ஆதவன் காட்டும் பிம்பங்கள்

குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே, ப.சிங்காரத்தின் எழுத்துகளை பற்றி எனது கருத்துகளை சென்ற சில பதிவுகளில் இட்டிருந்தேன். இப்பதிவில் சொல்லப்போகும் நூல் - காகித மலர்கள். மேலே சொன்ன நூல்களை விட எளிமையான தமிழில் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு இலக்கியமே இது.

சமூகம் என்னும் பிணைப்பில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அது சில நேரங்களில் நிர்பந்தமாக மாறும் போதும் நம் தெரிவின் அடிப்படையில் அமைவதால் மாற்றமுடியாமல் அப்படியே இருந்துவிடுகிறோம். எத்தனையோ கேள்விகள் நம்முள் சிறுவயது முதல் எழுந்திருக்க வாய்ப்புண்டு ஏன் நம்மை பெற்றவரை அம்மா அப்பா என அழைக்கவேண்டும் - அது பரவாயில்லை பெற்றதன் மரியாதையில் வைத்துக் கொள்வோம் ஆனால் ஏன் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அங்கிள் ஆண்ட்டி என்றழைக்க வேண்டும், ஏன் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது, அப்படி அழைத்தால் அவர்களின் மட்டு மரியாதை உண்மையில் குறைந்துவிடுமோ, வெளியே செல்லும் போது எதற்கு மேக்கப் போட வேண்டும், அப்படி போடவில்லையென்றால் வேலை தடைப்படுமோ என அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பலாம். தங்களுக்கும் எழும்பியிருக்கும். அப்படி இதனை எதிர்த்து செய்தால் என்ன ஆகும் என பார்த்தால் அசிங்கமான வார்த்தைகள், வளர்க்க தெரியாமல் வளர்த்துவிட்டனர், மீறி சென்றால் வீட்டில் அடி. சமூகத்தில் இதற்கு பெயரும் வைத்துள்ளனர் அஃதாவது மாற்று கலாச்சாரத்தினை புகுத்துபவன்! இவர்கள் கலாச்சாரம் என்னும் வார்த்தையினுள் எதனை திணித்து வைத்துள்ளனர் என்பதையே நம்மால் எத்தனை ஆண்டுகள் ஆயினும் புரிந்து கொள்ள முடியாது. நம்மை வளர்ப்பவர்கள் கூட வீட்டிற்குள் தாங்கள் கூறும் வார்த்தைகள் முழுவதையும் ஆதரித்தாலும் என்றாவது வெளியில் செல்லும் போது ‘வீட்ல பேசுனா மாதிரி அங்க பேசிடாத’ என்பர். இதற்கு எதற்கு அந்த வீடிலடங்கும் கருத்து சுதந்திரம் ? இப்படி எத்தனையோ கேள்விக் குறிகளால் சிக்கிக் கொண்டு எதற்கும் பதில் தெரியாமல் ஊருடன் கூடிவாழ் என சகட்டு மேனிக்கு கும்பலுடன் கும்பலாக கோவிந்தா போட்டு வாழ ஆரம்பித்து விடுகிறோம். இதனை தான் ஆதவன் சொல்லும் mob psychology ஆக பார்க்கிறேன். இது சரியா தவறா என்னும் வாக்கு வாதத்திற்கு நான் வர விரும்பவில்லை. சொல்ல வருவது ரொம்ப சாதாரண விஷயம் - நாம் நமது சுதந்திரத்தினை நம்மாலேயே இழந்து கொண்டு அடுத்தவர்களின் கருத்துக்கிணங்க வாழ்ந்து வருகிறோம்.

இதற்கும் நாவலுக்கும் என்ன சம்மந்தம் எனில் இதனை அடிப்படையாக வைத்தே நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
இந்நாவலினை வாசிக்கும் போது அதீத கதாபாத்திரங்கள் நுழைவது போலவே தோன்றியது. அவை அனைத்தும் ஆதவன் எழுப்பிய ஒருவகை மாயை தான். ஒட்டு மொத்த நாவலும் ஒரு குடும்ப அமைப்பின் அனைத்து வேஷங்களை பொருத்தே அமைகிறது.

