என் பெயர் அதிகாரம்

//சமூகம் என்னும் பிணைப்பில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அது சில நேரங்களில் நிர்பந்தமாக மாறும் போதும் நம் தெரிவின் அடிப்படையில் அமைவதால் மாற்றமுடியாமல் அப்படியே இருந்துவிடுகிறோம். எத்தனையோ கேள்விகள் நம்முள் சிறுவயது முதல் எழுந்திருக்க வாய்ப்புண்டு ஏன் நம்மை பெற்றவரை அம்மா அப்பா என அழைக்கவேண்டும் - அது பரவாயில்லை பெற்றதன் மரியாதையில் வைத்துக் கொள்வோம் ஆனால் ஏன் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அங்கிள் ஆண்ட்டி என்றழைக்க வேண்டும், ஏன் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது, அப்படி அழைத்தால் அவர்களின் மட்டு மரியாதை உண்மையில் குறைந்துவிடுமோ, வெளியே செல்லும் போது எதற்கு மேக்கப் போட வேண்டும், அப்படி போடவில்லையென்றால் வேலை தடைப்படுமோ என அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பலாம். தங்களுக்கும் எழும்பியிருக்கும். அப்படி இதனை எதிர்த்து செய்தால் என்ன ஆகும் என பார்த்தால் அசிங்கமான வார்த்தைகள், வளர்க்க தெரியாமல் வளர்த்துவிட்டனர், மீறி சென்றால் வீட்டில் அடி. சமூகத்தில் இதற்கு பெயரும் வைத்துள்ளனர் அஃதாவது மாற்று கலாச்சாரத்தினை புகுத்துபவன்! இவர்கள் கலாச்சாரம் என்னும் வார்த்தையினுள் எதனை திணித்து வைத்துள்ளனர் என்பதையே நம்மால் எத்தனை ஆண்டுகள் ஆயினும் புரிந்து கொள்ள முடியாது. நம்மை வளர்ப்பவர்கள் கூட வீட்டிற்குள் தாங்கள் கூறும் வார்த்தைகள் முழுவதையும் ஆதரித்தாலும் என்றாவது வெளியில் செல்லும் போது ‘வீட்ல பேசுனா மாதிரி அங்க பேசிடாத’ என்பர். இதற்கு எதற்கு அந்த வீடிலடங்கும் கருத்து சுதந்திரம் ? இப்படி எத்தனையோ கேள்விக் குறிகளால் சிக்கிக் கொண்டு எதற்கும் பதில் தெரியாமல் ஊருடன் கூடிவாழ் என சகட்டு மேனிக்கு கும்பலுடன் கும்பலாக கோவிந்தா போட்டு வாழ ஆரம்பித்து விடுகிறோம். இதனை தான் ஆதவன் சொல்லும் mob psychology ஆக பார்க்கிறேன். இது சரியா தவறா என்னும் வாக்கு வாதத்திற்கு நான் வர விரும்பவில்லை. சொல்ல வருவது ரொம்ப சாதாரண விஷயம் - நாம் நமது சுதந்திரத்தினை நம்மாலேயே இழந்து கொண்டு அடுத்தவர்களின் கருத்துக்கிணங்க வாழ்ந்து வருகிறோம்// இது ஆதவன் காட்டும் பிம்பங்கள் என்னும் பதிவில் நான் எழுதியது.

மேற்கண்ட பத்தியில் இருப்பது mob psychology என்னும் தத்துவம் மட்டுமல்ல என்பதே என் எண்ணம். அதில் இருக்கும் இன்னுமொரு விஷயம் அதிகாரம். இதன் ஆசை மனிதனென்னும் உருவினை கொண்ட அனைவருக்கும் பொருந்தும். அந்த அதிகாரத்திற்காக நாம் தினம் தினம் அலைந்து கொண்டிருக்கிறோம். சிலர் அதை காட்டிக் கொள்கிறார்கள். அதே சிலர் அதை மறைக்க பார்க்கிறார்கள். எப்படியோ அந்த அதிகாரம் எங்கும் பரவும் வியாதி போல் நீக்க மர நிறைந்திருக்கிறது. பள்ளிக்கூடத்தில், அரசியலில், விளையாட்டில் இன்னபிற. ஆனால் அவை குடும்பம் என்னும் அமைப்பில் இருக்கிறதா எனில் அனைத்து துறைகளை காட்டிலும் இந்த அதிகாரம் நிறைந்திருப்பது குடும்ப அமைப்பில் தான். அதனை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவலே “என் பெயர் ராமசேஷன்”

