Poor Folk

மீண்டும் தாஸ்தாயெவ்ஸ்கியினை என் பதிவுலகிற்குள் கொண்டு வர வேண்டிய நிலையில் இருக்கிறேன். இது ஒரு வகை அடிக்‌ஷன் என்றும் கூறலாம். சாருவின் அடிமையாய் இருந்த நாட்களில் எனது தமிழ் ஆசிரியை என்னிடம் ஒரே எழுத்தாளருக்கு வாசகனாக இருப்பதில் இலக்கியத்தினை அறிய முடியாது என்று அடிக்கடி கூறினார். நானோ மாறவேயில்லை. ஆனால் சாருவின் எழுத்துகளை வாசிக்கும் போது தான் மற்ற இலக்கியங்களை வாசிக்க வேண்டிய அவசியத்தினை உணர்ந்தேன். எனக்கோ அவரைத் தவிர எந்த எழுத்தாளனும் தெரியாது. அவரின் எழுத்துகளின் மூலமே பல இலக்கியவாதிகளினை அறிந்து கொண்டேன் என சென்ற தாஸ்தாயெவ்ஸ்கியின் பதிவிலேயே சொல்லியிருந்தேன். அப்படி பலரின் பெயர்களை அறிந்தாலும் குறிப்பிட்ட இந்த எழுத்தாளரான தாஸ்தாயெவ்ஸ்கி முதல் வாசிப்பிலேயே என்னை ஈர்த்துவிட்டார். அதன் பின் இவரின் எழுத்துகளை தேடி வாசிக்க முடிவு செய்தேன். அப்படி வாசித்த ஒரு நாவல் தான் poor folk.

இந்நாவல் தாஸ்தாயெவ்ஸ்கியின் முதல் நாவல். எழுதப்பட்ட ஆண்டு 1846. அவரின் வயதோ 23-24. இந்த விஷயங்கள் வீக்கிபீடியாவிலேயே கிடைக்கிறது. ஆனால் நாவலின் வாசிப்பு எத்தகைய உணர்வினை அளித்தது என கூறியே ஆக வேண்டும். அதற்கு பெரும் காரணமாக இருப்பது அவரின் எழுத்தில் இருக்கும் வசீகரத் தன்மை. இந்நாவலினை வாசித்து முடிக்கும் வரை இதனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவல் என ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அப்படி இந்த நாவலில் எழுத்து நடையில் புதிய முயற்சி என்ன இருக்கிறது ? அதில் அப்படி என்ன வசீகரம் இருக்கிறது ? எனில் ஒட்டு மொத்த நாவலும் கடித பரிமாற்றங்களிலேயே செல்கிறது. மகார் அலெக்சிவிட்ச் என்ற நாயகனுக்கும் அவனது தோழியான பார்பரா என்னும் நாயகிக்கும் நடக்கும் கடித மரிமாற்றமே அந்த கடிதங்கள். அதில் மகார் தனிமை விரும்பி மற்றும் எழுத்தாளன். முக்கியமான விஷயம் என்னவெனில் இந்நாவலினை தமிழ் எழுத்தாளர்கள் வாசித்தார்களெனில் வயிறெரிந்தே சாவ்ர். காரணம் கதையில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுபவர்களாகவும் அதீதமாக பணம் ஈட்டுபவர்களகாகவும் வரும்.

கடித பரிமாற்றங்களில் நாவல் நகர்ந்தாலும் அந்த கதை மாந்தர்கள் அருகருகினில் உள்ள வீட்டில் இருப்பவர்களே. இருந்தும் நாயகனுக்கு தனிமை தான் மிக பிடித்த விஷயம். அவனுக்கு மனிதர்களுடன் பேசுவது பிடிக்குமெனில் அது பார்பரா மட்டுமே. மேலும் அவன் குடியிருக்கும் அதே இடத்தில் கோர்ஷ்கோவ் என்று ஒரு கதாபாத்திரமும் அவனின் குடும்பமும் இருக்கிறது. அந்த பாத்திரம் கதை முடியும் வரை மௌனத்தினை மட்டுமே சுமந்து வருகிறது.

