மரணத்தின் விலை

12/09/2012 - சூலூர்
மஞ்சுலா என்னும் இருபத்தி இரண்டு வயது பெண்மணி என்ன காரணம் என தெரியவில்லை மாட்டு சாணத்தினை கலந்து தன் மூன்று வயது குழந்தையினை கணவன் வேலைக்கு சென்றிருக்கும் போது கொடுத்து தானும் உண்டிருக்கிறாள். குழந்தை இறந்தது தாய் மருத்துவமனையில் . . .

17/09/2012 - குனியமுத்தூர்
ஜான் கென்னடி என்னும் பெயிண்ட் அடிப்பவன் அந்த பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறான். அவனின் அண்ணன் இஸ்ராவெல் சரியான குடிபோதையில் எப்போதும் இருப்பவன். அவன் சினிமாவில் வருவதை போல பணம் கேட்டு மிரட்டியிருக்கிறான். அன்று அதே போல் கேட்டதற்கு கைகலப்பாகி தம்பி ஜானை கொன்றுவிட்டான்.

21/09/2012 - பொள்ளாச்சி
மாருதி வண்டியினை ஓட்டி சென்றவன் போனில் பேசிக் கொண்டே சென்றிருக்கிறான். அப்போதென பார்த்து சாலையினை கடந்த ஒரு பெண்மணி மற்றும் அவளின் மூன்று குழந்தைகள் அந்த இடத்திலேயே இறந்தது.

23/09/2012 - வடவள்ளி
அஸீம் என்பவன் தன் தோழியாக இருந்த சுருதியின் மீது காதல் கொண்டிருக்கிறான். அதனால் சின்ன சண்டை ஏதோ நடந்திருக்கிறது. அப்போது அவள் வீட்டிற்கு சென்று சண்டை பெரிதாகி அவளை கொன்று தீவைத்துவிட்டான். காப்பாற்ற வந்த அவள் அம்மா லதா மேனனையும் அடித்திருக்கிறான். அவள் மருத்துவமனையில். அவனும் தன் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டான். இது பற்றி ஒவ்வொரு புது கதைகள் முளைத்து கொண்டே இருக்கிறது.

இன்னும் சில விஷயங்கள் தேதியின்றி கோயமுத்தூரில் நடந்தது எதுவெனில் மதுக்கரையில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது. ஆனால் காரணம் தெரியவில்லை. இராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் தமிழ் மீடியத்திலிருந்து வந்தவன். அவனுக்கு ஆங்கிலம் புரியவில்லை என விடுதியில் தற்கொலை செய்து கொண்டான்.

இதற்கெல்லாம் நான் எந்த களப்பணியும் மேற்கொள்ளவில்லை. என் அறையில் தினமும் the times of india செய்தித் தாளினை பார்ப்பேன். மேலோட்டமாக மேயும் போது இந்த தலைப்பு செய்திகளை மட்டும் பார்த்தேன். ஆனால் இன்று என் கல்லூரியிலேயே ஒருவன் தற்கொலை செய்திருக்கிறான். இதுவரை எனக்கு காரணம் தெரியவில்லை. அதுவும் விடுதியில் வசிப்பவன். எங்கள் விடுதியில் இரண்டு கல்லூரியின் மாணவர்கள் வசிக்கிறார்கள். ஒரு சாரார் அருகில் இருக்கும் கல்லூரியில் படிப்பவர்கள்(nehru institute of technology). மற்றொரு சாரார் கொஞ்சம் தள்ளி இருக்கும் கல்லூரியில் படிப்பவர்கள்(nehru institute of engineering and technology). இந்த இரண்டாம் கல்லூரியில் படிப்பவன் முதல் கல்லூரியின் லேபில் தற்கொலை செய்திருக்கிறான். அவனின் விஷயத்தினை அரசல் புரசலாக பேச எனக்கு சமீபத்திய சஞ்சிகைகளில் இப்படி பார்த்த செய்திகள் நினைவிற்கு வந்தது. அதனால் அதனை தேடி எடுத்து வாசித்தேன். அதன் குட்டி குட்டி சாராம்சமே மேலே கொடுக்கப்பட்டது. மேலும் விஷயம் என்னவெனில் the times of indiaவில் வாரத்தில் ஐந்து முறையாவது மூன்றாவது பக்கத்தில் இது போன்ற வதை செய்திகள் வந்து விடுகிறது. இது வெறும் கோயமுத்தூரில் மட்டுமே. இப்படியிருக்கையில் இன்னமும் ஜனத்தொகை குறையவில்லையே எனக் கேட்காதீர்கள். இவ்வதைகளை என் பார்வையில் சற்று பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

