வௌவ்வால் எச்சம்

சுதந்திர தினத்தன்று என்ன செய்யலாம் முன்னரே முடிவு செய்துவிட்டேன். அதன் படி என் நண்பனான மாஸ்டருடன் வ.உ.சி பூங்காவிற்கு செல்வதே(தேசப்பற்று!). இப்படி எடுத்தவுடன் என் பதிவு தளத்தில் ஒரு மனிதரை நுழைப்பது எனது பத்து பதினைந்து வாசகர்களுக்கு புரியாது என்பதால் அவனை பற்றி சிலவற்றை கூறுகிறேன்.

அவனுடைய நட்பு கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு கிடைத்து வருகிறது. அப்படி அவனின் நட்பு எனக்கு கிடைத்ததும் ஒரு விபத்தினை போலவே நடந்தது. அவனுக்கு பார்வை கொஞ்சம் கம்மி. ஏனெனில் அது ஒரு போலி மருத்துவனின் லீலை. யாரென்றே தெரியாமல் தனக்கு அடிக்கும் காய்ச்சலுக்கு வைத்தியம் பார்க்க அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறான். அங்கு போடப்பட்ட தவறான ஊசி பார்வையினை கெடுத்துவிட்டது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தான் என்பதை மட்டும் எனக்கு ஏனோ சொல்லவில்லை. அதனால் காலம் கடந்து மறுபடியும் அதே வகுப்பு படிக்கும் போது அவனுடைய நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அந்த வகுப்பே அண்ணா அண்ணா என்று தான் அவனை அழைக்கும். அவன் அதனை தன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறான் என்பதே பின் தான் எனக்கு தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நட்பு நெருக்கம் ஆன ஆரம்பித்த பின் அவனுக்கு வேறு ஏதாவது பெயரினை யோசிக்க வேண்டும் என எண்ணினோம். அப்போதென ‘குஷி’ படம் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது. அதிலிருக்கும் விவேகினை பார்த்து ஏதோ தோன்றியது இவனுக்கும் மாஸ்டர் என்னும் பட்டத்தினை சூட்டினோம். இன்றுவரை அவனின் உண்மையான பெயரினை வைத்து எங்கள் நண்பர்கள் குழாம் அழைத்ததே இல்லை. அவனின் உண்மையான பெயரும் கிருஷ்ணா.

ஆரம்பத்தில் எனக்கு கதைகள் யோசிக்க ஆரம்பிக்கும் எண்ணமே இல்லை. சிறுவயதில் திரைப்படங்களை பார்க்கும் போது மற்ற குழந்தைகளை போலவே இதில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் கதைகள் எனக்கு தோன்றாது. பத்தாம் வகுப்பின் போது என் மற்றொரு நண்பனான ஆசிப் கான் ஒரு நாள் தான் ஒரு கதை யோசித்திருக்கிறேன் எனக் கூறினான். அவன் கூற கூற எனக்கும் மாஸ்டருக்கும் நாமும் கதை யோசிக்க வேண்டும் எனத் தோன்ற ஆரம்பித்தது. ஆசிப்பின் கதை என்ன ஆனதெனில் அவன் எங்களிடம் கதை சொல்லி சரியாக எட்டு மாதம் கழித்து ‘முத்திரை’ எனும் பெயரில் படமாக வந்தது! அதற்கு பிறகு அவன் தன் கதை யோசிக்கும் நினைப்பினையே விட்டுவிட்டான்.

