Gloomy Sunday - 1999

திரைப்படங்களை பற்றி எழுதலாமா வேண்டாமா என நிறைய நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன். இதே பதிவுதளத்தினில் ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்படத்தினை மிகவும் சிலாகித்து எழுதியிருந்தேன். அதற்கு பின் அந்தப் படமே எனக்கு அலுப்பு தட்டிவிட்டது. தமிழில் ஏதேனும் படத்தினை புகழ்ந்து பேசலாம் என்றால் கூட பயமாக உள்ளது. தமிழில் சொந்தமாக, எந்தப் படத்தினையும் நகல் எடுக்காமல் வரும் படங்கள் சொற்பமே. இதில் எதனை புகழ்வது ? சென்ற பதிவில் கூட ஜப் தக் ஹை ஜான் என்னும் ஹிந்தி படத்தினை எழுதியிருந்தேன். அது கூட முகநூலில் நல்ல பெயர் வாங்க மட்டுமே!!!

விமர்சனம் என்றால் தின மலரிலோ தினகரனிலோ சின்னதாக வருவது மட்டும் தான் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சென்ற வருடம் சாருவின் “சினிமா:அலைந்து திரிபவனின் அழகியல்” என்னும் புத்தகம் மற்றும் உயிர்மையில் வரும் ஷாஜியின் விமர்சனங்கள் மற்றும் கருந்தேளின் இணையதளங்ளை பார்க்கும் போது விமர்சனம் செய்வதற்கு கூட உலக ஞானம் அதிகமாக தேவை எனத் தோன்றியது. உலக சினிமாக்கள் பார்க்க வேண்டும் என்னும் ஆசை கூட இவர்களின் விமர்சனங்களால் அதிகம் என்னுள் ஏற்பட்டது. அதிலும் முக்கியமாக Gloomy Sunday படத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

இந்தப் படத்தின் விமர்சனத்தினை மேலே குறிப்பிட்டிருந்த சாருவின் புத்தகத்தில் வாசித்தது தான். இது ஒரு ஜெர்மானியத் திரைப்படம். அதை வாசிக்கும் போதே பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அப்படி ஈர்க்கப்பட்டதற்கு காரணம் இக்கதையினை நகர்த்தி செல்வது கதை மாந்தர்கள் அல்ல இசை.

எனக்கு இசையினை பற்றி அப்போது அவ்வளவாக அனுபவம் இல்லை. தொலைக்காட்சியில் கூட பார்க்க மாட்டேன். இப்போது தான் ஏதோ கேட்கிறேன். அப்படியிருக்கையில் ஒரு இசையினால் அல்லது ஒரு இசையினை கேட்டு மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை வாசித்த போது எனக்கு எப்படி இருக்கும் ??? பார்க்க வேண்டும் என ஆசை இருந்தது. எங்கு போய் இதன் டி.வி.டி தேடுவது என விட்டு விட்டேன். தீபாவளி அன்று முழிக்க வேண்டுமே என ஏதாவது படம் வாங்க சென்றேன் யதேச்சையாக கையினில் சிக்கியது.

