கதைகள்

இக்கட்டுரையினை எழுத வேண்டும் என வெகு நாட்களாக எனக்குள் எண்ணம் இருந்து கொண்டு வந்தது. கதைகள் என்பது இப்போது வளர்ந்து வரும் சமூகம் இழக்கும் ஒரு விஷயம் என்று கூட சொல்லலாம். பல ஆயிரம் கோடிகள் ஊழலில் நம் சமூகம் இழந்து கொண்டிருக்கிறது அதை எழுதாமல் கதைகளினை இழக்கிறது என புலம்புதல் அபத்தமாக தெரியலாம் ஆனால் நான் சொல்ல வரும் விஷயம் சற்று வித்தியாசமானது. மாணவனாக மாணவர்களின் மனநிலைகளை உள்வாங்கி எழுதும் கட்டுரையே இது.

சென்ற வருடம் எதாவது paper presentation செய்ய சொன்னார்கள். எனக்கா படிப்பின் மீது நாட்டமே கிடையாது. எப்போதும் ஏதாவது சினிமா அல்லது நாவல் என அமர்ந்திருப்பேன். அது பொறியியலின் ஆரம்பம் என்பதால் என்னிடம் ஆங்கிலம் எடுத்த ஆசிரியை ஆங்கிலத்தில் ஏதாவது செய்கிறாயா என கேட்டார். சரி என எனக்கு தெரிந்ததையெல்லாம் வைத்து post modernism and meta-fiction என்னும் தலைப்பில் எனக்கு தெரிந்ததையெல்லாம் சொன்னேன். உண்மையினை சொல்ல வேண்டுமெனில் இதில் ஒன்றினை விளக்குவதே மிக மிக கடினமான விஷயம். அதே மறுபக்கம் எனக்கிருந்த விஷயம் எதுவென்றால் அது பொறியியல் கல்லூரி அதனால் நிச்சயம் இலக்கியத்தில் கேள்வி கேட்க மாட்டார்கள் என்னும் தைரியத்திலேயே செய்தேன். பாராட்டுகளும் பெற்றேன். இங்கு ஏன் சொல்கிறேன் எனில் அங்கு நான் சந்தித்த வார்த்தைகளும் நான் சொன்ன வார்த்தைகளும் கூட இக்கட்டுரைக்கு எனக்குள் வித்தாக அமைந்திருக்கலாம்.

இலக்கியம் என்றால் என்ன ? என்னும் கேள்வி எனக்குள் நிறைய காலம் இருந்தது. சிறு வயது முதல் எனக்கு கதைகள் வாசிக்கும் பழக்கம் இருக்கும் போது இதென்ன இலக்கியம் எனக் கூறுகிறார்கள் என சிந்தித்தேன். ஏன் அபத்தமாக சாருவிடமே கேட்டேன். அதென்ன அபத்தம் என கேள்வி எழலாம் பதிலினை பின் சொல்கிறேன். என்னுடைய பதில் எதுவெனில் விளக்க முடியாத ஒரு விஷயம் தான் இலக்கியம். அதனை இன்னும் கொஞ்சம் விளக்க முயற்சி செய்ய வேண்டுமெனில் மொழி என்றால் என்ன என்னும் கேள்வியினை தொடுக்க வேண்டும். அதற்கு நிச்சயமாக பதில் கருத்துகளை வெளிப்படுத்த பயன்படும் சாதனமே மொழி என்பர். அவர்களின் கூற்றுப்படியே செல்லலாம் அப்படி பயன் பெரும் அந்த சாதனத்தில் அழகியல் என்னும் விஷயம் நிச்சயம் இருக்கத்தானே செய்யும். அந்த அழகியல் தான் இலக்கியம். இலக்கியம் எனில் இப்படிதான் இருக்க வேண்டும் என எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இதன் படி பார்த்தால் சொல்ல வரும் கருத்துகள் ஆகட்டும் கதை ஆகட்டும் அதில் பயின்று வரும் மொழியில் அழகியல் இருந்தாலே நிச்சயம் அது இலக்கியத்தின் பாற்படும். இதன் படி எனக்கு பிடித்த இலக்கியம் எனில் அது பாட்டி வடை சுட்ட கதை தான். இன்னுமொரு விஷயம் காலம். ஒரு எழுத்தோ அல்லது மொழியோ எத்தனை தூரம் தன்னை ஒரு வடிவத்தின் மூலமாக மக்களின் மனதில் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதே. அதன்படி நான் சொல்லும் காக்கா-பாட்டி கதை இன்னும் நிலை பெற்று இருக்கிறது மேலும்  வரும் தலைமுறைக்கும் நிற்கும்.

