பொன்னியின் செல்வன் (1)

சென்ற வாரம் தான் ஆனால் தேதி எனக்கு ஞாபகம் இல்லை. அப்போது தான் பொன்னியின் செல்வன் என்னும் கல்கி எழுதிய நாவலினை வாசிக்க ஆரம்பித்தேன். இது என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த நாவலும் கூட. அம்மா தன் பதினைந்து வயதில் இதனை படித்தாளாம். அந்த வயதில் அவளும் ஒரு வெறி பிடித்த மிருகத்தினை போல் நாவல்களை வாசித்திருக்கிறாள். இன்றும் கூட அந்நாவல்களின் தாக்கம் அவளுள் நிறைந்திருக்கிறது.

எனக்கும் கல்கியின் நாவல்களை வாசிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் கையில் நூல் இல்லை. அப்போது இணையதள வசதிகள் மூலம் நாவலினை எடுத்தேன், அதுவும் கல்கியின் நான்கு நாவல்களை. அதில் முதலில் நான் வாசித்தது ”சிவகாமியின் சபதம்”. ஆனால் அந்த வாசிப்பினை பற்றிய அனுபவம் கொஞ்சம் சுவாரஸ்யமானதும் கூட. அப்பா வங்கியில் வேலை பார்ப்பவர். முதலில் அலுவலகம் சேலத்தில் பழைய தீயணைப்பு நிலையம் இருந்த இடத்திற்கு அருகில் இருந்தது. ஆனால் அந்த இடத்தில் அந்த கட்டிட முதலாளிக்கும் வங்கியின் மேனேஜருக்கும் சின்ன பூசல் ஏற்பட்டது. ஏற்கனவே செய்யப்பட்ட முடிவின் படி நிலையான வாடகை என ஒப்பந்தத்தில் இரு சாராரும் கையொப்பமிட்டிருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் முதலாளிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை வாடகையினை ஏற்றிவிட்டான். இது முடியாது என மேனேஜரும் வங்கியில் உடன் வேலை பார்ப்பவர்களும் மல்லு கட்டிக் கொண்டு நின்றனர். எதுவும் வேலைக்காகவில்லை. அவனோ கொஞ்சம் சாமர்த்தியசாலியாக இருந்திருக்கிறான். என்ன செய்தான் எனில் கழிவறையினை பூட்டி சாவியினை எடுத்து சென்றுவிட்டான். வங்கியில் வேலை பார்ப்பவர்களில் நான்கைந்து பேருக்கு சர்க்கரை வியாதி! வேறேன்ன செய்ய முடியும் இரண்டு மாடிகள் இறங்கி தான் தங்கள் உள்வேலைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். உடனுக்குடனே வேறு இடத்தினையும் பார்க்க ஆரம்பித்திருந்தனர். அப்படி மாற்றும் போது அங்கிருந்த பழைய மாடல் கணினிகளையும் நவீனமாக மாற்றும் படி மேலிடத்திலிருந்து ஆணை வந்திருந்தது. அதன்படி மென்பொருள் வேலைகளும் சீக்கிரம் முடிந்து அணைத்தும் இடம்பெயர்ந்து கச்சிதமாக புது இடத்திற்கு ஒன்றிப் போயினர். அப்போது தான் அடுத்த பேச்சுவார்த்தை எழுந்தது, அஃதாவது பழைய கணினிகளை என்ன செய்வது என? அப்போது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் வேண்டுமானால் விலை கொடுத்து எடுத்துக் கொள்ளட்டும் என்றனர். அதன்படி நானும் ஒன்றினை அப்பா சார்பாக எடுத்துக் கொண்டேன். அதன் விலை 1500! அதனுள்ளே எந்தவித புது மேம்படுத்தபட்ட மென்பொருள்களையும் ஏற்ற முடியாது. அதனை தாங்கும் அளவு அதனிடம் இடம் இல்லை. கணினி பொறியியலாளரினை வைத்து அதனை மாற்றிக் கொள்ளலாம் ஆனால் இதற்கு எதற்கு என கணினியினை பற்றி ஏதாவது அறிந்து கொள்ளலாம் என