வன்முறை விரும்பிகளுக்கு. . .

இது காலம் தாழ்ந்த பதிவாகவும் கருதப்படலாம் அல்லது மீள்பதிவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு திரைப்படத்தினை பற்றிய பதிவு.


 இந்த திரைப்படம் மேலே உள்ள புகைப்படத்தினை போல இரண்டு பாகங்களை கொண்டது. முதல் பாகம் ஜூன் 22 அன்றும் இரண்டாவது பாகம் ஆகஸ்டு 8 அன்றும் வெளியானது.

இந்தப்படம் எனக்கு எப்படி தெரியவந்தது எனில் சாரு நிவேதிதா தான். அந்த படத்தின் முன்னோட்டத்தினை தொலைக்காட்சியில் ஏற்கனவே பார்த்திருந்தேன். இந்த படமெல்லாம் ஓடப்போகுதா என்னும் எண்ணமே எனக்குள் தழைத்தோங்கியிருந்தது. அப்படியொரு நேரத்தில் சாரு தன் இணையதளத்தில் இந்த படத்தின் முதல் பாகத்தினை பற்றி லேசாக எழுதியிருந்தார். இதில் என்ன ஆச்சர்யம் எனில் அவர் தன் புத்தக வெளியீட்டு விழாவில் இனி அரசியல் கட்டுரைகளையும் சினிமா விமர்சனங்களையும் எழுதப் போவதில்லை எனக் கூறியிருந்தார். அப்படியொருவர் ஒரு திரைப்படத்தினை சிலாகித்து பேசுகிறார் எனில் அதில் ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கத்தானே செய்யும் ??? அதனை பார்க்கலாம் என முடிவு செய்தால் என் ஊர்  என் நினைப்பில் பெரியதொரு கொள்ளிக் கட்டையினை திணித்தது. ஏனெனில் என் ஊரில் ஹிந்தி படம் வருகிறது எனில் இரண்டு திரையரங்கில் இடுவர். அதையும் எப்போது எடுப்பார்கள் என யாருக்கும் தெரியாது. இந்த சூழலில் அந்தப் படம் எடுக்கப்பட்டது. போனது போகட்டும் திருட்டு டி.வி.டியிலாவது பார்ப்போம் எனில் அதுவும் இல்லை. அந்த படத்தினை தேடி தேடி அதற்குள் இரண்டாவது பாகமே வந்தது. இரண்டாவது பாகம் வரும் போது அதையாவது திரையரங்கில் பார்க்கலாம் எனில் பரிட்சை! முடியும் போது அதையும் எடுத்து விட்ட்னர். நான் நினைத்தது என்னவெனில் இரண்டாவது பாகமெனில் எப்படியும் பழைய கதை மாந்தர்களை வைத்து புது கதை யோசித்திருப்பர் என. அது தான் போய்விட்டதே என இரண்டாவது பாகத்தினையும் தேட ஆரம்பித்தேன். அது இப்போது தான் கிடைத்தது. இன்னும் ஆர்வத்துடன் என்னை தேட வைத்தது பின் வரும் லிங்க் என்றும் கூறுவேன். இது சாரு இரண்டாவது பாகத்தினையும் பார்த்துவிட்டு எழுதியது. . .

http://charuonline.com/blog/?p=3370

இந்த படத்தின் முதல் பாகத்தினை பார்த்து முடிக்கும் போது இது போன்று திரைப்படத்தினை தமிழ் இயக்குனர் விஜய்க்கு காண்பிக்க வேண்டும் என தோன்றியது. அனைவருக்கும் தெரியும் சிறிதுப் நாட்களுக்கு முன் an UNusual revenge story என ஒரு முன்னோட்டத்தினையும் அதனை கொண்ட தாண்டவம் என்னும் காட்டு மொக்கையினையும் தமிழ் ரசிகர்களுக்கு அளித்தார். இதை இப்போது பரிகசிப்பதும் அல்லது இப்பதிவில் குறிப்பிடுவதும் எதற்கு எனில் இந்த கதையும் பழிக்கு பழி வாங்கும் ஃபார்முலா தான். அப்போது அதில் என்ன ஆச்சர்யம் இருக்கப் போகிறது எனில் அந்த திரைக்கதை, கதை, வசனம், பாடல். . . . என சொல்லிக் கொண்டே போகலாம்.