இந்த நாவல் என்னிடம் வெகு நாட்களாக இருந்து கொண்டு தான் வருகிறது. காகித மலர்கள் பற்றிய என் கருத்தினை பதிவுதளத்தில் இட்டு அதனை முகநூலில் லிங்க் கொடுத்திருந்த போது ஒரு அன்பர் இந்த நாவலை குறிப்பிட்டு வாசிக்கச் சொன்னார். எப்போதெல்லாம் எடுத்தேனோ அப்போதெல்லாம் மின்வெட்டு அல்லது கல்லூரி வேலை. தடையுடனேயே இருந்த போது எனக்கு ஒரு பத்து நிமிடம் கிடைத்தது. அதுவும் காலை வேளையில். பத்து நிமிடத்தில் அதனை ஆரம்பித்து விடுவோம் பின் மாலை கல்லூரியிலிருந்து வந்த பின் முடித்து விடலாம் என ஆரம்பித்தேன். ஆரம்பமே அட்டகாசம். இந்நாவலின் பெயர்தான் இந்நாவலின் முதல் வரியும் கூட. ராமசேஷன் என்பது கதை நாயகனின் தாத்தாவின் பெயர். அதே பெயர் அவனுக்கும் வைக்கப்பட்டுள்ளது. முதல் பத்தியில் அவன் சொல்கிறான் இந்த சின்ன சம்பிரதாய மீறல்களை கூட என் அப்பாவால் செய்ய முடியவில்லை என்று. அஃதாவது தாத்தாவின் பெயரைத் தான் மகனுக்கு வைக்க வேண்டுமா என்னும் பிரச்சினை. அன்று முழுக்க என் சிந்தனை இதில் தான் இருந்தது. எனக்கு என் தாத்தாவின் பெயர் தான் ஆனால் இப்படி நாம் யோசிக்கவில்லையே என்று!

குடும்பத்தில் இருக்கும் அதிகார பிரச்சினை தான் இந்நாவல் என ஆரம்பத்திலேயே கூறியது போல் இதில் ராமசேஷன் என்பவனின் குடும்பமும் அதன் சூழலிலும் நடக்கும் பிரச்சினைகளே சொல்லப்படுகிறது. நாவல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

முதல் பகுதியில் அவனின் நண்பன் ராவ். அவனுக்கு அடியாள் போல் இருக்கும் நண்பன் மூர்த்தி. ராவ் பணக்கார வீட்டு பையன். மூர்த்தியின் பாத்திரம் ராவின் நண்பன் போல் ஒரு இடத்திலும் தெரியாது. மூர்த்தி அப்படி அடியாள் போல இருப்பதற்கு காரணம் ராவ் சினிமாக்களுக்கு செல்லும் போது அவனையும் தன் செலவில் அழைத்து செல்வான். இப்போது புது நண்பனான ராமசேஷனின் வரவால் தன் இடத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்னும் பயம். மீண்டும் இந்த இடத்தில் தாஸ்தாயெவ்ஸ்கியினை நுழைக்க நினைக்கிறேன். அதிகாரம். ராவ் மூர்த்தியிடம் சகஜமாக பழகுகிறான். ஆனால் மூர்த்தியின் செய்கைகள் அனைத்தும் ராவ் அவன் மீது அதிகாரத்தினை தொனிப்பது போலவே தெரிகிறது. இதை தான் கதையின் நடுவில் வரும் வாக்கியம் ஊர்ஜிதப்படுத்துகிறது. அஃதாவது பத்து பதினைந்து வேலையாட்கள் இருக்கும் வீட்டினில் வளர்ந்தவனுக்கு இது சகஜமாகத் தான் தெரியும் என. இப்போது ராமசேஷனின் வரவால் தன் இடத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என அவன் மீது, ராமசேஷனின் மீது அதிகாரம் செலுத்த நினைக்கிறான் மூர்த்தி. அதற்கு தோதாக நுழைக்கப்படும் பாத்திரம் மாலா. மாலா ராவ்வின் தங்கை. அவளுக்கும் ராமசேஷனுக்கும் காதல் ஏற்படுகிறது. அப்போது இன்னுமொரு பாத்திரம் அவனின் நினைவுகளின் ஊடாக நமக்கு வருகிறது. அது தான் பங்கஜம் மாமி.
பங்கஜம் மாமியினை பற்றி சொல்லவேண்டுமெனில் ராமசேஷனை தூக்கி கொஞ்சிய அனைத்து மாமிகளும் குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவனிடம் ஒரு தூரத்தினை நிலைநாட்டினர். அந்த தூரத்தினை கண்டுகொள்ளாமல் எப்போதும் போல் இருந்தவள் பங்கஜம் மாமி. அதனால் அவனுக்கு அவள் மேல் ஒரு தனிபிரியம்.