வைத்திருந்தேன். அப்போது தான் இணையதளத்திலிருந்து என் அலைபேசி வழியாக டவுன்லோட் செய்த கல்கியின் நாவல்களை கணினியில் வாசிக்கலாம் என ஏற்றினேன். ஏற்றியவுடன் சிவகாமியின் சபதத்தினை வாசிக்க ஆரம்பித்தேன். அன்று பெரிய மழை பெய்து கொண்டிருந்தது. வாசித்து கொண்டிருந்த தருணங்களில் பழக்கம் இல்லாதத்தால் கண்களும் வலி கொள்ள ஆரம்பித்தது. இருந்தும் நிறுத்தாமல் அம்மாவின் வசைமொழிகளையும் வாங்கிக் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தேன். பி.டி.ஃபில் அது நான்கு பாகமாக இருந்தது. அப்போது எனது வாசிப்பில் வேகம் இல்லை. இரண்டாவது நாள் இரண்டாவது பாகத்தில் பாதி முடித்திருந்தேன். அப்போது சடாரென இடி ஒன்று விழுந்தது. வீட்டின் பின் தென்னை மரம் இரண்டு இருப்பதால் மட்டை ஏதாவது விழுந்திருக்கும் என சென்று பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. திரும்பி கணினிக்கு வரும் போது அதன் திரை கறுப்பாக இருந்தது. எத்தனையோ முறை ஆன் செய்யப் பார்த்தேன் ஆனால் முடியவில்லை. சிவகாமியினை நம்பி மோசம் போனோமே என்னும் விரக்தியில் அதன் சிந்தனையிலேயே ஆழ்ந்தேன். அது எதுவெனில் எப்படியாவது அந்நாவலினை வாசித்தாக வேண்டும். ஆனால் எப்படி என்பது தான் கேள்வி. அடுத்த நாள் பள்ளிக்கு சென்று என் தமிழாசிரியை இடம் சிவகாமியின் சபதம் இருக்கிறதா ஒரே வாரத்தில் கொடுக்கிறேன் என்றெல்லாம் ஐஸ் வைத்தேன். அவளோ கொடுக்கக் கூடாது என்பதற்கு கதை ஒன்றினை உள்ளங்கையிலேயே வைத்திருந்தாள். ஏற்கனவே கல்லூரிக் காலத்தில் அவளிடம் பொன்னியின் செல்வனை வாங்கிச் சென்று ஒருவன் திரும்பித் தரவில்லையாம். மேலும் அவளின் மனம் உருகும் படி என்ன என்னமோ சொன்னேன். அவள் இன்னும் கொஞ்சம் இறங்கி அது என் சேந்தியில் இருக்கிறது அதனை தேடி எடுத்து வைக்கிறேன் என்றாள். திடிரென வேதாளம் முருங்கை மரம் ஏறினாற்போல நூலகத்தில் சென்று படிக்கலாமே என அறிவுரை செய்ய ஆரம்பித்தாள். அதுவரை அப்படி ஒரு எண்ணம் என்னிடம் இல்லவே இல்லை. சரியென அவளிடம் கேட்ட அந்த வார சனிக்கிழமையே நூலகத்திற்கு சென்றேன். அங்கு அவர்களோ உறுப்பினராக இருந்தால் மட்டுமே படிக்க முடியும் என குண்டு ஒன்றினை போட்டனர். அதன் பிறகு என்ன என்னவோ செய்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி வாங்கி அன்று மட்டும் வாசிக்க அனுமதி பெற்றேன்.உறுப்பினர் அட்டையினை வாங்கியிருக்கலாமே எனக் கூறலாம். அதையும் மூன்று முறை செய்துவிட்டேன் ஆனால் இது வரை எனக்கு உறுப்பினர் அட்டை வந்த பாடில்லை. அதன் முறை என்னவெனில் ஒரு போஸ்டல் கார்டினை வாங்கி அதில் என் விலாசத்தினை எழுதி அவர்களிடம் கொடுக்க வேண்டும் அவர்களும் அனுப்பி வைப்பார்கள். பின் உறுப்பினர் ஆகிவிடலாம். நானும் மூன்று முறை செய்துவிட்டேன் ஆனாலும் வந்த பாடில்லை. கேட்டால் முகவரி தவறாக இருக்கலாம் என்கின்றனர். சரி நாம் சிவகாமிக்கு வருவோம். அங்கு அந்த மீதமிருந்த இரண்டாம் பாகத்தினை முடித்தேன்.

