சிங்கார ரசம்

எனக்கு கோவை புத்தக திருவிழாவில் ஜி.நாகராஜனும் ஆதவனும் மட்டுமே சிக்கினர். சிங்காரத்தினை ரசிக்க நினைத்தேன் என்ன செய்ய என்னிடம் சரக்கு அவ்வளவு இல்லை. குறத்திமுடுக்கே யதேச்சையாக வாங்கியது தான். இப்படியிருக்கையில் வீட்டில் காசு தருவதாக கூறினர். உடனே மனம் சிங்காரத்திடம் சென்றது. இங்கு சேலத்தில் வாங்கினால் புத்தகத்தினில் இருக்கும் அதே விலை அதே புத்தக திருவிழாவில் வாங்கினால் பத்து சதவிகிதம் தள்ளுபடி என்பதால் அங்கேயே வாங்கலாம் என முடிவு செய்தேன். அங்கு நற்றினை பதிப்பகத்தில் பா.சிங்காரத்தின் இரண்டு நாவலையும் ஒரே தொகுப்பாக வெளியிட்டுள்ளனர். மாஸ்டரிடம் சொல்லி உடனே வாங்கி ஊருக்கு மூன்று நாட்களுக்கு பின் என் கைக்கு வந்தது.

நூலின் ஆரம்பத்தினில் சி.மோகன் என்பவர் எழுதியிருந்த பக்கங்களை வாசிக்கும் போது நாவல் சலிப்பூட்டுமோ என்னும் எண்ணமே தழைத்தோங்கி இருந்தது. ஆனால் அதில் அவர் குறிப்பிட்டிருந்த மிலன் குந்தேராவின் வார்த்தைகள் எனக்கு பிடித்திருந்தது - கடவுளின் சிரிப்பின் எதிரொளியாக உலகுக்கு வந்ததுதான் நாவல்.

இந்த நூல் எப்படி எனக்கு தெரியவந்தது எனில் எப்போதும் சொல்லும் விஷயமே தான் - சாருநிவேதிதா. ஆனால் இதனை வாசிக்கும் போது தான் எனக்கு பெருத்த சந்தேகம் எழுகிறது. நிறைய எழுத்தாளர்களால் தமிழில் நீங்காத இடம்பெற்ற ஒரு இலக்கியம் என சொல்லப்படுவது ஏன் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. இந்த நாவலை முடித்த அன்று என் பன்னிரெண்டாம் வகுப்பு ஆசிரியர்களை காணலாம் என சென்றிருந்தேன். முக்கால்வாசிபேர் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். மீதமிருந்தவர்களை காணலாம் என சென்றபோது தமிழ் ஆசிரியைகளை காணநேர்ந்தது. அவர்களிடம் இந்நாவலை பற்றி சொன்னேன். சொல்வதற்கு முன் எந்த மாதிரி நாவல்களை வாசிக்கிறாய் எனக் கேட்டனர். நானும் இந்த எழுத்தாளர்களையெல்லாம் கூறினேன். அவர்களுக்கு இந்த யாரையும் தெரியவில்லை. அப்போது அந்த கேள்வியே எனக்கு எழுந்தது தமிழில் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்லி கொடுப்பார்கள் என்று. இந்நாவலை வாசித்து முடிக்கும் வரையில் என்னை பிடித்து வைத்திருந்த அந்த மொழியின் ஆதிக்கம். மொழியானது அந்த எழுத்தாளனின் கையினில் சிக்கிக் கொண்டு மீளமுடியாமல் தன்னை தானே செதுக்கிக் கொண்டு நாவலாக உருவெடுக்கிறது. முக்கியமாக இந்த விஷயத்தினை இரண்டாவதற்குதான் சொல்ல வேண்டும் ஏன் என்று அங்கு தெரிந்து கொள்வீர்கள்.

இவருடைய நாவல்கள் பெரும் போராட்டங்களுக்கு பிறகு, இரண்டு நாவல்களும் ஒரு பத்து வருட இடைவெளியில் வெளியானதால் இவரால் அதிக நாவல்களை எழுத முடியவில்லை.

இவருடைய முதல் நாவலின் பெயர் கடலுக்கு அப்பால். இது வெளியானதோ 1963. இந்நாவலின் களம் ஜப்பானில் இருக்கிறது. இவர் தன் இரண்டு நாவல்களையும் இரண்டாம் உலகப்போரை பின்புலமாகக் கொண்டு இயற்றியுள்ளார். எழுத்தாளர்கள் பல பேர் சிங்காரத்தின் பெயரினை குறிப்பிருகிறார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் இவரின் இரண்டாவது நாவலினையே அதிகம் கூறியிருந்தனர்.

