மதுரை தந்த கவிதை

மதுரைக்கு போக வேண்டும். அது என் நீண்ட நாள் ஆசை. அதற்கான காரணத்தினை நானே பலமுறை என்னுள் பரிசீலித்து பார்க்கிறேன் பதில் கிடைக்க மறுக்கிறது. தமிழ் எனக்கு அதீதமாக பிடிக்கிறது என்பதனால் கூட இருக்கலாம். அசரீரியினை போல் ஏதோ ஒன்று என்னுள் மதுரைக்கு போ என கூறுகிறது. மதுரையிலோ சொந்தம் என்று கூட எனக்கு யாரும் இல்லை. அப்படியிருக்கையில் எந்த காரணத்தில் செல்ல. வீட்டினில் உள்ள அனைவரும் கோயில் பிரியர்கள். விடுமுறை என்று ஏதாவது வந்தால் அந்த காரணத்தில் போகலாம் என்றெண்ணியே காலம் சென்றுவிட்டது.
தற்செயல் என்ற ஒன்று எனக்கு வாய்ப்பினை ஏறபடுத்தியது. அதே தற்செயல் தான் எனக்கு இந்த கல்லூரியில் எனக்கு ஒரு இடத்தினை அளித்தது 309 டி அறையினயும் கொடுத்தது அங்கு அம்ரீஷ் என்றொரு நண்பனையும் எனக்களித்தது. ஆரம்பத்தில் இவன் பெயரினை கேட்டவுடன் முகம்மது அம்ரீஷோ என நினைத்தேன். இது போன்ற ஒரு இந்து பெயரினை நான் கேள்விப்பட்டதேயில்லை. அதற்கு பிறகு தான் அந்த பெயரின் பின்புலம் இராமாயணத்தில் இருக்கிறது என்பதனை அறிந்தேன். இராமனின் முன்னோடியின் பெயர் அம்ரீஷன். அந்த அம்ரீஷின் அக்காவிற்கு திருமணம். நிறைய நண்பர்கள் செல்ல முடிவெடுத்தனர். எனக்கோ தனிப்பயணம் தான்பிடித்தது என்பதால் எப்படியோ அனைவரையும் நிராகரித்துவிட்டு தனியாக பயணத்தினை இரவில் தொடங்கினேன்.
தனிமை எனக்கு மிகவும் பிடித்த உணர்வு. நிறைய பேரினை அத்தனிமை கவிஞனாக்குகிறது. எனக்கோ அது ஒரு பித்தனிலையினை அளிக்கிறது. அந்நிலையின் மூலமாகத் தான் கவிதைகளை கட்டுரைகளை எனக்குள் இருக்கும் என்னை அறிந்து கொள்கிறேன் . தனிமையினை இரண்டுவகையாக பிரிக்கின்றனர். ஒன்று புறவுலகில் தனித்து இருப்பது. மற்றொன்று கூட்டத்தில் இருந்தும் மனதளவில் தனியாக இருப்பது. எனக்கோ கடலினை கடக்கும் பறவையினை போன்றது. அது ஒரு hangover, turmoil. தெரியாத ஊருக்கு என் முதல் தனிப்பயணம் தொடங்கியது. மனவாசம் என்னும் கண்ணதாசனின் புத்தகத்தினை வாசித்து கொண்டே எனது பயணத்தினை தொடர்ந்தேன். புது ஊரில் மண்டபத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது. வாயிலிருக்கிறது வழி என கோதாவில் இறங்கிவிட்டேன். என்னை கடந்து பல ஊர்கள் சென்றிருக்கலாம் என் மனமோ அதன் உலகில் லயித்து கொண்டிருந்தது.
இரவு சரியாக மணி மூன்று. ஆரப்பாளையத்தில் இறங்கினேன். தெப்பகுளத்திற்கு செல்லும் எந்த பேருந்தும் அப்போது இல்லை. அம்ரீஷிடம் கேட்டதற்கு அரை தூக்கத்தில் இந்த நேரத்திற்கு எந்த பேருந்தும் இருக்காது என கூறி அணைத்தான் எனக்கு தூக்கிவாரி போட்டது. அணைத்தான் எனக் கூறுவது கூட தவறு போனிலேயே தூங்கிப்போனான். அதன் இடையிலும் பெரியார் நிலைத்திற்கு செல் அங்கு பேருந்துகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றான்.
நானும் பெரியார் நிலையம் வந்தேன். மணி 3:30. பேருந்து 3:50க்கு என அங்கு பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சினில் கேட்டேன். ஒரு ஹிந்தி குடும்பம் ஆட்டோகாரனிடம் மீனாட்சியம்மன் கோயிலுக்கு எவ்வளவு என வினவிக் கொண்டிருந்தான். இடதுபக்கம் இருக்கும் வழியினில் சென்றால் வந்துவிடும் என்றான். எனக்கு அங்கு செல்ல வேண்டும் என்றும் ஆசை. அக்கா அங்கு சென்று வந்தபோது அக்கோயிலினை கட்டடக்கலையில் புதிர் என்றாள். அதனை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. இத்தனைக்கும் இது எனக்கு கூறப்பட்டது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. இவையனைத்தும் என் மனதினில் அசை போட்டு கொண்டிருந்த போது என் காலகள் அது இஷ்டத்திற்கு சென்று கொண்டிருந்தது.
மூடப்பட்டிருந்த கடைகள், சில்லென்ற காற்று, புது உணர்வு என அனைத்தையும் இரசித்த வண்ணம் சென்றேன். அங்கிருந்து திரும்பும் போது எனக்குள் கவிதை வரிகள் இழையோடியது

உறக்கமின்றி எரியும் விழிகள்
களைப்பின்றி நடக்கும் பாதம்
என்னையறியாமல் கடந்த பாதை
இனம் புரியாத உணர்வு
மனம் அறியாத இடம்
முகம் தெரியாத மனிதர்கள்
எங்கு செல்கிறேன்
மீனாட்சியம்மன் கோயிலுக்கு
எதற்கு செல்கிறேன்
எது என்னை இந்த ஜாமத்தில் இட்டு செல்கிறது
நான் அறியேன்
நான் கண்டதோ
மூடப்பட்ட தெற்கு வாசல்
எது என்னை இழுத்து
சென்றிருந்தாலும்
எனது வேண்டல்
என்னை நாத்திகனாய் மாற்று என்பதே!

எப்படியோ மண்டபத்தினை அடைந்தேன்.மணி 4:30. அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது தான் சந்தேகம் எழுந்தது தூங்காநகரமாச்சே ஆனால் அதற்கான எந்த அறிகுறியினையும் காணவில்லையே என்று. அது வேறு இடமாம்!
யாரையும் தொந்தரவு செய்யாமல் ஜன்னல் அருகில் அமர்ந்து சாலையினை வெறித்து கொண்டிருந்தேன். மனம் மதுரை தந்த கவிதையினை அசை போட்டு கொண்டிருந்தது.

Share this:

CONVERSATION