பசியின் தாக்கம் அதிகமாகவே நூலகத்தினை விட்டு ஒரு ஐந்து மணி நேரத்திற்கு பின் வந்தேன். அதன் பின் என் மூளை அடுத்த கட்ட யோசனையில் இறங்கியது. அது மீதமுள்ள இரண்டு பாகத்தினை எப்படி வாசிப்பது என்பதே. ஒரு மாத காலம் சிவகாமி நடுவில் கைவிடப்பட்டவளாவே இருந்தாள். பின் கையில் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து புத்தகத்தினையே வாங்கலாம் என சென்றேன். என் கைக்குள் சிவகாமி அடங்கவில்லை. அப்போது கல்கியின் மற்றொரு நாவலான “பார்த்திபன் கனவு” என்னும் நாவலினை வாங்கினேன். வாசிப்பு சிவகாமியிலிருந்து பார்த்திபனுக்கு மாறியது. சீரான வாசிப்பும் விறுவிறுப்பிலும் நாவல் முடிந்தது. ஆனால் அதில் இருந்த பிரச்சினை என்னவெனில் சிவகாமியின் சபதத்தின் முடிவு இதில் பட்டவர்த்தனமாக போட்டு விட்டனர். மேலும் இதனை வாசிப்பதற்கு முன் என் தமிழ் ஆசிரியையிடம் இந்நாவலினை பற்றி கேட்டேன். அவரோ கல்கியில் நாவல்களில் அதுவும் மூன்று வரலாற்று நாவல்களில் கொஞ்சம் சோடை என்றால் அது இது தான் என்றாள். எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. அதனை ஏன் என கட்டுரை போகப் போக சொல்கிறேன்.

கல்கியின் மூன்று வரலாற்று நாவல்களான பொன்னியின் செல்வன் சோழர்களையும், சிவகாமியின் சபதம் பல்லவர்களையும், பார்த்திபன் கனவு சோழர்களையும் சுற்றி நடக்கிறது. இந்நாவல்களை தொடர் வாசகனாக மட்டுமின்றி ஒரு தமிழனாக முழுதும் ஆதரிக்கிறேன்.அதற்காக மூலக் காரணம் ஒன்று இருக்கிறது. நான் ஓரான் பாமுக்கின் my name is red, தாஸ்தாவெவ்ஸ்கியின் notes from the underground மற்றும் crime and punishment போன்ற நாவல்களை வாசித்திருக்கிறேன். அந்த நாவல்கள் இப்போதுள்ள காலகட்டத்தில் எழுதபட்டவை அல்ல. அதில் தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் பீட்டர்ஸ்பர்கினை அப்படியே துயிலுரித்து வாசகனுக்கு காட்டும். ஓரான் பாமுக்கின் நாவலிலோ அந்த கால இஸ்தான்புல்லினை சித்தரிப்புக்கு அப்பால் கொண்டு செல்லும் அளவிற்கு பிரதி அமைந்திருக்கும். இந்த இரண்டாம் நாவலினை தான் நான் ஒப்பிடுவதற்கு எடுத்துக் கொள்ளப்போகிறேன். அந்த நாவலின் கதைக்களம் எந்தக் காலமெனில் அப்போது இந்தியாவின் பெயர் ஹிந்துஸ்தான். இப்போது நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அந்த காலகட்டத்தில் அங்கே சுல்தான் என்னும் மன்னனின் ஆட்சி நிலையில் இருந்தது. அப்போது ஒரு கொலை நடக்கிறது அதனை சுற்றியே கதை நகர்கிறது. அந்த கதைக்குள்ளேயே அக்காலகட்டத்தில் நிலவியிருந்த  கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தினை அழகுற அந்த பிரதி வாசகனிடம் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஒருவகையில் அதனை இஸ்தான்புல்லின் வரலாற்று சுவடுகளை சுமந்து கொண்டு நகர்கிறது என்றும் சொல்லலாம். ஆக இப்போது அது ஒரு கருவூலம். அதன்படி தமிழில் கருவூலமாக எத்தனையோ வரலாற்று சுவடுகளை சுமந்து செல்லும் நாவல்கள் இருக்கிறது அது இப்போதிருக்கும் எத்தனை தமிழர்களுக்கு தெரியும் ?
(தொடரும். . .)

Share this:

CONVERSATION