அறிமுகம்

எனது புரிதலில் எக்ஸைல் என்னும் சாரு நிவேதிதா எழுதிய ஆறாவது நாவலினை பற்றி எழுதலாம் என முடிவு செய்தேன். அந்த முடிவில் தான் பெரிய பிரச்சனை அடங்கியுள்ளது. காரணம் சிவகாமியின் சபதம் அல்லது சுஜாதா எழுதிய பெண் இயந்திரம் முதலிய நாவல்களை விமர்சிக்க சொன்னால் எழுதில் கூறிவிடலாம். சாருவோ பின் நவீனத்துவம், நான் லீனியர் என்றெல்லாம் இலக்கிய வகைகளை கூறி தமிழர்களை பயமுறுத்துகிறார். அப்படியிருக்கையில் எடுத்த எடுப்பில் அவருடைய ஆறாவது நாவலினை நான் விளக்க முடிவு செய்தால் என் இணையதளத்தினை வாசிக்கும் அந்த இருபது பேரின் நிலை ? மேலும் இந்த நாவலுக்கு முதன் முதலில் டிரைலரும் வெளிவந்தது. அதில் முதல்நிலை வாசகனுக்கும் இது புரியும் என சிலர் கூறியிருந்தனர். வாசித்தபோது அந்த உணர்வினை நான் கொள்ளவேயில்லை. சாருவின் மற்ற படைப்புகளை வாசித்தால் தான் எக்ஸைலினை எப்படி அணுக வேண்டும் என்பதே தெரிய வரும். இதென்ன அணுகுமுறை காசு கொடுத்து வாங்கினால் அதில் ஒரு கதை இருக்கும் படித்தால் பொழுது போகும் அது தானே நாவல் என்பது நிறைய இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது. நானும் ஒரு கட்டத்தில் அப்படித்தான் இருந்தேன்.
சிறிது நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் சாருவின் வாசகர் வட்டத்தில் ஒரு கேள்வி வாசிப்பு அனுபவத்தினை சார்ந்து எழுந்தது. அதில் நான் கூறிய பதிலினை சற்று விரிவாக இங்கே கூறுகிறேன். அதற்கும் மேற்கூறிய அணுகுமுறை, புரிதல் போன்றதற்கும் சம்மந்தம் இருக்கிறதா என்றால் நிறைய உண்டு.
எனது வாசிப்பு அனுபவம் சிறு வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. மூன்றாம் வகுப்பு வரை ராணி காமிக்ஸின் கரும்புலி தான் என் ஹீரோ. அது வரை என் அக்கா எனக்கு வாசித்து காண்பிப்பாள். மூன்றாவதிலிருந்து நானே வாசிக்க ஆரம்பித்தேன். கரும்புலி, மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் போன்ற அனைத்து கதாபாத்திரங்களையும் சித்தரிக்க ஆரம்பித்தேன். வீட்டில் வாசிப்பு ஸ்கூலில் சித்தரிப்பு என கதைகளின் உலகில் அமர்ந்தேன். ஐந்தாவது வகுப்பிலேயே ராணி காமிக்ஸ் வீட்டில் நிறுத்தப்பட்டது. சிறிது காலம் கழித்து சுட்டி விகடன் அந்த இடத்தினை பிடித்தது. எங்கு கதைகளை கண்டாலும் வாசிக்க ஆரம்பித்தேன். அக்காவின் துணைப்பாடங்களையும் கூட. இது அனைத்தும் சிறிய வயது என்று போகையில் ஒன்பதாவது வகுப்பின் கோடை விடுமுறையில் நாவல் உலகத்தில் நுழைந்தேன். தொடங்கி வைத்தவர் ராஜேஷ் குமார். அவருடைய ‘கடைசி தோட்டா’ என்னும் பாக்கெட் நாவல் தான் நாவல் வாசிப்பினை ஆரம்பித்தது. தொடர்ந்து வாசித்தேன். அப்படி வாசித்ததற்கு காரணம் சேலத்தில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஸ்டேட் பாங்கின் பிரதான கிளை ஒன்று உள்ளது. அதனை ஒட்டியொரு ச்ந்து போகும். அது பழைய புத்தகங்களின் கடை. இது போன்ற பாக்கெட் நாவல்கள் பாதி விலையில் தருவர். ஆறு ரூபாய் நாவல் மூன்று