போன பத்தியில் இந்த இரண்டாம் பாகம் என்னும் திரை கோட்பாட்டினை சொன்னேன். அப்படிதான் இதுவரை படங்கள் வந்திருக்கிறது அல்லது நான் அப்படிப்பட்ட படங்களை தான் பார்த்திருக்கிறேன். அதே இந்த கேங்க்ஸ் ஆஃப் வசேப்பூர் என்னும் திரைப்படமோ ஐந்து மணி நேர திரைப்படம். அதை சரியாக வெட்டி முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகம் என செய்திருக்கிறார் அனுராக் காஷ்யப். நான் தொடர்ந்து ஐந்து மணி மணி நேரம் மூழ்கியிருந்தேன். அட்டகாசமான அனுபவம்.

இந்த படத்தின் ஆரம்பம் எப்படியெனில் சிறிது நாட்களுக்கு முன் வெளிவந்த “சுந்தர பாண்டியன்” என்னும் திரைப்படத்தின் ஆரம்பத்தினை போன்றதே. அதில் உசிலம்பட்டி ஊரின் வரலாறு ஒரு ஐந்து நிமிடங்கள் வருகிறது. இப்படத்திலோ வசேப்பூர் தன்பாத் என்னும் ஊரின் வரலாறு நம்மை ஈர்க்கும் அளவு கொஞ்சம் கூட சலுப்படைய வைக்காமல் சொல்லியிருக்கிறார். அந்த ஊரில் இரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்களுள் சுல்தானா என்பவன் மற்றொரு பிரிவினரின் பெயரினை சொல்லி கொள்ளையடிக்கிறான். அது தெரிந்தவுடன் அவனை ஊரினை விட்டு தள்ளி வைக்கிறார்கள். அவன் வசேப்பூரிலிருந்து தன்பாத் வருகிறான். அப்படி அவன் போகும் இடத்தில் ஒரு சுரங்கத்தில் வேலை பார்க்கிறான். அப்போது அவனுக்கு குழந்தை பிறக்கிறது. மனைவி இறந்து விடுகிறாள். அந்த குழந்தையின் பெயர் சர்தார். இந்த சம்பவம் நடக்கும் போது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. அப்போது பொருளாதாரமும் டாடா போன்றவர்களிடம் செல்கிறது. அப்போது சுரங்க வேலைகளை கையில் எடுத்துக் கொள்பவன் ரமாதீர். அவனின் இடது கையாக சுல்தான் வேலை பார்க்கிறான். ஒரு நாள் சுல்தானின் வீட்டிற்கு ரமாதீர் வரும் போது அவன் ரமாதீரினை கொன்று அவனின் தொழிற்சாலைகளை எடுத்துக் கொள்வேன் என பேசிக் கொண்டிருக்கிறான். ரமாதீர் அதனை கேட்டவுடன் தான் கொண்டு வந்த குடையினை அங்கேயே வைத்துவிட்டு வெளியிலிருந்து சுல்தானை அழைத்து செல்கிறான். சுல்தானை சூழ்ச்சியில் கொன்றும் விடுகிறான். குடையினை பார்த்தவுடன் தன் வீட்டிற்கு ஆபத்து என சுல்தானின் உறவினன் ஒருவன் அறிந்து கொள்கிறான். உடனே சர்தாரினை அழைத்துக் கொண்டு தப்பித்து விடுகிறான். இவர்களை கொல்ல வந்தவர்கள் கொன்றாயிற்று என ரமாதீரிடம் சொல்லிவிடுகிறார்கள். அந்த மகன் சர்தார் மொட்டையடித்துக் கொண்டு ரமாதீரினை கொன்றே தீருவேன் என முடிவெடுக்கிறான். இது தான் கேங்க்ஸ் ஆஃப் வசேப்பூரின் மீதக்கதை.

முதல் பாதியில் நிறைய விஷயங்கள் ஏன் நடக்கிறது என்றே தெரியாது. சில கதாபாத்திரங்கள் கூட கதையினை ஓட்ட சேர்க்கிறார்களோ என தோன்றச் செய்தது. ஆனால் இரண்டாம் பாகம் முடியும் போது தான் ஒரு விஷயத்தினை என்னால் உணர முடிந்தது கதையில் எந்த ஒரு கதாபாத்திரமும் தேவையில்லை என்றே இல்லை. இரண்டாம் பாகம் என வைக்காமல் ஒரே படமாக ஐந்து மணி நேரம் என வைத்திருக்கலாம் என்ன நம் சமூகத்துக்கு அது உவ்வா.