கிட்டத்தட்ட இதுவும் உடல் அரசியலை பேசும் நாவல் தான் என நினைக்கிறேன். ஒரு விஷயத்தை செய்யாதே என சொல்லும் அதை செய்ய நினைப்பது மனித குணம். இந்த சாதாரண விஷயத்தினை உடலுக்கு பொருத்திக் கொள்ளுங்கள். சொல்லப்போகும் விஷயம் அசாதாரணமாக இருக்கலாம் ஆனால் சற்றே சிந்தியுங்கள். குறிப்பிட்ட வயது வரை சமமாக பழகி பின் உடலின் காரணமாக அந்நியமாக பார்க்க ஆரம்பித்தால் அது எவ்வளவு பெரிய தவறு. நாளை அந்த உடலே அவனுக்கோ அவளுக்கோ எதிரியாகிவிடலாம். இந்த உணர்வின் முகபாவனையினை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். என் வீதியில் இருக்கும் வைஷாலி என்னும் பெண். அவள் பருவம் எய்தும் வரை தினம் இரண்டு மணி நேரமாவது எங்கள் தெருவின் சிறுவர் சிறுமியருடன் விளையாடுவாள். அவள் பருவம் அடைந்த பின் விளையாட்டின் நேரம் குறைந்தது. அப்போது அவள் வீட்டில் எதுவும் சொல்லவில்லை. ஊர் வாயினை அடக்க முடியுமா ? அதன் விளைவு ஆண் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தால் அவளின் வீட்டுக்குள்ளிருந்து சத்தம் வரும். அவளின் நிலைமையில் யாரேனும் நினைத்துப் பார்த்திருப்பார்களா ? அவள் ஏழாவதோ எட்டாவதோ தான் படிக்கிறாள். அந்த குழந்தையின் மனதிலேயே உடல் என்னும் விஷயம் ஒரு பிரிவினையின் அடிப்படையாக மாறிவிடுகிறது. இதை இன்னும் இரண்டாக பிரிக்க நினைக்கிறேன். ஒன்று அந்த குழந்தையின் மன நிம்மதியினை கெடுத்த தெருக்காரர்கள்(என் அம்மாவும் அடக்கம் தான்). அதில் முக்கால்வாசி, முக்கால்வாசியென்ன முழுக்கவும் பெண்கள் தான். அவர்கள் அப்படி சொல்வதன் மூலம் அடையப்போவது யாதெனில் “நல்ல அம்மா” என்னும் பட்டம்! இதை யார் கேட்டார். அவர்கள் தங்களின் ஒடுக்குமுறை காலகட்டத்திலேயே இருக்கின்றனர் என்பதன் சான்றே இது. மற்றொரு பக்கம் பார்க்க வேண்டுமெனில் இந்தியா. நம் நாட்டில் வளர்க்கப்படும் குழந்தைகள் அனைத்தும் ஆபாசத்திலேயே வளர்க்கப்பட்டதாகிறது. இப்போதிருக்கும் காலத்தில் கர்ப்பத்திலிருந்து குழந்தை பெரிதாகும் வரை சினிமாவுக்கு குடும்பமே அடிமைபடுத்திவிடுகிறது. நம் சினிமாவில் காட்டப்படுவது அனைத்தும் ஆபாசங்கள். சாரு தன் எழுத்து ஒன்றில் எழுதியிருந்தார் -  “வாரணம் ஆயிரம் படத்தினை வெளி நாடுகளில் adults only film என அறிவித்து விட்டார்களாம். ஏனெனில் அதில் நடிகரான சூர்யா போதை உட்கொள்வது போல் காட்சி வருகிறதாம்”. இங்கே கொஞ்சம் நினைத்து பாருங்கள் அது மட்டுமல்ல நடிகை நீச்சலுடையில் வந்தாலும் குடும்பத்துடன் உட்கார்ந்து தான் ரசிக்க வேண்டும் என நினைப்பவர்கள். இப்படியொரு சமூகத்தில் எப்படி பையன்களுடன் சாதாரணமாக விளையாட விட முடியும். இன்னும் தார்மீகமாக சொல்லப்போனால் இது சமூகத்தில் நிலவும் paradox. ஆனால் மனோதத்துவ ரீதியாக ஆண்பால் பெண்பால் பேதமின்றி அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பாதிப்பினை அவன் மாலாவிடம் உணர்கிறான். மாலாவுடன் தவறாக பழகுகிறான் என அவள் வீட்டில் உள்ளோர் உணரும்படி தற்செயலான விஷயங்கள் அமைகிறது. ஆனால் அவனோ அப்படி பழகவில்லை. இவனை சோதிக்க மாலாவின் அம்மா சில சில்மிஷங்கள் செய்கிறாள். அப்போது அவளை அரவணைத்து விடுகிறான். உடனே இவன் தப்பானவன் என முடிவுகட்டி விட்டின் பக்கம் வராதே என அதட்டுகிறாள். அதை உணர்ந்தவுடன் மாலா அவனை தினம் வரவழைத்து பேசுகிறாள் சின்ன சின்ன தீண்டல்கள் என காலமும் நேரமும் மார்க்கமாக கழிய ஆரம்பிக்கிறது. அப்போது அவனுக்குள்ளேயே ஒரு கேள்வி எழுகிறது நான் ராமசேஷனா அல்சேஷனா என்னும் கேள்வியே அது. அவளின் தேகத்தின் ஆளுமையில் அவன் சிக்கிக் கொள்கிறான். அதனை விட்டு மீள நினைக்கிறான் ஆனால் முடியவில்லை. அவளை சந்திக்காமல் இருக்கலாம் என நினைத்த போது அவள் வீட்டிற்கு வருவது வீட்டிலுள்ளோருக்கு சந்தேகத்தினை விதைக்கிறது. அப்போது அவன் சொல்கிறான் “அம்மாவையும் சகோதரிகளையும் தவிர வேறு பெண்களை கண்ணெடுத்து பாரேன் என்று ஒருவன் இருந்தால் அவனை சரியா வளர்க்கலை என்று தான் எல்லாரும் சொல்லுவார்கள்”. இதை எத்தனை பேர் உணர்கிறீர்கள் ? கல்லூரியில் தான் முக்கால்வாசி பேருக்கு அடுத்த இனத்துடன் பேசவே வாய்ப்புகள் அமைகிறது. இனம் என்ற வார்த்தையினை நான் வெறுக்கிறேன். நிறைய வீட்டில் பெண் பார்க்கும் போது எனக்கு அம்மா மாதிரி தான் பொண்ணு வேணும் என சொல்லுவார்கள். இக்காலத்திலும் அப்படி நடக்கிறது. அது அவனின் விஸ்தீரணம் அடையாத அறிவினை மட்டுமே காட்டும் ஒரு செயல். பெண்களிடம் பேச வெளி கிடைக்கவில்லை ஏன் எனில் உடல். நிச்சயம் அதுதான் காரணமாக இருக்கும். அதை வெளியில் கூறமுடியாமல் தவிப்பதற்குள் காலம் கடந்துவிடுகிறது. சரி நாவலுக்குள் வருவோம் அவளோ நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என வேறொருவனை சந்தித்து தன் பாதைகளை தெரிவு செய்து கொள்கிறாள். இத்துடன் முதல் பகுதி நிறைவடைகிறது.மொத்தத்தில் ராமசேஷனின் infactuation - இனகவர்ச்சி அவனை அதிகாரத்தின் பிடியில் சிக்க வைக்கிறது. முதல் பகுதி முடியும் போது காகித மலர்களில் ஆதவன் சொல்லியிருக்கும் ஒரு விஷயம் தான் நினைவிற்கு வந்தது - மரணத்திற்கு முன்பும் பெண்ணின் தேகத்திற்கு முன்பும் ஆண் ஒன்று போலவே இருக்கிறான். இரண்டும் அதிகாரத்தின் உச்சியில் இருக்கிறது.

