தேல்ஸ்

எனக்கு பன்னிரெண்டாம் வகுப்புவரை அறிவியலின் மேல் அதீத ஆர்வம் இருந்து வந்தது. என்ன ஆனதோ தெரியவில்லை கல்லூரிக்கு வந்தபின் அது கொஞ்சம் தூங்கிவிட்டது. இப்போது சிறிது நாட்களுக்கு முன் செய்தித் தாளில் ஹிக்ஸ் போஸன் என்னும் துகளின் கண்டுபிடிப்பினை பற்றி வாசித்தேன். உண்மையில் அது என் அறிவியல் ஆர்வத்தினை தூண்டியது. காரணம் இந்த பிரபஞ்சம் பன்னிரெண்டு பொருள்களால் ஆனது என்று அறிவியலாளர்கள் சொல்லும் போது இன்னும் ஒன்று இருக்கிறது என ஹிக்ஸ் என்னும் விஞ்ஞானி கூறியிருக்கிறார். அதனை தான் ஹிக்ஸ் போஸ்ன்ஸ் என்றும் கடவுள் துகள் என்றும் கூறுகின்றனர். அதற்கு விளக்கம் எதுவெனில் மேட்டர் எனக் கூறப்படும் இயற்பியல் தத்துவம் இருவகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று துகள்(particle) மற்றொன்று அலைகள்(wave). ஹிக்ஸின் கேள்வி என்னவெனில் பிரபஞ்சமே மேட்டர் எனக் கூறப்படும் கருப்பொருளால் ஆனது எனில் அதில் ஒரு பகுதியான துகளிற்கு மட்டும் ஏன் எடை என்னும் தன்மை வர வேண்டும்? ஏன் அலைகளுக்கு எடை இல்லை? இதற்கான விடை தான் அந்த கடவுள் துகள். அத்துகளிற்கு எடை இல்லை. ஆனால் அது அனைத்து துகளிற்கும் எடையினை வழங்குகிறது என்பதே அவரின் தத்துவம். அதனை இப்போது செய்முறையில் அதனை சாதித்து இருக்கிறார்கள்.

சரி இப்போது என் விஷயத்திற்கு வருவோம். இதனை வாசித்து புரிந்து கொண்டவுடன் எனக்கு இயற்பியலின் மேல் ஆர்வம் அதிகமானது. ஏற்கனவே கூறியிருப்பது போல சுஜாதா எழுதிய கடவுள் என்னும் புத்தகம் வாசித்தே அறிவியலின் பாதி பைத்தியமாக ஆனேன். இப்போது முழுதாக மாறுவதற்கு சிறிது சிறிதாக முயற்சியில் இருக்கிறேன்.

இந்த உலகமானாலும் சரி ஒட்டு மொத்த பிரபஞ்சம் ஆனாலும் சரி அதனை தத்துவங்களால் அடக்க முடியும் என்பதே விஞ்ஞானிகளின் வாதம். அதனை வைத்து பார்த்தால் இந்த பிரபஞ்சம் தத்துவங்களால் செதுக்கப்பட்டிருக்கிறது. அந்த அனைத்து தத்துவங்களும் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதனை அறிய ஆசைப்பட்டேன். அதிலும் இருவகை உண்டு. அதாவது தத்துவங்களுக்கு இடையில் நடத்தப்படும் போர்கள். இயற்பியல்வாதியும் உயிரியல்வாதியும் தங்களிடம் சில கோட்பாடுகளை வைத்துக் கொண்டு இதில் தான் இந்த உலகம் அடங்குகிறது, இல்லை இல்லை இதில் தான் அடங்குகிறது என ஒருவர் மாற்றி ஒருவர் போரிட்டு கொண்டிருக்கின்றனர். இது இன்று நேற்று துவங்கியது அல்ல. இதன் வித்து, அஃதாவது அண்ட சராசரத்தினையும் அடக்கக்கூடிய தத்துவத்திற்கான தேடல் நமது புராணங்களில் ஆரம்பிக்கிறது. படைப்பவன் ஒருவன் காப்பவன் ஒருவன் அழிப்பவன் ஒருவன் என கற்பிதங்களாக அனைத்தும் வரையறுக்கப்பட்டுவிட்டது. அதுவும் அந்தந்த மதங்களுக்கு ஏற்ப. இக்காலகட்டத்தில் பகுத்தறியும் சக்தி வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் கி.முவில் இந்த மதங்களின் நம்பிக்கை எப்படி இருந்திருக்கும்? அப்போது மதங்கள் இருந்ததா? அப்போது அறிவியல் இருந்ததா? என கேள்விகள் என்னுள் அடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் கேள்விகள் எனக்குள் தோன்றிய போது தெரியாது அதற்கான பதிலில் தான் அறிவியலின் ஜனனம் இருக்கிறது என. அது தான் தேல்ஸ்.