நிச்சயம் இக்கதை தெரியாத குழந்தைகளே இல்லை, ஏன் பெரியவர்களும் இல்லை. எத்தனை முறையாயினும் அலுக்காத கதையாகவும் மாறி இருக்கிறது. இதே கதையினை நான் சில பரிமாணங்களில் பார்க்க விரும்புகிறேன். கதைப்படி வடை சுட்டுக் கொண்டிருந்த பாட்டியிடமிருந்து காக்க ஒரு வடையினை திருடிவிடுகிறது. மரத்தில் அமர்ந்திருக்கும் போது காக்காவினை பாடச் சொல்லி நரி வடையினை எடுத்துக் கொள்கிறது. இத்துடன் கதை முடிகிறது. இது தான் காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இதன் மூலம் சொல்லும் கருத்துகள் பாட்டி - சூதானமா இருக்கணும். காக்கா - திருடும் பொருள் நிலைக்காது. தங்களுக்கும் சரி எனக்கும் சரி இப்போது நண்பர்கள் மூலமாக குறுந்தகவல் வந்திருக்கலாம். அஃதாவது “காக்கா-பாட்டி கதையில் வடையை சுட்டது யாரு ?”. இந்த சுட்டது என்பது வழக்கு மொழிச் சொல். இதன்படி கதையினை அணுகினால் கதை கொஞ்சம் மாறுகிறது. கதை பகடியின் கருவாக மாறுகிறது. இன்னுமொரு வகையாக பார்க்க வேண்டும் எனில் கதை முழுமையாக முடியவில்லை. நரி வடையினை திருடனிடமிருந்து தந்திரமாக திருடுகிறது. அதற்கு பிறகு நரிக்கு தண்டனை எதுவும் இல்லை. இப்போது வாசகன் வேண்டுமென்றால் நரி வடையினை எடுத்து ஓடும் போது தடுக்கி விழுந்து இறந்ததாகவோ அல்லது வேறு ஏதேனும் மிருகங்களை வைத்தோ தொடர்ந்து கொள்ளலாம். இன்னும் வித்தியாசமாக சொல்ல வேண்டுமெனில் கதைசொல்லி இறந்து கதை கேட்பவன் படைப்பாளி ஆகிறான்.

இத்தனை பரிமாணங்களை கொண்ட இக்கதையினை எதற்காக இங்கு சொல்கிறேன் எனில் இன்றைய குழந்தைகளுக்கு தெரிந்த கதைகள் எனில் அது இந்த கதையுடனேயே நின்று விடுகிறது. இதை விட முக்கியமான விஷயம் இது போன்ற பஞ்சதந்திர கதைகள் எதற்காக வந்தது என்பதே. குழந்தைகளிடம் போய் கருத்துகள் ஒழுக்கம் திருடுதே என பட்டியலிட்டு சொற்பொழிவு நிகழ்த்தினால் நிச்சயம் தூங்கிவிடும். அதற்கு தான் அந்த கருத்துகளை கதைகள் மூலம் சொல்ல ஆரம்பித்தனர்.

நான் எஸ்.ராமகிருஷ்ணனின் தொடர் வாசகன் இல்லை. யதேச்சையாக அவரின் வலைதளத்தில் பார்த்தபோது அவர் தன் வருத்தத்தினை சொல்லியிருந்தார். அஃதாவது ஒரு குழந்தையிடம் சென்று ஒட்டகச் சிவிங்கியினை வைத்து கதை சொல்ல ஆரம்பித்தால் ஒட்டகச் சிவிங்கி என்றால் என்ன என கேட்கிறது. இது தான் நான் எழுதும் இக்கட்டுரையின் ஆதாரமும். அஃதாவது பாட்டி சொல்லும் கதைகள் வெறும் கதைகள் அல்ல அவை உலகத்தின் சகலத்தையும் அவர்களின் வயதிற்கேற்ப கொண்டு செல்லும் ஒரு கருவி. அந்த கருவியினை இக்கால தலைமுறையே இழந்து வருகிறது.

நான் என் அம்மா சொல்வதிலும் சரி வெளியில் கேட்பதிலும் சரி அவ்வளவு ஏன் என்னை பார்த்து கூட இந்த கதை கிதையெல்லாம் ஓரம் கட்டி வைக்க வேண்டியது தான என கூறியிருக்கின்றனர் . கதைகள் வாசிப்பது எனில் அது நேரத்தினை வீணடிப்பதற்கு எனும் கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் என் கருத்தோ கதைகளையும் அதன் உலகத்தினையும் நம் தலைமுறைக்கு வயதிற்கேற்ப காண்பிக்க வேண்டியது தலையாய கடமை. மூன்றாவது அல்லது ஐந்தாவது வரைக்குமாவது கண்டிப்பாக அவர்களுக்கு அந்த உலகத்தினை புகுத்த வேண்டும். பாட்டி கதையினை விடுங்கள் காக்கா பானையில் இருக்கும் தண்ணீரினை எடுக்க கல்லினை உள்ளே போடுமே. . . அந்த கதை நிச்சயம் அனைத்து குழந்தைகளுக்கும் தெரியும் ஆனால் அப்போது அவர்களுக்கு பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்கும் பெற்றோர் பெரியவனானதும் அது தான் ஆர்க்கிமெடிஸ் தத்துவத்தின் வித்து என கூற மறக்கின்றனர். அவனை சமூக பந்தயத்தில் பணயம் வைப்பதில் குறியாய் இருக்கின்றனர். அவனின் சிந்தனைகளோ மழுங்கடிக்கப்படுகிறது.

