குறத்தி முடுக்கு - ஒரு பாலியல் புரட்சி

என்னுடைய தோழி ஒருத்தி புதிதாக காதல் கோதாவில் இறங்கியிருக்கிறாள். அவள் ஏற்கனவே அக்கோதாவில் இருப்பவனிடத்தில் தான் தனக்கான ஐடியாக்களை கேட்டுக் கொள்கிறாள். காலங்காலமாகவே காதல் வதால் எது நடக்குமோ அதுவே அவளை சுற்றியும் நட்ந்துள்ளது. அஃதாவது காதல் பாடல்களை தொடர்ந்து கேட்பது, தோழிகள் கிண்டல் செய்வது என. அவள் காதலில் சீனியரிடம் புலம்பியிருக்கிறாள் - நான் எப்போதும் போல் தான் காதல் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆனால் இவர்கள்(தோழிகளை காட்டி)  எல்லாம் நான் என்னமோ இப்போது தான் கேட்பது போல் கிண்டல் அடிக்கிறார்கள் என்றாள். அதற்கு அவனது பதில் - என்னைப் பார் காதலுக்கும் முன்னும் எனக்கு ஐட்டம் பாடல் தான் பிடிக்கும் காதலுக்கு பின்னும் ஐட்டம் பாடல்கள் தான் பிடிக்கும் அதற்கு போய் நீ காதலுக்கு பின் தான் இப்படி கேட்கிறாய் எனக் கூற முடியுமா ? என கிண்டலடித்தான். அவளோ முகத்தினில் அருவருப்பினை கொண்டு ‘ச்சீ’ என்றாள். இது பேசப்படும் காலம் 2012. இந்த காலத்தில் உங்களால் ஒரு ஐட்டம் பாடலை பற்றிக் கூட சகஜமாக பேச முடியாது. அதற்கான மூலக் காரணம் இந்திய கலாச்சாரம்! அதன் படி பேசக் கூடாது என வளர்த்துவிட்டனர். கொஞ்ச நாட்களுக்கு முன் தான் என்னுடைய ஆட்டோக் கார நண்பரிடம் சினிமாவினை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவர் அனுராக் காஷ்யப் யார் என்று தெரியுமா ? ஏன் அவரை பத்திரிக்கை மிகைபடுத்துகிறது ? என்றவுடன் அவரின் தேவ் டி என்னும் படத்தினை பற்றி கூறினேன். அது சற்று பாலியல் சார்ந்த படம் தான். ஆனால் சமூகத்தின் வதைப்பக்கங்கள் முக்கால்வாசி பாலியலினாலேயே நடக்கப்படுகிறது. அதனை சர்ச்சையாக எடுக்காமல் அப்படியே படமாக்கிடிருக்கிறார். அதனை எழுதப் போனால் இது திரை விமர்சனம் ஆகிவிடும். சொல்ல வருவது என்ன என்றால் பாலியல் காமம் சார்ந்த விஷயங்கள் கிளுகிளுப்பினை சார்ந்தது என்றே நினைக்கின்றனர். ஆனால் அதற்குள் அனைத்து உணர்வுகளையும் அடக்க முடியும் என்பதே நான் அறிந்து கொண்டது. அந்த ஆட்டோக்காரர் என்னிடம் பதில் கூற முடியாத கேள்வி ஒன்றினை கேட்டார் - இதனை தமிழில் ரீ-மேக் செய்ய முடியுமா ? நிச்சயம் நடக்காது அப்படியே நடந்தாலும் அது ஊருக்கு ஒதுக்கு புறத்தில் இருக்கும் பாழடைந்த தியேட்டரில் ஆடி அடங்கிய மனிதர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டப்படும் படமாக திரையிடுவர். இதனை போன்ற அவமானம் அந்த இயக்குனருக்கு வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இதுவும் இந்த காலத்தினை சார்ந்ததே. தினம் தினம் பாலியல் குற்றங்களும் பாலியல் அத்துமீறல்களும் நம் நாட்டில் முக்கியமாக தமிழ் நாட்டில் நடந்து கொண்டுதானிருக்கிறது. இருந்தும் அதனை பற்றி திறந்த வெளியில் பேசுவதற்கான உரிமை பறிக்கப் படுகிறது. அப்படியே பேசினாலும் அவனை காமாக் கதைகள் சொல்லும் கச்சாப் பொருள் ஆக்குகின்றனர். மேலும் தன் தடைகளை மீறி இதனையே ஒரு பெண் பேசினால் அவளை ஒழுக்கங்கெட்டவள் என பெயர் சூட்டுகின்றனர். பாலியல் கல்வி தடுக்கப்படுகிறது. இவர்களே தடுத்துவிட்டு பின் அவன் அத்துமீறல்களில் ஈடுபடும் போது அவனை சமூகத்திலிருந்து பிரித்து வைக்கின்றனர். இப்படிப்பட்ட முரணான காலத்திலேயே நம்மால் இத்தனை குற்றச் சாட்டுகளை சமூகத்தின் மேல் வைக்க முடிகிறது. குற்றச் சாட்டுகளும் பாலியல் சார்ந்தது என்பதால் புறக்கணிக்கப்படுகிறது. அது வேறு விஷயம். அப்படியிருக்கையில் 1963-இல் பாலியலின் நிலை எப்படி இருந்திருக்கும் ? இது என் சிந்தனைக்கு அப்பாலே இருக்கிறது. காரணம் என் அம்மா பிறந்ததிலிருந்து ஒரு ஆண்டு முன்பு தான் இந்நாவல் வெளிவந்திருக்கிறது. என் அம்மாவே நாவல்களை தன் படிப்புகளை நிறுத்தியபின் தான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறாள். ஏன் என்றால் அதற்கு முன் அஃதாவது படிக்கும் காலத்தில் வாசித்தால் அது அவர்களை கெடுத்துவிடுமாம்! இத்தனைக்கும் என் அம்மா தன் அப்பாவிடம் கேட்டது கல்கியின் நாவல்கள். அதுக்கே இத்தனை புறக்கணிப்புகள். அப்படி இருக்கையில் பாலியல் சார் விஷயங்களை நாவலில் தொனித்திருக்கிறார்களா எனில் இருக்கிறார்கள். அது தான் குறத்தி முடுக்கு. இந்நாவலை சமூகம் எப்படி எதிர் கொண்டது என அறிய விரும்புகிறேன் யாரிடம் கேட்பது என்று தான் தெரியவில்லை. ஆங்கிலத்தில் transgressive என சொல்லப்படும் காத்திரமான எழுத்து இந்நாவலில் அதீதமாக தெரிகிறது.