இப்போது துருக்கியாக இருக்கும் இடதில் இருந்த மிலேதஸ் என்னும் இடத்தில் 624கி.மு விலிருந்து 546கி.மு வரை வாழ்ந்தார். உலகத்தினை பொறுத்தவரை இவர்தான் அறிவியலின் வித்து. அது வரை முன்பு கூறியதை போல் கண்ணுக்கு புலப்படாத ஒரு விஷயம் தான் இது இது இப்படி இப்படி இருப்பதற்கு காரணம் என கிரேக்கர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அந்த தொன்மத்தினை உடைத்து கொஞ்சம் பகுத்தறியும் சக்தியினையும் பிரபஞ்சத்தின் வித்திற்கான தேடலினையும் முதன் முதலில் இவ்வுலகத்திற்கு அளித்தார். இவரின் பிரதான தத்துவமே உன்னை நீயே அறிந்து கொள் என்பது தான். அதன் அர்த்தம் உனது சிருஷ்டி உன் தாயின் மூலமாக வருகிறது அவளின் சிருஷ்டி வேறொரு பெண்ணின் மூலமாக அவளின் சிருஷ்டி என நீண்டு கொண்டே செல்கிறது. அப்படியே செல்கிறதென்றால் ஒட்டு மொத்த மனித குலத்தின் சிருஷ்டி எங்கிருந்து வந்தது? மனிதனை விட்டாலும் இங்கு காணப்படும் அனைத்து பொருள்களின் சிருஷ்டியும் எங்கிருந்து வந்தது? இன்னும் தார்மீகமாக கூறப்போனால் எங்கிருந்து வந்தது என்னும் கேள்வியினை முதன் முதலில் எழுப்பியது தேல்ஸ்.

மேட்டர் எனக் கூறி அதனை கருப்பொருள் எனவும் கூறியிருந்தேன். உண்மையில் அதன் விளக்கம் எதுவெனில் ஒரு சூன்யத்தினை, ஏதுமற்ற இடத்தினை ஒரு விஷயம் நிரப்புகிறது எனில் அது தான் நான் சொல்லும் கருப்பொருள்(matter). நாம் அதனை கருப்பொருள் என்றே வைத்துக் கொள்வோம். நம்மை சுற்றியிருக்கும் அனைத்தும் அந்த கருப்பொருளிலிலேயே அடங்கும் அது மரமாகட்டும் அல்லது ப்ளாஸ்டிக் ஆகட்டும். இப்போது தேல்ஸ் என்ன சொல்கிறார் எனில் அந்த கருப்பொருளுக்கும் உயிர் இருக்கிறது. இதனை கிரஹித்துக் கொள்வது சற்று கடினம் தான். இருந்தும் இந்த சிந்தனை அவருக்கு எப்படி உதித்தது எனப் பார்ப்போம்.

