சிங்கார ரசம் (2)

கடலுக்கு அப்பால் நாவலினை சிறந்த படைப்பு எனக் கூறியிருந்தேன். அது சிறந்த படைப்பு எனில் இது ஆகச் சிறந்த படைப்பு. கடலுக்கு அப்பால் நாவலில் கூட ஒரு வாசகனால் முழுதாக அதனுள் நுழைய முடியாது. ஆனால் இந்நாவலில் அது முழுமையாக நிறைவு பெறும். அதற்கும் பெரிதும் துணையாக நிற்பது மொழி மட்டுமே.

அந்நாவலினை போல் இது நீண்டதொரு கதையினை கொண்டிருக்கவில்லை. இதில் நாயகனின் பெயர் பாண்டியன். அவன் பினாங் துறைமுகம் சென்று அங்கு பினாங்கில் ஏதாவது வியாபாரம் செய்துகொள்ளலாம் என்றிருக்கிறான். இந்நாவலும் நடுவில் பாதையினை மாற்றுகிறது. இனியதொரு பயணமாக செல்லும் நாவல் திடிரென துப்பறியும் கதைப்பக்கங்களாக மாற்றுகிறது. போஸுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று எப்படியோ காணாமல் போய்விட்டது அதனை கண்டுபிடிக்க வேண்டும் என பாண்டியன் அவ்வேளையில் இறங்குகிறான். அவ்வேளையில் சிலரை கொலை செய்ய நேருகிறது. இப்படி சம்பவங்களும் பயணமும் இணைந்து நாவலினை நிறைவு செய்கிறது.

இவை மட்டும் தான் நாவலினை முடிக்கிறதா எனில் இல்லை. கடைசிவரை தத்தளித்து கொண்டே இருக்கும் உணர்வுகள். அவை வாசகனான என்னுள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் அந்த உணர்வுகள் நம்மை பாண்டியனாக மாற்றுகிறது.

தானா லாப்பாங் என்னுமிடத்தில் கொள்ளை அடிக்கடி நடைபெறும் அதனால் அக்கொள்ளையர்களை பிடித்து அவர்கள் தலையினை வெட்டி அதனை தெருவில் ரத்தம் சொட்ட வைத்து கொள்ளையர்களை எச்சரிக்கின்றனர். அப்போது அது உண்மையில் கொள்ளையர்களுடையதா என பாண்டியன் நினைக்கிறான். இதனை காண்பதற்கு முன் அவன் அந்த கொள்ளைகளையும் பார்க்கிறான். பின் அவன் மனம் ‘கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு!’ என்கிறது. அது யாரை குறிப்பிடுகிறது எனபது கேள்விக்குரியது.

நாவலில் முக்கால்வாசி இடங்களில் தமிழ் இலக்கிய பேச்சுகள் தென்படுகிறது. அவர்களுக்கிடையில் ஏற்படும் வாதமாக அது செய்யப்பட்டிருக்கிறது. அப்படி நடக்கப்படும் விவாதத்தில் தமிழர்களின் அரும்பெரும் வீரத்தினை தில்லைமுத்து என்பவன் கூறுகிறான். அதற்கு பாண்டியனோ - “காளையார்கோயில் வேங்கைமார்பனை பாண்டியன் வென்றதில் பெருமை என்ன இருக்கிறது ? இருவரும் தமிழர்கள். ஓர் அரசன் சின்னஞ்சிறு கிராமத் தலைவனை வீழ்த்தி அவனுடைய சொத்து சுதந்திரங்களை பறித்துக் கொண்டான். அதில் என்ன பெருமை இருக்கிறது. டில்லிப் பட்டாணியர் தமிழகத்தில் புகுந்து சூறையாடியபோது இலக்கிய புகழ்பெற்ற தமிழ் வீரர்கள் எங்கெங்கே எதிர்த்து போராடினார்கள் ? எத்தனை பேர் உயிர்ப்பலி கொடுத்து போராடினார்கள் ?” இது போல் இன்னும் நிறைய நாவலின் போக்கில் காணமுடிகிறது. இந்த விவாதமோ பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல் இருக்கிறது இந்த தமிழ் வீர ஆராய்ச்சி என்னும் சொல்லாடலுடன் முடிகிறது. இங்கு இலக்கிய போராட்டங்களெல்லாம் ஆட்சியும் மெரினா கடற்கரையும் என ஓய்ந்துவிடுவதால் இது போன்ற காத்திரங்கள் எடுபடாது.