ரூபாய். அதனை வாசித்துவிட்டு திருப்பி தரும்போது அதனை பாதி விலையில் எடுத்துக் கொள்வர் அதாவது ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு. அதற்கு புத்தகம் வாங்கும் போது தள்ளுபடி செய்து கொள்வர். இந்த வசதியினால் தொடர்ந்து நாவல்களை வாங்கினேன். ராஜேஷ்குமாரினை தொடர்ந்து பட்டுக்கோட்டை பிரபாகர். குறைந்த பட்சம் அந்த விடுமுறையில் மட்டும் முப்பது நாவல்களை முடித்திருப்பேன். வேறு எழுத்தாளர்களை தேர்வு செய்யலாம் என முடிவு செய்து இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய ‘ரோஜா மலரும் நேரம்’ என்னும் நாவலினை வாங்கினேன். அது தான் என் பாக்கெட் நாவல் வாசிப்பின் முடிவாக இருந்தது. தனக்கு ஆண்மைக் குறைவு என்பதால் தன் நண்பனை தன் மனைவியுடன். . . . அது அப்போது எனக்கு அருவருப்பாக தோன்றியது. அடுத்து பத்தாம் வகுப்பு என்பதால் தமிழக அரசு பதிப்பகத்திலிருந்து வெளிவரும் புத்தகத்தினை மட்டும் வாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. பத்தாம் விடுமுறையில் என் வாசிப்புகள் ஆயிரத்தோரு அராபிய இரவுகள், ரகுவம்சம், மரியாதை ராமன், தெனாலிராமன் என்ற அளவில் இருந்தது. பதினொன்றாம் வகுப்பில் புத்தகத்தின் பக்கமே போகவில்லை.
பன்னிரெண்டாம் வகுப்பு என் ஆயுளின் முக்கியமான விஷயம் ஆரம்பமானது. அது தான் புரிதல். விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் நடந்த ஏதோ ஒரு சிறப்பு விழாவில் நீயா நானா கோபினாத் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரின் பேச்சு எனக்கு பிடிக்கும். அன்று தான் எனக்கு தெரிய வந்தது அவர் புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்று. கடனை வாங்கி அந்த புத்தகத்தினை வாங்கினேன் - ‘ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீர்கள்”. அந்த நாளே வாசித்து முடித்தேன். இவன் தான் தமிழகத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளன் இவனை மிஞ்ச யாருமில்லை என்று மனதினுள் முடிவு செய்தேன்(கோபம் கொள்ளவேண்டாம்). மேலும் அவரின் ‘நீயும் நானும்’,’நேர் நேர் தேமா’ போன்ற புத்தகங்களையும் வாசித்தேன். ஒவ்வொரு மேடையிலும் ஏதாவது கதை சொல்லும் பழக்கமுடையவர் கோபிநாத். அந்த புத்தகங்களிலும் அதை தான் தொடர்ந்திருந்தார். ஒரு நாள் டி.வி பேட்டியில் “அவர் இதை சொன்னார் இவர் அதை சொன்னார் என்று சொல்வதில் எனக்கு ஈடுபாடு இல்லை அனைத்தும் நம் கருத்துகளாக இருக்க வேண்டும்” என்று கூறினார். சாருவினை வாசிக்க ஆரம்பித்தவுடன் தான் புரிந்தது கோபிநாத் தத்துவங்கள் என்றும் அதற்கு சான்று கதைகள் என்றும் கூறிய அனைத்தும் ஜென் மதத் தத்துவங்களை சார்ந்தது.உதாரணத்திற்கு நீயும் நானும் புத்தகத்தில் வாழ்க்கையினை அனுபவிக்க என்னும் பத்தியில் கூறப்பட்டுள்ள கதை பாவ்லோ கொய்லோ அல்கெமிஸ்ட் நாவலில் கூறியது. இன்னும் நிறைய விஷயங்களினை கூறலாம். அந்த போலி வேஷம் எதற்கு என்று தான் தெரியவில்லை. ம்ம். . .இப்படியும் சில மனிதர்கள்!
