Crime and Punishment

மீள முடியாத உளவியல் பிரச்சினையில் சிக்கியிருக்கிறேன். வீட்டிலோ கல்லூரியிலோ ஏதாவது பிரச்சினையா எனில் எனது பிரச்சினையே உளவியலில் தான் அடங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்த எனது வாசிப்பிற்கும் இப்போது எனக்கு இருக்கும் வாசிப்பிற்கும் நிறைய மாறுதல்கள் இருப்பதை உணர்கிறேன். ஆரம்பத்தில் ஏதாவது புத்தகம் வாங்க கடைக்கு சென்றால் புத்தகத்தின் அட்டைப்படம் மற்றும் அதன் வசீகரத்தினை வைத்து தேர்வு செய்வேன். அப்படி ஒரு கட்டத்தில் இருந்த நான் எப்படியோ சாரு நிவேதிதாவின் தொடர் வாசிப்பில் என்னையே சிறைபடுத்திக் கொண்டேன். மீளத் தெரியவில்லை. அப்போது தான் உலக இலக்கியங்களை வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது. காரணம் அவரின் எழுத்துகளில் நிறைய உலக இலக்கியவாதிகளின் நடமாட்டம் இருந்தது. அந்த உலகத்தினை நானும் கொஞ்சம் அருகாமைக்கு செல்ல நினைத்தேன்.

ஆரம்பத்தில் ஓரான் பாமுக், வி.எஸ்.நைப்பால், பாவ்லோ கோய்லோ என ஒவ்வொருவரிடமும் ஒரு நாவல் வீதம் வாசிக்க ஆரம்பித்தேன். நான் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வந்தவனே இருந்தும் என்னால் முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிலும் ஆங்கிலம் என்பதால் இலக்கியங்களில் சொல்லப்படும் ‘பிரதி தரும் இன்பம்’ என்னும் கோட்பாட்டினை என்னால் உணரவே முடியவில்லை.

வாசிக்க வேண்டும் என்னும் ஆசையிலும் ஒரு கிளை ஆசை இருந்தது. சாருவின் ஆதர்சம் எனில் சார்த்தர், பூக்கோ, தாஸ்தாயெவ்ஸ்கி, கஸான்சாகிஸ் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்களை எப்படியாவது வாசிக்க வேண்டும் என ஆசை கொண்டேன். அதில் நான் முதலில் படித்தது தாஸ்தாயெவ்ஸ்கியை.

தாஸ்தாயெவ்ஸ்கியினை சாருவின் எழுத்துகளிலும் எஸ்.ராமகிருஷ்ணனின் தொகுப்பு ஒன்றிலும் வாசித்திருக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒட்டு மொத்த உலகத்தினையே தத்துவங்கள் ஆட்டிப் படைத்தது. அதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ருஷ்யர்கள். மார்க்க்ஸீயம், எக்ஸிஸ்டன்ஷியலிசம் என தத்துவங்கள் சார்த்தர், பூக்கோ போன்ற மேதைகளை கொண்டு போட்டி போட்டுக் கொண்டு இருந்தது. அதில் எக்ஸிஸ்டன்ஷியலிசம் என்னும் தனிமனிதத்துவத்தின் பக்கம் தான் தாஸ்தாயெவ்ஸ்கி.

