நினைவுப் பட்டாசு

தீபாவளி நிச்சயம் அனைவருக்கும் நிறைய நினைவுகளை கொணர்ந்து கொடுக்கும். இது யாராலும் மாற்ற முடியாத ஒன்று. என்றோ யாரோ ஒருவரால் நமது புதிய துணிகளில் ஏற்பட்ட ஓட்டைகளை நாம் ஒவ்வொரு தீபாவளிக்கும் அசை போட்டுக் கொண்டிருக்கிறோம். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இந்த குறிப்பிட்ட நினைவுகளின் அசை தீபாவளி நெருங்க நெருங்க மட்டுமே நடைபெறும் ஒன்று. என் பள்ளி காலத்தினில் நான் ஒவ்வொரு முறையும் கொண்டாடும் மற்றும் கொண்டாட்டத்திற்கான ஒரே பண்டிகையாக நான் கருதியதும் தீபாவளி மட்டுமே.  இப்போது நினைத்தாலும் சிரிப்பு கொடுக்கக் கூடிய விஷயம் என்னவெனில் அப்போது எனக்கு பொங்கல் பண்டிகை எதற்கு என்பதே தெரியாது. தெரியாது என்பதைவிட அது என் தமிழ் ஆசிரியை அறையில் இருக்கும் கட்டுரை நோட்டுகளுக்குள் அடங்கியிருக்கும் சமாச்சாரம். மிஞ்சி மிஞ்சி போனால் பரிட்சை அன்று நான் அதனை புரட்டி பார்ப்பேன். மனனம் செய்வேன். இப்போது பிரச்சினையே அதில் தான் இருக்கிறது. பொங்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கிறார்கள் அதே கொண்டாட்டம் மட்டுமே நிறைந்த தீபாவளிக்கு அதிகபட்சம் இரண்டு நாட்கள்! ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போதே தினக் கேலண்டராக இருந்தால் பின்னட்டையில் எப்போது தீபாவளி எனப் பார்ப்பதும் மாதக் கேலண்டராக இருந்தால் எடுத்த எடுப்பில் நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு செல்வதும் போன்ற நினைவுகள் இப்போதும் அதே படபடப்பினை கொடுக்க வைக்கிறது. இதிலும் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது - அஃதாவது தீபாவளி தினத்திற்கு முன்னோ பின்னோ சனி அல்லது ஞாயிறு வந்தால் இன்னும் கொள்ளை சந்தோஷம். அதிலும் தீபாவளி செவ்வாய் அல்லது வியாழன் இந்தக் கிழமைகளில் தான் வரவேண்டும் என்பது என் சிறு வய்து கனவு. எனக்கு மட்டும் தானா எனில் நிச்சயம் இல்லை.

பட்டாசு மற்றும் துணிமணிகள். இதைப் பற்றி நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும். இந்த இரண்டு விஷயங்கள் சிறுவயதிலிருந்து அவதானித்ததில் பலவேறு பரிணாமங்களை கொண்டுள்ளது. பையனாக இருந்தால் தீபாவளிக்கு துணி எடுக்க போகிறோம் என அழைத்து சென்றால் அவனின் நினைவு முழுக்க அழைத்து செல்லும் அம்மா அப்பா எப்போது பட்டாசு கடைக்கு அழைத்து செல்வார் என்பதிலேயே இருக்கும். பட்டாசு கடைக்கு சென்றால் அடுத்த கவலை(பட்டாசு கடைக்கு எப்போது போகலாம் என நச்சரிப்பார்களே தவிர இதை நிச்சயம் சொல்ல மாட்டார்கள்) துணி கடைல மட்டும் அவ்ளோ நேரம் நிக்கறாங்க அதே பட்டாசு கடைல சீக்கிரம் முடிச்சிடறாங்க!!!

இப்போதோ துணிமணிகளின் மேல் நாட்டம் சென்றுவிட்டது. அதற்கு பட்டாசின் மேல் ஆசை போய்விட்டதா எனில் இல்லை. சிறிதாக சொல்ல வேண்டுமெனில் வீட்டில் வாங்கப்படும் பட்டாசுகள் நண்பர்கள் குழாம் சேர்ந்தால் வெடிக்கிறது இல்லையெனில் நமத்துவிடுகிறது!!!

