சுத்தம் சோறு போடும்!

இது போன்ற ஒரு கட்டுரையினை எழுத வேண்டும் என எனக்கு தோன்றியதற்கு பல காரணிகள் இருக்கிறது.
1.இன்று துணியினை துவைத்தது.
2.வெகு நாட்களாக நண்பர்கள் என்னை பற்றி பகடியாக பேசுவது.
நண்பர்கள் பகடி என்றவுடன் பதிவில் பழி தீர்த்துக் கொள்ள போகிறான் என எண்ண வேண்டாம். அந்த பகடிகளும் ஒரு விதத்தில் உண்மையே.

முதல் காரணத்திற்கு வருவோம். என் கல்லூரிக்கு சீருடை என்பதால் எனக்கு அது மிக வசதியாக போனது. ஏனெனில் சீருடை இல்லை என வைத்துக் கொள்ளுங்கள் அப்போது நான் என் கல்லூரியில் இருக்கும் ஒன்றிரண்டு சுமாரான பெண்கள் என்னையும் பார்க்க வேண்டும் என தினம் தினம் வண்ண வண்ண ஆடைகளை தேர்ந்தெடுத்து போட வேண்டும். முக்கியமான விஷயம் வாரம் ஐந்து நாள் வகுப்பு இருந்தாலும் சரி ஆறு நாள் இருந்தாலும் சரி ஒரே நிற ஆடை மறுபடியும் இருக்கக் கூடாது. இப்போது பிரச்சினையே இதில் தான் இருக்கிறது. அப்படி ஒரே நிறம் வராமல் நானும் வண்ண வண்ண ஆடைகளை உடுத்தி செல்கிறேன் என வைத்துக் கொள்ளுங்கள் அதனை தோய்ப்பது யார்? ஆரம்பத்தில் சீருடை கொடுக்கும் வரை அந்த வேதனையினை நானும் அனுபவித்தேன். அதற்கும் ஒரு பிண்ணனி இருக்கிறது அஃதாவது எனக்கு துணி துவைக்க தெரியாது. ஓரிரு வாரங்கள் கழித்து (குறிப்பு-அப்போதும் சீருடை தரவில்லை) எனது முடிவுகளை மாற்றி முதல் வாரம் போட்ட ஆடைகளை அப்படியே வைத்து அதனையே அடுத்த வாரம் போட யத்தனித்தேன். போடும் போது சுகமாக இருந்தது. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து அந்த ஐந்து ஆடைகளையும் துவைக்க வேண்டும் என்னும் பாரம் என் மேல் விழுந்தது. அதனையும் சமாளித்து அதற்கடுத்த வாரங்களில் என் முடிவினை மாற்றினேன். அதன் படி ஒரு வாரத்தினை மூன்று நிற உடைகளை வைத்தே சமாளிப்பது என. அப்படியும் மூன்றினை துவைத்தல் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அப்போது தான் வரப்பிரசாதமான சீருடை என்னிடம் வந்து சேர்ந்தது. வெள்ளை நிறம். உண்மையினில் சொல்ல வேண்டுமென்றால் அந்த சீருடை வாயிருந்தால் அழும். அதையும் வண்ண நிற ஆடைகளை போலவே பழக்கபடுத்தி கடைசியில் ஒரு வாரத்தில் இரண்டு என்னும் கணக்கிறகு அதனை இழுத்துக் கொண்டு வந்தேன். நாளடைவில் காலரில் உள்ள அழுக்கு போகும் அளவு துணி துவைப்பதை அறிந்து கொண்டேன்.

காலரில் உள்ள அழுக்கு என்னும் போது தான் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. வாசகர்களே இரண்டாவது காரணமான எள்ளலும் இனிக் கூறப்போகும் அனைத்து விஷயங்களை சார்ந்ததே. அஃதாவது நான் ஒரு வாரத்திற்கு இரண்டு செட் சீருடைகளை அணிகிறேன். என் அறைப் பங்காளர்களோ ஒன்றினையே வாரக் கணக்கில் அணிகிறார்கள். ஆனால் எனது காலரில் தான் அழுக்கு அதிகமாக இருக்கிறது. என் துணி மீது சற்று கோபமே வந்தது. வாராவாரம் இது தொடரவே என் நண்பனிடம் இதனை பற்றி கேட்டேன். அவன் பொசுக்கென்று மூன்று நிமிடத்தில் குளித்து முடிப்பவர்களுக்கு இப்படி கம்மியாக அழுக்கு ஏற்படுகிறதே என சந்தோஷம் கொள் என்றான். உண்மையில் என்னை பார்த்தால் ஒரு வித அசூயையே சிலருக்கு ஆரம்பத்தில் ஏற்பட்டது. சாக்ஸினை கூட துவைக்க சோம்பல் கொள்வேன். எனக்கும் சுத்தம் என்பதற்கும் பலகாத தூரம்! அடிப்படையாக எனக்கு பிடிக்காத விஷயங்கள் தூங்குவதும் குளிப்பதும். அதில் இரண்டாவது எனக்கு சில சமயங்களில் அருவருப்பினையும் அளித்ததுண்டு.