தனிமனிதத்துவம் என்றால் என்ன ? மனிதனின் அனைத்து தெரிவுகளும் அம்மனிதனின் சுய தேர்வினை சார்ந்தே அமைகிறது என்பது தான் அந்த தத்துவம். இதன் பின்னோட்டத்தில் தான் தன் நாவல்களை எழுதியுள்ளார். அதிகாரத்தினை உடைத்தல் என்பதும் இதில் அடங்கும். காரணம் தெரிவுகள் மனிதனின் சுய தேர்வினை சார்ந்தே அமையும் போது அவன் சமூக கோட்பாடுகளிடமிருந்து விடுதலை அடைகிறான். இதனை தான் குற்றமும் தண்டனையும் என்னும் நாவலின் பிரதான பாத்திரத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.
நாவலுக்குள் செல்வதற்கு முன் இதனையும் என்னையும் சுற்றி நடந்த சில விஷயங்களை நான் சொல்ல கடமை பட்டிருக்கிறேன். ஏற்காட்டில் சாரு நிவேதிதா வாசகர் வட்ட சந்திப்பிற்கு சென்றிருந்த போது என் நண்பர் கண்ணாயிரம் என்னிடம் என்னென்ன ஆங்கில நாவல்களை வாசித்திருக்கிறாய் எனக் கேட்டார். நானும் கூறி பின் குற்றமும் தண்டனையும் நாவலினை வாங்கி வைத்திருக்கிறேன் என்றேன். அவரோ அது சற்று இழுக்கும் என்றார். வீட்டிற்கு வந்தவுடன் அப்புத்தகத்தின் அளவினை பார்த்தேன். 522 பக்கங்கள்! பணத்தினை வீணடித்து விட்டோமோ என்றும் தோன்றியது. புத்தகத்தின் பின்னட்டையினை வாசித்தேன். அப்போது தான் சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் வந்தது. அஃதாவது அவர் தன் புனைவுகளில் மனோதத்துவத்தினை, உளவியலை எழுதுபவர் என்று. ஆரம்பிக்கும் வரை கண்ணாயிரத்தின் வார்த்தைகள் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.

இத்தனைக்கும் நாவல் வாங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது தான் வாசிக்க ஆரம்பித்தேன். மூன்றே நாட்கள் தான் எடுத்துக் கொண்டது.

திகில் நாவல்களை இரண்டு வகையாக பிரிக்க நினைக்கிறேன். ஒன்று கொலைகாரன் யாரென்றே தெரியாமல் முடிச்சு மேல் முடிச்சுகளை போட்டுக் கொண்டு சென்று கடைசியில் யாரென அம்பலப்படுத்துவது. இரண்டாவது ஆரம்ப கட்டத்திலேயே வாசகனுக்கு கொலைகாரனை காட்டிவிட்டு அவனை பிடிப்பதில் திகிலினை மூட்டுவது. இந்நாவல் இரண்டாவது ரகம்.

What is a crime ? எனக் கேள்வியினை எழுப்பினால் கொலை, கற்பழிப்பு என நீண்டு கொண்டே அது தான் குற்றம் என முடிப்போம். ஆனால் அவை அனைத்தும் குற்றம் என்பதன் அடியில் இருப்பவையே தவிர குற்றம் என்பதன் விளக்கம் அல்ல. ஆனால் இந்த எழுத்தாளர் தன் கதாபாத்திரத்தின் பதிலாக Crime is a protest against abnormality of social organization - சமூக அமைப்பின் ஒழுங்கின்மையினை எதிர்ப்பதற்கான ஒரே போராட்டம் குற்றம் என்கிறார். இப்போது நாவலுக்குள் செல்லலாம்.

கதையின் பிரதான பாத்திரம் ரஸ்கோல்நிகோவ். அவன் சட்டம் படிக்கும் மாணவன். உடல் நிலை சரியில்லாததால் தன் படிப்பினை தொடர முடியாத நிலையில் இருப்பவன். தன்னிடம் உள்ள பொருள்களை அடகு வைத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். எப்போதாவது அம்மா அனுப்பும் பணமும் தேவைகளுக்குள் சரியாகிறது. அடகு வைக்கும் ஐவனோவிட்ச் மற்றும் அவளின் தங்கை லிசாவேதாவினை கொள்கிறான். இதுவே கதை என ஒற்றை வரியினில் முடிக்கலாம். ஆனால் ஒவ்வொரு பக்கங்களிலும் கட்டவிழ்க்கப்படும் நுண்ணரசியல் பத்தொன்பதாம் நூற்றாண்டினை கண்முன் நிறுத்துகிறது.