படத்தில் முதலாவதாக இருப்பதன் பெயர் லொடஸ்டோன். அதற்கு காந்தத் தன்மை இருக்கிறது. இரண்டாவதாக படத்தில் தெரிவதன் பெயர் அமபர். இது மரப்பட்டைகளிலிருந்து கிடைக்கப்படும் திரவம் போன்ற ஒன்றினால் செய்யப்பட்டது. இதனை தேல்ஸானவர் சிக்கி முக்கி கல்லினை போல் உரசியிருக்கிறார். அங்கு நெருப்பு தோன்றியது, இவருக்கோ மின்சாரம் தோன்றியது. இப்போது அதிலில் தான் அவருடைய பிரச்சினை அடங்கியுள்ளது. ஒரு பொருளுக்கு மின்சாரத்தினை உருவாக்கும் சக்தி இருக்கிறதெனில் அதற்குள் ஆன்மா இருக்கிறது. இதனை பின்னால் தோன்றிய தத்துவவாதிகள் எதிர்த்தனர். ஆனால் இதனை பிரதானமாக வைத்து அவர் சொல்ல முனைந்தது ‘இருத்தலுக்கும் இருத்தலின்மைக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை’ என்பதே.காரணம் இரண்டிற்கும் ஆன்மா இருக்கிறது. இதனை பொதுப்படையில் அவர் தெளிவு படுத்தியவுடன் அவரை பார்த்து ஒரு கேள்வி வந்துள்ளது. வித்தியாசம் இல்லையெனில் நீங்கள் ஏன் இன்னும் இறக்காமல் உயிருடன் இருக்கிறீர்கள் என. அதற்கு தேல்ஸின் பதிலோ வித்தியாசம் இல்லை என்பதால் தான் நான் உயிருடன் இருக்கிறேன் என்றிருக்கிறார். இது அவரின் ஆரம்ப கால சிலாக்கியங்களே.

இவருடைய பிரதான தத்துவத்திற்கு செல்வதற்கு முன் இவரின் சின்ன சின்ன அந்த கால வித்தைகளை கூறலாம் என நினைக்கிறேன். கி.மு 585 இல் ஹலிஸ் என்னு போர் அல்யோதஸ் தலைமையில் லிடியா தேசத்திற்கும் சயாக்ஸேர்ஸ் தலைமையில் மெடெஸ் தேசத்திற்கும் இடையே அவர் இருந்த துருக்கியில் ஐந்து ஆண்டுகாலம் நடந்தது. அப்போதெல்லாம் அத்தேசங்களில் பல கடவுளர்களின் உருவ வழிபாடுகள் ஆரம்பித்திருந்தது. அப்போது சூரிய கிரஹணம் நடக்கவிருந்தது. அதனை தேல்ஸ் முன்னரே கணித்துவிட்டார். அதனை கூறியும் இருக்கிறார். அதனை யாரும் நம்பவில்லை. போரின் போது காலையில் போருக்கு செல்லும் போது இருட்டிவிட்டதால் ஏதோ தீய சக்தியின் சகுணம் என சமாதானம் பேச முடிவெடுத்து போரினை நிறுத்தினர். ஆனால் இதனை, கிரஹணத்தினை தேல்ஸோ ஏற்கனவே கணித்துவிட்டார். இது சிலருக்கே தெரிந்த விஷயம். அப்போது அந்த உருவ வழிபாடுகளை உடைக்க தன் தத்துவங்களை கையினில் கொண்டார். ஆனால் என்னை பொறுத்தவரை அவர் அந்த விஷயத்தினில் தோற்றுவிட்டார் என்பதே. காரணம் முன்னர் கூறிய அந்த கருப்பொருளுக்கும் உயிர் இருக்கிறது என்னும் இடத்திலேயே அவர் மற்றொன்றினையும் குறிப்பிட்டிருக்கிறார். அஃதாவது அனைத்து பொருள்களும் கடவுள் தன்மையினால் நிறைந்துள்ளது என்பதை.

இந்த கருத்தினை ஊர்ஜித படுத்தும் வகையில் அவரின் பிரதான பிரபஞ்ச தத்துவம் அடங்கியுள்ளது. அவரின் தத்துவம் எதுவெனில் ஒரே கொள்கை தான் அனைத்து பொருளையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. அந்த கொள்கையால் தான் அனைத்து பொருள்களின் இருத்தலும் தெரியப்படுத்தப்படுகிறது, அந்த கொள்கையிலிருந்து தான் அனைத்தின் பிறப்பும் தோன்றியது மேலும் அதிலேயே சென்று அனைத்தும் தன் முடிவினை தேடிக் கொள்கிறது. பின் அந்தக் கொள்கை மாறாமல் வேறு ஒரு பொருளாக உருவெடுக்கிறது. இது புரிந்து கொள்ள சற்று கடினமாகத் தான் இருக்கும். இதன் உள்ளார்ந்த அர்த்தம் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து பொருள்களின் ஜனனமும், இருத்தலும், மரணமும், அதனுள் ஏற்படும் மாற்றங்களும் ஒன்றை பொருத்தே அமைகிறது. இப்போது புரியும் என நினைக்கிறேன். ஆனால் இத்துடன் அவரின் தத்துவம் முடியவில்லை. அந்த ஒன்றினைத் தான் கடவுள் அல்லது கணக்கிடமுடியாத சக்தி என்கிறோம். அதே அவரின் முடிவு என்னவெனில் அந்த ஒரு பொருள் தண்ணீர்.