இப்போது அஃதாவது இக்காலகட்டத்தினில் இவ்விரண்டுடன் அதிகமாக தொற்றிக் கொண்ட இன்னுமொரு விஷயம் சினிமா. இது கலாச்சார சீர்கேட்டின் அறிகுறி அல்லது பண்டிகைகளை அபகரித்த அடக்குமுறை என எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம். என்ன சொன்னாலும் இதன் தாக்கத்தினை அல்லது முந்தியடித்து முதல் நாள் பார்க்க வேண்டும் என்னும் ஆவலினை அடக்க முடியவில்லை. அதனால் தான் இதனை தொற்றிக் கொண்ட விஷயம் என சொல்லியிருந்தேன். ஒவ்வொரு முறையும் அடுத்த முறை நிராகரிக்கலாம் அடுத்த முறை நிராகரிக்கலாம் என முடிவெடுத்தாலும் வார்த்தை மட்டும் அப்படியே நிற்கிறது.

என் வீட்டினை பற்றி சொல்ல வேண்டுமெனில் அவர்கள் கட்டமைத்துள்ள ஆசாரங்களை அனுஷ்டிப்பவர்கள். உடனே என்னை பற்றி கேட்டுவிடாதீர்கள். நான் பிறப்பால் மட்டுமே அந்தணனாக இருக்கிறேன். அப்பா அம்மாவுக்கு கொடுக்கும் மரியாதை என மாமிசம் உண்ணாமல் இருக்கிறேன். இவர்கள் சிறுவயது முதல் தீபாவளி அன்று ஒரு மணிக்கே எழுந்து கொள்வர். ஏன் எனில் நரகாசுரனை கிருஷ்ணன் நடு நிசியில் தான் கொன்றாராம். அப்போது நான் சின்ன பையன் என்பதால் என்னை மூன்று மணியளவில் எழுப்புவர். எழுந்திருக்கும் போதே தூக்கம் தெளியும் கண்கள் எனில் அது தீபாவளி அன்று மட்டும் தான் காண முடியும். எழுந்த உடனே எண்ணை தேய்த்து குளியல். குளித்தவுடன் தான் என் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். அதாவது பட்டாசு வெடிப்பது. விடிய வேண்டும் வெளிச்சம் வர வேண்டும் என சுலோகங்களை ஒப்பித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியினை(அப்போது என் வீட்டில் கேபிள் இல்லை) வெறித்துப் பார்ப்பது அல்லது ரோல் கேப்பினை எடுத்து ஜேம்ஸ் பாண்ட் ஆவது. இப்படியே காத்திருப்பு தான் விடியல் வர. ஆனால் அதுவும் ஒரு அலாதியான சுகம். இப்போது நினைத்தாலும் அந்த குறிப்பிட்ட மனநிலையினை கொண்டுவர முடியவில்லை. நினைவுகளை மட்டுமே கொணர முடிகிறது. போன முறை தீபாவாளி அன்று நான் dilwale dulhaniya le jaayenge என்னும் ஷாருக் கானின் படத்தினை பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் இனி படத்தினை வைத்து விடியலினை தேட வேண்டியது தான் என முடிவு செய்தேன். இந்த முறை உலக சினிமா(நாங்களும் முன்னேறுவோம்ல. . .). அதை தனிப்பதிவுகளாக இடுகிறேன்.

புதுப்படங்களை பார்ப்பது தவறு எனக் கூறவில்லை. குடும்பத்துடன் நண்பர்களுடன் சுற்றத்துடன் சந்தோஷத்தினை பகிர்ந்து களியுங்கள். அதன் பின் நீங்கள் பார்க்கும் படத்தினை அல்லது விருப்பத்திற்கிணங்க படத்திற்கு செல்ல யாரும் தடை செய்ய மாட்டார்கள். அதே போல் சிறுவர்களுக்கு பட்டாசுகள் வாங்கித் தாருங்கள் வளர வளர அவனுக்குள் தோன்றும் நினைவுகள் அப்பா நமக்கு வாங்கித் தரவில்லையே என்றாகிவிடக் கூடாது. நினைவுகள் என்றவுடன் தான் சொல்ல தோன்றுகிறது பழைய தீபாவளிகளின் நினைவுகளை அசை போடுங்கள் ஒரு இன்ச் புன்னகை கூடுதலாக இடம் கொள்ளட்டும்.

அனைவருக்கும் என் இனிய தீபாவாளி நல்வாழ்த்துகள்.

Share this:

CONVERSATION