குளியலினை பிரத்தியேகமாக கூறவேண்டுமெனில் என் விடுதியின் குளியலறையிலிருந்து நான் கூற வேண்டும். எங்கள் விடுதி இரண்டு கட்டிடங்களை கொண்டது. ஒன்று முதலாமாண்டு மாணவர்களுக்கு மற்றொன்று மீதமுள்ள ஆண்டு மாணவர்களுக்கு. முதலாமாண்டு முடிந்தவுடனே அநேகம் பேர் வெளியெ தங்க சென்று விடுவதால் மீதமுள்ள ஆண்டு மாணவர்களுக்கு ஒரே கட்டிடத்தினை அளித்தனர். முதலாமாண்டினை முடித்து புது அறைக்கு சென்று பொது குளியலறையினை பார்த்தால் ஒருக்கணம் அதிர்ந்தது. காரணம் ஒன்றிரண்டு குளியலறையினை தவிர மற்ற அனைத்திலும் தாழ்ப்பாள் இல்லை! இதனை என் தோழிகள் அறிந்து கொண்டபின் ஆண்கள் தானே என கேலி செய்தாள். இதனை நான் முற்றும் நிராகரிக்கிறேன். இதே போன்ற குளியலறை அமைப்பு அவர்களிடத்தில் ஏற்பட்டு பெண்கள் தானே என நாங்கள் கேலி செய்தால். . .வேண்டாம்ப்பா நான் இந்த விவாதத்துக்கே வர்ல!!! மேலும் அங்குள்ள குழாய்களினை திருகினால் அனைத்து தண்ணீரும் அதனை ஒட்டியுள்ள சுவற்றிற்கே செல்வது போன்ற அமைப்பு. இதன் மூலம் அதிலிருந்து வெளிவரும் நீரில் கால் வாசிதான் வாளியில் விழும்! இவையனைத்தினையும் உடைத்துக் கொண்டு தண்ணீரும் சீராக தாழ்பாளும் அமையப்பெற்ற ஒரு குளியலறை கிடைத்தது. நம்பி உள்ளே சென்றால் உள்ளங்கையளவு ஒரு ஓட்டை, அதுவும் கதவில்!! இவையனைத்தினை ஏன் கூறினேன் எனில் என்னிடம் தண்ணீர் நன்கு பிரவாகமாக வரும் குளியலறையினை கொடுத்தாலே எனக்கு குளிக்கப் பிடிக்காது இதில் இப்படி ஒரு அற்புதமாக கலைநயம் மிக்க அறைகளில் எப்படி எனக்கு குளிக்க மனம் வரும்? அதிலும் முக்கியமான விஷயம் சோப்பு. எனக்கு அறவே பிடிக்காத விஷயம். வாரத்தில் என்றாவது வேலைகளின்றி சாவகாசமாக இருக்கிறோம், அதுவும் குளிக்காமல் என உணர்ந்தால் மட்டுமே அதனை உபயோக படுத்துவேன்.

மீண்டும் ஆரம்பத்திற்கு வருகிறேன். துணி துவைக்கும் போது நான் அணிந்திருந்த டி-ஷர்ட் ஒன்றினை துவைத்தேன். அப்போது தான் எனக்கு நினைவே வந்தது அதனை நான் இரண்டு வாரமாக போட்டிருக்கிறேன் என்று. இந்த இரண்டு வாரம் கூட பொன்னியின் செல்வன் என்னும் நாவல் வாசித்துக் கொண்டிருந்ததால். என் நண்பர்கள் என்னிடம் அதனை அப்பறம் கூட வாசித்துக் கொள்ளலாம் துவை துவை என கேட்டனர். என்னால் அது முடியாதப்பா காரணம் வாசித்தல் தான் எனக்கு ஆக பிடித்த காரியம். அது எனக்கு சொர்க்கத்தில் மிதப்பதை போன்றது.

