அவன் - இவன்


ஒரு உணர்ச்சிவசத்தில் நான் எழுதும் கட்டுரையே இது. புதிதாக ப்ளாக் ஒன்றை ஆரம்பித்து அதில் எழுதுகிறேன் என என் நண்பனிடம் கூறினேன். அவன் சிறிதும் யோசிக்காமல் ‘என்ன எழுதபோற மிஞ்சி மிஞ்சி போனா சாருவ பத்திதான’ எனக் கூறினான். இது என்னை அசிங்கப்படுத்துவதாக உங்களுக்கு தோன்றலாம். எனக்கோ துளியும் அந்த உணர்வு இல்லை. அம்மாக்கள் பொதுவாகவே அவர்களின் குழந்தையினை பற்றியே கூறுவார்கள். அவர்களிடம் போய் ’உங்ககிட்ட என்னம்மா பேசறது நீங்க பேச ஆரம்பிச்சீங்கனா உங்க குழந்தைய பத்தி தான் பேசுவீங்க அத தாண்டி என்ன பேசப் போறீங்க’ என்றால் அவர்கள் என்ன சிரித்து கொண்டா இருப்பார்கள் ? சாரு நிவேதிதாவின் எழுத்து என்னை போன்றவர்களுக்கு ஒரு வரம். இதை கடைசியில் கூறுகிறேன்.
அப்படி கூறிய மற்றும் நினைக்கும் என் இனிய நண்பர்களுக்கு இக்கட்டுரையினை சமர்ப்பிக்கிறேன். அவன் இவன் என்னும் கட்டுரை ‘அவன்’ மற்றும் ‘இவன்’ என்னும் கதாபாத்திரங்களை மட்டுமே வர்ணிக்கும். ஆனால் இது ஒரு fantasy ஆன கட்டுரை. கல்கியவதாரமாகட்டும், கிறிஸ்துவாகட்டும், நபிகளாகட்டும் அவர்கள் மறுபடியும் தோன்றுவார்கள் என காத்திருக்கின்றனர். அப்படி கூறப்படும்  ஒரு உயிரின் second spell மறுபடியும் நடந்தால். . .?
பரானா ஆற்றங்கரையில் தான் அவன் இவ்வுலகினை முதன் முதலில் பார்த்தான். பணக்கார குடும்பம் ஆடம்பரமான வாழ்க்கை என அவனின் நாட்கள் தொடங்கியது. அம்மாவின் புற்றுநோய் அப்படியே செல்வத்தினை திருட ஆரம்பித்தது. பள்ளிப்பருவம் இயல்பாக முடிந்து பியுனஸ் ஏர்ஸிலுள்ள பல்கலைகழகத்தில் மருத்துவத் துறையினை தேர்வு செய்தான். பாட்டியின் மரணமும் அம்மாவின் புற்றுநோயும் தான் அவனை தேர்வு செய்ய வைத்தது. அப்போது அவனுக்கு கிடைத்த முதல் தோழி தான் டிட்டா. அவளிடம் தன் அனைத்து கருத்துகளையும் பகிர்ந்து கொள்வான். தேசத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என தன் மனதில் உள்ள அனைத்தையும் டிட்டாவிடம் கூறுவான். இன்னும் கூற வேண்டுமெனில் அவளிடம் தான் அவனின் போராட்ட வாழ்க்கை ஆரம்பித்தது. தினம் தினம் கூறுவான் டிட்டாவிற்கும் போராடிக்கவில்லை. அப்போது அவன் கல்லூரியில் அர்ஜெண்டீனிய இராணுவம் ஆள் சேர்ப்பதர்காக வந்தனர். அவனின் நேரம் அதில் சேரவிடாமல் ஆஸ்துமா தடுத்தது. மருத்துவத்தினை வைத்து மரணத்தினை எதிர்த்து போராடலாம் என முடிவு செய்தான். தாயினை தான் காப்பாற்ற முடியவில்லை மற்றவர்களை என்னால் காப்பாற்ற முடியும் என தனக்குள் முடிவு செய்துகொண்டான். அனலாய் எரிந்த போராட்ட குணம் தணியவில்லை. என்ன ஆனதோ தெரியவில்லை சிறிது நாட்களிலேயே