பொன்னியின் செல்வன் (2)

. . .இப்போதிருக்கும் தமிழர்கள் எனக் குறிப்பிடுவது இக்கால இளைஞர்களை. தொடர்ந்து நான் பல கல்லூரிகளில் படிக்கும் சகாக்களை பார்த்து வருகிறேன். அவர்களின் நண்பர்களின் மூலமாகவும் அறிந்து கொள்கிறேன். அதன் படி நான் தெரிந்து கொண்டது இந்த நாவல்களின் மூலமாக கிடைக்கும் பொக்கிஷமெல்லாம் வெறும் தமிழ் ஆங்கிலும் போல் இருக்கும் மொழி சார் மாணவர்களாலேயே பெரும்பாலும் கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட இடைவெளி நிச்சயம் அகல வேண்டும். என் அம்மாவினை போல் எத்தனையோ அம்மாக்கள் கல்கி, சாண்டில்யன், சிவ சங்கரி என இலக்கிய ரசனையினை தன்னுள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மகன்களுக்கு அத்தகைய ஆசைகளே இல்லாமல் தெரிகிறான். இதன் காரணமாகவே இலக்கியம் அடுத்த தலைமுறைக்கு செல்வதில் கொஞ்சம் கஷ்டப்படுகிறது.

சரி இப்போது வரலாற்று நாவல்களுக்கு வருவோம். அதில் எங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பது பொதுப்படையான கேள்வியாக இருக்கும். இப்போது இருக்கும் விஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என கண்டுபிடிக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு வகையில் இந்நாவல்களும் அதற்கு துணை புரிகிறது என்றே சொல்லலாம். நமது முன்னோர்களை தேடிச் செல்வதில் இப்பிரதிகள் மிகவும் உறுதுணையாக இருக்கும். நம்மைச் சுற்றி எத்தனையோ கோயில்கள் கல்வெட்டுகளை சுமந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது நமக்கு சொல்வது என்ன என்பது பெரும்பாலும் தெரியாமல் தொல்பொருள் ஆய்வாளர்களாக விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் உதவி புரிகிறது. ஏன் இப்படி கலாச்சாரம் பகுதிவாரியாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது என் யூகத்திற்கே வர மறுக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் கலாச்சாரமும் நாகரீகமும் மாறுபட்டுக் கொண்டே வருகிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அதன் பரிணாமம் நடை பெறுவதற்கு முன் அதன் தோற்றம் என்ன? ஏன் பரிணாமம் அடைந்தது? பரிணாமம் நடந்திருக்கிறது எனில் அந்த முறையில் இருந்த தவறு என்ன? என எத்தனையோ கேள்விகள் இருக்கிறது. மேலும் இப்போதுள்ள பல சமூக பிரச்சினைகளுக்கு அந்த கால கலாச்சாரம் கூட விடையளிக்கலாம். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இல்லையென்றால் இப்போதுள்ள அரசியல் சாசனங்கள் அமைந்திருக்க முடியாது என்பது என் எண்ணம்.