இப்போது அதில் தான் எனது அடுத்த வெறுப்பும் அடங்கியுள்ளது. தூக்கம். நான் இரவு அதிகம் வாசிக்கம் பழக்கமுடையவன். என் அறையில் இருப்பவர்களோ அப்பழக்கம் இல்லாதவர்கள். இதனை விட முக்கியமான விஷயம் அவர்களுக்கு இரவு இருள் சூழ்ந்திருந்தால் தான் தூக்கம் வருமாம்! இதில் ஒருவருட காலம் என்னுடன் தூக்கத்தினையும் சமாளித்துக் கொண்டு இருந்தனர். இங்கு இரண்டாம் ஆண்டிலிருந்து எனக்கென அறையில் குட்டி மின்விளக்கினை வாசிப்பதற்கென வாங்கி வைத்துக் கொண்டேன். அதில் அவர்கள் பிரச்சினை முழுதும் தீர்ந்ததா என்றால் இல்லை. ஆரம்பத்தில் அதனால் சந்தோஷமே அடைந்தனர். ஆனால் நாளடைவில் அதாவது தற்போது வெறிபிடித்தவன் போல் கண்விழிக்கிறேன். அதனால் துணி துவைப்பதில்லை, அறை கூட்டுவதில்லை, குளிக்க சோம்பேறித்தனம் இத்யாதி இத்யாதி. ஆனால் இவையனைத்திற்கும் நான் மட்டும் பொறுப்பாக முடியாது, என்ன நானும் ஒரு பொறுப்பு! சுத்தத்திற்கும் எனக்கும் காத தூரம் என ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் இதில் என்னிடம் சுத்தத்தினை எதிர்பார்த்தால் அது எவ்வளவு பெரிய அபத்தம்! அவர்கள் பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதாவது அடியேனின் சிறு பங்கு பல காலமாக இல்லாததால் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. என்னிடமும் ஏதோ ஒரு விலாசமில்லாத பூச்சி தன் லீலையினை காண்பித்துவிட்டது. அதன் விளைவு கழுத்திலும் முதுகிலும் வேணை கட்டிகளினை போல் வந்துவிட்டது. அப்போதாவது இந்த மானிடப்பதர் திருந்தியதா???? இதனை அறிந்த பின் தான் தோழி என்னிடம் சுத்தம் சோறு போடும் இல்லன்னா இப்படி தான் புண்ணா போடும் என்றாள். எனக்கு இந்த வாக்கியத்தில் உடன்பாடே இல்லை. நான் குளிக்கவில்லை என்றால் என்னை சுற்றியுள்ளவர்களுக்கு என்ன குடிமுழுகி போய்விடுகிறதா? நாற்றமெடுக்கிறதெனில் மூக்கினை மூடிக் கொள் என வீராவேசமாக சொல்லத் தோன்றுகிறது நாகரீகம் கருதி சொல்லத் தெரியாமல் சில நிமிட காக்காய் குளியலை மேற்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது!!

நாற்றம் எனும் போது தான் என் நாசியினை பற்றிய விஷயம் எனக்கு நினைவிற்கு வருகிறது. பாதாள சாக்கடை திறந்திருந்தாலோ, கறி கடையினை கடந்து சென்றாலோ யாரவது மூக்கினை மூடிக் கொண்டால் தான் எனக்கு சுய நினைவு வந்து என் நாசியினால் அது என்ன மணமா நாற்றமா என அறிய முயற்சிக்கிறேன். மிகவும் அழுக்கானவனாக மாறிவிட்டேன். இருந்தாலும் எனக்கு இது தான் பிடித்திருக்கிறது. கொஞ்சம் சுதந்திரமாக உணர்கிறேன்.

வெளித்தோற்றம் தான் அப்படியெனில் உள்த்தோற்றம் அதனை விட மோசமாக இருக்கிறது. என்னைக் கேட்டால் இந்த வாசித்தலை காட்டிய போதையினை என்னால் என் வாழ்வில் பெறவே முடியாது. வாசிக்கும் போது இருத்தலையே மறந்து விடுகிறேன். என் அறையில் இருப்பவர்கள் அவர்கள் செல்லும் போது அழைப்பதால் சாப்பிட செல்கிறேன் இல்லையெனில் அதுவும் கோவிந்தா தான். இப்போது என் வாசித்தல் ஏனோ தெரியவில்லை ஒரு வித வெறியாக மாறிவிட்டது. crime and punishment, alchemist, பொன்னியின் செல்வன் என மூன்று நாவல்களை தொடர்ந்து வாசித்திருக்கிறேன். அதில் முதலாவதும் கடைசியும் சற்று பெரிதானது வேறு. இதில் என் தோழிகள் கூறுவது போல் சுத்தம் போடும் சோற்றினை நான் எங்கே தேடுவது. தினம் தினம் ஆயிரம் ஆயிரம் அறிவுரைகள் என்னிடம் தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் சுத்தத்திற்கும் வருகிறது. இருந்தும் என்னை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. மேலும் இதில் எனக்கிருக்கும் சந்தோஷம் வேற எந்தவித வாழ்வியல் முறையும் நிச்சயம் தர இயலாது.

பின் குறிப்பு : முடிந்தால் அந்நாவல்களினை பற்றியும் எழுதுகிறேன்.

Share this:

CONVERSATION