ராஸலீலா - பசியின் குறிப்புகள்

இந்த பதிவுதளத்தில் நான் வாசிக்கும் சில நூல்களை பற்றி என் அனுபவத்தினை பதிவு செய்து வருகிறேன். அவை எதுவும் விமர்சனம் என்னும் தளத்திற்கு செல்லாது. அப்படியே செய்யும் பதிவிலும் சிறிது தார்மீகமாவது நிச்சயம் வேண்டும். உண்மையினை கூற வேண்டுமெனில் நான் எக்ஸைலினையே எழுத நினைத்தேன். ராஸலீலாவின் மறுவாசிப்பு தான் என்னை எழுத தூண்டுகிறது. அப்படியே எழுதினாலும் அதற்கு முன்னர் வாசிப்பு அடுக்கின் படி நான் ஸீரோ டிகிரியினையும் எக்ஸைலையும் எழுத வேண்டும். ஏனெனில் அதற்கு பிறகே ராஸலீலாவினை வாசித்தேன்.

ராஸலீலா ஒரு அறுநூறு பக்க நாவல். முதன் முதலில் வாசிக்கும் போது அது எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் வெறும் அபத்தத்தின் பக்கம் நிற்பவை. அதற்கு நாவலின் மீது எந்த குற்றமும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாவலுக்கும் அதன் புரிதலுக்கும் இடையே வயது என்ற ஒன்று இருக்கிறது. நான் ராஸலீலாவினை வாசித்த காலத்தினை இங்கு கூறியே ஆக வேண்டும். அது டிசம்பர் மாதம் . எக்ஸைல் வெளியான நேரம். கல்லூரி திறக்க எனக்கு மூன்று நாட்கள் மட்டுமே இருந்தது. அந்த விடுமுறையில் சாருவின் ஆறு புத்தகங்கள் வாசிப்பதாக இருந்தேன். நான்கினை முடித்து மீதமிருந்தது ராஸலீலாவும் காமரூப கதைகளும். இரண்டுமே சற்று பெரிய நாவல். முதலில் எடுத்தது ராஸலீலா தான். ஒன்றரை நாளில் வாசித்து முடித்திருந்தேன். ஒன்றுமே புரியவில்லை. மேலும் கருவும் ஏன் இப்படி சப்பையாக இருக்கிறதே என நொந்து கொண்டேன். அந்த கரு எனக்கு அப்போது முழுமையாக புரிந்ததா என்பது மற்றுமொரு கேள்விக் குறி. அன்று வாசித்ததோடு அது புத்தக அடுக்கில் அமர்ந்து கொண்டது. அதற்கு பிறகு அதை நான் சீண்டக் கூட இல்லை. 

ஏற்காட்டில் நடந்த சாரு நிவேதிதா வாசகர் வட்ட சந்திப்பில் என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது அநேகம் பேர் அருமையான நாவலெனில் ராஸலீலா என்றனர். எனக்கா ஒன்றுமே புரியவில்லை. அவர்களிடமே கேட்டேன். அப்போது தான் பாஸ்கர் என்னும் அன்பர் கூறினார் அதே நாவலினை இருபத்தி நான்கு வயதில் வாசித்து பார் அப்போது நாவலின் ரசம் நன்கு தெரியும் என. அதன் நினைவு சிறிது நாட்களாக மனதினை போட்டு குடையவே வீட்டிற்கு சென்றிருந்த போது அந்நாவலினை எடுத்து வந்தேன். சனிக்கிழமை மாலை ஆரம்பித்தேன் ஆரம்பித்த வேகத்தில் நூற்றி ஐம்பது பக்கங்கள் பறந்தது.