இப்பதிவுதளத்தில் தாஸ்தாயெவ்ஸ்கியினை பற்றி எழுதியிருக்கிறேன். அதில் அவர் மனொதத்துவத்தினை எழுத்தில் செய்ய முயற்சித்தவர் என கூறியிருந்தேன். தமிழில் ஆதவனை கூறலாம் என்பது என் கருத்து. இந்நாவலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களை காட்டிலும் அவர்களின் மனம் பேசும் வார்த்தைகள், அல்லது வெளியே சொல்லப்பட முடியாத சிறைபட்டு கிடக்கும் வார்த்தைகள் தான் வாசகனுக்கு அதிகம் கிடைக்கிறது. அதன் மூலம் அவர்களை போல் தான் நாமும் சில நேரங்களிலோ பல நேரங்களிலோ சிக்கி இருக்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆதவன் எடுத்திருக்கும் குடும்ப அமைப்பு பசுபதி என்னும் பெயரில் மிஸஸ் பசுபதி அவர்களின் மூன்று பிள்ளைகள் - செல்லப்பா, பத்ரி, விஷ்வம். பசுபதியின் மனைவி நாடகத்தில் நடிப்பவள். செல்லப்பா மற்றும் பத்ரி மாணவர்கள். விஷ்வம் ஈகாலஜியில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி. அவன் நாவலின் பல பக்கங்களில் தாவரங்களுடன் தன் படிப்புடன் மனிதனின் வாழ்க்கையினை இணைத்து பார்க்கிறான்.

குடும்ப அமைப்பு எனும் போது அதில் கதைகள் சம்பவங்களாக தினம் தினம் நடந்து கொண்டிருக்கும். அதனை கோர்வை செய்வது சற்று கடினமானது தான். அதே தான் இந்நாவலிலும். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பிண்ணனியில் ஒரு குறிக்கோளுடனான கதை செல்கிறது. கதையில் அனைவரும் சமூகத்துடன் ஒன்றுவதற்காக வெவ்வேறு உடைகளை தரிக்கிறார்கள்.

விஷ்வம் கல்லூரியில் காதலித்து மணந்து கொண்ட பெண் பத்மினி. அவள் நவ நாகரிக பெண்ணாகவே வலம் வருகிறாள். இவர்கள் இருவரின் காதல் தனிக்கதையாக நாவலில் செல்கிறது. எப்படியெனில் இவளுடைய நவநாகரிக நடவடிக்கை ஆரம்பத்தில் பழகியிருந்தாலும் சமூகம் என்று பார்க்கும் போது அதனை மாற்ற மனதினில் விருப்பம் கொண்டவனாக விஷ்வம். அவளுக்குள் பார்த்தால் சமூக அந்தஸ்தினை பெறவே அந்த நவ நாகரிக நடவடிக்கைகள்! அவளை விட தன் மவுசு அதிகமாக வேண்டும் என போட்டியிடும் மாமியார்! கதாபாத்திரங்களிலேயே குழப்பமான மனநிலை பாதிக்கபட்டவன் போல வலம் வருவது விஷ்வம். ஆரம்பத்தில் சாதாரண பாத்திரமாக வந்து உணர்ச்சிகளுக்குள் சிக்கி கடைசிவரை அப்படியே முற்றிய நிலையிலேயே நடமாடுகிறது. அதுவும் முக்கியமாக நாவலின் கடைசிக்கருகில். பத்மினியின் முற்போக்குத் தனமும் இவனின் ஆணாதிக்கமும் இவனுக்குள் மோதிக் கொண்டிருக்கும் போது பத்மினி நம்மை வீட்டு தூரத்தில் இருக்கிறாளோ அதற்கு நாமும் நாம் செய்யும் தீஸிஸ் தான் காரணமோ அப்படியெனில் எப்படி இருந்தால் இந்நிலை மாறும் என மீண்டும் மீண்டும் பொய்யான உடைகளை தேடியே அவன் மனம் செல்கிறது. ஆதவன் விஷ்வத்தினை ஆரம்பத்திலிருந்து சராசரியிலிருந்து வேறுபட்டு வாழ நினைக்கும் கொள்கையுடையவனாகவே சித்தரிக்கிறார். விஷ்வத்தின் இந்த குணமும் அவனின் தீஸிஸினை நடைமுறையோடு இணைக்கும் பகுதிகளும் அருமையாக இருந்தது. உதாரணம் சொல்ல வேண்டுமெனில் அவன் குளிக்க செல்லும் போது அக்குளியலறையில் அவளின் உள்ளாடை ஒன்று அங்கிருக்கிறது. அதில் செண்டின் மணம் வருகிறது. அப்போது அவன் சொல்லும் விஷயம் ‘ஆணும் பெண்ணும் தம்முடைய இயற்கையான நாற்றங்களை ரசிக்க தொடங்கினால் காஸ்மெடிக் இன்டஸ்ட்ரியே தவிடுபொடியாகிவிடும்’. புதிய புதிய பிம்பங்களை தேடி தேடி அலையும் பாத்திரத்தினை செதுக்கியது மட்டுமில்லாமல் வாசகனின் இருத்தல் பிம்பமா உண்மையா என்னும் புதிரினையும் ஆதவன் விட்டு செல்கிறார்.