Non-linear என சொல்லப்படும் இலக்கிய வகையினை இந்நாவல் கொண்டுள்ளது. பக்கங்களும் அதில் கதைகளும் சிதர வாசகன் அதனை, பிரதியினை மறு உருவாக்கம் செய்கிறான். நாவலின் பக்கங்கள் ஒவ்வொன்றும் காலத்தினை கடந்து இப்போது எழுதப்பட்டது போலவே நமக்கு தோன்ன்றுகிறது.

கதை என்ன என்பதை எண்ணி நாவலினை வாசிக்க ஆரம்பித்தால் அது வாசகனை நிச்சயம் குழப்பும். குழப்பும் என்றால் அதனை தாண்டி வாசிக்க முடியாதா என்றால் அப்படியில்லை. பக்கங்கள் கடந்தவாறே நாவல் முடியுமே தவிர கதை தேடுபவர்களுக்கு ஒன்றும் சிக்காது. இது கொள்கைவாதி எழுத்தாளனின் தேடல்.

கதையின் பிரதான பாத்திரம் ‘நான்’ என்றே வருகிறது. அவன் குறத்தி முடுக்கிற்கு செல்கிறான். இவனுக்குள்ளேயே திருமணத்திற்கும் காதலுக்கும் காமத்திற்கும் ஒரு போர் நடக்கிறது. அப்போது அவன் தனக்கு கூறுகிறான் - ‘என் காமத்தினை விலைமாதர்களிடத்தில் தீர்த்துக் கொள்ள முடியும் வரை நான் திருமணத்தை பற்றி யோசிக்க மாட்டேன். . . .
. . .என்னுடைய உணர்வு தான் மனிதனுக்கு இயற்கையான உணர்வு’

அங்கு வேசியான தங்கம் என்பவளிடம் தன்னை ஒப்படைக்கிறான். இருந்தும் அவள் கொடுக்கும் இன்பம் வேறு பெண்களிடமும் கிடைக்குமா என்பது அவன் சந்தேகம் கொள்ளும் விஷயமாகிறது. ஒரு முறை அவளை போலீஸ் பொதுமக்களை விபச்சாரத்திற்கு அழைத்ததாக கூட்டி செல்கிறது. அந்த வழக்கில் நாயகனை தனக்காக சாட்சி பேசுமாறு அழைக்கிறாள். அதற்கு நிர்பந்தமாக தன்னுடனேயே அவளை இருக்கச் சொல்கிறான். அவனும் சாட்சி சொல்ல செல்கிறான். அங்கு தான் தான் அவளை பணம் கொடுத்து காப்பாற்றுவதாகவும் அவளை மணக்கப் போவதாகவும் கூறுகிறான். சாட்சி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

கோர்ட்டினில் இவனுடைய வேலையினை பற்றி கேள்வி கேட்கின்றனர். அதற்கு முன் இவன் வேலையினை பற்றி கூற வேண்டும். இவன் வேலை செய்யும் பத்திரிக்கை சற்று மாறுபட்ட ஒன்று. தமிழகத்திலேயே எத்தனையோ ஒடுக்கபட்டவர்களின் செய்திகள் இருக்கும் போது எதற்காக உலகினை காணாத இம்மக்களுக்கு அந்த உலகத்தினை பற்றிய செய்திகளை கூற வேண்டும் முதலில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை சொல்லுவோம் என்பதே. அதில் சமூகத்தின் கறுப்பு பக்கங்கள் அனைத்தும் இருக்கும் என்பதால் அரசல் புரசலாக பேச ஆரம்பித்தனர். அப்போது அவன் தங்கத்திற்காக கோர்ட்டில் விசாரணை செய்யும் போது
‘கேள்வி - இந்த பத்திரிக்கை மட்டரான செய்திகளை தரும் பத்திரிக்கை எனறு கருதப்படுகிறது இல்லையா ?
பதில் - இல்லை. இதுவரை அரசாங்கம் பத்திரிக்கை மீது எந்தவித நடவடிக்கையும் எடுத்ததில்லை.’