முன்னமே கூறியிருப்பது போல் நம்மை நாம் வெளிக்கொணர்தல். ஆங்கிலத்தில் representation எனக் கூறப்படும் நிலையில் நமது செவ்வியல் தன்மை எவ்வளவு தூரம் நமது செயலில் இருக்கிறது? இப்போதுள்ள கலை படைப்புகளை நான் குறை சொல்லவில்லை. அது சினிமாவாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும் அது நடக்கும் காலத்தினையோ அல்லது அது தன் கதைக்கென கையினில் எடுத்துக் கொண்ட காலத்தினையோ முழுதும் துயிலுரிக்க வேண்டும். இந்த துயிலுரித்தல் எதற்கெனில் அது தான் நான் ஆங்கிலத்தில் குறிப்பிட்ட representation. இப்போது நான் ஒரு வரலாற்று நாவல் எழுதுகிறேன் என வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் இராஜராஜ சோழனைப் பற்றி. அவன் தஞ்சையில் சிவனுக்கு கோயில் எழுப்பினான் என வேறு எதுவும் கூறாமல் என் கதை களத்தினுள் சென்று விடுகிறேன். மேலும் அந்நாவலில் அந்த குறிப்பிட்ட சோழனின் முன் வரலாற்றினையும் எதுவும் கூறவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த நாவலினை தமிழ்நாட்டினை பற்றி எதுவும் தெரியாத ஒரு வெளிநாட்டவன்(இலக்கிய வெறியன் போன்றவன் ஆங்கில மொழிபெயர்ப்பில்) வாசிக்கிறான் எனில் அவனின் மன நிலை எப்படி இருக்கும்? என்ன தான் நாவலில் விறுவிறுப்பு இருந்தாலும் இது வரலாற்று நாவல் என்பதால் கொஞ்சாம் ஆதாரங்களை எதிர்ப்பார்ப்பார்கள். அந்தாவது இராஜராஜ சோழனுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? இராஜராஜ என்பது புனை பெயர் போல தெரிகிறதே உண்மைப் பெயர் என்ன? அக்காலகட்டத்தில் சிவனை போற்றும் சைவ மதம் மட்டும் தான் இருந்ததா? சைவம் வைணவத்தினை தாண்டி சமணம், கிறித்துவம் போன்ற மதங்கள் இல்லையா? என பல கேள்விகள் எழலாம். ஆனால் இவை அனைத்திற்கும் விடை கிடைக்கும் போது அதனை அறிந்த சந்தோஷத்தில் அதனை பிரகடனப் படுத்துகிறோம். அப்போது நம் கருவூலம் நம் எல்லைகளை தாண்டி செல்கிறது. அதாவது தமிழன் உலகளவில் தன்னை represent செய்கிறான். நம் நிலை உயர்கிறது. ஜூலியஸ் ஸீஸர், எகிப்து நாட்டு ஃபாரோக்கள், க்ளியோபாட்ராவின் காலத்திய அரசாங்கம், ஹோமரின் இலியட் காவியம் கடல் கடந்து பல நாடுகளில் தெரியும் அளவிற்கு சென்றிருக்கிறது. அப்படியிருக்கையில் நமது களஞ்சியத்தினை சுமந்து செல்லும் கடமை நம்மிடம் தான் இருக்கிறது. ஆனால் அப்படி செல்வதற்கு முன் நமக்கு அதனை பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறது என்னும் சுய பரிசீலனை நிச்சயம் தேவை.

கொஞ்சம் சுயநலமாக இப்போது சிந்திப்போம். இதனால் நமக்கு ஏற்படும் லாபம் என்ன? இது சிந்திக்க வேண்டிய விஷயம். சில மாதங்களுக்கு முன் சினிமாவில் 7ஆம் அறிவு என்னும் திரைப்படம் வெளிவந்தது. அதில் போதி தர்மர் என்னும் கதாபாத்திரம் தமிழன் எனக் கூறி அவரின் அரும்பெரும் சாதனைகளை திரையில் அடுக்கியிருந்தனர். அதன் பின் சின்னத்திரையில் உண்மையில் அவர் தமிழர் தானா என பல கேள்விகள் எழுந்தது. ஆனால் இதையனைத்தினையும் உடைத்துக் கொண்டு நிதர்சனமாக நிற்கும் ஒரே உண்மை மருத்துவம். அந்த காலத்திலேயே அப்படி மருத்துவங்கள் தீர்க்க முடியாத வியாதிகளை தீர்த்திருக்கிறது எனக் கூறுகிறது. ஆனால் எக்ஸைல் என்னும் நாவலும் இதனைப் போன்றே ஒரு விஷயத்தினை முன்னிறுத்தியது.(குறிப்பு - அந்நாவலினை பற்றியும் ஒரு நாள் எழுதுவேன் இப்போது அதிலிருந்து சின்ன பகுதி). அது நாவல் ஆனதால் இத்தமிழ்ச் சமூகத்தில் எடுபடவில்லை. அதில் தமிழ் மரபில் தோன்றிய சித்தரான போகரின் சிஷ்யர் கருவூராரின்  சித்த மருத்துவங்களை கல்வெட்டு ஆதாரங்கள், அதாவது சித்த பாடல்களுடன் அதில் பதிவிட்டுள்ளார். உண்மையில் அது கருவூலம் தான். அது இங்கு நிராகரிக்கப்பட்டது பற்றி எனக்கு கொஞ்சமும் கவலை இல்லை. காரணம் அதற்கு முன்னரே எழுதப்பட்டவையான இக்கல்கியின் நாவல்களே அதன் கருவூலங்களே இக்கால மாணவர்களிடம் தெரியாமல் இருக்கும் போது இது தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