செல்லப்பா. இக்கதாபாத்திரத்தினை கூறும் முன் ஒரு விஷயத்தினை சொல்ல வேண்டும். ஏற்காட்டிற்கு சாரு நிவேதிதா வாசக வட்டத்திற்கு சென்ற போது அங்கு ஒருவர் என்னை பார்த்து சாருவின் எந்த நாவல் பிடிக்கும் என கேட்டார். நான் எக்ஸைல் மற்றும் ஸீரோ டிகிரி என்றேன். அங்கு வந்த முக்கால் வாசி பேர் ராஸ் லீலா என்றனர். நானும் அதனை வாசித்திருக்கிறேன். அது ஒரு 700 பக்க நாவல். எனக்கு அது அத்தனை பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. அப்போது ஒருவர் என்னிடம் கூறினார் இதே நாவலினை சிறிது காலம் கழித்து வாசித்துபார் அப்போது அதன் தாக்கம் உன்னிடமும் வரும் என்று. அந்நாவல்களை பற்றியெல்லாம் எழுதுவேன். அதற்குள் என் மறுவாசிப்பும் நிகழும். அது ஏன் அந்த சில ஆண்டுகளுக்கு பிறகு புரியும் எனில் கதையின் பாத்திரம் தான். இந்நாவலினை எடுத்துக் கொண்டால் எனக்கு பிடித்தது செல்லப்பா பாத்திரம். அவன் என் வயதினை என் குணாதிசியத்தின் சின்ன சாயலோடு தெரிகிறான். இதே நாவலினை ஒரு ஆண்டிற்கு முன் வாசித்திருந்தால் நிச்சயம் குப்பை என்றிருப்பேன். காரணம் அப்போதைக்கும் இப்போதைக்கும் என் புரிதலும் பார்வையும் மாறுபட்டிருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல. இவ்வார்த்தைகளும் இந்நாவலுக்கு மட்டுமல்ல. எதாயினும் ஏதாவதொரு காலத்தில் அதற்கான தாக்கம் வாசகனுக்கு நிச்சயம் இருக்கும். செல்லப்பா பாத்திரம் சாதாரணமாக  நாம் ஏன் பரிட்சையில் தேர்வாகவேண்டும் என கேட்பதை அவன் ஒரு பெரிய போராட்டமாக தனக்குள் ஏற்படுத்துகிறான். அப்படி தேர்வாகி சமூகத்துடன் இணைவதால் தனக்கு என்ன பயன் என்பதே அவன் கேள்வியாக இருக்கிறது. சமூகத்துடன் ஒன்றுவதன் மூலமாக தன் தனிமனித சுதந்திரத்தினை இழப்பது போல அவனுக்குள் ஒரு பிம்பம் எழுப்பப்படுகிறது.