ராஸலீலாவினை பற்றி சாரு கூறிய ஒன்றை கூறிய பின் என் கருத்துகளுக்கு செல்லலாம் என நினைக்கிறேன் : “ஸீரோ டிகிரியினை கவித்துவம் நிறைந்த யார் நினைத்தாலும் எழுதி விடலாம் அதே ராஸலீலாவினை எழுத ஒருவன் இருபது ஆண்டு காலம் இருண்ட சூழ்நிலையில் இருந்திருக்க வேண்டும். ”

நாவல் இரண்டு பகுதிகளாக பிரிந்து இருக்கிறது. ஒன்று ‘கண்ணாயிரப் பெருமாளின் நாற்பது கதைகளும் சில முன் குறிப்புகளும்’ மற்றும் ‘ராஸலீலா’. கண்ணாயிரப் பெருமாளின் கதைகளை தொகுதியாக சாருநிவேதிதா கதைக்குள்ளேயே தொகுக்கிறார். அதற்கு முன் இந்நாவலின் முதலிலேயே இது பித்தன் எழுதும் பித்தனின் கதை எனக் கூறிவிடுகிறார். ஸ்கீஸோப்ரீனிக் மனநிலையினை நம்முள் உருவாக்குவதே இந்நாவலின் நோக்கமாக உணர முடியும். அப்படி உருவாக்க அவர் இதில் அலைய விட்டிருக்கும் அனைத்து பாத்திரங்களும் அந்த மனநிலையிலேயே இருக்கிறது. 

கதையின் நாயகனான பெருமாள் எதில் பித்தனாக இருக்கிறான் என பார்க்க வேண்டும். அவனுக்கு தேவையெல்லாம் பெண். தீயாய் தகிக்கும் காமத்தினை தணிக்க ஒரு பெண். இது தான் இந்நாவலே என முடித்து விடலாம். அப்படி முடிப்பது இச்சமூகத்தில் பயமான விஷயமாக இருக்கிறது. ஏனெனில் அப்படி சொல்லி இது தான் கதை என கூறுகிறேன் எனில் ஒன்று இது கிளுகிளுப்பான நாவல் அல்லது ஆபாசமான நாவல் எனக் கூறிவிடுவார்கள். எனக்கோ இந்நாவலில் எவ்வித காமமும் தெரியவில்லை. அதனால் தான் இக்கட்டுரைக்கு கூட பசியின் குறிப்புகள் என இட்டிருக்கிறேன்.

வெளிப்படையாக தன் தேவை காமம் எனக் கூறினாலும் பக்கங்கள் நகர நகர அவனுக்கு தேவையானது காமம் மட்டுமல்ல ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை என்பதை நம்மால் உணர முடிகிறது. அவன் வேலை ஸ்டெனோ. அந்த வேலையில் அவன் மேலதிகாரிகள் ஞாயிற்றுக் கிழமை வரச் சொன்னாலும் வரமாட்டான். அந்த மேன்ஷன் நான்கு சுவர். . .இதை நேரடியாக சொல்வதை விட சூசகமாக சொல்லலாம் என நினைக்கிறேன். பசியின் மிகுதியால் வயிற்றின் வலியினை பொருக்க முடியாமல் பெற்ற குழந்தையினை அடித்து சாப்பிடும் ஒரு மனித உயிரினை நினைக்க முடியுமெனில் அதே நிலையில் இருப்பவன் தான் பெருமாள். தீயாய் எரியும் அவனின் இச்சைகள் அவனின் தேகத்தினை உருக்குகிறது. அது மட்டும் தான் பிரச்சினையா எனில் அவனின் வேலை. சமூகத்தின் ஒடுக்குமுறை. நியாயமாக பார்த்தால் இதனை அரசியல் நாவல் என்று தான் நான் சொல்லியிருக்க வேண்டும். தபால் துறை என்னுமிடத்தில் நடத்தப்படும் அனைத்து அபத்த நாடகங்களையும் அதில் அவன் அடையும் வதைகளையும் நாவல் அனைத்து பக்கங்களிலும் காணமுடிகிறது.

