவியினை காண்கிறாள். அப்போது கவிதையில் வரும் வரிகள் “சூன்யப்பாலையின் காரணம் புரிந்து”. சக்தி அண்டம், பிண்டம், அக்னி, நட்சத்திரம், பறவை, விலங்கு, மரங்கள், செடிகள், கொடிகள் என அநேகம் படைத்தாலும் அவளின் சிருஷ்டி முழுமை அடையவில்லை. ஏதோ ஒரு சூன்யம் ஒன்றுமில்லாத் தன்மை துரத்திக் கொண்டே இருக்கிறது. அது எது என்று தேடும் போது தான் கலவியினை காண்கிறாள். ஆணிடம் கலவி கொள்ளலாம் என்றழைக்கிறாள்.

இப்போது கவிதையின் கடைசி பகுதிக்கு வருவோம். ஆண்கள் என்ன செய்கிறார்கள் சக்தியிடமிருந்து சிருஷ்டியின் சக்தியினை(சிருஷ்டியின் தந்திரத்தினை என வைத்துக் கொள்வோம்) பிடுங்குகின்றனர். அந்த தந்திரத்தினுள் என்ன இருக்கிறது எனில் முத்தொழில் - ஆக்கல் காத்தல் அழித்தல். இந்த முத்தொழிலினை ஆண் செய்கிறான். ஆனால் அவனுக்கு களைப்பு ஏற்படுகிறது. மீண்டும் தன் களைப்பினை போக்க சப்பாத்தி கேட்டு சக்தியிடம் வருகிறான். ஒரு பசி அவர்களை துரத்துகிறது. இதே தான் முதலில் சிருஷ்டிகர்த்தாவாக இருந்த சக்தியிடமும் ஏற்பட்டிருக்கிறது. ஆக பசியினை பூர்த்தி செய்ய ஒரு தேடல் தேவைப்படுகிறது அந்த தேடலையே மையமாக கொண்டு செல்வது தான் சிருஷ்டி. சுருஙகச் சொன்னால் களைப்பை போக்கும் பசி போலதான் காமமும். இக்கவிதையில் ஆணோ அதை அதிகாரமாக பாவிக்கிறான்.பெண்ணோ அதை இயல்பாக பார்க்கிறாள்.

கவிதையினை நன்றாக பார்த்தால் ஆரம்பத்தில் சூன்யம் வருகிறது. அதன் சுமை தாங்காமல் படைத்தல் நிகழ்கிறது. அந்த படைத்தலில் ஒரு தனிமை வருகிறது. அந்தத் தனிமையினால் ஒரு சூன்யம் படைத்தவளுக்கே ஏற்படுகிறது. அந்த சூன்யத்திலிருந்து படைத்தல் செயல் மீண்டும் அரங்கேறுகிறது. இப்படித்தான் ஒவ்வொரு சிருஷ்டியும் அமைகிறது.

கவிதையின் பொருளினை சொல்லி முடிச்சாச்சு. அடுத்த பிரச்சினை தலைப்பு. இதற்கு ஏன் மெய் தொட்டு பயில்தல் என வைக்க வேண்டும் ? மெய்தொட்டு பயிதல் என்றால் என்ன ? தலைவியால் அடையும் இயற்கை புணர்ச்சியின் விரிவு என்னும் பகுதியில் அகப்பொருள் இலக்கண நூல்கள் நிறைய படிநிலைகளை சொல்கிறது. (source : http://www.tamilvu.org/courses/degree/d021/d0211/html/d0211404.html). அதில் மெய் தொட்டு பயில்தல் எனில் தலைவன் தலைவியின் உடலை தொட்டு நெருங்கி பழகுதல். இந்த தலைப்பு அல்லது தமிழிலக்கணங்கள் கூறும் பொருள் இக்கவிதைக்கு சரிபடுமா என்பது சந்தேகத்தின் பாற் பட்டது. ஏனெனில் இந்த அர்த்தத்தின்படி பார்த்தால் தலைவனும் தலைவியும் மனமுவந்து கலவிக்கு தயாராகின்றனர். ஆனால் கவிதையில் அப்படி வருகிறதா ? தலைவி மட்டுமே கலவியில் இஷ்டம் கொண்டுள்ளவளாக இருக்கிறாள். கவிதையில் சொல்லப்படும் ஆணோ அதிகாரத்தின் வெளிப்பாடாகத் தான் கலவியினை அணுகுகிறான். அப்படியெனில் மெய்தொட்டு பயிதலினை ஆண் அதிகாரமாக்குகிறான் என தலைப்பின் அர்த்தத்தினை கொள்ளலாமா எனில் அதிலும் சிக்கல் வருகிறது. ஆணிடம் ஆசை இருந்து பெண்ணிடம் ஆசையின்றி அந்த நேரத்தில் மெய்தொட்டு பயில்தலை மேற்கொள்கிறான் எனில் அப்போது மட்டுமே இந்த அர்த்தம் சரியாகும் ஆனால் கவிதைக்கு ஒத்து வராது. அதனால் வார்த்தைகளை மாற்றிப் போட்டால் அர்த்தம் சரியாக வரும். அதிகாரம் வேண்டும் என்பதற்காக மெய்தொட்டு பயில்தலை ஆண் பகடைக் காயாக்குகிறான். இப்போது வருத்தப்படுகிறேன். இதில் எதையும் புரியாமலேயே ஐந்து முறை வாசித்திருக்கிறோம் என.

இவையனைத்தும் நான் கவிதையில் உணர்ந்தவைகள். இதனை போட்டோக்கள் மற்றும் இசையின் மூலம் சின்ன வீடியோவாக நிர்மல் செய்திருக்கிறார். அதன் லிங்க் - மெய் தொட்டு பயில்தல். அருமையான முயற்சி

கவிதைக்காக சாருவிற்கும் பொருள்விளங்க வைத்த நிர்மலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Share this:

,

CONVERSATION