இந்த வரிகளை வாசித்தவுடன் எனக்கு சாருவின் எழுத்துகளில் காணப்படும் வெறுமை தான் நினைவிற்கு வருகிறது. அதில் மார்க்கி தே ஸாத் பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். அவருடைய எழுத்து அரசிற்கு எதிராக இருப்பதால் அதனை முழுதும் புறக்கணித்தனர். அவரையும் சிறையில் இட்டனர். அப்படியும் அவர் தன் மலத்தினை கழுவ வைத்திருக்கும் காகிதத்தினில் எழுதி எழுதி வெளியில் போட அதனை ஒருவன் புத்தகமாக வெளியிட்டானாம். இதனை இங்கு ஏன் கூறுகிறேன் எனில் (இப்போது கூறப்போவதும் சாரு கூறியதே) மார்க்கி தே ஸாத், டி,எச்.லாரன்ஸ் போன்றவர்களின் எழுத்து அரசிற்கு எதிராக இருந்தது மட்டுமின்றி அது பல லட்சம் பேரினை சென்று அடைந்தது. அதனால் மட்டுமே அது ஒரு புரட்சியாக மாறியது. அதே தமிழில் ஒரு படைப்பு புரட்சிகரமாக இருந்தாலும் அது குறிப்பிட்ட வாசக ஜாதிக்கே சென்றடையும். அவர்களுடைய கோஷங்களும் எதிர்ப்புகளும் அந்த ஜாதியினருக்குள்ளேயே நடக்கும். இது இன்று மட்டும் அல்ல இந்நாவலினை இயற்றிய ஜி.நாகராஜனின் காலத்திலும் நிற்கிறது. இது ஒட்டு மொத்த அரசாங்கத்தினையும் செய்யும் பகடியே.
மேலும் இதனை இப்போது வாசிக்கும் அனைவரும் கூனிக் குருக வேண்டும் காரணம் அந்த பகடியின் உள்ளார்ந்த அர்த்தம் இன்னும் மாறவில்லை!!!

சாட்சியங்கள் அனைத்தும் கூறி வெளிவந்தபின் தன் திருமணத்தினை பற்றி அவளிடம் கேட்கிறான். நாவலில் இதுவரை வாசித்து வரும் அனைவரும் இது அந்த மனிதனின் காதல் என்றே நினைத்துக் கொண்டிருப்பர். ஆனால் அவன் கூறுகிறான் - ‘அவள் மேல் எனக்கு காதல் இல்லை ஆசை மட்டுமே உண்டு’ அப்போது அவனை பொறுத்தவரை திருமணம் என்பது என்ன எனில் -  ‘சமுதாயம் தன்னுடைய நலனுக்காக தனி மனிதனின் மீது சுமத்தப்படும் கட்டுப்பாடுகளில் திருமணமும் ஒன்று.’ அவளோ திருமணத்தினை நிராகரிக்கிறாள். அப்போது அவளுக்காக பொய் கூறியதை எண்ணி வருத்தமடைகிறான். அவளோ போலீஸ் என் மீது கூறிய பொய்யினை சரி செய்ய உனது பொய் இருந்தது என சொல்லாமல் சொல்கிறாள். அவன் கோபத்தில் சென்றுவிடுகிறான். அவள் வேறு ஒருத்தனுடன் சென்றுவிட அவளின் நினைவில் தனிமையில் இருக்க ஆரம்பிக்கிறான்.

இதற்கிடையில் குறத்தி முடுக்கில் நடக்கும் பல விஷயங்கள், அவர்களின் ஆசைகள், தேவையாணி என்பவளின் தற்கொலை, செண்பகத்தின் கரு கலைப்பதால் சித்த சுவாதீனத்தினை அடைதல் என வாசகனை குறத்தி முடுக்கின் உள்ளே அமைதியாக உரைபனிக்குள்ளே அழைத்து செல்வது போல் கொண்டு செல்கிறார்.

இத்தனைக்கும் இதில் முதல் அத்தியாயத்தில் வரும் வேசியின் வயது பதினைந்து. இதனை வாசிக்க வாசிக்க எனக்கு இது சமூகத்தில் எப்படி நிராகரிக்கப்பட்டிருக்கும் என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. இது குறு நாவல் தான் இருந்தும் இதில் பொதிந்துள்ள விஷயங்கள் சமூகத்தில் அரசினை நடுங்கச் செய்யும் அளவிற்கு கிளர்ச்சியினை உண்டு செய்யக் கூடியது. ஆனால் இவரின் பெயரே முகநூலில் பெரிய பத்தியின் இடையில் சிக்கிக் கொண்ட போது தான் அறிந்து கொண்டேன்.
இது தான் தமிழ் இலக்கியம்!

Share this:

CONVERSATION