நோலனோமேனியா

சென்ற பதிவிலேயே நோலனை பற்றி சிறிதாக கூறியிருந்தேன். இப்போது எழுத வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அதற்கு காரணம் நேற்று இரவு பார்த்த கிறிஸ்டோபர் நோலனின் following என்னும் திரைப்படம்.

இவர் மொத்தம் எட்டு திரைப்படங்கள் எடுத்துள்ளார் - following, insomnia, memento, the prestige, the batman begins, the dark knight, the dark knight rises, inception. இவரை எனக்கு எப்படி தெரிய வந்தது எனில் the dark knight rises திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே கருந்தேள் கண்ணாயிரம் தன் இணையதளத்தில் பேட்மேனினை பற்றி வண்டி வண்டியாக எழுதினார். ஒவ்வொன்றும் அருமையாக இருந்தது. அப்போது தான் அந்தப் படத்தினை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் முந்தைய பாகங்களை பார்க்காமல் நேரே மூன்றாவது பாகத்தில் சென்று அமர்ந்தால் புரியுமா என்பதே எனக்கு கவலையாக இருந்தது. இருந்தும் நண்பனின் ஆசையில் சரி எனச் சென்றேன்.

அது செல்லும் வரை எனக்கு பிடித்த சாகச மனிதன் ஸ்பைடர் மேன் தான். அதுவும் சாம் ரெய்மி எடுத்த மூன்றும் எனக்கு பிடித்திருந்தது. பின் கதை கிடைக்காதலால் அவர் ஸ்பைடர் மேனை விட்டுவிட்டார். எனக்கு பிடித்ததற்கு காரணம் ஸ்பைடர் மேனுக்கு இரண்டே கூடுதல் விஷயங்கள் தான் இருந்தது. ஒன்று சிலந்தி வலை மற்றொன்று சுவற்றினை தொற்றி தொற்றி ஏறுவது. சரியாக பார்த்தால் அந்த மூன்று படங்களிலும் வரும் வில்லன்கள் ஸ்பைடர் மேனை கொல்லும் அளவு சக்தி வாய்ந்தவர்கள். ஆனாலும் நாயகன் தோற்காமல் வில்லன்களை முறியடிக்கிறார். எப்படி எனில் தன் சக்தியினை பயன்படுத்தும் நுட்பத்தினால் மட்டுமே. அதுவரை நான் பேட்மேனின் எந்த படத்தினையும் பார்த்ததில்லை. ஒன்று மட்டும் எனக்கு தெரிந்தது பேட்மேன் என்பவன் சாதாரண எந்த சக்திகளற்ற மனிதன் என்பது. இந்த கதாபாத்திரத்தின் சக்திகளெல்லாம் அறிவியலில் அடங்கியிருக்கிறது.

அது போன்ற நேரத்தில் தான் the dark knight rises பார்க்க நேர்ந்தது. அதில் கோதம் கோதம் என வில்லன் கூறும் போது நான் மடத்தனமாக கௌதம் என புரிந்து கொண்டிருந்தேன்! நல்லவேளை படத்தில் இடையிலேயே அது அந்நகரத்தின் பெயர் எனக் கூறிவிட்டனர். அந்த படத்தின் பாதிப்பு தான் என்னை நோலனின் படங்களை பார்க்க வேண்டும் என தோன்ற செய்தது. அப்படி என்ன பிடித்தது எனில் நோலனின் திரைக்கதை. எந்த ஒரு படமாகட்டும் அதன் வெற்றி பார்வையாளனை அது முடியும் வரை அமர வைப்பதிலேயே இருக்கிறது. வெறும் கதையினை வைத்து மட்டும் அமர வைக்க முடியுமா எனில் என்னை பொருத்த வரை நிச்சயம் இல்லை. திரைக்கதை தான் ஒரு படத்தின் முழு பலமும்.

இப்படம் எனக்கு கொஞ்சம் புரியவில்லை. ஏனெனில் அதில் முந்தைய பாகத்தின்(the dark knight) தொடர்ச்சி இருந்தது. முந்தைய பாகத்தினை பார்க்கும் போது தான் எனக்கு நோலன் மீது இன்னும் ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த படத்தில் இரண்டு கதைகளை அழகுற ஒன்றிணைத்திருப்பார். பார்க்கும் யாருக்கும் இரண்டு கதைகள் இருப்பது போலவே தெரியாது. கூர்ந்து கவனித்தால் அவரின் திரைக்கதை திறமை நன்கு தெரியும்.