நானும் மாஸ்டருமோ தீயாக யோசிக்க ஆரம்பித்தோம். அப்போது கூட அவனுக்கு அங்கே (இப்போது கூறிக் கொண்டிருப்பது பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு) நிறைய நண்பர்கள் இருந்தனர். எனக்கும் இருந்தனர். ஆனால் நானோ அவர்களிடம் அதிகம் பேசாமல் தனியாகவே இருப்பேன். இது தான் எனக்கு எமனாக மாறியது. யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்துவிட்டதால் திடிரென பேச வேண்டும் என நினைக்கும் போது யாரும் தனியாக இருக்க மாட்டார்கள். மேலும் அப்போதெல்லாம் பேசினால் கூட கதைகளைத் தான் கூறுவேன். இதனாலேயே சிலர் என்னை பார்த்து ஓடினர். எனக்கு அசிங்கமாக இருந்தது. அப்படியும் கதை யோசிக்கும் எனது கிறுக்குத் தனங்கள் என்னை விட்டு போகவில்லை. கதை யோசித்தால் மட்டும் பரவாயில்லையே அதில் எனக்கு பிடித்த நடிகர்களையும் வைத்து கூறுவேன்.

மேலும் நிறைய பேர் அவர்களுக்கு போரடிக்குது எனும் போது என்னிடம் கதை கேட்பர். அது என்னை அசிங்கபடுத்துவது என்பதையே இன்று தான் உணர்கிறேன். அன்றோ அவர்கள் கேட்டவுடன் சொல்ல ஆரம்பித்துவிடுவேன். ஒரு நாள் இதனை எனக்கு சொன்னதே மாஸ்டர் தான். அவனுக்கோ என் கதைகள் ஆரம்பத்திலிருந்தே பிடிக்காமல் போனதில்லை. நிறைய நேரம் அவனிடமே கேட்டிருக்கிறேன் எனக்காக என் கதைகளை கேட்கிறாயா அல்லது பிடித்து தான் கேட்கிறாயா என சிரிப்பு மட்டுமே பதிலாக வரும்.

இப்படி வாய்வழிக் கதைகளாகவே என் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தது. அதன் விடுமுறையில் தான் மாஸ்டர் என்னிடம் தினமலரினை கொண்டுவந்து அதில் சிறுகதை போட்டி நடக்கிறது அதற்கு உன் கதைகளை எழுதி அனுப்பு எனச் சொன்னான். ஆனால் அதுவரை பல்ப் என்ற வகை புனைவுகளை மட்டுமே வாசித்திருந்தேன். அதனால் எழுதலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். முயற்சி செய்வோம் என ஐந்து கதைகளை எழுதி அனுப்பினேன். என் எழுத்துகள் அன்றிலிருந்து எதுவாயினும் முதலில் அவனுக்கு வாசித்துக் காண்பிப்பேன். அப்படி எழுதிய முதலிலேயே பரிசினை எதிர்பார்த்தது என் தவறு தான். எனக்கு ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை!

அப்போது என்னை மேலும் என்னை எழுத சொன்னவன் மாஸ்டர். அவன் சொன்னது சரியா தவறா என இன்றுவரை நான் பரிசீலனை செய்து பார்க்கவில்லை. தொடர்ந்து எழுதினேன். அனைத்தும் அவனுக்கு பிடித்திருந்தது. ஒரு பைத்தியமாக எப்போதும் இதன் சிந்தனையிலேயே அமர்ந்தேன். அப்போதும் என்னைவிட்டு அவன் போகவில்லை. ஆனால் போனவர்கள் அநேகம் பேர். சில நாட்களில் எனக்கு சில நட்புகள் கசக்க ஆரம்பித்தது. அதற்கு காரணமும் என் எழுத்தாக இருந்தது. மாஸ்டருக்கு மட்டும் பிடிக்கும் என் எழுத்து ஏன் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என எண்ணினேன். பதில் எனக்கு கிடைக்கவில்லை. அவர்களை மறக்க ஆரம்பித்தேன். மாஸ்டர் மட்டுமே என் நெருங்கிய நண்பனாக மாறினான். எத்தனையோ பேர் என்னை “இவன் தன் கதைகளை பிடிப்பவர்களிடத்தில் மட்டுமே நண்பனாக இருப்பான்” என பழிதூற்றினர். என்னை வதைத்தது. எதை பற்றியும் கவலைப்படவில்லை. நிறைய நண்பர்கள் இருந்தாலும் சிலரை மட்டுமே மனம் அங்கிகரிக்கும். என் மனதில் அதுவும் ஐந்திற்குள் அடங்கிவிடும்!

