3

உலக சினிமாவின் அனுபவமோ அறிமுகமோ எனக்கு அதிகம் இல்லை. தமிழ், ஹிந்தி மற்றும் சில ஆங்கில திரைப்படங்களை பார்த்திருந்தாலும் முதன்முதலில் நான் ரசித்து பார்த்த திரைப்படமெனில் அது 3. இதனை ஒரு கத்துகுட்டியின் விமர்சனம் என எடுத்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
எத்தனையோ குறைகளை தன்னிடம் கொண்டிருந்தாலும் இரண்டாவது முறை பார்க்க தூண்டுகிறது. இப்படத்தினை எப்படி வகைப்படுத்தலாம் என எனக்கு தெரியவில்லை. காரணம் படம் நெடுகிலும் ஒரு முடிவற்ற தன்மையே என்னால் காண முடிகிறது.
அபார்ட்மெண்ட்டில் யாரோ ராமினை(தனுஷ்) கொன்றுவிட்டார்கள். இதில் தான் படம் ஆரம்பிக்கிறது. கணவனை இழந்த சோகத்தில் ஜனனி(ஸ்ருதிஹாசன்) நம் கண்முன் நடமாடுகிறாள். அவளுடைய கனவுகளிலும், மனவுகிலும் ஏதோ ஒரு நிழலுருவம் துரத்துகிறது. அப்படியே அவளின் பதினொன்றாம் வகுப்பிற்கு படம் செல்கிறது. பாரம்பரியமான தமிழ் சினிமாவின் சில சில பிம்பங்களை இப்படம் புறக்கணிக்கிறது. ஹீரோ ஹீரோயின்களுக்கு எவ்வித மாஸ் இண்ட்ரோவும் இல்லை. நண்பன் குமரனுடன் அவளை பின்தொடர்ந்து அவள் படிக்கும் அதே டியூஷனில் சேர்கின்றனர். சைட்டில் ஆரம்பிக்கும் பார்வை காதலில் சென்று முடிகிறது.இருவரின் பின்புலத்தினை பற்றி கூற வேண்டுமெனில் ராமின் அப்பா பணக்கார வர்க்கத்தின் சாயல். ஜனனிக்கோ சராசரி கொள்கைகளை தன்னுள் அடக்கிய ஒரு நடுத்தர குடும்பம். அந்த சராசரி கொள்கைகளில் முதன்மையானது யூ.எஸ் வீஸா. இவர்கள் காதல் வீட்டினில் தெரியவர இரு வீட்டிலும் பூகம்பம் முளைக்கிறது. ராமின் முயற்சியால் திருமணம் முடிந்து இரு வீடும் ஒன்று சேர்கிறது. இங்கு தான் படத்தின் இடைவேளை. தன் கணவன் ஏன் கொலை செய்யப்பட்டான் என தெரியாமல் இருக்கும் போது அவளுக்கு ஒரு கடிதம் கிடைக்கிறது. அதனை வாசித்தபின் ராமின் நண்பனான செந்திலினை சந்திக்கிறாள். அங்கு அவன் மனோதத்துவ வியாதியான bipolar disorder இனை பற்றி கூறுகிறான். அதன்படி உணர்ச்சிகள் இரு துருவங்களுக்கு இருக்கும் என்று படத்தில் கூறுகின்றனர். அதன்படி முதலில் உணர்ச்சிகளின் தாக்கமும் பின் இல்லாத உருவங்களை சித்தரிப்பதும் பின் தற்கொலையிலும் சென்று முடியும் என்பதே. இந்த வியாதிதான் படத்தின் இரண்டாவது பாதியாகவுன் அதுவே படமாகவும் நமக்கு தோன்ற வைக்கிறது. இதுவே கதையில் சாரம்சம்.
எனக்கு இரண்டு வாக்கியங்கள் என் நினைவிற்கு வரிகிறது
1.படம் யதார்த்தத்தின் விளிம்பு நிலையில் இருக்கிறது
2.படத்தில் யதார்த்தமே விளிம்பு நிலையில் இருக்கிறது.