கேட்பதற்கு விளையாட்டாக இருக்கலாம் ஆனால் உங்களின் அருகில் இருக்கும் சிறுவர்களிடத்தில் விக்கிரமாதித்தன் கதைகளை வாசிக்க கொடுங்கள். அவர்கள் அடுத்த அடுத்த கதைகளின் சூட்சுமங்களை விடுவிக்க யத்தனிப்பர். இது எப்படி உதவும் என கேள்வி எழுந்தாலும் அதற்கு மக்களின் பந்தயத்தில் பகடையாய் இருக்கும் கணிதத்திலிருந்து ஒரு உதாரணம் சொல்கிறேன். கல்லூரி வந்த பின்னும் பள்ளியினை போல் கணித பாடம் எனக்கிருந்தது. எனக்கோ படிக்கவே அலுப்பு தட்டியது. அப்போது எடுக்கும் ஆசிரியையிடமே எதற்காக தேவையே இல்லாமல் கணிதம் படிக்க வேண்டும் என கேட்ட போது அவர் கூறினார் கணிதம் பொறியியலுடன் உனக்கு உதவாது என்றே வைத்துக் கொள். பிறகு ஏன் படிக்கிறோம் எனில் உன்னிடம் ஒரு கடினமான ஒரு கணக்கினை கொடுத்தால் நீ உடனே என்ன செய்வாய் ? எனக் கேட்டார். அனைவரும் ஒவ்வொரு விதமாக அந்த கணக்கினை தீர்க்க முயற்சி செய்வோம் என சொன்னார்கள். அப்போது தான் அவர் கூறினார். இந்த மனோதத்துவத்தினை தீர்ப்பதற்கு தான் கணிதம். உன்  மூளையினை துரிதப்படுத்தும் ஒரு விளையாட்டு. எந்த ஒரு பிரச்சினையாகட்டும் கணக்காகட்டும் அதனை முயற்சி செய்து பார்க்கும் தைரியத்தினை அளிப்பது தான் கணக்கு. இப்போது வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த விஷயத்தினை நான் என் சகாக்களுடன் அறியும் போது எனக்கு வயது பத்தொன்பது. இதனை மரியாதை ராமனும், விக்கிரமாதித்தனும் நிச்சயம் பத்து பன்னிரெண்டு வயதில் செய்ய முடியும். பத்தாம் வகுப்பு வரை இருக்கும் மாணவரிடம் பிடித்த பாடம் எது எனக் கேட்டால் அவர்களின் பதில் வரலாறாகத் தான் இருக்கும். காரணம் கதைகள். கதைகள் என்றுமே இச்சமூகத்தில் முக்கியமான இடத்தினை பிடித்தே இருக்கிறது. ஆனால் அதன் அடி ஆழத்தில் இருக்கும் மனோதத்துவத்தினை யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

உங்களால் முடியுமெனில் உங்களுக்கு தெரிந்த கதைகளை யாரேனும் ஒரு சிறுவர்களுக்கோ குழந்தைகளுக்கோ சொல்லுங்கள். புண்ணியமாவது கிட்டும்.

பின் குறிப்புகள் :

  • சாருவிடம் இலக்கியம் என்றால் என்ன என கேட்டதை அபத்தம் என சொல்லியிருந்தேன். அதற்கு காரணம் இலக்கியம் என்பது புரிதல் சார்ந்த விஷயம். இப்பதிவில் எழுதியது கூட எனது அணுகுமுறைகளும் புரிதலும் எனக்குள் கொடுத்த விளக்கங்கள். உங்கள் கருத்து என்னுடன் முரண்பட்டாலும் அதில் ஆச்சர்யம் இல்லை.
  • கல்லூரியின் நிறைய வேலைகள் பாக்கியிருப்பதால் இக்கட்டுரையினை இங்கு முடிக்கிறேன். நேரம் கிடைத்தால் மீதத்தினை எழுதுகிறேன்.Share this:

CONVERSATION