கதையில் இரண்டாவது பகுதி. இதில் சொல்லப்படும் விஷயங்கள் நிறைய எக்காலத்திற்கு பொருந்தும் அளவு அழியாத் தன்மையினை பெற்றுள்ளது. முர்த்தியும் இரண்டாவது அத்தியாத்தில் காதல் கோதாவில் இறங்கிவிடுகிறான். அப்போது ராமசேஷன் அவனுடன் ஒரு விவாதத்தில் இருக்கும் போது சொல்கிறான் நீ காதலிக்கிறாய் என்றால் அது காதல் கிடையாது காம்ப்ரமைஸ். யதார்த்தத்திற்கும் இது பொருந்தும். நாம் நிறைய படங்களை பார்க்கிறோம் அறிந்து கொள்கிறோம் அவற்றை சொல்ல ஒரு ஜீவன் தேவைப்படுகிறது. அதற்கு வேறு இனத்தில் ஒன்றை தேடுகிறோம். கிடைக்காத போது கிடைத்த ஒன்றை தான் அறிந்ததையெல்லாம் அறிந்திருப்பார்கள் அல்லது அறிந்து கொள்ள முற்படுவார்கள் என உருவக படுத்திக் கொண்டு அவளை தன் உறவாக்குகிறோம். உண்மையில் நாம் அணியும் பிம்பங்கள் இப்படி தான் தொடங்குகிறது. நாம் சந்திக்கும் மனிதர்களுடன் நாம் பேசும் வார்த்தைகள் நம் உண்மைத் தன்மையினை இழ்க்கச் செய்கிறது. நாமோ மறுபடியும் மறுபடியும் உருவகத்தின் பின்னாலேயே செல்கிறோம்.