கார்ப்பரேட் சாமியார் விவகாரத்தில் எழுந்த நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாரு நிவேதிதா பங்கு பெற்றிருந்தார். அன்று தான் அவரை நான் முதன் முதலில் கண்டது. ஆனால் அவர் பெயர் மட்டும் என்னுள் நிலைத்து நின்றது. பன்னிரெண்டாம் வகுப்பின் விடுமுறையில் சேலத்திலுள்ள அஜெந்தா புக் செண்டருக்கு சென்றேன். அது இரண்டு தளம். கீழ் தளமும் முதல் தளமும். கீழ் தளத்தில் முழுக்க பாட புத்தகங்கள். உவ்வே. . .! முதல் தளத்திற்கு சென்றேன். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்மணியிடம் சாரு நிவேதிதா என்பவரின் புத்தகங்கள் எந்த அடுக்கில் இருக்கும் என்று கேட்டேன். அவர் பதிலுக்கு எந்த பதிப்பகம் என்க் கேட்டார். அப்போது அவர் முகம் கூட என் நினைவில் இல்லை. கருப்பா சிவப்பா மீசை உண்டா இல்லையா என்றே தெரியாமல் இரண்டு நாள் தேடினேன். அப்பா உடன் இருந்ததால் முக்கால் மணிநேரம் மட்டுமே தேட முடிந்தது. இரண்டு நாள் போராட்டத்திற்கு பிறகு வள்ளுவரின் புகைப்படத்திற்கு கீழுள்ள அடுக்கில் ’திசை அறியும் பறவை’இனை அறிந்து கொண்டேன். தொடர்ந்து வாங்கினேன் ‘எனக்கு குழந்தைகளை பிடிக்காது’ ‘மூடுபனிச் சாலை’’கடவுளும் நானும்’ என்று. இவை அனைத்தும் சாரு எழுதிய கட்டுரைத் தொகுப்புகள். இவ்வளவு தீவிரமான கட்டுரைகளை அதுவரை கேள்விப்பட்டதில்லை. பொதுவாக நாவல்கள் மற்றும் சிறுகதைகளை மட்டும் தான் நாம் நமக்குள் சித்தரிப்போம். உங்களை பற்றி தெரியவில்லை நான் அப்படித்தான். ஆனால் ஒரு கட்டுரையில் உள்ள சித்தரிப்பினை இவரிடத்தில் உணர்ந்தேன். இத்தனை தூரம் இவரை பிடித்ததற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. எனக்கு மற்றவர்களை போல் வெளியில் சுற்றுவது நண்பர்களுடன் விளையாட்டு போன்ற எதுவும் இல்லாமல் காலத்தினை தனியாக வீணடித்து கொண்டிருந்தேன். அப்போது இவருடைய அபுனைவுகளை வாசிக்கும் போது எழுத்தாளன் வாசகன் என்ற அதிகாரத்தினை தாண்டி ஒரு நண்பனுடன் நடந்து கொண்டிருக்கும் உரையாடல் தான் எனக்கு தெரிந்தது. இன்றுவரை என் தனிமையினை பகிர்ந்து கொள்ளும் ஒரு நண்பனாக தான் சாருவின் எழுத்துகள் எனக்கு இருக்கிறது.
சரி இப்போது ஆரம்பத்திற்கு வருகிறேன். ஆரம்பத்தில் நான் படித்த அபுனைவுகளில் அனைத்தும் அவரின் நாவல்களை அவரே புகழ்ந்து கொண்டிருந்தார். அது ஒன்று தான் அப்போது எனக்கு முரணாக இருந்தது. என்ன தான் அப்படி எழுதுகிறார் நாவலில் என நானும் நாவலினை வாங்கினேன் அது ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்’. நான்கு மணி நேரத்தில் படித்து முடித்தேன். சரியான வேகம் நாவலிலும் இருந்தது. நான்கு மணிநேரம் கழித்து எனக்கு தோன்றிய முதல் விஷயம் “என்ன கதைய காணோம்”. நாம் தான் சரியாக புரிந்து கொள்ள வில்லையோ என மறுவாசிப்பும் செய்தேன். அதில் காமம் இருக்கிறது, சூர்யா என்னும் கதாபாத்திரத்தின் ஆளுமை, காணாமல் போகும் பக்கங்களும் காணாமல் போகும் கதாபாத்திரங்களும் என நாவல் முடிந்தே போனது. அசிங்க அசிங்கமாக சாருவினை திட்டினேன். அந்த நாவல் மூலையில் ஒரு இடத்தினை தனக்கென தேர்வு செய்து கொண்டது.
அவரின் நாவலில் இருந்து என் ஆசை சென்றதே தவிர அவருடைய கட்டுரைத் தொகுப்புகள் என்னை ஈர்த்த வண்ணமே இருந்தது.
சிறிது காலம் கழித்து மூலையில் இருந்த நாவலினை எடுத்தேன், வாசித்தேன், புரிந்து கொண்டேன் அவரின் ஆளுமையை. நாவலுக்கு அடிமையானேன். மறு வாசிப்பும் நிகழ்ந்தது தூக்கியெறிய அல்ல பாதுகாக்க. இது எப்படி நிகழ்ந்தது என்பதையும் அந்த நாவலினை வாங்குவதற்கு முன் என் வாழ்வின் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது அது எது என்பதையும் அடுத்த I AM KRISHNA CHA வில் போடுகிறேன்.

Share this:

CONVERSATION