அசூயை

இந்த முறை விஷயத்தினை பகிரங்கமாக முதல் வரியிலேயே கூறிவிடலாம் என்றிருக்கிறேன். இத்தலைப்பினுள் அடங்கியிருக்கும் உணர்வினை எனக்குள் ஏற்படுத்தியவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

Literature writes what science dreams but cannot ex-press  என்ற கால்வினோவின் வாக்கியத்தினை அவரின் ‘கலிலியோ மண்டியிடவில்லை’ என்னும் புத்தகத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன். மேலும் அப்புத்தகத்தினை சிறிது நேரம் முன்பு தான் வாசித்தும் முடித்தேன். கருத்து செறிவுள்ள புத்தகம் தான். எஸ்.ரா தன் புனைவுத் திறமையின் மூலம் தன்னுள் இருக்கும் அறிவியல் இலக்கியம், சினிமா என பரந்து விரிந்த வெளியை அந்நூலில் தானே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் எஸ்.ராவின் படைப்புகளில் அதே இரவு அதே வரிகள், அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது, காற்றில் யாரோ நடக்கிறார்கள் மற்றும் மேலே குறிப்பிட்டிருந்த கலிலியோ மண்டியிடவில்லை என்னும் புத்தகத்தினை வாசித்திருக்கிறேன். எனக்கு எஸ்.ராவினை வாசிக்க வேண்டும் என ஆரம்பத்தில் அதிக ஆசை இருந்தது. அதனால் தான் அதே இரவு... புத்தகத்தினை வாங்கினேன். அதில் சில மொழிபெயர்ப்பு கதைகள் இருந்தது. அதனைத் தவிர உலக புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் பேட்டிகள் தமிழில் இருந்தது. அடுத்து கூறியிருக்கும் இரண்டும் தலைப்புகளும் சிறுகதை தொகுப்புகள். இப்போது தான் அசூயையின் காரணத்தினை கூற விழைகிறேன்.
எழுத்தில் கட்டுரையாகட்டும், நாவலாகட்டும் அதில் அதீத கருத்துகளோ சமாச்சாரங்களோ இருந்தாலும் அது முடியும் வரை வாசகனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அது எழுத்தின் நடையில் தான் இருக்கிறது. அவரின் ஒவ்வொரு சிறுகதைகளும்(இந்த இரண்டு புத்தகங்களில்) ஆழமான மையத்தினை கொண்டுள்ளவை இருந்தும் அதன் எழுத்து நடை என்னை எனது வாசிப்பில் தளர்ச்சியினை உணர வைக்கிறது.

உதாரணத்திற்கு கூற வேண்டுமெனில் பகல்கனவுகள் என்று ஒரு சிறுகதை. அதில் ஒரு லாட்ஜினை மையமாக வைத்து பல கதைகள் பல்வேறு கதாபாத்திரங்களால் அரங்கேறுகிறது. கதாபாத்திரங்கள் தன் கதையினை விட்டு மற்ற கதைகளில் தென்பட்டாலும் கதைகள் ஒன்றோடொன்று சேராமல் தனிப்பட்டே நிற்கிறது. பல பக்கங்களுக்கு இப்படி வேறு வேறு கதைகள் சென்று கொண்டிருக்கும் போது திடிரென கடைசியில் அனைத்தும் பகல்கனவுகள் போல ஒன்றிணைந்து முடிகிறது. இதனை த்ரில்லராக எழுதியிருக்கலாம் எனபது என் ஆதங்கம். ஆனால் அவரின் மனநிலை எப்படி இருந்ததோ எனக்கு தெரியவில்லை! கதை கடைசி வரை விறிவிறுப்பினை தரவே இல்லை.

நீங்கள் கேட்கலாம் சாதாரண கதைகளில், அஃதாவது த்ரில்லர் என வகுக்கப்படும் கதைகளை தவிர்த்து மீதமுள்ள கதைகளில் விறுவிறுப்பினை எதிர்பார்ப்பது எப்படி என. நான் சொல்ல வரும் விறுவிறுப்பு ‘பிரதி தரும் இன்பம்’. சுஜாதா ‘கனவு தொழிற்சாலை’ என்று நாவல் ஒன்று எழுதியிருக்கிறார். அது சினிமாத்துறையினை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். பக்கங்கள் எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் சற்று பெரிய நாவல் தான். இருந்தும் அதில் ஒவ்வொரு பக்கங்களும் ஏதோ ஒரு வித மொழி நடை நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக அந்த நாவலினை மட்டும் சொல்லவில்லை சுஜாதாவின் கட்டுரை தொகுப்பாகக் கூட ஆகட்டும் நான் சொல்ல வரும் விஷயத்தினை தங்களால் உணர முடியும். அது ஏன் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களால் மட்டும் முடிகிறது ?