மகார் தினம் தினம் கடிதத்தின் மூலம் அவனின் கடந்த காலம், தற்போது அவன் சந்திக்கும் விசித்திரமான அனுபவங்கள், அவளுக்காக போன்போன்ஸ், உடுத்த உடை, இல்லையெனில் கொஞ்சம் பணம் என அனுப்பிக் கொண்டிருந்தான். அவளும் தன் கடந்த காலத்தினை கூறிய வண்ணமே கடிதங்களை பகிர்கிறாள். அது கொஞ்சம் நீட்டமாக வருகிறது. அதில் பெண்ணான அவள் அனுபவிக்கும் பலவித அதிகார ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிறாள். அவளின் அப்பா இறந்த பிறகு அவளுக்கு ஆதரவு கிடைக்கிறது. காலப்போக்கில் தான் அது அவள் மீது திணிக்கப்படும் அதிகாரம் என உணர்கிறாள். அதிலிருந்து வெளிவர அவளுக்கு, அவளிடம் எந்த சிந்தனையும் இல்லை. காரணம் அத்தனை நாள் இருந்ததற்கு அவள் கடன் பட்டுவிட்டாள். அதனை அடைக்க தான் ஏதாவது வேலைக்கு செல்லலாம் எனும் போது மகார் செல்லவேண்டாம் நான் உனக்கு எப்போதும் போல் பணம் அனுப்புகிறேன் என்கிறான். அவளும் சரி என ஒத்துக் கொள்கிறாள். பின் தான் அவளுக்கே தெரியவருகிறது அவன் ஏழ்மையில் தவிக்கிறான் என்று.  அவனுக்கே எதுவும் இல்லாத போது  நமக்கு ஏன் இவ்வளவு செய்கிறான் என சிந்திக்கிறாள். உண்மையினை அறிந்தபின் அவன் தன் கடந்த கால கறுப்பு பக்கங்களை கூறுகிறான்.

கதையின் ஓட்டத்தில் குறிப்பாக பார்பராவின் கடந்த கால வாழ்க்கையின் இலக்கியத்தின் பக்கங்கள் கொஞ்சம் நிறைந்திருக்கிறது. அஃதாவது அவளுடைய வீட்டில் தனியாக தங்கியிருந்த ஒருவனின் மூலமாக அவள் இலக்கியங்களை அறிய முயல்கிறாள். பின் கதை நிகழும் காலத்திலும் மகார் சில புத்தகங்களை கொடுத்து வாசிக்க சொல்கிறான். அந்த புத்தகங்கள் கூட சில பொருள்களை விற்றோ அல்லது கடன் வாங்கிய பணத்திலோ வாங்கப்பட்டது. கதையினில் இதனை வாசிக்கும் இடமெங்கும் பணமும் ஏழ்மையும் எப்படி முரணாக அதிகாரத்தின் குறியீடாக இருந்தது என்பதை காணமுடிகிறது.

Greatest social virtue might be considered to be an ability to get money to spend என மகார் ஒரு இடத்தில் சொல்கிறான். அதற்கான காரணம் அவன் பல வேளைகளில் தன் உணவினை இழக்கிறான். இதில் இப்போது பார்பராவிற்கு பணம் வேண்டும் என யோசிக்கத் தொடங்கும் போது தான் ஏன் பிரதிகளை பிரதியெடுக்கும் வேலைக்கு செல்லக் கூடாது என முடிவெடுக்கிறான் அஃதாவது copyist. பார்பராவுக்கு பிடிக்கவில்லை இருந்தும் செல்கிறான். அந்த இடத்தில் அவன் பார்பராவிடம் கேட்கிறான் -If everyone were to become fine writer who could there be left to act as copyist ?

அவர்கள் தரும் பிரதியினை  அவன் நகல் செய்கிறான். அதில் முக்கியமான ஒரு வரியினை தற்செயலாக விட்டு விடுகிறான். அதனை கண்டுபிடித்தவுடன் தனக்கு பணம் கிடைக்காதோ என அச்சம் கொள்கிறான். ஆனால் அவர்களோ நூறு பௌண்டினை கொடுத்து மீண்டும் சீக்கிரமாக செய்து தருமாறு கூறுகின்றனர். அந்த நூறினை பெற்ற சந்தோஷத்தினில் தன் வீட்டின் வாடகை, பார்பராவிற்கு, தன் ஆடைகலளுக்கு, இதர செலவுகளுக்கு என பிரிக்கிறான். பார்பராவும் சந்தோஷம் அடைகிறாள்.

அவளை அந்த அதிகார கூட்டிலிருந்து விடுபட வைக்க விகோவ் என்னும் கதாபாத்திரம் முன்வருகிறது. அவளுடைய வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து அவனையே பார்பராவுக்கு மணம் செய்ய முடிவு செய்கின்றனர். அப்போது மகாரிடம் கருத்தினை கேட்கும் போது அவனும் மணம் செய்துகொள் என கூறுகிறான். அவளின் திருமணத்திற்கான சில வேலைகளை இவன் கவனிக்கிறான்.