முதலில் கதாநாயகனுக்கு அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. அம்மாவிடமிருந்து அவனுக்கு நீண்ட கடிதம் ஒன்று வருகிறது. அதில் தன் தங்கை டௌனியாவிற்கு பெட்ரோவிட்ச் என்பவருடன் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளேன் என்றும் அதற்கு பின் இருந்த குடும்ப சிக்கலினையும் எழுதியிருந்தார். டௌனியா வேலை பார்த்த வீட்டில் அவளுக்கும் கணவருக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என மனைவி உணர எங்கும் வேலை கிடைக்காதபடி செய்து விடுகிறாள்(கதையில் கொஞ்சம் குழப்பிய பக்கங்கள் இது தான்). அப்போது பெட்ரோவிட்ச் குடும்பத்தினை காப்பாற்றுகிறான். அதனை சூசகமாக மணம் என முடிவு செய்துவிட்டாள் அம்மா. அனைத்தினையும் கூறி பின் குடும்பத்தின் பொருளாதாரத்தினையும் உன்னையும் மனத்தில் கொண்டு தான் இம்முடிவினை எடுத்தேன், உன்னை கேட்காமல் செய்கிறேனே என வருத்தம் கொள்ள வேண்டாம் என ஆறுதலும் கூறியிருந்தார்.

ஒரு விதத்தில் இந்த ரஸ்கோல்நிகோவ் என்னும் கதாபாத்திரத்தினை சைக்கோ என்றும் கொள்ளலாம். கதை நெடுக அக்கதாபாத்திரம் நிலையற்ற தன்மையினையே கொண்டிருக்கிறது. நஸ்தேஸ்யா என்னும் கதாபாத்திரம் உணவு கொடுத்தால் உண்பது இல்லையென்றால் பட்டினி கிடப்பது நினைத்த போது வெளியில் சுற்றுவது என இப்படியே பாத்திரம் நகர்கிறது. அப்படி செல்கையில் இளைஞர்களின் பேச்சு இவனுக்கு கேட்கிறது. அதில் ருஷ்யாவில் அப்போதிருந்த பொருளாதார வீழ்ச்சி இது போன்ற அடகு கடைக்காரர்களை கொல்ல வேண்டும் என்றும் அந்தப் பணம் எத்தனையோ பேர்களை காப்பாற்றும் என்றும் கேட்கிறது. காரணம் அவர்கள் பொருளுக்கு விலை கம்மியாக கொடுக்கிறார்கள் என்பதே பலரின் குற்றச் சாட்டு. இவனுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை கோடரியினை தேட ஆரம்பித்தான்

அப்போது அவன் தனக்குள் சில கேள்விகளை கேட்டுக் கொண்டான். ஏன் கொலைகள நடக்கும் போது கொடூரமாகவும் கண்டுபிடிக்கும் போது சுலபமாகவும் அமைகிறது ? ஏன் கொலையாளிகள் தடயத்தினை விட்டு செல்கிறார்கள் ? தடயங்களின்றி கொலை செய்ய முடியாதா ? அவனுக்குள்ளேயே ஒரு பதிலும் தோன்றுகிறது. ஒருவன் தடயங்களின் துணைகொண்டே மாட்டினாலும் அவன் முழுமையாக தன்னை சிக்க வைத்துக் கொள்வது தன் சுய மனத்தினால் மட்டுமே. ஒவ்வொரு குற்றவாளிக்கும் தேவை பகுத்த்றிவும் நம்பிக்கையும். அவ்விரண்டினையும் இழக்கும் போது அதன் இன்மை அவனுள் ஒரு வியாதியாக உருவெடுக்கிறது. இவ்வியாதி ஒருவனை குற்றவாளியாக்குகிறதா அல்ல குற்றங்கள் இவ்வியாதியினை தருகிறதா என்னும் முரணான கேள்வி ஒவ்வொரு குற்றவாளியிடமும் ஒப்புவிக்கப்படுகிறது. அவனுடைய தெரிவினை பொறுத்தே தடயமின்றி குற்றங்கள் நிகழ்வதற்கான முடிவு இருக்கிறது.