இப்படம் இதில் இரண்டாவது ரகமே. இத்தனை தாமதமாக எழுதுவதற்கு காரணம் படத்தில் முதலில் பார்த்தவர்கள் மொக்கை, முதல்பாதி சூப்பர் சிலர் யதார்த்தம் என்றனர் அந்த யதார்த்தம் தான் என்னை பார்க்க தூண்டியது. படத்தின் முதல் பாதியில் காண்பிக்கப்படும் மாணவப்பருவம் யதார்த்தத்தினை ஒத்தியே இருக்கிறது. பெண்களை பார்ப்பது, ஃபாலோ செய்வது, போன் நம்பர் கேட்பது, டியூஷன் கிலுகிலுப்புகள் என. காதலை வெளிப்படுத்தும் விதத்தில் ஐஷ்வர்யாவின் தறமையினை காண்முடிகிறது. வாரணம் ஆயிரத்தினை போன்ற ஒரு breezy proposalஐ அது வரை தமிழ் சினிமா கண்டதில்லை. அது போல் இதில் ராம் ஜனனியிடம் i love you  எனக் கூறியவுடன் அவள் சாயங்காலம் பார்க்கலாம் இப்ப போ என்று கூறும் விதம் அதில் ஜனனியின் முக பாவனை நம்மை படத்திற்குள் அதன் களத்திற்குள் ஒரு பார்வையாளனாக இருக்கிறோம் என நமக்கே தெரிய வைக்கிறது. இரண்டு பேரும் காதலிக்க ஆரம்பித்த பிறகு சின்ன பிரிவு ஏற்படுகிறது. அவர்களின் ஏக்கம், சுற்றி சொந்தங்கள் இருந்தும் அவனை நினைத்துக் கொண்டே மேற்கொள்ளும் பயணம் என அனைத்தினையும் வசனங்களின்றி இசையினை வைத்தே நகர்த்தி சென்றிருக்கிறார். பிரிவின் போது ரிஸீவருக்கு கொடுக்கப்படும் முத்தம், மறைத்து வைக்கும் லட்டு அவனைக் காண ரெக்கார்ட் என பொய் சொல்லி அவள் மட்டும் வீட்டிற்கு வந்து அவனை வீட்டிற்கு அழைக்கும் குறும்புத்தனம் என தன் முதல் படத்தினை சில கலாப்பூர்வங்களால் கலைப் படைப்பாக மாற்ற முயற்சித்திருக்கிறார். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழையும் அவன் அவளை பார்க்கிறான் அப்போது அவர்களுக்கு பின் கர்னாடக சங்கீதம் ஒலிக்கிறது. உண்மையில் இது முன்னேற்பாடா அல்லது தற்செயலா என அறிய ஆசைப்படுகிறேன். இசையின் ஆதிக்கம் படம் நெடுகிலும் இருந்தாலும் இந்த காட்சியில் இருக்கும் காதலின் ரசம் வேறு எதிலும் எனக்கு தென்படவில்லை. பிரிவிற்கு பின் பார்ப்பதால் கட்டிபிடித்து கொள்கிறாள். இது சில பார்வையாலர்களுக்கு பிடிக்கவில்லை. இது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்த திரைப்படம். அதுவும் ஐஷ்வர்யா இது போன்ற அப்பட்டமான இளமை துள்ளல்களை நிர்வாணமாக்கி காட்டியிருக்கிறார். இதிலும் சில உண்மைகள் மறைந்திருக்கிறது என்பதே என் தாழ்மையான கருத்து. அதனை தொடர்ந்து ‘கண்ணழகா. . .’ பாடல் வருகிறது. அது ஒரு இதழ் முத்தத்தில் முடிகிறது. இப்படத்தில் என் மனதினை பாதித்த முதல் காட்சியெனில் அது இது தான். இதழ் முத்தத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் காட்சி ராமினை பிரிந்து அவதிபட்டுக் கொண்டிருக்கும் ஜனனியின் கதறலில் தொடர்கிறது. இந்த ஒரு transitionஐ சற்றும் எதிர்பார்க்கவில்லை. பசியால் செத்துக் கொண்டிருக்கும் விவரம் தெரிந்த குழந்தைக்கு முன் ஒரு கிலோ black forest-இனை வாங்கி இதில் ஏன் சாக்லேட் கம்மியாக இருக்கிறது என்று கேட்பது போன்ற காட்சியினை உங்களால் சித்தரிக்க முடியுமெனில் அப்போது நான் கூற வரும் உணர்ச்சிப் போரையும் உணர்ந்து கொள்ள முடியும். By-symmetrical portray of human feelings.