என் அனைத்து எழுத்துகளுக்கு பின்னும் ஏதோ ஒரு வகையில் அவன் இருந்தான். அதே குதூகலத்தில் என் முதல் நாவலினை ஆரம்பித்தேன். அதன் பெயர் “மூன்றாவது அத்தியாயம்”. அதனை வெளியிடுவதற்கான வாய்ப்பினை தேடிக் கொண்டிருக்கிறேன். மேலும் நாவல் முடிந்து நான்கு மாதம் ஆகிறது. என் நாவலினை முழுதாக அவன் அறிந்தவுடன் அவனுக்கு அதுவும் பிடித்துப் போனது. அனைத்தும் நன்றாக கூறுகிறானே ஏதோ அவனிடம் எதிர்பார்க்கிறானோ என எண்ண வேண்டாம். அவன் நாவலில் கூறிய சில குறைகளை என்னால் இங்கே கூற முடியாது. அதற்கு என் நாவல் வெளி வந்திருக்க வேண்டும். இப்போது என் இரண்டாவது நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனையும் அவனுக்கு ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இத்துடன் எங்களின் முன்னுரையினை முடித்துக் கொள்கிறேன்.

எப்போது எனக்கு விடுமுறை கிடைத்தாலும் அவனை பார்க்க சென்றுவிடுவேன். அவனுக்கும் அப்போது விடுமுறையாகத் தான் இருக்கும். எங்காவது வெளியில் செல்வோம். மேலும் எங்கள் இருவருக்கும் கல்லூரிகளில் அதிக நண்பர்கள் இல்லை. இந்த முறையும் பார்க்கலாம் எனக் கூறி மதிய நேரத்திற்கு காந்திபுரம் வரச் சொன்னான். என் கல்லூரி இருக்கும் இடமோ எட்டிமடை. அங்கிருந்து காந்திபுரத்திற்கு பேருந்தில் ஒரு மணி நேரம் ஆகும். பத்து மணியளவில் விடுதியிலிருந்து கிளம்பினேன். மேலும் எட்டிமடையில் பேருந்து நிறுத்தத்திற்கும் கல்லூரிக்கும் தூரம் மூன்று கி.மீ! அதனை ஆர அசைந்து நடந்து முக்கால் மணி நேரத்திற்கு பின் வந்து பேருந்தினை பிடித்து பதினொன்றை மணியளவில் காந்திபுரம் வந்தடைந்தேன்.  சீக்கிரம் வந்துவிட்டோமே எனத் தோன்றியது. அவனோ சாய்பாபா காலனியில் இருக்கும் பாட்டி வீட்டில் இருந்தான். சரி உன் விருந்துகளை முடித்துவிட்டு பொறுமையாக வா எனக் கூறி நான் வ.உ.சி பூங்காவிற்கு சென்றேன்.