இப்போது கொஞ்ச நேரம் பிரதிக்குள் பிரதியான கோர்ஷ்கோவ் கதாபாத்திரத்தினை பார்த்துவிட்டு மேலே விட்டதை தொடருவோம். கோர்ஷ்கோவுக்கும் கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் போலவே அதிகாரத்தின் பிடியில் பாதிக்கப்பட்டவனாக வருகிறான். யாரோ செய்த சூழ்ச்சியில் இவன் பணத்திருடன் என பெயர் பெற்று உண்ண உணவின்றி தவிக்கும் ஒரு அபலை. இதில் அவனுடைய ஒரு குழந்தை இறந்து விடுகிறது. அதற்காக சவப்பெட்டி வாங்க  கதாநாயகனிடம் பணம் கேட்கிறான். அவன் அப்போது தன் கையினில் கொண்ட அனைத்து பணத்தினையும் கொடுத்து விடுகிறான். கதையின் கடைசியில் அரசாங்கம் கோர்ஷ்கோவ் நிரபராதி எனக் கூறுகிறது. பல நாட்களுக்கு பிறகு சந்தோஷத்தினை அனுபவிக்கிறான். அனைத்து வீடுகளுக்கும் சென்று தன் சந்தோஷத்தினை அங்குள்ளவர்களிடம் கேலி பகடி என பகிர்ந்து கொள்கிறான். அனைத்து இடங்களும் சுற்றிய பிறகு வீட்டிற்கு வந்து உறங்குகிறான். ஆனால் அதுவே அவனின் ஆழ்ந்த உறக்கமாக மாறிவிடுகிறது.

இதனை இப்பதிவில் ஏன் இடைச்செருகலாக கூறுகிறேன் எனில் இது போல் பல அதிகார சிக்கல்களை அறிந்து கொள்ளும் கதாநாயகன் கதையின் நடுவில் பார்பராவிற்கு கடிதத்தில் கூறுகிறான் - All the world is built upon the system that each one of us shall have to yield precedence to some other one, as well as to enjoy a certain power of abusing his fellows. Without such a provision the world could not get on at all, and simple choas would ensue. அதிகாரம் கட்டமைத்தலின் ஆரம்பத்திலேயே இருக்கிறது. அதன்படி கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஏதோ ஒருவித அதிகாரத்தின் பிடியில் தவிக்கிறார்கள்.

இது வரை என்னுடன் பயணித்து வந்த வாசகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. சாதாரணமாக எழுதப்பட்டு வந்த கடிதபோக்குவரத்தினையே இதுவரை கூறியிருந்தேன். ஆனால் இதற்கு அடுத்தே நாவலின் முடிவு வருகிறது. நாவலின் முடிவினை கூறினால் வாசகனுக்கு வாசிப்பின் சுகம் இருக்காது என்பது பலரின் கருத்தாக இருக்கும். என்னால் இதன் கடைசி கடிதத்தினை கூறாமல் இருக்க முடியாது. பார்பரா விகோவிற்கும் அவளுக்கும் திருமணம் நடப்பதற்கு ஒரு தினம் முன்பு தன் கடைசி கடிதம் என ஒன்றினை உருகி எழுதியிருப்பாள். அதனை வாசித்தவுடன் மகார் எழுதும் கடிதம் ஒரு வித கதறல் என்று தான் கூற வேண்டும். அவளை போகாதே என்னுடனேயே இருந்துவிடு இது கடைசி கடிதமெனில் இனி நாம் பேச முடியாதா என்றெல்லாம் கடிதம் பல ரம்யமான வார்த்தைகளால் கண்ணீரினை வரவைக்கும் அளவிற்கு செல்லும். ஆனால் அதனோடே நாவல் முடிந்துவிடுகிறது. வாசகன் நிச்சயமாக அந்த கடிதத்தினை வாசித்துவிட்டு பார்பரா இதற்கு பதிலெழுத மாட்டாளா ? தாம் இக்கதையின் எழுத்தாளனாக மாறி இதனை, இதன் முடிவினை மாற்றி ஆமைக்க முடியாதா ? என யோசித்து கொண்டிருப்பான். கண்டிப்பாக வாசித்து பாருங்கள் ஒவ்வொரு பக்கங்களிலும் உணர்ச்சி ததும்பிக் கொண்டே இருக்கும்.

எத்தனை கதாபாத்திரங்கள் வந்தாலும் ஏழ்மை, பசி, பணம், தனிமை, அன்பு, கடிதம், மகார், பார்பரா தான் வாசகனின் மனதில் கதையினை கடைசிவரை எடுத்து செல்லப்படும் கருவியாக இருக்கிறது. துன்பவியலில் கூட இவ்வளவு அழகியலினை சேர்க்க முடியுமா என நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

Share this:

CONVERSATION