இக்கதையில் இவன் ஒருவன் தான் பாத்திரமா எனில் எனது பதில் இக்கதையில் மூன்றே பாத்திரங்கள் தான். ஒன்று பெருமாள். மற்றொன்று அவனுக்குள் இருக்கும் உணர்வுகள் எடுக்கும் உருவங்களாக தான் மற்ற கதாபாத்திரங்களை காண முடிகிறது. அவனிடம் எத்தனையோ பெண்கள் காதல் காமம் கனிய பேசுகிறார்கள் அதே கடைசியில் அவனின் நபர்களுடன் நாவலிலிருந்து மறைந்து விடுகிறார்கள். இந்நாவலில் ஃபங்குலா என்று கதாபாத்திரம் வருகிறது. அதுவும் ஒரு பித்த நிலையினை சுமந்தே வருகிறது. ஆனால் அவனின் செய்கைகள் அனைத்தும் தன் இஷ்டத்திற்கு இது போல் நாம் வாழ முடியாதா என பெருமாள் நினைக்கும் அளவு பாத்திரம் அமைகிறது. இதனை மறு கோணத்தில் பார்த்தால் அந்த பாத்திரம் அமைந்ததே பெருமாளின் ஆசையினை வெளிப்படுத்துவதற்காக கூட இருக்கலாம். இந்த அரசியல் நாவலினை இப்போது மனோதத்துவ நாவல் என்று கூட சொல்லலாம். இந்நாவல் உடல் அரசியலினை நன்கு பேசுகிறது. யாருடைய உடல் எனில் கண்ணாயிர பெருமாள். அவனின் உடலினை அங்கம் அங்கமாக சிதைத்து அந்த சதை துணுக்குகளின் பின்னிருக்கும் ஆசை ஒடுக்குமுறைகள் பலவித பாத்திரங்களாக நாவலில் உருவெடுக்கிறது. எந்த நாவலில் எனில் ராஸலீலாவில். அது பெருமாள் எழுதுவது. அதே நாற்பது கதைகள். . .சாரு நிவேதிதா எழுதுவது.

நாற்பது கதைகளிலும் பெருமாளின் வேதனைகள் அவன் வாழ்வில் காணாமல் போகும் கதாபாத்திரங்கள், மேலிடங்களில் கொடுக்கபடும் அழுத்தம், நிம்மதியாக கக்கா கூட போக முடியாத நிலைகள் முதலியன அழகுற சித்தரிக்கப்படுகிறது. அதே ராஸலீலாவின் கதை என்ன எனில் நீண்ட பாலைவனத்தில் ஒருவன் இளநீர் தேடி அலைகிறான். அதுவும் கானல் நீரினை இளநீர் என நம்பி.அப்போது ஒருத்தி மட்டும் கையினில் தண்ணீருடன் அவன் தன் பயணத்தினை ஆரம்பிக்கும் இடத்தில் நிற்கிறாள். வழியில் எத்தனையோ கானல் நீர் ததும்பும் குளங்களை காண்கிறான். அனைத்திலும் ஏமாந்து போனாலும் அவனின் பசி அடங்கவில்லை. அப்போது திரும்பி பார்க்கும் போது தான் தெரிகிறது அந்த ஒருத்தி இன்னமும் நின்று கொண்டிருக்கிறாள் என. அவள் தான் நான் குறிப்பிடும் மூன்றாவது கதாபாத்திரம் மீரா. அந்த கானல் நீரினை போல கடக்கும் கதாபாத்திரம் தான் திவ்யா பத்மினி, ஃபௌசியா ஸ்வப்னா லயா இன்னபிற.

ஒட்டு மொத்த நாவலிலும் தமிழின் ஆளுமை நீக்கமற நிறைந்திருக்கிறது. நான் நிறைய பெண்களின் பெயர்களை கடைசி பத்தியின் கடைசி வரிகளில் குறிப்பிட்டிருந்தேன். அவர்களுக்கும் பெருமாளுக்கும் இடையே நடக்கும் சம்பாஷனைகளை நிச்சயம் வாசிக்க வேண்டும். ஒவ்வொன்றும் காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதப்பட்டிருக்கும்.

