சார்த்தரை வாசிக்க ஆசைப்படுகிறேன்

வாழ்வில் அனைவருக்கும் நிறைய நண்பர்கள் வேண்டும் என்னும் ஆசை இருக்கத்தான் செய்கிறது. எத்தனையோ  strangers வாழ்வின் ஓட்டத்தில் நமது நண்பர்களாகிறார்கள் குருவாகிறார்கள். அப்படி என் வாழ்வில் வந்தவர் சாருவும் அவர் மூலமாக எனக்கு கிடைத்த நண்பர்களும். எனது அறிவு மிகவும் குறுகியது. எனது பதிவுகளை ஆரம்பத்திலிருந்து கவனித்து வந்தால் சாருவினை குறிப்பிட்டிருப்பேன் அவருடன் நான் இருந்த ஏற்காட்டு அனுபவத்தினை குறிப்பிட்டிருப்பேன். இப்போது அதனுடன் அஃதாவது இது போன்ற சம்பவங்கள் புது புது நண்பர்களுடன் இணையும் மற்றொருவர் நிர்மல். முகநூலில் இருக்கும் சாரு நிவேதிதாவின் வாசகர் வட்டம் மூலம் எனக்கு நண்பரானார். இப்போது சிறிது நாட்களாக அதிக நேரம் அவருடன் சாட்டில் இருக்கிறேன். ஆனால் என் மனதில் வரும் ஆசைகளும் சிந்தனைகளும் ஏதோ பல மாதங்கள் பேசிக் கொண்டிருப்பதை போல இருக்கிறது.

இது இண்டலெக்சுவல்கள் மோதிக்கொள்ளும் உலகம். அந்த குப்பையினில் எங்கள் சாட்டினை முன்னிருத்தவில்லை. நாங்கள் இருவரும் முதனிலை வாசகர்கள். இதுவரை வாசித்த புத்தகங்களிலிருந்து வாதம் செய்து கொண்டிருந்தோம். அப்போது தான் அவர் being and nothingness என்னும் புத்தகத்தினை வாசித்திருக்கிறீர்களா ? எனக் கேட்டார். நான் அதனை வாசிக்க வேண்டும் என ஆசையினை மட்டுமே வைத்திருக்கிறேன் என்றேன். ஆனால் சாரு “கனவுகளின் மொழிபெயர்பாளன்” என்னும் நூலில் எழுதியிருக்கும் முதல் இரண்டு கட்டுரைகள் இந்த நூலினை பற்றி தான்.


ழான் பால் சார்த்தர். ப்ரெஞ்சு தத்துவவாதி. இவரின் பிரதான கோட்பாடு existentialism. தமிழாக்கம் செய்ய வேண்டுமெனில் தனிமனிதத்துவவாதி. இதில் தான் விஷயமே இருக்கிறது. உலகமே கொண்டாடும் ஒரு தத்துவம் தான் இந்த தனிமனிதத்துவம். இந்த தத்துவம் தோற்றுவிட்டதோ என எங்கள் சாட்டின் இடையில் சந்தேகம் வந்தது.

சாருவின் எழுத்தகளால் உண்டான தாக்கத்தினை அவர் சொல்லும் போது அதிலிருந்து அறிந்த விஷயம் மனிதனுடைய அதிகபட்ச தேவை சுதந்திரம். பாருங்கள் இந்த வாக்கியமே தவறு. ஏனெனில் தேவை என வைக்கிறோம் எனில் அதனை பூர்த்தி செய்ய யாரோ எதையோ கொடுக்கிறார்கள். இங்கு கொடுக்கப்படும் விஷயம் சுதந்திரம். சுதந்திரமோ யாரும் யாருக்கும் கொடுக்கப்படுவது அல்ல வாங்கப்படுவதும் அல்ல. அப்படி நடந்தால் சுதந்திரம் என்னும் வார்த்தையின் அர்த்தமே கெட்டுவிடுகிறது. அப்படியெனில் சுதந்திரம் என்பது என்ன ? நாமாக எடுத்துக்கொள்வது. அனுபவிப்பது. Existence.