ஜோடிகள் நீக்கமர நிறைந்திருந்தனர். அவன் என்னிடம் என் பைய்யினை கேட்டிருந்தான். அதற்குள் இப்போது எழுதி கொண்டிருக்கும் நாவல் இருந்தது. முழுப் பூங்காவினையும் சுற்றி சுதந்திர ஜோடிகளை பார்த்தாயிற்று, என்ன செய்ய எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். அப்போது சினிமாவில் தோன்றும் விஷயங்களெல்லாம் எனக்கு தோன்றியது. அதில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் எல்லாம் பூங்காவில் அமர்ந்து எழுதுவது போலத்தானே காட்டுகிறார்கள். நம்மை புகைப்படம் எடுக்க ஆளில்லை என்றாலும் பரவாயில்லை நாமும் நம் நாவலை எழுதிப்பார்க்கலாமே என எண்ணினேன். நப்பாசையினை நிறைவேற்ற பேனா வாங்க சென்றேன். வாங்கி வந்து அமர்ந்த போது  இன்னும் ஒரு மணி நேரம் அவன் வர ஆகும் என செய்தி வந்தது. நானும் எழுத ஆரம்பித்தேன். எழுதிக் கொண்டிருக்கும் போது என் காதில் show me the meaning என்னும் backstreet boys குழுவினரின் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. இன்று அப்பாடலினை மட்டும் குறைந்தது ஐம்பது முறை எழுதியிருப்பேன். அதனை பற்றி முகநூலில் எழுதியிருந்தேன். இக்கட்டுரையின் பின் குறிப்பாக அதனை போடுகிறேன். ஒன்றரை பக்கம் தான் எழுதினேன். அதுவும் சிறிய அளவு நோட்டு புத்தகம். எனக்கோ தமிழ் வேகமாக எழுத வராது. இப்படி என் சந்தோஷத்திற்காக எழுதி கொண்டிருந்தது இவ்வளவு நேரம் வாசித்த உங்களுக்கே ஓவராக இருக்கலாம்.  அப்படி இருக்கும் போது என் தலைக்கு மேல் இருந்த வௌவ்வாலுக்கு இருக்காதா என்ன, தன் கோபங்களை எல்லாம் திரவியமாக்கி என் நோட்டில் ‘நொச்’சென போட்டது. நல்லவேளை அது மீதீயிருந்த அரை பக்கத்தில் போட்டது. டக்கென என் ஆசையினை மூடி வைத்தேன். அந்த எச்சமிட்ட பகுதியினை மட்டும் கிழித்துவிட்டேன். மாஸ்டர் வந்திருப்பான் சிறிது நேரம் நடக்கலாம் என நடக்க ஆரம்பித்தேன். மாஸ்டர் வந்த பிறகு இதனை கூறினேன்
மாஸ்டர் - ‘நல்லவேளை எழுதின பக்கம் விழல’.

இதற்கு மேல் இக்கட்டுரையினை இழுக்க விரும்பவில்லை. இங்கேயே முடிக்கிறேன் இரண்டு பின் குறிப்புகளுடன்.

பி.கு 1 : என் பள்ளிப் பருவத்தில் ஜானி என எனக்கொரு நண்பன் இருந்தான். அவன் தீவிர இசை ரசிகன். அவனுக்கு ஆகப்பிடித்தது backstreet boys இன் இசை குழுவினர் தான். அவர்களின் இசையில் உள்ள வரிகள் அவனுக்கு அவன் குருதியில் கலந்திருப்பது போல. எனக்கு அப்போதெல்லாம் பாடல்கள் கேட்பதே பிடிக்காது. தமிழ் பாடல்களே எப்போதாவது தான் கேட்பேன். இப்போது தான் கொஞ்சம் கேட்க ஆரம்பித்துள்ளேன். அவனுக்கு அந்த குழுவினரிடமும் show me the meaning... என்னும் பாடல் தான் அவனுடைய தேசிய கீதத்தினை போல. என்னிடம் அதன் வரிகளை எல்லாம் என்னிடம் அழகாக பாடுவான். புரியவில்லை என்றாலும் அதனை கேட்பேன். இப்போது எனக்கு ஆங்கில பாடல்களை கொஞ்சம் கொஞ்சமாக கேட்க ஆரம்பித்துள்ளேன். அதில் எனக்கு குருவாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டது சாரு நிவேதிதாவை. அவரின் இணையதளத்தில் பல பாடல்களின் லிங்கினை கொடுக்கிறார். என்னால் முடிந்தவரை நான் கேட்க ஆரம்பித்துள்ளேன். அதன்படி அவர் அந்த show me the meaning என்னும் பாடலை பற்றி எழுதியிருந்தார். அதனை கேட்டேன், இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சுதந்திர தின பரிசாக அதனை தங்களுடன் பகிர்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

http://www.youtube.com/watch?v=aBt8fN7mJNg

பி.கு 2 : வௌவ்வாளின் எச்சம் நல்ல பச்சையாக வட்டமாக இருந்தது. இந்த info கூட எதற்கெனில் இப்பதிவினை புனைவு என சொல்லிவிட்டால். . .

Share this:

CONVERSATION