படத்தின் ஆரம்பத்தினில் கூட ஒரு ஹோட்டலில் ஒரு இசை வாசிக்கப்படுகிறது அதைக் கேட்டு ஒரு வயதானவன் இறந்து விடுகிறான். அதிலிருந்து கதை பின் நோக்கி நகர்கிறது. புடாபெஸ்ட் என்னும் நகரம். அங்கு ஒரு ஹோட்டலினை நடத்துபவன் லாஸ்லோ. அவன் காதலி இலானோ. அந்த ஹோட்டலில் பியானோ ஒன்றினை வாசிக்க ஆள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் தேர்வாகிறவன் கதையின் மற்றொரு நாயகன் அந்தராஸ். இன்னுமொரு கதாபாத்திரம் யாரெனில் ஹான்ஸ் வீக்.இவன் இந்த ஹோட்டலில் எப்போதும் beef roll வாங்கி சாப்பிடுபவன். இலானோவிற்கு அந்தராஸ் மீதும் காதல் ஏற்படுகிறது. கதையில் இலானோவின் பிறந்த நாள் வருகிறது. அனைவரும் அவளுக்கு பரிசளிக்கும் போது அந்தராஸ் அவளுக்காக தானே உருவாக்கிய இசையினை அளிக்கிறான். அந்த இசையின் பெயர் தான் gloomy sunday. அதில் அந்த ஹோட்டலில் இருந்த அனைவருமே மயங்கி விடுகிறார்கள். இதற்கிடையில் மூவருக்கிடையில் சண்டை ஏற்படுகிறது. அஃதாவது இலானோவிற்கு இரு காதலர்கள் ஆனால் எங்களுக்கு பாதி காதலியா என ஆனால் இந்த காட்சியின் தீர்வு என்ன ஆயிற்று என நினைக்கலாம். இயக்குநர் இந்த இடத்தில் அந்த சண்டையினை அழகான ஊடலாக மாற்றி அப்படியொரு சண்டை நிகழவேயில்லை என்னும் அளவு காட்சியினை அமைத்திருக்கிறார். அப்போது தான் ஹான்ஸ் தன்னை மணம் செய்து கொள்கிறாயா என இலானோவிடம் கேட்கிறான் அவளோ எனக்கு இருவரின் அன்பே போதும் என அவனை நிராகரித்து விடுகிறாள். அவன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறான். அவனை லாஸ்லோ காப்பாற்றுகிறான். அதன் பின் ஹான்ஸ் ஜெர்மனியின் நாஜிப் படைகளில் சேர்கிறான். இது ஒரு புறம் இருக்க அந்தராஸின் அந்த இசை ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஒருவரால் ரேடியோவிற்கு செல்கிறது. ரேடியோ மூலமாக பரவுகிறது. அப்படி பரவியதில் அந்த இசையினை கேட்கும் அனைவரும் தற்கொலை செய்ய ஆரம்பிக்கின்றனர். தற்கொலையின் விகிதம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்தராஸிடம் நிறைய பேர் தற்கொலைக்கு காரணம் என்ன அந்த இசை என்ன சொல்ல வருகிறது எனக் கேட்கின்றனர். அவனாலோ எந்த பதிலினையும் சொல்ல முடியவில்லை. வெறுப்பில் அந்த இசையின் அனைத்து குறிப்புகளையும் நதியில் எறிகிறான். தனிமையில் இருக்கும் போது அவன் அதற்கு வரிகள் எழுதுகிறான். அப்போது அவன் இலானோவிடம் சொல்லும் விஷயம் “காதலுக்காக நான் எழுதிய இசை இப்போது தற்கொலையாக மாறுகிறது.” என. அந்த இடங்களில் empathy என சொல்லப்படும் நிலைக்கு அந்தராஸின் நடிப்பினால் தள்ளப்படுகிறோம். அப்போது இலானோ தான் தனிமையில் இருக்கும் போது பாடுவேன் எனச் சொல்கிறாள். இப்படி காட்சிகள் செல்லும் போது ஹான்ஸ் அந்த ஹோட்டலுக்கே வருகிறான். இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம் லாஸ்லோ ஒரு யூதன். அவனிடம் யூதனை கிண்டலடித்து ஒரு நகைச்சுவையினை சொல் என்கிறான். அந்த இடத்தில் அவன் தனக்கு தெரிந்தவன் என நட்பும் பாராட்ட முடியாது நாஜிப் படை colonel என்பதால் எதிர்த்தும் பேச முடியாது. அவமானத்தினை தனக்குள் வைத்துக் கொண்டு அவனும் சொல்கிறான். இதை பார்த்துக் கொண்டிருக்கும் அந்தராஸிடம் gloomy sunday இனை வாசிக்க சொல்கிறான். அவன் மறுக்கிறான். ஹான்ஸ் அடிக்கும் போது இலானோ அந்தராஸ் எழுதி வைத்த வரிகளை எடுத்து பாட ஆரம்பிக்கிறாள் பாட்டு முடியும் போது அந்தராஸும் ஹான்ஸின் துப்பாக்கியினை எடுத்து தற்கொலை செய்து கொள்கிறான். இதற்கு பிறகு தான் கதையில் ஹிட்லர் யூதர்களை கொல்ல ஆணை பிறப்பிக்கிறார். அப்போது ஹான்ஸ் பணம் வாங்கிக் கொண்டு சில யூதர்களை காப்பாற்றுகிறான். அவனிடம் சென்று இலானோ கேட்கும் போது லாஸ்லோவினையும் காப்பாற்றுவதாக சொல்கிறான். அந்த குறிப்பிட்ட நாள் வரும் போது லாஸ்லோவின் பெயர் யூதர்களை வதை முகாம் ஏற்றி செல்லப்படும் இரயிலின் பட்டியலில் இருக்கிறது. இதனை தெரிந்தவுடன் ஹான்ஸிடம் செல்கிறாள். அவனோ அவளுடைய தேகத்தினை பதிலாக கேட்கிறான். அங்கேயே ஒரு வன்கலவியும் நடக்கிறது. அக்கலவியின் பிண்ணனியில் இருக்கும் இசை gloomy sunday!!! இக்கலவி முடிந்த பின் ஹான்ஸ் இரயில் நிலையம் செல்கிறான். அங்கிருக்கும் காவலாளியிடம் இங்கு இருப்பவர்களில் ஒருவரின் பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளது அவரை மட்டும் அழைத்து செல்கிறேன் என்கிறான். லாஸ்லோ திரும்பி பார்க்கிறான். ஹான்ஸோ சரியாக லாஸ்லோவிற்கு பின்னால் இருக்கும் ஒரு கிழவனை அழைத்து செல்கிறான். இந்த துரோகத்தோடு கதை இலானோவின் குரலில் பாடப்படும் gloomy sunday உடன் முடிகிறது.