முதல் பாகத்தின் கால்வாசியினை மட்டும் தான் நான் கூறியிருக்கிறேன். முழுதும் ஏன் கூறவில்லையெனில் படத்தின் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணம் எனில் ரீமா சென். அவளின் நடிப்பு உண்மையில் எனக்கு ஆச்சர்யத்தினை மட்டுமே அளித்தது. சர்தாரின் இரண்டாவது மனைவியாக கதையில் வரும் கதாபாத்திரமே துர்காவாக வரும் ரீமா சென். காதல், வெட்கம், துரோகம், வஞ்சம் என பரிணாமத்தினை இந்த ஒரு படத்திலேயே காட்டியிருக்கிறார். என் ஆசையெல்லாம் அதில் குட்டியூண்டினை மட்டும் தமிழில் நடிக்கலாமே. . .

முதல் பாதியில் சர்தார் சிறைக்கு போவது போல் ஒரு காட்சி வரும். அந்த சிறையில் “bhoos” என்றொரு பாடல் வரும். அந்த பாடலினை பின்வரும் லிங்கினில் சாரு அத்தனை தூரம் சிலாகித்திருப்பார் - http://charuonline.com/blog/?p=3335. இது அவர் தன் இணையதளத்தில் இரண்டாவது பதிவாக சிலாகிப்பது. அவரின் தொடர் வாசகன் என்பதால் இந்த படத்தினை பார்த்தே ஆக வேண்டும் என எனக்கு தோன்றியது. இந்த லிங்க் கூட அத்தனை பெரிய பதிவு கிடையாது. ஆனால் இப்படம் அரசியல் வார்த்தைகளை சுமந்து கொண்டு வருகிறது என்பதற்கு இது ஒரு ஆவணம்.

இவருக்கு அடுத்து என்னுள் ஆர்வத்தினை எதிர்பார்க்க வைத்தது யாரெனில் நிச்சயம் கருந்தேள் தான்.

http://karundhel.com/2012/06/gangs-of-wasseypur-2012-hindi.html 
இந்த பதிவு மட்டுமல்ல முகநூலில் பல பேர் இரண்டாவது பாகம் சுமார் என்றிருந்தனர். நான் அந்த கருத்திற்கு முழு எதிர் பக்கம். எனக்கு ஆக பிடித்தது எனில் இரண்டாவது பாகம் தான். அது முதல் பாகத்தின் வரும் பல முடிச்சுகளை விடுவிப்பது மட்டுமல்ல பல கதாபாத்திரங்கள் கதையின் கடைசி வரை அறிமுகம் ஆன வண்ணமே இருக்கிறது. அவை கூட நம்மை சலுப்படைய வைக்கவில்லை. நிறைய சொல்லலாம் என நினைக்கிறேன். மேலே இருக்கும் லிங்க் நிச்சயம் படத்தினை பற்றி நிறைய சொல்லும். வாசித்து பாருங்கள். அதைவிட முக்கியம் படத்தினை பாருங்கள். அதன் முடிவில் காண்பிக்கப்படும் ஒரு வன்முறை காட்சி இந்தியப்படங்களில் இனி வருமா என சிறிதும் நம்பிக்கையில்லை.

வன்முறை ரத்தம் வஞ்சம் பழிக்கு பழி என வன்முறை விரும்பிகளுக்கு ஒரு நல்ல விருந்து இந்த GANGS OF WASSEYPUR

பி.கு - 1 : எனக்கு இந்தி சுமாராகத் தான் தெரியும். அதனால் subtitle உடன் இருக்கும் டி.வி.டியினை வாங்கி பார்த்தேன். என் தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் ஹிந்தி அட்டகாசமான தெரிந்தவர்களும் subtitle வசதியுடன் பாருங்கள். இப்படி சொல்வதற்கு காரணம் படத்தில் இருக்கும் மொழி முழுதும் ஹிந்தியா எனத் தெரியவில்லை. வசேப்பூரின் உண்மைத் தன்மையினை கொண்டுவர அங்கிருக்கும் மக்களினை மொழியில் கூட காண்பித்திருக்கிறார். (ஆரம்பத்தினில் எனக்கு அந்த ஹிந்தி புரியவில்லை அதனால் subtitleஇனை ஆரம்பித்தேன். அதை மறைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது!)
பி.கு - 2 : இப்படத்தினை பார்த்து ஒரு வாரம் ஆகிறது. அதன் நினைவில் மட்டுமே இக்கட்டுரையினை எழுதியுள்ளேன். அதனால் தான் நிறைய விஷயங்களை என்னால் குறிப்பிட முடியவில்லை. 

Share this:

CONVERSATION