மீண்டும் கடந்த காலத்திற்கு போகும் போது கல்லூரியும் முடிந்த பருவத்தினை காண்பிக்கிறார். இடைப்பட்ட காலங்கள் பார்வையாளனின் சித்தரிப்பில் விடப்படுகிறது. இந்தப் பகுதி சோகத்தில் ஆரம்பிக்கிறது. பதிமூன்று வருடம் க்யூவில் நின்றதன் பலனாய் அம்மாவிற்கு யூ.எஸ் வீசா கிடைத்துவிடுகிறது. தானும் செல்ல வேண்டும் எனக் கூறும் போது கோபத்தில் ராம் போ என்கிறான். ராம் கோபப்பட்டானே என தன் பாஸ்போர்ட்டினை எரித்து விடுகிறாள். விழுந்த அறையும் சிவந்த கன்னமும் என ராமிடம் வந்து தன்னை உடனே மணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறாள். ஒருமுறை கேட்போம் என முயற்சியினை ஆரம்பிக்கின்றனர். ராமின் வீட்டிலொ ப்ளாட் ஒன்றினை கட்டி தருகிறேன் நீயே மணம் செய்துகொள் எனக் கூறுகின்றனர்.ஜனனியின் வீட்டிலோ emotional blackmail-இன் நாடகம் அரங்கேறுகிறது. இங்கு தான் ஐஷ்வர்யாவின் கதைசொல்லி அல்லது இயக்கம் என்னை மீண்டும் கவர்கிறது. ஜனனியின் தங்கையாக வரும் பாத்திரம் காது கேட்காததால் சிறு வயதிலிருந்து பேசாமலேயே இருக்கிறாள். இவளின் காதலுக்கும் ஆரம்பத்திலிருந்து துணையாக இருக்கிறாள். தன் காதலை அனைவரும் எதிர்க்கிறார்கள் என்றவுடன் நான் பேசாமல் செத்துவிடுகிறேன் எனக் கூறும் போது தன் அக்காவின் விடுதலைக்காக அவள் பேசுகிறாள். ஒரே ப்ரேமில் இரண்டு extremity இனை அடக்கிய விதம் மெய்யினை சிலிர்க்க செய்கிறது. இந்த காட்சியினை தைரியமாக கயாஸ் தத்துவத்துடன் ஒப்பிடலாம்.
திருமண காட்சியினை கண்டவுடன் ஒருக்கணம் என் ஈரக்குலையே நடுங்கியது. 'come on girls' பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போதே இடையில் திருமண இசையும் தாலியும் வந்து அதனை கட்டி பப்பின் இடையிலேயே ஜனனியினை தன் மனைவியாக்கி கொள்கிறான். இதனை போன்ற மாற்று கலாசாரத்தினை தொனிக்கும் காட்சியினை இதுவரையிலான தமிழ் சினிமாவில் நான் கண்டதில்லை. மனதார வரவேற்கிறேன். தமிழகம் என்பதால் எந்தவித எதிர்ப்பும் நிச்சயம் வராது!
படம் பார்த்த நிறைய பேர் 'why this kolaveri' பாடல் எதற்கு வருகிறது என்றே தெரியவில்லை என்றனர். இதற்கு மக்கள் மனம் தான் காரணம் என கூற விழைகிறேன். இந்த பாடல் முதலில் வந்தவுடன் மக்கள் தன் மனதினுள் விஷ்வல் ஒன்றினை சித்தரித்து கொண்டனர். படத்திலோ ஜனனி யூ.எஸ் சென்றதாலும் குமரன் சொல்லாமல் சிங்கப்பூர் சென்றதாலும், சுண்டல் சிறுவனின் அலட்சியத்திலும் போதையில் உளறுகிறான். பாடலின் இறுதியில் இவனே ஜனனியினை சித்தரிப்பதும், வேலையில் ஏற்பட்ட டென்ஷனில் அதன் கோவத்தில் நாயினை கொல்வதும் ஜனனியிடம் என்ன பதில் சொல்வாய் என நண்பன் கேட்கும் போது அப்படியே சோகத்தின் ஆழத்திற்கு போவதும் படத்தினை அப்படியே வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது.