இக்கதை நிறைய பேருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் இக்கதையின் ஆதார இழை இசை துரோகம் காதல். இதன் இசையமைப்பாளர் ரெஸோ செரெஸ் கூட தற்கொலை செய்து கொண்டதாக இணையதளங்களில் காண முடிகிறது. என்னால் அத்தனை தூரம் தாக்கத்தினை உணர முடியவில்லை ஆனால் இசை அருமை.

இப்படத்தினை பார்க்கும் போது ஹிந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யப் சொன்ன விஷயம் தான் நினைவிற்கு வந்தது. இப்படத்தினில் நிர்வாணக் காட்சிகள் நிறைய இருக்கிறது. அப்படி வரும் காட்சிகள் கூட படத்தினை விட்டு தனியே தெரிவது போலவோ கிளுகிளுப்பிற்காக வைக்க வேண்டும் என்பது போலவோ தெரியவில்லை. கதையின் ஓட்டத்தினில் இயல்பாக இருக்கிறது. அனுராக் காஷ்யப் சொன்னது நிர்வாணத்தினை கொண்டாடும் அளவு நமது சினிமா இன்னும் முன்னேரவில்லை. இதனை பார்க்கும் போது நம்மூர் திரையரங்கில் இப்படம் ஓடினால் என்ன ஆகும் என நினைத்து பார்த்தேன். . .

இப்படத்தில் மொழி பிரச்சினை தான் ஆங்கில ஸப்டைட்டிலுடன் வாங்கிக் கொள்ளுங்கள் அருமையான ஒரு படம்.

இப்படத்தின் டிரைலர் இங்கே சொடுக்கவும்

பி.கு : என்னிடம் ராஜ மாணிக்கம் என்னும் அன்பர் உரையாடுகையில் சொன்னார் உலக சினிமா என்பது போதை போல என. அவர் நிறைய உலக சினிமா பார்ப்பவர். ஆனால் அவர் சொன்ன ஒரு விஷயத்தினை ஒத்துக் கொள்வேன் ஒரு உலகப்படம் பிடித்து போனால் அதன் மூலம் உலக சினிமாவின் தேடல் தொடங்கும். இனி நான் ரசிக்கும் படங்களை எழுத இருக்கிறேன். குறை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்

Share this:

CONVERSATION