மரணக்கவிதைகள்

அன்று நான் கோயமுத்தூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். என்னுடைய விடுதிக்கு தேவையான அனைத்தினையும் வாங்கிக் கொண்டு அப்பாவின் அந்த கால ஸ்கூட்டரில் பேருந்து நிலையத்திற்கான என் பயணம் தொடங்கியது. குறிப்பிட்ட இடத்தினை கடக்கும் போது என் கண்கள் வலதுபக்கம் திரும்பியது. சாதாரண புரோட்டா கடை. அருகில் முடி திருத்தும் நிலையம். அக்கடையின் வாசலில் ஒருத்தி சிறுவனுக்கு யூனிபார்ம் சரி செய்து கொண்டிருந்தாள். அவள் அச்சிறுவனின் அம்மாவா என்று கூட எனக்கு சரியாகத் தெரியாது.
அந்த சிறுவன் தான் என் அதிர்ச்சிக்கு காரணமாக இருந்தான். அவன் நான்காவது அல்லது ஐந்தாவது படிக்கும் வயதினை உடையவன். அதே சிறுவனை அதற்கு முந்திய நாளும் கண்டேன் கண்களில் கண்ணீருடன். என் யூகம் சரியெனில் முந்திய தினம் இறந்திருந்தது அவனின் தந்தை தான். அந்த இடமே பெரிய டிராபிக் ஜாம். சின்ன ரோடு என்பதால் அத்தனை இடைஞ்சல்கள். அதனை சொந்தக்காரர்களே சரி செய்தனர். சுற்றி சொந்தக்காரர்களும் சுற்றமும் அழுத வண்ணம் இருந்தனர். என் கண்களில் பளிச்சென பட்டது இச்சிறுவன் தான். பிணத்தின் தலைமாட்டருகில் நின்று கொண்டு எழுத்திருக்கும் கடையின் பெயரினை வெறித்து கொண்டிருந்தான். அந்த கன்னங்களில் கண்ணீரின் ஈரத்தடங்கள் நின்று கொண்டிருந்தன. உதடுகள் ஏங்கி ஏங்கி அழுகையினை வரவழைத்து கொண்டிருந்தது. கண்களுக்கு தூக்கம் தேவைப்பட்டது. ஏதொ ஒன்று இமையினை மூடவிடாமல் தடுத்தது. அச்சிறுவனின் தேவை பிரிந்து போன உறவு. பொருளாக இருந்தால் சமாதானம் செய்துவிடலாம்!
இன்று அந்த சிறுவனின் முகத்தினில் பிரிவிற்கான எந்த அறிகுறியும் இல்லை. என்னால் இதனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. என் மனம் சிறுபிள்ளையினை போல் உளறுகிறதா என்றும் தெரிவு செய்ய முடியவில்லை. உலகமே கட்டமைப்பின் விதியில் அடங்கியுள்ளது அதனை மீறி சுயதேர்வின் அடிப்படையில் வாழ விரும்பும் நான் மீண்டும் அந்த கட்டமைப்புக்குள்ளேயே சென்று விழுகிறேன். அதனை பார்த்த போது எனக்குள் எழுந்த கேள்வி ஒரு உயிரின் நினைவு ஒரு நாள் தானா? நாளை நானே என் சொந்தத்தையோ நண்பனையோ இழந்தால் இச்சிறுவனை போல் உணர்வுகள் மரத்துவிடுமா. Necrophilic என்று படித்துள்ளேன். அதன் ஒரு அர்த்தம் மரணத்தை பற்றிய பயம். இதனை ஏன் இங்கு கூறுகிறேன் எனில் என் கேள்விகள் இந்த வார்த்தையினுள் அடங்குமா?
எனக்கு தெரியவில்லை. அது செகண்ட் செமெஸ்டர் ஆரம்பித்த நேரம். அதுவும் முதல் நாள். எந்த வகுப்பும் நடக்கவில்லை. இந்த எண்ணங்கள் என்னை வதைத்துக் கொண்டிருந்தது. அப்பொது தோன்றிய சில கவிதைகளை இங்கே மீண்டும் கொணர்கிறேன். இதனை எழுதுவதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே
சிரிப்பு
யூனிபார்மில் தொங்கும் கைக்குட்டை
துடைப்பதற்கு காய்ந்து போன கண்ணீர்
நேற்று சிரித்த அப்பா
இன்றும் சிரிக்கிறார்
புகைபடத்தில்!!!
உறங்கும் தந்தைக்கு
தூக்கமின்றி விழித்திருக்கிறேன்
உனது முகம் காண
நீயோ இன்னும் உறங்கி கொண்டிருக்கிறாய். . ..
கல்லரையில் உறக்கம் 
யோகாசனம் கற்றேன்
தூக்கத்தில் பயிற்சி செய்தேன்
விளைவு
மலைமுகட்டில் உறங்கி கொண்டிருக்கிறேன்
கல்லரையாய். . .
அடங்காத ஆசை
மனைவிக்கு சேலை நெய்ய-நிறத்தினை
கடன் வாங்க முடிவு செய்து
வானவில்லின் விலாசம் தேடி
மலையுச்சிக்கு நான் சென்றேன்-மலை
காற்றிடம் கேள் என்றது-காற்று
மேகத்திடம் கேள் என்றது-காற்று
மேகத்தை சூரியனிடம் கேள் என்றது-பதில்
மேற்கு வாசலில் மேகக்கூட்டங்களின் திருவிழாவாம்
மேகத்திடம் கேட்டேன்
கரையும் என் தேகத்தின் துளிகளை கேள் என்றது-மழை
வானவில்லின் வீட்டினை காட்டியது
நிறக்கடனை வானவில்லிடம் கேட்டேன்-பதில் கேள்வி
உன் மனைவிக்கு என்ன நிறம் பிடிக்கும்?
நிறம் மறந்ததால் வீட்டிற்கு சென்றேன்
வெள்ளைப் புடவையில் என்னவள்
அடங்காத ஆசையுடன் நான்!

பின் குறிப்பு : எத்தனையோ முறை முயன்று பார்க்கிறேன் இந்த நிகழ்வை கச்சாப்பொருளாக்கி ஒரு சூப்பரான பதிவினை போட வேண்டும் என. இப்போதோ மரணத்திடம் தோற்று வெறும் வார்த்தைகளுடன் நிற்கிறேன்

Share this:

CONVERSATION