பத்ரி  செயல் நாயகன். புரட்சி செய்ய வேண்டும் என நாவல் முழுக்க துடித்துக் கொண்டிருப்பவன். காத்திரமாக பாத்திரம் வடிவமைக்கபட்டிருந்தாலும் என்னுள் தன் தீவிரத்தினை காட்ட மறுத்துவிட்டது. இவன் மாணவர்களிடையே இருக்கும் சில பிரிவுகளுக்கு விரோதியாக இருக்கிறான். அப்படி இருப்பது சரியா தவறா என்ற வாதங்கள் வரும் போது ஒரு அமைப்பினை எதிர்க்கும் போது அவன் அந்த அமைப்பிற்குள்ளேயே தான் இருக்கிறான் என்னும் வாக்கியம்வருகிறது. இந்த அதிகார ஆளுமையினை தான் தாஸ்தாயெவ்ஸ்கி தன்னுடைய poor folk என்னும் நாவலில் யாரோ ஒருவர் நம்மீது அதிகாரத்தினை திணிக்கிறார்கள். நமக்கும் அதிகாரத்தினை திணிக்க கீழே மனிதர்கள் காத்திருக்கிறார்கள். இந்த முறை இல்லையெனில் சமூகமே சரியாக செல்லாது என்னும் வாக்கியம் தான் நினைவுக்கு வந்தது. இந்த இடங்களில் மட்டுமல்ல ஒட்டு மொத்த நாவலில் நிறைய இடங்களில் அவரின் எழுத்துகளை ஒத்த எழுத்தும் நடையினையுமே காண முடிந்தது.

நாவலின் இடையிடையில் ஏகப்பட்ட பாத்திரங்கள் வந்து செல்கிறது. அதில் பேருந்து நடத்துனராக வரும் ராம் ப்ரஷாத் என்னும் பாத்திரம் சீக்கிரம் முடிந்தது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ராமினை பொருத்தவரை அவனின் அந்த பேருந்து தான் அவனின் அதிகாரம் பலிக்கும் கோட்டை. சீட்டினை கொடுக்கும் போது மிரட்டலாம் கெட்ட வார்த்தைகளில் திட்டலாம் கோபம் அதிகம் என்றால் இறக்கிவிடலாம் என்று பல அதிகாரங்களை அவன் தன் கையினில் தன் கோட்டைக்குள் வைத்திருக்கிறான். அப்படி அவன் செய்யும் போது அவனுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. இரு வேறு உலகத்தில் வாழும் மனிதனை போல தான் ராம் கண் முன் தெரிகிறான். அதில் ஒன்று அவனுடைய ராஜ்ஜியம். மேலும் தாரா என்னும் எழுத்தாளன் ஒருத்தியின் எழுத்து வசீகரத்துடன் நாவலின் இடையில் வரும்

நிறைய சின்ன சின்ன கதாபாத்திரங்கள் தோன்றினாலும் அவை அந்த குறிப்பிட்ட குடும்ப அங்கத்தினருடன் சேர்ந்துவிடுகிறது. மீண்டும் பழைய கதைக்குள் இக்கதையினை விட முடியாமல் சென்று விடுகிறோம்.

நாவல் முடிவினை நான் விரும்பவே இல்லை. நாவல் ஆரம்பித்து நூறு பக்கங்களை தாண்டி சென்ற போதிலும் நாவல் ஆரம்பிக்காதது போல் தான் தோன்றியது. அப்படியிருந்த போது சலிப்பு எந்த பக்கத்திலும் ஏற்படவில்லை. நாவலின் கடைசியில் அனைத்து நபர்களுக்கு நடக்கும் சம்பவங்கள் பிய்க்கப்பட்டு தொகுக்கப்பட்டது போல் வரும். அப்படியே சர சர வென நாவல் முடிந்து விடும். அதுவரை எத்தனையோ அழகியல் தன்மையுடன் சென்று கொண்டிருந்த நாவல் அவசர குடுக்கையினை போல் முடிக்கப்பட்டது எனக்கு வருத்தத்தினை தான் தந்தது. நாவல் முழுக்க கதாபாத்திரங்களை காட்டிலும் அவை எழுப்பும் பிம்பங்களின் தாக்கம் நம்முள் கேள்விகளை எழுப்பும் வண்ணம் இருக்கிறது.

நாவல் டெல்லியினை கண்முன் கொண்டுவருகிறது. இதில் காண்பித்த டெல்லி இப்போது மாறியிருக்கலாம். மொத்தத்தில் நாவல் ஆரம்பத்தில் சொன்னது போல் எளிய நடையில் அருமையான இலக்கியம்.

Share this:

CONVERSATION