இதற்கு பிறகு வரும் ஒரு காட்சியினை நிறைய பேர் மயக்கம் என்ன படத்தின் காட்சியோடு ஒப்பிட்டனர். எனக்கு அப்படி தோன்றவில்லை. நண்பனிடம் மாற்றங்களை கண்டவுடன் டாக்டரிடம் கேட்கும் போது தான் bipolar disorder என்றும் இவனின் செயல்கள் அதன் உச்சகட்டம் என்றும் கூறுகிறார். ஒரு night stay இன் போது இதனை கூற முனைகிறான். தன்னை இவன் பைத்தியம் எனக் கூறுகிறான் என்று உணர்ந்தவுடன் பேசுவதை நிறுத்த சொல்கிறான். தொடர்ந்து அவன் கூறும் போது அதனை நிறுத்த சொல்லி கதறுகிறான். அந்த கதறலும் பின்னால் ஓடும் இசையும் பார்வையளனுக்கு decibel inferno(சத்ததின் மாசு)வினை கொடுத்து சீட் நுனியில் அமர சொல்கிறது. இந்த decibel inferno தான் படத்தின் நிறைய இடத்தில் குறைகிறது. ஏன் எனக் கூறுகிறேன். நண்பனை அடித்து அவனின் காயத்தினை கண்டவுடன் தான் தான் ஒரு மனநோயாளி என்பதை உணர்கிறான். எங்கு இதனை ஜனனியிடம் கூறினால் அவளின் பார்வையில் காதல் இருக்காதோ என்னும் போது என்ன சொல்ல எனத் தெரியாமல் முழிக்கும் மற்றும் தனக்கு நடந்தது போல் ஜனனிக்கு ஆகிவிடக் கூடாதே என நினைக்கும் இடங்களில் நட்பின் ஆழம் தெரிகிறது.
இதனை தொடர்ந்து தான் நான் ஒரு பிரமித்த கலைப்படைப்பினை கண்டேன். அது தான் ’போ நீ போ’ பாடல். எங்கு மனைவியின் அருகாமை அவளிற்கு ஆபத்தாய் முடிந்துவிடுமோ என்னும் பயத்தில் ஐயப்பனுக்கு மாலையினை போட்டுக் கொண்டு,நண்பனையும் தன் வீட்டிலேயே இருக்க சொல்லி அவளிடமிருந்து விலகி இருக்கிறான். அந்த விலகலின் போது அவன் ஆன்மாவின் கதறலாக இப்பாடல் அழகுற சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எங்கு தன் கணவன் தன்னை விட்டு போய்விடுவானோ என்னும் ஏக்கத்தினை கொண்டிருக்கும் முகம், கேமிரா focus செய்யும் Sophie kinsellaவின் Remember me ? என்னும் நாவலின் முன்னட்டைப்படம், அவள் காமத்துடன் இருந்தாலும் கண்ணீருடன் அவளை ஒதுக்கும் ராம் என காட்சிக்கு காட்சி கலைப்படைப்பினையே என்னால் காண முடிகிறது.
டாக்டர் சொன்னதை போல் அவன் சில உருவங்களை hallucinate செய்ய ஆரம்பிக்கிறான். அட்மிட் செய்வது நல்லது எனக் கூறும் நண்பனிடம் தான் பைத்தியம் இல்லை என நிருபிக்க என்ன என்னவோ கூறுகிறான். இதனை பார்க்கும் போது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருத்தல் மற்றும் இருத்தலின்மை தான் என் நினைவிற்கு வருகிறது. எங்கு தன்னை பைத்தியம் என அங்கீகரித்து விடுவார்களோ என்னும் பயத்தில் phobia வில் அவனின் பாத்திரம் மாறி விடுகிறது.