எதற்காக வதைகள் அரங்கேறுகிறது ? இக்கேள்விக்கான ஒரே விடை மன உளைச்சல். இதனை வாசிக்கும் அனைவருக்கும் சத்யம் கம்பேனியின் ரெஸஷென் ஞாபகம் வரும் என நினைக்கிறேன். அதன் போது எத்தனையோ இளைஞர்கள் தற்கொலையில் இறந்தார்கள். அதற்கான மூலக் காரணம் வேறு ஒன்றும் இல்லை. நாற்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த அவனால் பத்தாயிரம் ரூபாய் வாழ்க்கையினை வாழ முடியவில்லை. இப்போது உங்களுக்கு தோன்றலாம் இது எல்லாம் ஒரு பிரச்சினையா ? என்று. உண்மைதான். இதே போன்று தான் மேலே சொன்ன அனைத்து சம்பவங்களுக்கான பிண்ணனியும். தீர்க்கக் கூடிய விஷயங்களாகவே அனைத்தும் இருக்கும் போது ஏன் அனைத்து பிரச்சினைகளுகான தீர்வு தற்கொலை என முடிவினை எடுக்கிறார்கள் ?

இப்படி தற்கொலைகளை பார்க்கும் போதும் செய்தித் தாள்களில் வாசிக்கும் போதும் சிலர் பச்சாதாபமும் சிலர் அவனுக்கு என்ன பிரச்சினையோ இப்ப அவன் நிம்மதியா போய் சேர்ந்துட்டான் என்பர். இந்த இரண்டாம் கட்ட மனிதர்களின் மீது தான் என் அனைத்து வெறுப்பும். இவர்கள் சொல்லும் நிம்மதியினை நாடி தான் நிறைய தற்கொலையின் பிண்ணனி அமைகிறது. அவர்கள் கூற்றின் படி தற்கொலையின் மூலமாகத் தான் பிரச்சினைகளிலிருந்து விடுபெற்று நிம்மதியினை அடைய முடியுமெனில் இந்திய அரசாங்கத்தினை நடத்திக் கொண்டிருக்கும் அனைவரும் தொங்கியிருக்க வேண்டுமே!

இதற்கு மற்றொரு பக்கம் பார்ப்போம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் தொடர் வாசகராக இருந்தால் அவர்கள் தங்களின் கட்டுரைகளில் தங்களின் இலக்கியங்கள் புதினங்கள் விற்பனையாகவில்லை என புலம்பி தள்ளுவார்கள். அப்படி விற்பனையாகியிருந்தால் என்ன ஆகியிருக்கும் ? அதில் வரும் கதாபாத்திரங்களை போல மாற முயற்சி செய்வார்கள். அவர்களின் வசனங்களை பேசிப்பார்பார்கள். அதிலிருந்து தனக்கு தேவையான விஷயங்களை எடுத்துக் கொள்ளப் பார்ப்பார்கள். அப்படி பார்க்கையில் புத்தகக் கடைகளில் அதீதமாக விற்பது சுயமுன்னேற்ற நூல்கள் மட்டுமே. அத்தனை சுயமுன்னேற்ற நூல்களிலும் என்ன இருக்குமெனில் ஜென்மத தத்துவங்கள், அதனை கதையின் மூலமாக விளக்குவது, வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கான வழிகள் இத்யாதி இத்யாதி. அப்படியே அவர்களின் கேள்வி என்ன என பார்த்தால் நிம்மதியாக வாழ்வது எப்படி என்பதே. எனக்கு புரியாமல் இருக்கும் விஷயம் என்னவெனில் நிறைய மாணவர்கள் சுயமுன்னேற்ற நூல்களையே வாசிக்கின்றனர். அது ஏன் என்று தான் தெரியவில்லை. சரி இப்போது நிம்மதியாக வாழ்வது எப்படி என்னும் கேள்விக்கு மக்கள் மேற்கொள்ளும் வழிகள் என்ன எனில் கார்பரேட் சாமியார்கள். அவர்களிடம் தான் தினம் தினம் அதீத அதீதமாக மக்கள் குழுமுகிறார்கள். தங்களின் நிம்மதிக்காக அவனின் சுத்தமான சந்தன பாதணிகள் அணிந்த பாதங்களை கழுவுகிறார்கள். அதுவும் இலவசமாக அல்ல. பணம் கொடுத்து. அதற்கு வேறு ஏதாவதை கழுவினால் கூட சுத்தம் செய்தத்தற்கு சமமாக இருந்திருக்கும். (சரசம் சல்லாபம் சாமியார் - சாரு நிவேதிதா வினை வாசித்து பாருங்கள் நுகர்வோர் கலாச்சாரத்தின் சாமியாட்டம் நன்கு தெரியும்). நான் அனந்தர்களை மட்டும் குறிப்பிடவில்லை. சாய்பாபா ஆகட்டும் காஞ்சி மடாதிபதி ஆகட்டும் சிருங்கேரி ஆச்சார்யார் ஆகட்டும் எல்லாரையும் எதிர்க்கிறேன். இதில் எனக்கு யாரிடம் அனுபவம் எனில் சிருங்கேரி ஆச்சார்யார். வேண்டா வெறுப்பாக மூன்று முறை சென்றுவிட்டேன். என் வீட்டில் அதீத பக்தி. அவர்களை தடுக்கும் சக்தியும் மனதை மாற்றும் யுக்தியும் என்னிடம் இல்லை. மனம் கொண்டால் முடியும் ஆனால் அவர்களின் நம்பிக்கையினை களைக்க வேண்டாம் என்ற எண்ணமே. அவர்கள் செய்யும் அந்த பாத பூஜை மற்றும் ஆச்சார்யாரின் பின் போவது போன்றது தான் எனக்கு பிடிக்கவில்லை. அவர்களிடம் உள்ள திறமையினை அஃதாவது புராணங்களின் ஸ்லோகங்கள் மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளிலிருந்து புழங்கிக் கொண்டிருக்கும் தத்துவங்களை வைத்து பணம் பண்ணுகிறார்கள். இதனால் நிம்மதி கிடைக்கிறது என்று அவர்கள் தான் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். அது என்னவெனில் நமக்கு ஒரு விஷயம் பிடித்திருக்கிறது. அதில் அதீத கவனம் செலுத்துகிறோம். புரியவில்லை என்றாலும் அதன் மேல் நாட்டம் செல்கிறது. அப்போது நமது இருத்தலை நமது வாழ்வினை உணர்கிறோம். அப்போது அவர்களின் வார்த்தை நாம் நிம்மதியாக இருக்கிறோம் என்பதே. நிம்மதி நமக்குள்ளேயே தான் இருக்கிறது. அப்படியிருக்கையில் அது இல்லை என்னும் எண்ணம் நமக்குள் தோன்றும் போது அதற்கு என்றுமே தற்கொலை தீர்வாகாது.