சென்ற பத்தியில் அறிந்து கொள்கிறோம் மேலும் அதனை பகிர்ந்துகொள்ள ஆட்கள் தேடுகிறோம் என சொல்லியிருந்தேன். அடுத்த பிரச்சினை நாவலில் இந்த அறிந்து கொள்கிறோம் என்னுமிடத்தில் தான் ஆரம்பிக்கிறது. எப்படியெனில் அதிகம் வாசிப்பது ஆங்கில படங்கள் பார்ப்பது போன்ற செய்கைகளின் மூலம் அறிவாளி என்னும் பிம்பத்தினை நாமாக நமக்குள் ஏற்றுகிறோம். இது எதற்கு எனில் சமூக அந்தஸ்தினை பெறுவதற்கே. இது நிறைவாக கொண்ட பாத்திரம் தான் பிரேமா. இந்த பகுதியில் ராமசேஷன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறான். ராவ் பிரேமாவை விரும்புகிறான்.

இந்த இரண்டாவது பகுதி அதிகாரத்தினை ஈகோ என்னும் குணத்துடன் இணைத்து நம்மை அதில் பயணிக்க வைக்கிறார். அறிவாளி என்னும் குணம் வந்தவுடனேயே அங்கே ஈகோ குடி புகுந்து விடுகிறது. வி.எஸ்.வி என்னும் இயக்குநர், ராமபத்ரன் என்று ஒரு எழுத்தாளன் என கதைகளுக்குள் நுழைந்து ஆளாளுக்கு தங்களின் அதிகாரத்தினை எவ்வளவு தொனிக்க முடியுமோ அவ்வளவு தொனித்து தங்களின் அதிகாரத்தினை காட்டுகின்றனர். பிரேமாவின் தேகத்தின் பிடியில் சிக்கக் கூடாது என எவ்வளவோ எண்ணி முயற்சிக்கிறான் அவனின் மனதிற்குள்ளேயே என்ன என்னவோ தோன்றுகிறது. அது ஒரு பித்தனிலை. தான் பெண்களிடம் தோற்றுப் போகிறோமோ என்னும் எண்ணம் துரத்த அவனுக்கு பங்கஜம் மாமியின் நினைவு வருகிறது.

அவளிடம் சென்று அவளையே மணந்து கொள்ள நினைக்கிறான். அவனுடைய ஈகோ தோற்கும் ஒரே இடமாக அவன் நினைப்பதும் பங்கஜம் மாமி தான். காதல் கனிய கனிய மாமியுடன் அவனுக்கு நேரம் கழிகிறது. அப்போது அவனுக்கு பரிட்சை. அவளிடம் சொல்கிறான் நான் பரிட்சை முடிந்து உன்னை பார்க்க வருகிறேன் அப்போது மணந்து கொள்வோம் என. அவள் சிரிக்கிறாள். பரிட்சை முடிந்து அவன் மாமியினை பார்க்க செல்லவிருக்கும் போது அவன் கண்களுக்கு ராவ்வும் மூர்த்தியும் இளம்பெண்களுடன் செல்வது தெரிகிறது. அதை பார்த்தவுடன் தான் மட்டும் வயதான மாமியுடனா என ஒரு வாதம் அவனுக்குள் ஆரம்பிக்கிறது. தனது பிம்பத்தினை தக்கவைத்துக் கொள்ள அவன் அந்த பாதையினை மறந்துவிடுகிறான். அப்போது நாவலில் ஒரு அட்டகாசமான வாக்கியம் வருகிறது “உறவுகள் - பிம்ப வேட்டை”.