இப்போது வாசித்து முடித்த புத்தகம் கூட அருமையான கருத்துகளை தன்னுள் கொண்டது. இதனை வாங்குவதற்கு சில காரணங்களும் இருக்கிறது. இயற்பியலில் எனக்கு தீராத வெறுப்பு இருந்த போது கடவுள்(மீண்டும் சுஜாதா) என்னும் புத்தகத்தினை வாசித்தேன். இப்போது இயற்பியல் எனக்கு அதீதமாக பிடித்திருக்கிறது. ஒவ்வொரு மாணவனும் வாசிக்க வேண்டிய புத்தகம் என அதனைக் கூறுவேன். ஏன் எனப் பின் கூறுகிறேன். அது போலவே தான் இப்புத்தகமும் என எண்ணினேன். இதனை உயிர்மை பத்திரிக்கையில் சில காலம் தொடராக வாசித்துக் கொண்டிருந்தேன். அது பிடித்து போய் இதனை தொகுப்பாக வாசிக்கும் போது வெறுப்பு ஏற்படுகிறது. அறிவியலினை அறிந்து கொள்ள ஆர்வமுடையவர்களுக்கு இதில் நிறைய விஷயங்கள் எளிய தமிழில் இருக்கிறது. பிரச்சினை என்னவெனில் எழுத்து! மற்றவர்களின் கருத்து பற்றி எனக்கு தெரியாது எனக்கு, இந்த நூலில் பூனை, தவளை என கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு அவை முலம் பல விஷயங்களை சொல்ல முனைந்திருக்கும் முறை நல்ல முயற்சி தான். இந்நூலுக்கு எடுபட்டதா எனில் இல்லை. பல விஷயங்களை ஒரே இடத்தினுள் அடக்க நினைத்துள்ளார் ஆனால் வாசகனான எனக்கு அது குப்பையினை போல் தான் தெரிகிறது. அவரின் வாசிப்பு அனுபவம் நூலில் நன்கு தெரிகிறது. உண்மையில் அதனை கண்டு பிரம்மிக்கிறேன்.

அவருடைய ‘யாமம்’ நாவலினை வாங்கலாம் என்றிருந்தேன். இப்போது இந்த அசூயை அதனை தடுக்கிறது.

நாவல் எனும் போது தான் ஞாபகம் வருகிறது. சில நாட்களாக மூன்று ஆங்கில நாவ்லகளினை வாசித்ததால் வாய் திறந்தால் பீட்டர் தான் வருகிறது. தமிழிலும் சில நாவல்கள் வாசிக்க ஆசைப்படுகிறேன். அப்போது தான் பணத்தின் ஞாபகம் வந்தது. சென்ற ஆண்டு நாங்கள் உபயோகித்த புத்தகம் கண்ணில் பட்டது. புது மாணவர்களிடம் விற்றோம் கையினில் காசு சேர்ந்திருக்கிறது. இந்த முறை அதனை தமிழ் நாவல்களில் செலவிடலாம் என்றிருக்கிறேன். அப்படி வாசித்தால் அதனையும் என் பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

பின் குறிப்பு : ‘கடவுள்’ என்னும் புத்தகத்தினை அனைவரும் முக்கியமாக மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் எனக் கூறியிருந்தேன். நமது கல்வி முறை இயற்பியலினை, அறிவியலினை வெறும் அப்பக்கங்களோடே நிறுத்தி விடுகிறது. ஆனால் அதற்கும் நடைமுறை வாழ்விற்கும் என்ன சம்மந்தம் என கூற மறுக்கிறது. மறுக்கிறதா அல்லது அதிகாரத்தினால் நிர்பந்தப்படுகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பாதிக்கப்படுவது மாணவர்கள். நான் பொறியியலில் வரும் அறிவிவியல் அளவிற்கு கூறவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் அடிப்படையே அடிபட்டு போகிறது. இயற்பியல் தத்துவங்கள் தன் சக்திகளை வெளிக்காட்ட முடியாமல் மனனம் செய்யப்படும் கச்சாப்பொருளாக மாறி விடுகிறது. அதனை இப்புத்தகம்  முழுதும் தகர்க்கிறது. இயற்பியலுக்கும் வாழ்வியலுக்கும் என்ன நடைமுறை சம்மந்தம் நாம் ஏன் அதனை படிக்கிறோம் என்பதை அழகுற கூறியிருக்கிறார்.

Share this:

CONVERSATION