இப்போது இக்கட்டுரையினை ஏன் எழுதுகிறேன் எனக் கூறுகிறேன். அதற்கு என்னை பற்றி ஒன்றினை சொல்ல வேண்டும். எனக்கு கொலை, இரத்தம், டார்ச்சர் செய்வது, கதற கதற கொலை செய்யும் திரைப்படங்கள் முதலியன ரொம்ப பிடிக்கும். என்னை பார்த்து நீ மனித இனத்திலேயே சேர்க்கப்படமாட்டாய் என என் தோழிகள் அடிக்கடி கூறுவர். என்ன செய்ய எனது விருப்பங்கள் அதில் இருக்கிறது. இப்போது விஷயத்திற்கு வருவோம் என் தோழி ஒருத்தி என்னிடம் நான் என் நண்பனுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது இந்த மரணத்திற்கு எங்காவது வருத்தப்படுகிறாயா எனக் கோபம் கொண்டாள். தற்கொலையே தாயினை கூட்டி கொடுப்பதற்கு சமமான வேலை என நினைப்பவன் நான். இதில் ஒரு தற்கொலைக்கு நான் வருத்தப்படுவேனா. . .? இது ஒரு புறம் இருக்க மதியம் விடுமுறை எனக் கூறினர். அப்போது எனக்குள் சந்தோஷமே வந்தது. அந்த நேரம் பார்த்து என்னுடன் படிப்பவன் உனக்கு மரணத்தை பற்றி என்ன தெரியும் எனக் கேட்டான். பதில் சொல்லாமல் வந்துவிட்டேன். அந்த மனநிலையில் தான் இதனை எழுத நினைத்தேன். நமது சமூகத்தில் மரணத்தின் விலை தள்ளுபடியிலேயே சென்று கொண்டிருக்கிறது. தினம் ஒரு பிணம் என மரணத்திற்கு வாடிக்கையாளர்கள் ஆகிக் கொண்டிருக்கிறோம். அடுத்த நாளை பற்றி நினைக்காதே அது நீ கடக்கும் சாலையில் உன்னை கடக்கும் லாரியில் கூட எழுதப்பட்டிருக்கலாம்.

அந்த ஒருவனுக்கான பதில் கண்ணதாசனின் வரிகளே
“இறப்பு என்றால் யாதெனக் கேட்டேன்
 இறந்து பார் அது தெரியும் என்றான்”

பின் குறிப்பு :  சிருங்கேரியில் எனக்கு பிடித்த விஷயம் அன்னதானம். தினம் இடுகிறார்கள். அதிலும் பிடிக்காத விஷயம் என்னவெனில் பிராமணருக்கு தனி அபிராமணர்களுக்கு தனி. . . பெரியார் தமிழ்நாடோடு சரி என நினைக்கிறேன். இதோடு நிறுத்திக் கொள்கிறேன் அப்பறம் கெட்ட வார்த்தைகள் எழுத வேண்டி வரும். . . நீங்களும் என்னை வாசிக்க மாட்டீர்கள்.

Share this:

CONVERSATION