மொழி ஆளுமை எனும் போது தான் கண்ணாயிர பெருமாள் கதை தொகுப்பில் வரும் பதினாறாவது கதை நினைவிற்கு வருகிறது. குறிப்பிட்ட அந்த கதையினை சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. சாரு இந்நாவலில் ஒரு பத்தியெனில் அதில் குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு மேல் சில எண்களை இடுகிறார். எதற்கு என்று பார்த்தால் அவ்வெண்களுக்கு பின் குறிப்பாக சில பத்திகள் வருகிறது. நாவலின் வேகத்தில் அந்த குறிப்புகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தான் தோன்றும். இப்படியே பதினைந்து கதைகள் போன பிறகு ஒரு முறையாவது அந்தகுறிப்புகளை வாசித்துவிட்டு வாசிக்கலாம் என எண்ணினேன். அப்படி அதில் முதலாக வந்து குறிப்பு தான் - virdiana. அந்த குறிப்புக்கு பின் வாசிக்க ஆரம்பித்தால் அது நீண்ட பத்தியாக இருக்கிறது. அது ஒரு திரைப்படம். அதனை பற்றி நீண்ட கட்டுரை என்று கூட சொல்லலாம். ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் அந்த குறிப்பிட்ட பின் குறிப்பினை வாசிக்கும் போது அது முடிவிற்கு வந்தது. அப்போது தான் அந்த குறிபிலிருந்தே நாவல் தொடராதா என தோன்ற ஆரம்பித்தது. வேறு வழியின்றி நாவலுக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை அமைந்து விடுகிறது. இப்படியே மொத்தம் அதில் மட்டும் இருபத்தி ஒன்பது பின் குறிப்புகள். கதை பதினைந்து பக்கமும் பின் குறிப்புகள் இருபத்தைந்து பக்கமும் எடுத்து ஒரு குறு நாவலை போலவே அந்த குறிப்பிட்ட சிறுகதை காட்சியளித்தது.

இந்நாவலில் நீச்சல் காளி என குட்டி கதாபாத்திரம் இடம் பெறுகிறது. மொத்தமே இரண்டு பக்கங்கள் தான் இக்கதாபாத்திரத்தின் இருத்தல் அமையும். அப்படியிருக்கையில் ஏன் இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறேன் எனில் ஒரு நாவல் எனில் அது ஒரு உணர்வினை அடிப்படையாக வைத்து நகரும் என உணர்பவன் நான். இந்நாவலிலோ அனைத்து கதாபாத்திரங்களின் உணர்வும் சங்கமிக்கும் இடம் பெருமாளின் ஸ்கீஸோப்ரீனிக் உணர்வாக இருக்கிறது. நீச்சல் காளியின் பாத்திரம் எவ்வித பாதுகாப்பு வசதிகளின்றி தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீச்சல் அடிப்பவனாக அதுவும் விடாமல் நீச்சல் அடிப்பவனாக சித்தரிக்கப்படுகிறது. அப்படி அடிப்பவனுக்கு களைப்பு ஏற்பட்டாலும் நீச்சலினை நிறுத்த முடியாது. அப்படி நிறுத்தினால் மரணம். இதனை கேட்கும் பெருமாளின் மனது மரணத்திற்கும் காமத்திற்கும் இடையே இருக்கும் ழார் பத்தாயின் தத்துவார்த்த பிரச்சினைக்குள் சிக்கிவிடுகிறது. அது மரணம் - காமம் - மரணம் - ஜனனம் என்னும் சுழற்சி. ஆரம்பத்தினில் கூறியது போல் பித்த நிலையின் உச்சத்தில் எந்த பக்கத்தினை எடுத்தாலும் அதில் பெருமாளின் அந்த நிலைக்கு நம்மையும் கொண்டு சென்று ஒரு கட்டத்தில் பெருமாளுக்கு எந்த பெண்ணுமே கிடைக்காதா என நாமும் ஏங்க ஆரம்பிக்கிறோம். இது எழுத்தின் வெற்றி என்று கூட கூறலாம். வாசகன் அந்த கட்டத்தில் நாவலின் படைப்பில் பங்கேற்பாளன் ஆகிறான். Death of the author necessitates the birth of a reader.