அப்படி நமக்கு கிடைக்கும் பொக்கிஷங்கள் ஏடுகளின் வாயிலாகவோ அல்லது கல்வெட்டுகளின் வாயிலாகவோ தான் கிடைக்கும். அந்த கல்வெட்டுகளுக்கென சில வரலாறு இருக்கிறது. அது எங்கிருக்கிறது என தேடிப் போவதற்கு இது போன்ற நாவல்களும் உதவலாம்.

ஒரு விஷயத்தினை நிர்பந்தப்படுத்துவது தவறு எனக் கூறும் நானே இக்கால சமூகத்திடம் இவ்விஷயத்தினை நிர்பந்தப்படுத்துகிறேன். வரலாற்று நாவல்களையாவது வாசியுங்கள். முதலில் நம்மை, நம்மை சுற்றி இருக்கும் ஆச்சரியங்களினை, அதன்பின் ஒளிந்து கொண்டிருக்கும் வரலாற்றினை அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் எழும்பி நிற்கும் ஸ்தூபங்களுக்கும் கற்சிலைகளுக்கும் உயிர் இல்லை என்றாகிவிடும்.

எக்ஸைல் நாவலினை குறிப்பிட்ட போது தான் எனக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது. அதாவது அந்நாவலின் விமர்சனக் கூட்டத்தில் பேசிய ஞானி அந்நாவலினை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கிழித்துக் கொண்டிருந்தார். அப்படி சொல்லும் போது இடையில் சாரு நிவேதிதாவினை பார்த்து “இந்நாவல் அடுத்த தலை முறைக்கு எதை எடுத்து செல்கிறது?” எனக் கேட்டார். இப்போது எனக்கு இந்த கேள்வி தான் நினைவிற்கு வருகிறது. நம்மால் எடுத்து செல்லக் கூடியது எதுவெனில் நம் முன்னோர்களின் வரலாறு மட்டுமே.

இராஜராஜ சோழனிற்கு பட்டாபிஷேகம் நடைபெறும் போது புலவர் சாத்தனார் அவரின் முன்னோர்களான சோழன் சிபிச் சக்கரவர்த்தி முதல் அவர்களின் பெருமைகளை கூறி வந்திருக்கிறார். அதனை முடித்த பின் இந்த சோழனோ என் தலை முறையிலிருந்து தத்தமது வரலாற்றினை மட்டும் செப்பனிடுங்கள். பழைய வரலாற்றினை அழிக்க சொல்லவில்லை ஆனால் ஏன் மறுபடியும் மறுபடியும் அதனை புதுப்பிக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என அக்காலத்திலேயே நவீனமாக யோசித்து கூறியிருக்கிறார்.

ஏன் நான் மறுபடியும் இராஜராஜ சோழனை சுற்றி சுற்றி வருகிறேன் என கேள்வி வாசிப்பவரின் மனதில் எழுந்திருக்கலாம். அதற்கான பதில் இராஜராஜ சோழன் தான் பொன்னியின் செல்வன். இதுவரை எத்தனையோ பேர் கல்கியின் நாவல்களை விமர்சித்திருக்கிறார்கள். இது விமர்சனம் கருதி நான் எழுதவில்லை. எனக்கு நான் கொண்ட உணர்வினை பதிவிடுகிறேன். அவ்வளவே! எப்படியோ நாவலுக்குள் நுழைந்துவிட்டேன்.
(தொடரும். . .)

Share this:

CONVERSATION