கதையிலும் இரண்டு பேரினை கொல்கிறான். ஐவனோவிட்சின் கொலை முடிவு செய்தும் லிசாவேதாவின் கொலை தற்செயலாகவும் நடக்கிறது. பின் பெரிய போராட்டங்களுக்கு பிறகு வீடு திரும்புகிறான். என்னைப் பொறுத்தவரை இங்கு தான் நாவலே தொடங்குகிறது. தடயங்கள் அனைத்தினையும் அழித்து விடுகிறான். இரத்த கரை படிந்த சாக்ஸ், பேண்ட் என அனைத்தும் சரி செய்யப் படுகிறது. எடுத்த பணத்தினையும் எங்கோ கல்லின் அடியில் புதைத்து வைக்கிறான். இது எதற்கு எனில் உடனே செலவு செய்கிறான் எனில் எப்படி பணம் வந்தது என சந்தேகம் எழக்கூடும் அதே மூன்று வருடத்திற்கு பிறகு செலவு செய்கிறான் எனில் சந்தேகமே வராது அல்லவா. அதே தான் அவன் எண்ணமும். தடயங்கள் இன்றி அவன் செய்த கொலைகளை எண்ணி சந்தோஷம் அடைகிறான். விசாரணை தொடர்கிறது.

வீட்டு வாடகை பிரச்சினையில் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறான். அங்கு அந்த கொலை பற்றிய பேச்சுவார்த்தை அல்லது விவாதம் நடக்கிறது. அதில் கதாநாயகன் எழுதிய கட்டுரையே பிரதானமாகிறது. அதில் மனிதர்கள் இருவகையாக பிரிக்கப்படுகிறார்கள். ஒன்று சாமான்யர்கள் மற்றொன்று அசாதாரண மனிதர்கள். சாமான்யர்கள் அதிகாரத்தினால் கட்டுபடுத்தப் படுகிறார்கள். அசாதாரண மனிதர்கள் சுயகட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். முதல் ரகம் அதே இனத்தினை அதே குணத்துடன் வம்சவிருத்தி செய்கின்றனர். மற்றொரு ரகமோ புதிய உலகினை படைக்கிறது அவ்வுலகம் புரட்சியினை செய்கிறது. அதிகாரத்தினை உடைத்தெறிக்கிறது. இதனை கதையின் ஓட்டத்தில் ரஸ்கோல்நிகோவே சொல்கிறான். அவனும் இரண்டாம் ரகத்தில் சேர்ந்து கொள்கிறான்.

இக்கதையின் முக்கால்வாசி இடங்கள் தனக்கு தானே பேசுவது போல் தான் அமைகிறது. மேலும் தாஸ்தாயெவ்ஸ்கியின் காலகட்டத்தில் தத்துவ போராட்டங்கள் அதிகமாக இருந்தது என கூறியிருந்தேன் அல்லவா அது இது போன்ற தனக்கு தானே பேசும் இடங்களில் அழகுற வெளிவந்திருக்கிறது. ரஸ்கோல்நிகோவ் தன்னை கொலைகாரன் என உணரும் போதெல்லாம் நான் ஒண்ணும் கிழவியினை கொல்லவில்லை ஒரு கொள்கையினையே கொன்றிருக்கிறேன் என்கிறான். அவன் நண்பன் சோஷலிஸத்தினை ஆதரிப்பவன். அவனையும் தனக்குள்ளேயே சித்தரித்துக் கொண்டு எனக்கு இருப்பது ஒரு வாழ்க்கை அதனை எதற்காக உன் சோஷலிசத்தினை போல் அடுத்தவன் சந்தோஷத்திற்காக காத்திருக்க வேண்டும்  ? வாழ்ந்தால் எனக்காக வாழ்கிறேன் அல்லது வாழவே தேவையில்லை என்கிறான். ஏற்கனவே கூறியிருப்பது போல் இது தனிமனிதத்துவத்தினை சார்ந்ததே. எப்படியெனில் மக்களை பொறுத்தமட்டில் மக்களில் ஒருவன் பொருளாதாரத்தின் அடிப்படையில் கொன்றிருக்கலாம் என்பதே. ஆனால் நாயகனை பொறுத்தமட்டில் இரண்டு கொலைகளும் தன் சுய விருப்பத்தினை பொறுத்தே அமைகிறது. அவன் கொலைப்பழியினை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டாலும் மனசாட்சியின் முன் எப்படியும் தண்டனை எனும் போது என் விருப்பத்தின் அடிப்படையில் வாழ்வது என்ன தவறு என்பதே அவன் கூற வரும் சாரம்.