அப்போது தான் இரண்டு ஆஸ்கரினை அள்ளிய inception படத்தினை பார்த்தேன். ஏற்கனவே இதனை பார்த்த என் நண்பர்கள் சுத்தமாக புரியவில்லை என்றனர். இந்த கூற்றுக்கு காரணமும் திரைக்கதை தான். கனவுகளுக்குள் கனவுகளுக்குள் கனவுகளுக்குள் இருப்பதினை மாற்றி மாற்றி காண்பித்து கொண்டிருந்தால் பார்வையாளன் என்ன செய்வான். இது நகைக்காக சொல்லலாம். ஆனால் நோலன் படம் முடியும் வரை நம்மை கவனித்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார். கடைசியில் முடிவினை நம்மிடமே விட்டு விடுகிறார். விளைவு படம் முடிந்தும் அதன் பாதிப்பிலேயே சிறிது நேரம் இருப்போம்.
கருந்தேளின் inception விமர்சனம் - க்ளிக் செய்து வாசிக்கவும்

நோலனின் இந்த படமாகட்டும் the prestige படமாகட்டும் கதையினை சொல்ல வேண்டுமெனில் ஒன்று அல்லது இரண்டு வரிகளில் கூறி முடித்துவிடலாம். அப்படியிருக்கையில் சிறிதும் நம்மை நம் இடத்தினை விட்டு நகர விடாமல் படம் நெடுக பார்க்க வைக்கும் திரைக்கதை திறமை ரசிக்கும் வண்ணமும் தமிழ் இயக்குனர்களை நினைக்கும் போது பொறாமைப்படவும் வைக்கிறது.


இது தான் நோலன் எடுத்த முதல் திரைப்படம். இப்படம் 1998 -இல் வெளியானது. படம் ஒரு மணி நேரம் தான். கதாபாத்திரங்கள் அதிகம் இல்லை, லொகேஷன் அதிகம் இல்லை, பட்ஜடும் அதிகம் இல்லை. படம் முழுக்க இருப்பது திகில் மட்டுமே.

எப்போதும் போலவே இங்கும் ஒரு வாக்கியத்தினை இட்டே ஆக வேண்டும். அது நோலனின் முதல் படத்தினை போலவே இல்லை. கடைசியாக வெளிவந்த நோலனின் படத்தில் எவ்வளவு திகிலினை உணர முடியுமோ அதே திகிலினை இப்படத்திலும் நன்கு உணரலாம்.

படத்தின் கதை என்னவெனில் பில் என்னும் இளைஞன் ஏழ்மையானவன். அவன் எழுத்தாளனாக நினைப்பவன். தன் எழுத்திற்காக மக்களை பின் தொடர்ந்து சென்று அவர்களின் நடவடிக்கைகள், செல்லும் இடங்கள் என அனைத்தினையும் கவனித்து தன் குறிப்புகளில் தட்டச்சு செய்து கொள்வான். அப்படி ஒருவனை தொடர்ந்து செல்கிறான். அவன் ஒரு திருடன். அப்படி தொடர்ந்து செல்லும் போது சந்தர்ப்பவசமாக அவனுடன் சேர்ந்து கொள்கிறான். அப்போது அவனுக்கு நடக்கும் சம்பவங்களே இந்த ஒரு மணி நேர படம். இதில் திகில் என்ன இருக்கிறது என்பது இந்நேரத்திற்கு உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம். அந்த திகிலுக்கான காரணங்களை நான் சொல்கிறேன்.

முழு படத்தினை பார்த்தால் மட்டுமே படத்தின் கதையினை புரிந்து கொள்ள முடியும். படம் மூன்று பேரினை சுற்றி நடக்கும் கதை. ஒன்று இளைஞன் பில். இரண்டு திருடன் காப். மூன்று ஒரு பெண் ப்ளாண்ட். ஆரம்பத்தில் இப்படத்தினை பார்க்க ஆரம்பித்த போது ஒன்றுமே என்க்கு விளங்கவில்லை. ஐந்து நிமிடம் சீராக சென்று கொண்டிருக்கிறது எனில் திடிரென திரை இருளாகி முந்தைய காட்சிக்கு சம்மந்தமே இல்லாத காட்சி ஒன்று ஓடும். இது எதற்கு என யோசிக்கும் நேரத்தில் சில இடங்களில் விடுபட்ட இடத்திற்கே நோலன் கொண்டு வருகிறார் அதே சில இடங்களில் வேறு புது காட்சியினை திணிக்கிறார். இவையெல்லாம் எதற்கு எதற்கு என யோசிப்பதற்குள் படம் முடிந்து விடுகிறது. அப்படி முடியும் போது பார்ப்பவர்களுக்கு கதை என்ன என்பது தெரியும் ஆனால் காட்சிகளின் அமைப்பினை பார்க்க தோன்றும். மொத்தத்தில் non-linear வகையறா திரைப்படம். இது போன்ற படங்களை யதேச்சையாக பார்த்திருக்கிறேன். பெயர் எதுவும் நினைவிற்கு வரமறுக்கிறது. ஆனால் அது போன்ற படங்களிலெல்லாம் அப்படிப்பட்ட ஓட்டம் பாதியிலேயே அறுபட்டு நேர்கோட்டு கதைகளாக செல்ல ஆரம்பித்துவிடும். அதே இந்த கதையில் திரைக்கதையானது கலைத்து போடப்பட்டு கடைசிவரை நம்மை சிந்திக்கவிட்டு கடைசியில் முடிவினையும் சொல்லாமல், சொல்லாமல் என்பது சரியா என தெரியவில்லை ஆனால் முடிவிற்கான இடத்தினை நெருங்கும் போது end card போடப்படுகிறது. மொத்தத்தில் கதை சொல்லல் முறை அற்புதமாக இருந்தது. இது போன்ற படங்கள் இது தான் எனக்கு முதல் முறை.