பட்டினத்தார். இவருடைய காலம் எனக்கு சரியாக தெரியாது. ஆனால் அவர் இப்போதிருந்தால் என்ன நடக்கும் என்பதை மட்டும் என்னால் யோசிக்க முடிகிறது. ஆணாதிக்கவாதி, வீட்டினை முற்றுகையிடும் பெண்ணியவாதிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் செருப்படிகள் சே சே அதை விட்டுவிடுவோம். இக்கதையில் பட்டினத்தாரை நினைத்துக் கொண்டு செல்லும் நாயகனின் கண்முன் தோன்றுகிறார். அந்த களத்தினை தனதாக்கிக் கொண்டு பட்டினத்தாருடன் அவர் செய்யும் பகடிப் போர் அலாதியான ஒரு அனுபவம்.

ஒரு இடத்தில் அவன் ஏதோ படிக்கட்டில் ஏறி சென்று கொண்டிருக்கிறான். அப்போது அவன் ஒரு அறையினை பார்க்கிறான். அங்கு விபச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது பாண்டியன் சொல்கிறான் - எந்த தொழில் படுத்தாலும் இந்த தொழில் மட்டும் படுக்கவே படுக்காது. மனிதன் தோன்றியதிலிருந்தே தோன்றிய ஒரே தொழில் எனக் கூறுகிறான்.

பினாங் நகருக்கு கப்பலில் செல்லும் போது அவனின் நினைவுகள் மதுரை மற்றும் சின்னமங்கலத்திற்கு செல்கிறது. அந்த பகுதிகளில் அந்த இரண்டு ஊர்களையும் அப்படியே நம்மும் காட்டுகிறார். அந்த ஊர்கள் எழுதப்பட்ட ஆண்டிலிருக்கும் நிலைமையா எனத் தெரியவில்லை. ஆனால் மாறுபட்ட ஒரு அனுபவத்தினை அழகாக அவ்வூர்கள் நமக்கு ஏற்படுத்தும். அவ்விரண்டு ஊர்கள் மட்டுமல்ல பினாங் நகரம் மற்றும் அந்த கதைகளத்தில் அவன் செல்லும் இடமெங்கும் இருக்கும் ஊர்களை பற்றிய விவரங்கள் மீள முடியாத அனுபவத்தினை அளிக்கிறது.

இவையனைத்தும் மொழியினால் மட்டுமே சாதிக்கப்பட்ட ஒன்று. முந்தய பதிவிலேயே மொழி ஆளுமை எனக் கூறியிருந்தேன். அது இந்நாவலில் அற்புதமாக தனக்கான இடத்தினை பெற்றுள்ளது. ஜப்பானில் பேசப்படும் வார்த்தைகளுடன் சாதாரண தமிழில் சிங்காரம் வழிநடத்தி செல்கிறார். அப்போது பாத்திரங்கள் பேச வேண்டும் பொழுது அவர்களின் மொழி திருநெல்வேலி பகுதிகளில் பேசப்படும் வகை. அதில் சில வார்த்தைகள் அந்த ஜப்பானில் கொள்ளப்பட்ட வார்த்தைகள். இடையிடையில் எட்டிப்பார்க்கும் பட்டினத்தார் ராமாயணம் சிலப்பதிகாரம் என தங்குதடையற்ற மொழியின் வேகத்தால் நாவலினை அந்த மொழியினால் மட்டுமே வாசிக்கப்படுகிறோம் என்ற நிலையினை நமக்கு ஏற்படுத்துகிறது.

இந்நாவலினை பற்றிய முக்கியமான விஷயம் எதுவெனில் கடலுக்கு அப்பால் என்னும் நாவலுக்கு முன் இந்நாவல் வந்திருக்க வேண்டும். நாவலின் களமே அதற்கு காரணம். கடலுக்கு அப்பால் நாவலில் சந்திர போஸ் இறந்துவிடுகிறார். இந்நாவலிலோ அவர் உயிருடன் இருக்கிறார். அவர் சிறிது நேரமே வருவதால் இந்த பாதிப்பு அவ்வளவாக இருக்காது. ஆனால் செல்லையா மற்றும் மாணிக்கத்தின் கதாபாத்திரம் இந்நாவலிலும் வருவதால் வாசிக்கும் போது நம் மனம் கடலுக்கு அப்பால் நாவலுக்கு செல்கிறது. நேரடியாக சொல்ல வேண்டுமெனில் கடலுக்கு அப்பால் நாவலினை முழுதும் மறந்தால் மட்டுமே இந்நாவலின் முழு இன்பத்தினை நம்மால் உட்கொள்ள முடியும். அப்படி நினைவில் இருந்தால் கூட சிங்காரத்தின் மொழிநடை அந்த குறிப்பிட்ட பக்கங்களை தவிர மற்ற பக்கங்களில் மீண்டும் நம்மை நாவலுக்குள் இழுத்துவிடுகிறார்.

என் பதிவுதளத்தில் ரசம் இத்துடன் தீர்ந்துவிட்டது.

Share this:

CONVERSATION