பெட்ரோவிட்ச் என்னும் கதாபாத்திரம் மனித மன உருக்கத்தின் வெளிப்பாடாக தெரிகிறது. அவனின் குள்ளநரி தந்திரங்கள், மகனையும் தாயையும் பிரிக்கப் போடும் சதி சோனியாவினை திருடி என பட்டம் சுமக்க அவன் செய்யும் சதி என நுண்ணதிகார சிக்கல் அவனின் பாத்திரத்தினை செதுக்குகிறது.

சோனியா - மார்மலாதவ்வின் மகள். மார்மலாதவ் குடியின் போது ரஸ்கோல்நிகோவிற்கு நண்பனானவன். இவளையும் டௌனியாவையும் கதையின் நாயகிகள் என கூறிக் கொள்ளலாம். மார்மலாதவ்வின் மரணத்திலிருந்து தான் இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். தந்தையின் இறுதிவிழாவில் கடன்பட்ட வீட்டு சொந்தக்காரி தந்தையினை இழிவுபடுத்துகிறாள். அப்போது அம்மாவிற்கும் அவளிற்கும் நடக்கும் சண்டையினில் உடனே வீட்டினை காலி செய்ய சொல்கிறாள். எங்கு செல்ல என தெரியாமல் முழிக்கும் போது தான் தன் சதியினால் பெட்ரோவிட்ச் சோனியாவினை திருடி என்கிறான். எப்படிஎப்படியோ அவள் காப்பாற்றப் படுகிறாள். வீட்டினை இழந்த சோகத்தினில் இருக்கும் போது தான் தான் கொலைகாரன் எனக் கூறுகிறான். ஏன் என்றதற்கு எனக்கு பசி அதனால் பணம் தேவைப்பட்டது எடுக்க தடையாய் இருந்தனர். கொன்றேன் என்றான். அவன் தன் தவறினை கடைசி வரை நியாயப்படுத்துகிறான். இதில் இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சோனியாவின் அம்மா சோனியாவின் தங்கைகளின் ஆடைகளை கிழித்து அவர்களை பாட்டு பாடச் சொல்லி பிச்சை எடுக்க நாற்சந்திக்கு அழைத்துச் செல்கிறாள். இதனைப் போல் ஒரு துன்பவியல் காட்சியினை நான் இதுவரை படித்ததில்லை. கண்ணீரினை வர வைக்கும் அளவு உக்கிரம் வாய்ந்தது. அதில் அம்மா ப்ரெஞ்சு பாட்டு பாடினால் நம்மை மதிப்பர் அதனால் ப்ரெஞ்சு பாட்டு ஒன்று கற்றுக் கொடுத்தேனே அதனை பாடு என சொல்லும் இடங்களில் இருக்கும் உணர்வினை இதை வாசிக்கும் அனைத்து வாசகர்களும் கண்டிப்பாக வாசித்து உணர வேண்டும்.

இறுதியில் அவன் கட்டமைத்த அனைத்து கோட்பாடுகளும் அவனுக்கே தெரியாமல் அவனாலேயே உடைக்கப்படுகிறது. தடயங்கள் இல்லையென்றாலும் அவன் மனமே அவனை குற்றவாளியாக்கிவிடுகிறது. மொத்தத்தில் அருமையான மனோதத்துவ நாவல். இதன் தாக்கம் என்னவோ வாசகனின் ஈடுபாட்டால் மட்டுமே அடையக் கூடிய ஒன்று. தனிமனிதத்துவத்தினை மட்டும் என்னால் ஆழப் புரிந்து கொள்ள முடியவில்லை. முயற்சிப்பேன்.

பின் குறிப்பு : இந்நாவலின் இடையில் பெத்தானிய லாசரஸ் பற்றிய குறிப்புகள்  வந்தது. அது எனக்கு புரியவில்லை. உடனே கிறித்துவ அகராதியான என் தோழியினை அழைத்துக் கேட்டேன். எனக்கு அந்தக் கதையினை கூறினாள். அப்போது தான் எனக்கு தோன்றியது அவள் என்றாவது அழைத்து இந்து மதத்திலிருந்து கேட்டால் என்ன செய்வது ? அன்று எனப் பார்த்து மௌனவிரதம் மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளேன்!

Share this:

CONVERSATION