மூன்றாவது பகுதி தான் நாவலின் முடிவு க்ளைமாக்ஸ் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளலாம். என்னதான் நாவலின் பெயர் என் பெயர் ராமசேஷன் என அமைந்தாலும் இக்கட்டுரைக்கு இட்ட தலைப்பினையொத்த முடிவினையே நாவல் கொண்டுள்ளது. எப்படியெல்லாமோ கட்டுடைக்க நினைத்தாலும் நாவலில் முழுக்க கதாபாத்திரங்கள் முழுக்க நிறைந்திருப்பது அதிகாரம் மட்டுமே.

பகடி, தத்துவம், பாத்திரம், என கையிலெடுத்த அனைத்திலேயேயும் தன் அதிகாரத்தினையும் கதாபாத்திரங்களின் சுதந்திரத்தினையும் உலவ விட்டிருக்கிறார் ஆதவன். மொத்தத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் மறக்க நினைத்தாலும் முடியாத அளவு ஒரு படைப்பு என் பெயர் ராமசேஷன்.

பின் குறிப்பு : இந்த குறிப்பு இதற்கு தேவையா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஈகோ பற்றி எழுதியுள்ளதால் இதனையும் எழுதுகிறேன். தூக்க கலக்கத்தில் தொலைகாட்சியில் நான் பார்த்து கேட்ட ஒரு ஆன்மீக ஆசாமி சொன்ன கதை.
“ஒருவன் அந்த கிராமத்தில் எங்கோ அகப்பட்டு கிடந்த பூனையினை காப்பாற்றி வளர்க்க ஆரம்பித்தான். அதற்கு செல்லமாக பெயரிட்டான். எங்கு சென்றாலும் அழைத்து சென்றான். பெரிய விலங்குகளிடமிருந்து அதனை காப்பாற்றினான். ஸ்பெஷல் சாப்பாடு எல்லாம் அளித்தான். ஒரு கட்டத்தில் அது அதீத இடத்தினை எடுத்துக் கொண்டது. இவனுக்கு கொஞ்சம் இடையூறினைப் போல தெரிந்தது. என்ன செய்வது என தெரியவில்லை. அந்த பூனைக்கு இவன் செய்திருந்த பெரிய தவறு என்னவெனில் எங்கு அதனை விட்டாலும் வீடு நோக்கி வந்துவிடும். அதனால் எங்கும் அதனை விடவும் முடியவில்லை. பூனையால் நொந்து போன அவன் அந்த ஊருக்கு புதிதாக வந்த சாமியாரிடம் சென்று வழி கேட்டான். அவர் சொன்னார் பூனையினை சாக்கு பையினில் போட்டு நடு காட்டில் சென்று விட்டுவிடு பின் அதன் தொல்லை உனக்கு இருக்காது என. இவனும் பூனையினை சாக்கு பையினில் போட்டு காட்டுக்குள் சென்றான். தொலைதூரம் போய்விட்டான். அப்போது இருட்டிவிட்டது. திரும்பி பார்த்தால் வழியே தெரியவில்லை. என்ன செய்வது என யோசித்தான் கையிலிருக்கும் சாக்கு பையிலிருந்து பூனையினை வெளியே விட்டான் அதற்கு தான் வீட்டிற்கு போகத் தெரியுமே என அதனை தொடர்ந்து அவனும் வீட்டினை அடைந்தான். அந்த பூனைதான் ஈகோ” என ஆன்மீகவாதி முடித்தார். இதனை இக்கட்டுரையுடன் எங்கு வேண்டுமென்றாலும் இணைத்துக் கொள்ளுங்கள் அல்லது பின் குறிப்பாகக் கூட வாசித்துக் கொள்ளுங்கள் அதிகாரம் உங்கள் கையில். . .

Share this:

CONVERSATION