படத்தின் டிரைலர் - க்ளிக் செய்யவும்

இந்த படத்தின் ஒட்டு மொத்த பட்ஜட் 6000 டாலர்கள். படம் 16mm திரையில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளை திரைப்படம்.  16mm திரையெனில் அது பொதுவாக திரையிடப்படுவதற்காக எடுப்பது அல்ல. திரை அல்லாத கல்வி சார்ந்த விஷயங்களுக்கே இந்த திரையினை உபயோகப்படுத்துவார்கள். இந்த படத்தினை எடுத்து முடிக்க நோலனுக்கு ஒரு வருடம் ஆனது. அந்த ஒரு வருடத்தில் படம் எடுக்கப்பட்ட நாட்கள் வெறும் இருபத்தி இரண்டு நாட்களே. அவ்வப்போது சிறிது. ஏனெனில் நோலன் மற்றும் அதில் நடித்திருந்த அனைவரும் முழுநேர வேலைகளில் இருந்தவர்கள். அதனால் வாரம் முழுக்க வேலைக்கு சென்று சனிக்கிழமைகளில் மட்டும் படத்தினை எடுத்திருக்கின்றனர். மேலும் நடிகர்களுக்கான சம்பளத்தினையும் தன் சம்பாத்தியத்திலிருந்தே கொடுத்திருக்கிறார். தன்னிடம் பணம் இல்லாத போது படத்தினை ஒரு மாத காலமோ இரண்டு மாத காலமோ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் அந்த பிரதியினை தன் ஒரு வித ஆராய்ச்சி என்றே நோலன் சொல்கிறார். நோலன் அந்த திரைக்கதையின் non-linear நுட்பத்தினை பற்றி ஒரு பேட்டியில் - ‘முதலில் ஒரு காட்சியினை காண்பித்துவிட்டு பின் வேறு காலநேரத்தில் நிகழும் காட்சியினை காண்பிக்கிறேன். பார்வையாளனுக்கு மீண்டும் விடுபட்ட காட்சியின் தொடர்ச்சியினை காண்பிக்கும் போது அது முழுமையான தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. பார்வையாளனின் கவனமும் அவ்வளவு கூர்மையாக இருக்காது’ என்கிறார். இது உணமைதான். காட்சிகள் தொடர்ச்சிகளின்றி வெவ்வேறு காலநேரத்தில் நிகழ்வது நம்முன் தோன்றும் போது நாம் அதன் மையக்கருவினை மட்டுமே கொண்டு செல்வோம். ஆக அதன் சரியான தொடர்ச்சி வரவில்லை என்றாலும் நம் மனம் தனக்குள் கொண்டிருக்கும் மையக்கருவினை வைத்து தொடர்ச்சியினை போல் கட்டமைத்துக் கொள்ளும். மேலும் படத்தில் காண்பிக்கப்படும் இடம் முழுக்க நண்பர்களின் வீடும் நோலன் பெற்றோர்களின் வீடும் தான்.

உலகின் ultra low பட்ஜட் படங்கள் வரிசையில் இப்படம் இருக்கிறது. இருந்தும் இப்படம் நல்ல திகிலினை ஊட்டக்கூடியது. கறுப்பு வெள்ளை படமாச்சே என நிராகரிக்காதீர்கள் இப்போது இருக்கும் கலர் குப்பைகளில் இல்லாத கதை சொல்லல் முறை இதில் இருக்கிறது. அலாதியான அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.

Share this:

CONVERSATION