ட்ரீட்மெண்டுக்காக செல்லும் போது ஜனனியிடம் பொய் சொல்கிறான். ராம் பொய் சொல்கிறான் என தெரிந்தவுடன் அவனை அறைந்து விடுகிறாள். அவனின் மனநோய் அவளையும் கொலை செய்யும் அளவிற்கு தூண்டுகிறது. நண்பன் தடுக்கும் போது தான் தன் மரணத்தினை பற்றி யோசிக்கிறான்.
necrophilic என்றால் மரணத்தை பற்றிய பயம் என்று பொருள். இப்படம் அதன் எதிர்பதத்தில் வாழ்தலின் ஒரு மனிதன் பயந்தால் எப்படியிருக்கும் என்பதை அழகுற கூறியிருக்கிறார். தற்கொலையின் எண்ணத்தினை அறிந்து தடுக்கும் நண்பனை அடித்துவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்து கடைசியாக ஜனனியை பார்க்கிறான். தீண்ட முடியவில்லை, பொங்கும் ஆசை என அனைத்தினையும் அவளின் கூந்தலினை நுகர்ந்து வெளிப்படுத்தும் காட்சி மனதினை வருடுகிறது.. சில halucinated காட்சிகளுடன் படம் நிரைவடைகிறது.
கண்ணழகா பாட்டிற்கு முன்னும் சரி பப்பில் தன் மனைவியிடம் தவறாக நடந்தவனுடன் நடக்கும் பிரச்சனையிலும் சரி சினிமால வர்றா மாதிரி ஏண்டா பேசுற/பண்ற போன்ற வசனங்கள் படம் நெடுகிலும் போலித்தன்மையினை சுமந்து செல்கிறது.
இப்படத்தின் பெரிய குறைகளுள் ஒன்று அப்பா மகனின் உறவு. அவரின் வேலை டேபிளிலும், புதிதாக வாங்கும் ப்ளாட்டில் மாட்டும் மகனின் படம், அப்பா மனதினை காயப்படுத்தியதில்லை என்று மகனின் வசனம் என நிறைந்து இருந்தாலும் இருவருக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் ஏதோ பிஸினஸ் பேசுவது போல் இருக்கிறது. strict அப்பாவினை காட்ட வேண்டுமெனில் சந்தோஷ் சுப்ரணியினை போல் காண்பித்திருக்கலாமே !!!
Decibel inferno- இது தான் படத்தின் பெரிய குறைபாடு. என்ன தான் படத்தினை சோகம் அல்லது அழுகைப்படம் என வகைபடுத்தினாலும் அதில் ஒரு அழகியல் தேவையாக இருக்கிறது. மனதினை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் அதீத சத்தம் படத்தில் நிறைய இடங்களில் தேவையாக இருக்கிறது. படத்தின் முதல் பாதியில் வரும் கதறல்கள், இறுதியில் உள்ள hallucinated  காட்சிகள் அனைத்தும் வெறும் காட்சியாக மட்டுமே அமைந்தது கொஞ்சம் வருத்தம் தருகிறது.
Bi-polar disorder இல் ஏன் சந்தோஷத்தினை காண்பிக்கவில்லை என தெரியவில்லை !!!!
நான் ரசித்ததை முழுமையாக கூறவில்லையோ என்று தான் தோன்றுகிறது. இது போன்ற சில சில குறைபாடுகளால் படம் ஆகச் சிறந்த கலைப்படைப்பு என்னும் தன்மையினை இழக்கிறது. ஐஷ்வர்யாவின் ஒட்டு மொத்த உலக சினிமா அனுபவங்களின் பிம்பமே ‘3’. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
ராஜன் மாதவ்,ஐஷ்வர்யா தனுஷ் போற கதை சொல்லிகள் தற்போதைய தமிழ் சினிமா உலகிற்கு தேவையாக இருக்கின்றனர்.இருந்தும் சினிமா உலகம் கமர்ஷியல் சினிமாக்களையே ஊக்குவிக்கிறது. இந்நிலை மாறினால் உலக அரங்கில் நமக்கான இடம் நிச்சயம் கிடைக்கும்.

Share this:

CONVERSATION