முதல் நாவல் எனக்கு ஒரு சிறந்த படைப்பு என்றே தோன்றுகிறது. ஜப்பானுக்கும் அமேரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் உலகப்போரின் ஒரு பகுதி நடக்கும் போது ஜப்பானுக்கு இந்தியாவிலிருந்து ஒரு படை உதவி செய்கிறது. அது சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ படையினர். அந்த படையில் பல தமிழர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவன் தான் கதையின் நாயகன் செல்லையா. போருக்கு அனைவரும் மும்முரமாக செயல் பட்டுக் கொண்டிருக்கும் போது போஸ் இறந்த செய்தி வீரர்களுக்கு எட்டுகிறது. இதற்குமுன் எப்போது போர் நிற்கும் எப்போது கப்பல் வரும் எப்போது வீடு செல்வோம் என ஏங்கும் தமிழர் கூட்டம் நம் முன் வருகிறது. அப்போது இந்த செய்தி படைவீரர்களிடம் சோகத்தினை கிளப்பினாலும் இச்செய்தியினால் உட்கட்சி பூசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை செல்லையா உணர்கிறான். காரணம் அதிகாரம். ஒட்டு மொத்த படையினையும் யார் வழிநடத்துவது என. உடனே இவர்களுக்குள்ளாக பிரிந்து சில பேரை மாணிக்கம் என்பவனின் தலையிலும் சிலவற்றை தன் தலையிலும் ஏற்றிக் கொண்டு இந்தியாவிற்கு, அவரவர் வீடுகளுக்கு புறப்படுகின்றனர். அப்போது அனுமதி தர மறுத்த போது இவ்வுண்மையினை கூறுகிறான். அப்போதும் மறுத்ததால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என கூட்டத்தினை கூட்டி செல்கிறான். இடையில் வரும் சின்ன படையொன்றையும் முறியடிக்கிறான். இப்போது கதையின் நாயகியினை பற்றி கூற வேண்டும். அவள் மரகதம். இவனையே எண்ணி உருகிக் கொண்டிருக்கும் கதாபாத்திரம். அவர்களுடைய மையல் வீட்டிலும் ஒருவாரு தெரிந்திருக்கிறது. அப்போது இவன் ஜப்பான் படையில் வேலை பார்த்தபோது ஒரு வெள்ளைக் காரனை கொன்றதற்காகவும் இந்த படைகளை வீழ்த்தியதற்காகவும் இவன் மேல் வழக்கு ஒன்றினை போலீஸ் போட்டிருக்கிறது. இதனை மரகதத்தின் அப்பாவான வயிரமுத்துப் பிள்ளை எப்படியோ தெரிந்து கொண்டார். மேலும் அவரை நம்பி வியாபாரம் செய்ய அனுப்பப்பட்டவன் தான் செல்லையா. ஆனால் பட்டாளத்தில் சேர்ந்துவிட்டான். இந்த அவப்பெயரினை சுமந்து கொண்டு எப்படி என் மகளை அவனுக்கு கட்டி கொடுப்பது என சிந்திக்கிறான். கடைசியில் வானாயீனா என்பவனின் மகனான நாகலிங்கத்துக்கு தன் மகளினை கட்டி வைக்கலாம் என முடிவு செய்கிறார். இதற்கு பின் நாவலின் க்ளைமாக்ஸ். அதில் தான் ஏன் இந்த நாவலுக்கு கடலுக்கு அப்பால் என பெயர் வந்தது என்பதே தெரிந்து கொள்ள முடியும். நாவலுக்கு ஏற்ற தலைப்பும் இதுவே.

நாவலில் நிறைய இடங்களில் அந்தந்த போர் முகாம்களில் அவர்கள் போடும் ஊர் அரட்டையினை வாசிப்பதற்கே பெரும் பகடியாக இருக்கும். காரணம் அவர்கள் ஊர்க் கதைகளை ராமாயனமாகவோ சிலப்பதிகாரமாகவோ மாற்றி அதன் மூலம் அந்த ஊர்க் குசும்பை வெளிப்படுத்துவர். ஆனால் அது இந்நாவலாசிரியரின் அந்த குறிப்பிட்ட இலக்கியத்தின் மீதுள்ள கருத்தாக கூட இருக்கலாம்! (நாவலெனில் அதனை மட்டும் வாசிப்பவரெனில் முதல் வாக்கியத்தினை எடுத்துக் கொள்ளுங்கள் எழுத்தாளனையும் சேர்த்து சிந்திப்பீர்களெனில் இரண்டாவதை எடுத்துக் கொள்ளுங்கள்)

வீட்டில் வேறு ஒருத்தனுடன் திருமணம் செய்யப்போகிறார்கள் என்றவுடன் செல்லையா அப்பாவை எதிர்த்து ஓடிப் போய் வாழலாம் என சொல்கிறான். அவளோ அப்பா பேச்சினை எப்படி தட்டுவது என்கிறாள். அப்போது அவன் சொல்கிறான் - அப்பாவின் பேச்சினை கேட்கவேண்டுமென்பது புகட்டப்பட்ட பாடம்.

நாவலின் பெரிய அழகியல் என்பது அதன் ஓட்டம் மட்டுமே. ஆரம்பத்திலிருந்து போர் முறையிலேயே நாவல் நடத்தி செல்லப்பட்டாலும் அது தன் வழியினை மாற்றிவிடுகிறது. நான் அந்த ஒட்டு மொத்த கூட்டத்துடனேயே அவர்கள் செய்யும் பயணத்துடன் சென்று கொண்டிருந்தேன். திடிரென நாவலில் கூட்டமும் இல்லை, பயணமும் இல்லை. மாறாக காதல் காதல் காதல். அப்படி கதை நகர்ந்துவிட்டது என்பதே நம்மால் அவ்வளவு சீக்கிரம் அறிந்து கொள்ள முடியாது.

அடுத்து,
கடலுக்கு அப்பால்
கடலுக்கு அப்பால் ?
கடல்
அதிலே ஒரு புயல் - அந்த
புயலிலே ஒரு தோணி

(ரசம் அடுத்த பதிவிலும். . .)

Share this:

CONVERSATION