இதனை நடைமுறையில் செய்ய முடியுமா எனில் அதற்கான எடுத்துக் காட்டு தான் சாரு போன்ற எழுத்தாளர்களின் எழுத்து நடை. ஒரு நாவலினை வாசிக்கிறீர்களெனில் அதை எழுதும் எழுத்தாளன் ஆளுமையில் இருக்கிறான். அவன் சொல்லும் விஷயத்தினை நாம் எந்த நிர்பந்தமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவும் வாசக-எழுத்தாள அடிமை முறை தானே. இது அவரின் எழுத்துகளில் இல்லாமல் போய்விடுகிறது. அவர் வார்த்தைகளின் மூலமாக சில விஷயங்களை கட்டமைக்கிறார். அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதும் வாசகனின் சுதந்திரம் அதனை கட்டுடைத்து வேறு ஒரு உருவத்தினில் எடுத்துக் கொள்வதும் வாசகனின் சுதந்திரம் தான். ஆக இங்கு வாசகனும் அந்த படைப்பில் பங்கெடுக்கிறான்.

இதனை தத்துவமாக எழுதியவர் தான் சார்த்தர். சார்த்தர் இரண்டு கொள்கையினை முன்வைக்கிறார். essense மற்றும் existence. இதில் essense என்பது கொள்கைபிடிப்பு, குணம் என ஒருவனை வர்ணிக்க கூடிய பொருள்களால் ஆனது. இன்னொன்றான existence வாழ்வியல் நொடியினை குறிக்கிறது. ஒரு உதாரணம் கொண்டு விளக்கப்பார்க்கிறேன். தாங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். உடன் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் உற்ற நண்பர்கள். நீங்களோ காந்தியவாதி. நண்பர்கள் என்ன சொல்கிறார்களெனில் தண்ணியுடன் விடுமுறையினை கொண்டாட தங்களை செலவு செய்யச் சொல்கிறார்கள். அந்த இடத்தில் தாங்கள் என்ன செய்வீர்கள் ? உஙகளிடம் இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது ஒன்று கொள்கை தான் முக்கியம் என நண்பர்களை நிராகரிப்பது மற்றொன்று குடிக்காமல் அவர்களுடன் கொண்டாடுவது. முதல் தெரிவினை தேர்வு செய்கிறீர்களெனில் நிச்சயம் மனிதர்களை இழக்ககூடும். ஆக இது போன்ற இடங்களில் நமது கொள்கைபிடிப்பு தளர்ந்துவிடுகிறது existence என்னும் தளத்திற்கு தள்ளப்படுகிறோம் - விரும்பியோ விரும்பாமலோ. ஆனால் ஒன்று அவர்களை ஏற்றுக் கொள்கிறோம்.

இது அனைத்து இடத்திலும் இருக்க வாய்ப்பில்லை. ஊருடன் கூடி வாழ் என பழமொழி இருக்கிறது. அதாவது ஊர் என்ன சொல்கிறதோ அதனுடன் நாமும் ஒன்றிவிடுவது. மற்றொன்று அதனை எதிர்த்து தனக்கென ஒன்றினை அமைத்துக் கொள்வது. இங்கு தான் என் பிரச்சினையே வருகிறது. ஒரு விஷயத்தினையோ கொள்கையினையோ எதிர்க்கிறோம் எனில் நாமும் அந்த கொள்கைக்குள் தான் இருக்கிறாம்(என் பெயர் ராமசேஷன்) என்று தானே அர்த்தம். ஆக essense இன் தன்மையினை நிராகரித்து ஒரு இடத்தின் தெரிவு existence இல் முடிகிறது எனில் existence உம் ஒரு கொள்கை ஆகி விடுகிறதே!!!

இதனை கண்டிப்பாக சார்த்தர் எழுதியிருப்பார் என்பது என் யூகம். அதனால் நிர்மலிடம் e-book கேட்டு வாங்கியிருக்கிறேன். இப்போது செமெஸ்டர் என்பதால் அதன் விடுமுறையில் வாசிக்கலாம் என முடிவு செய்துள்ளேன். வாசித்து அதனையும் எழுதுகிறேன். சாரு அந்த புத்தகத்தினை மொழிபெயர்த்தாராம். இப்போது அவரிடமே அதன் பதிப்பு இல்லை. ம்ம்ம் தமிழகம் இழந்தவற்றுள் இதுவும் ஒன்று!!!

Share this:

CONVERSATION