நம்பமுடியவில்லை தானே? அதற்கு அவரே நிரூபனம் அளிக்கிறார். இந்த பிரபஞ்சத்தினை சுற்றி நீர் இருக்கிறது. மேலும் நீர் திடப்பொருளாக மாறும் தன்மையினை கொண்டது. அப்படி மாறும் போது அதன் ஒரு வெளிப்பாடாக தோன்றியது தான் இவ்வுலகம். மேலும் உலகம் தண்ணீரில் தான் மிதந்து கொண்டிருக்கிறது, அதுவும் உலகம் கடலால் சூழப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார். பின்னால் தோன்றிய ஹராக்லிடஸ் தண்ணீரின் தன்மையினை கண்டு வியந்து இப்படி ஒரு தத்துவத்தினை தேல்ஸ் முன்வைத்திருக்கலாம் என வியக்கிறார்.

இயற்கை ஒன்றாகவோ பலவாகவோ இருக்கலாம். அஃதாவது நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் என ஐம்பூதங்களையும் நாம் வகுக்கிறோம். கிரேக்கத்திலோ ஆகாயம் கணக்கில் கிடையாது. அப்போது அந்த இயற்கையில் பிரதானமானது தண்ணீர். அதிலிருந்து அனைத்து பொருளும் தோன்றுகிறது ஆனால் அது தன் முடிவினை நோக்கி செல்ல மறுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் முடிவே இல்லாத ஆன்மாவினை தன்னுள் கொண்டது தண்ணீர். அது தான் நான் சொல்லவரும் கொள்கை என தேல்ஸ் தெரிவு படுத்துகிறார். இதில் கடவுள் எங்கிருக்கிறதெனில் அவரை பொறுத்தவரை அனைத்து பொருள்களின் கொள்கை தண்ணீரே தவிர அதனை செப்பனிட்டது, உருவமைத்தது கடவுள் என்கிறார். இங்கு தான் பிற்காலத்தில் தோன்றிய தத்துவவாதிகளிடமும் அறிஞர்களிடமும் தேல்ஸ் தோற்றுப்போகிறார்.

தேல்ஸ் கணிதவியலில் நிறைய கண்டுபிடித்துள்ளார். கடற்கரையிலிருந்து தூரத்தில் செல்லும் கப்பலுக்கு இடையே இருக்கும் தொலைவினை கண்டுபிடிப்பது, பிரமிட்களின் உயரத்தினை கண்டுபிடிப்பது என தன் சிந்தனையினை ஞானத்தினை தேடி செல்லவிட்டிருக்கிறார். தேல்ஸ் கிரேக்கத்தின் ஏழு பிரதான அறிஞர்களில் முதலாவதாக அறியப்பட்டார்.

எனக்கு பிரபஞ்சத்தினை பற்றி உலகத்தில் சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களையும் அறிய வேண்டும் என நினைப்பதால் அதனை மட்டும் கட்டுரையில் பிரதானப்படுத்தியுள்ளேன். அவரினை தொடர்ந்து அநேகம் பேர் ஒவ்வொரு விஷயத்தினை பிரதான படுத்த ஆரம்பித்தனர்.பரிணாம வளர்ச்சியினை கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞானம் காண ஆரம்பித்தது.

இத்துடன் என் பாரவையில் தேல்ஸின் தத்துவங்களை முடிக்கிறேன். வரலாற்றிலோ கோட்பாடுகளிலோ தவறுகள் இருந்தால் என் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

பின் குறிப்பு : இனி அவ்வப்போது என்னுடன் இவ்வலைதளத்தில் இது போன்ற புதைந்த மனிதர்கள் அடிக்கடி நடமாடுவார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்.

Share this:

CONVERSATION