இந்நாவலுக்குள் படைப்பாளியான சாரு நிவேதிதாவே கதாபாத்திரமாக இருக்கிறார். அப்போது வாசகி ஒருத்தி நாவல் சாதாரணமாக சென்று கொண்டிருக்கிறதே என கூறிவிட்டாள். இதற்கு முன் ஒன்று சொல்ல வேண்டும் அது பெருமாளுக்கும் ரங்கன் என்னும் பாத்திரத்துக்கும் குடி போதையில் சண்டை நடக்கிறது. அதில் பெருமாள் தன்னையே நிர்வாணமாக்குகிறான். இதனை ஆரம்பமாக வைத்து அவன் அந்த வாசகிக்கு விளக்குகிறான். அஃதாவது
“நிர்வாணமாக இருப்பது ஒரு ஸ்கீஸோப்ரினிக் நிலை. அந்த நிலைக்கும் அந்த நிலையிலேயே தங்கிவிடாமல் திரும்பவும் ஆடைகளை எடுத்து அணிந்து கொள்ளும் தருணத்திற்குமான இடைவெளி மிக நுட்பமானது. அப்படி முழுமையாக சிதைந்துவிடாமல் அவன் சிருஷ்டியின் பக்கம் வந்து விழுந்தது சாதாரண விஷயமா ?”
இந்த இடங்களிலும் ழார் பத்தாயின் சில தத்துவங்களை உதிர்க்கிறார். ஆரம்பத்தில் இந்நாவலின் கதையினை ஒற்றை வரியில் சொல்லும் போது பயந்தது போல் இப்போது பத்தாயினை சொல்லும் போதும் பயம் கொள்கிறேன். எங்கு இது சாருவின் நாவல் இல்லை முழுக்க மேல் நாட்டு சிந்தனைகளின் மறு வடிவம் என சொல்லிவிடுவார்களோ என. ழார் பத்தாயினை மட்டுமல்ல சில்வியா ப்ளாத், மிஷெல் வுல்பெக், ஆதவன், ப்யூகோயெவ்ஸ்கி, ஆரம்பத்தினில் எமினெம் என ஏகப்பட்டவர்களின் பித்த நிலையினை சொல்கிறார். இவையனைத்தினையும் எதற்கு குறிப்பிடுகிறார் எனில் அதுவும் நாவலிலேயே சொல்லப்பௌகிறது. இடையில் ஸோர்பா தி க்ரீக் என்னும் நாவலிலிருந்து ஒரு வரி வருகிறது - வாழ்க்கையினை கொண்டாட கொஞ்சமாவது பித்தநிலை நம்முள் வேண்டும் என்று.

நாவலில் வரும் பெருமாளாகட்டும் சாரு நிவேதிதாவாகட்டும் இலக்கியங்களிலேயே உழன்று உழன்று அதிலுள்ள தத்துவங்களில் சிக்கி எந்த வழியினில் சென்றால் கொண்டாட்டமான வாழ்க்கை என்னும் பசியினை அடக்க முடியும் என ராஸலீலா எனும் வெளியினில் தேடுகின்றனர். வாசகனாக அவர்களுடன் கொஞ்சம் பித்தனிலையினை வரவழைத்துக் கொண்டு நாமும் பயணிக்கிறோம்.

இப்பதிவில் அதிகம் கண்ணாயிர பெருமாளின் பகுதியினையே கூறியிருக்கிறேன். ராஸலீலாவில் மொழியின் ஆளுமை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு வரியும் சில வலிகளுடன் நம்மை வேறு ஏதோ தளத்திற்கு கொண்டு செல்லும் அளவு எழுதப்பட்டுள்ளது. இவையனைத்தும் ராஸலீலா எனக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகள். அவைகூட முழுதாக கூறினேனா என தெரியவில்லை. இது போன்ற உருக்கமான நாவலினை வேறு ஒருவரால் கற்பனை கூட செய்ய முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

அடுத்த மாதம் வேறு ஏதாவது . . .

Share this:

CONVERSATION