சிச்சினா என செல்லமாக அழைக்கும் தன் தோழியிடம் ‘முட்டாள்த்தனமான மருத்துவத் பொறியில் சிக்கிக் கொள்ளும் நோக்கு எனக்கு இல்லை’ என்றான். தேசப்பற்றினை காட்டிலும் அவனின் தீராத ஆசை உலக பயணம். தன்னால் ஆன வரை இந்த உலகுடன் உரையாட வேண்டும் என கனவு கண்டான். பயணத்தின் மீதிருந்த காதல் ஸான்பிரான்சிஸ்கோவிலிருந்து ஆரம்பித்தது. தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய பெரு நாட்டின் அமேஸான் நதிக்கரை என ஆரம்பித்து அவனின் பயணகுறிப்புகள் கோரடோபா, அட்லாண்டிக், ஜெஸல், பிராமர், நெக்கோச்சி என நீண்டது. அதில் அமேஸான் நதிக்கரையினை கடக்கும் போது அங்கிருந்த சூக்கி கமாட்டா என்னும் இடம் தான் அவன் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அங்கிருந்த சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கை அவன் ஆழ்மனதை உருக்கியது. தன் குழந்தையினை பக்கத்து வீட்டுக்காரன் வளர்க்கிறான். காரணம் தன்னால் வளர்க்க முடியவில்லை என்கின்றனர். முதலாளித்துவம் எங்கு நடந்தாலும் அதனை தட்டிகேட்க வேண்டும் என்னும் விதையினை தன்னுள் விதைத்து கொண்டான். அவன் ஹில்டா என்னும் பெண்ணினை மணந்து கொண்டான். அந்த காதல் நீண்ட நாள் அவனுடன் வாழவில்லை. அவள் விவாகரத்து வாங்கிக் கொண்டாள். ஆனால் அவளின் மூலமாகத்தான் அவன் க்யூபர்களை அறிந்து கொண்டான். க்யூபாவில் பெரும் புரட்சியாளன் ஒருவன் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தான். அவனுக்கும் புரட்சியாளனின் நட்பு கிடைத்தது. பட்டிஸ்டா ஆட்சியினை எதிர்க்க பெரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மெக்ஸிகோ காவலர்களால் கைது செய்யப்பட்டான். அங்கிருந்து தப்பித்து சியர்ரா மோஸ்த்ராவில் ஒரு தோல்வியை சந்தித்தான். பின் அமெரிக்க ஆயுதங்களுடனேயே போராட ஆரம்பித்தான். பட்டிஸ்டா படையினர் பின்வாங்கினர். அவனின் செயலால் க்யூபா எதேச்சதிகாரத்திலிருந்து விடுதலை அடைந்தது. எங்கு எதேச்சதிகாரம் நடந்தாலும் அதனை தட்டி கேட்பேன் என முடிவு எடுத்தான். அந்த முடிவு அவனை ஆப்ரிக்காவிற்கு செல்ல தூண்டியது. காங்கோலியர்கள் அடிமைபட்டு கிடப்பது இவனுக்கு உருத்தியது. அவனுடைய நண்பன் வேண்டாம் அவர்கள் க்யூபர்களை போல் ஒத்துழைப்பார்கள் எனத் தெரியவில்லை. வீணாக நேரத்தையும் உன் திறனையும் அங்கு வீணடிக்க வேண்டாம் எனக் கூறினான். காங்கோலியர்களோ படைகளுக்கு பயந்து பின்வாங்கினர். திரும்பி வந்த அவன் தன் அடுத்த இடமான பொவிலியாவற்கு சென்றான். பூர்வக்குடி விவசாயிகளை வைத்து படைகளை உருவாக்கினான் அவர்களும் பின்வாங்க யூரோ கணவாயில் அமெரிக்கா தன் நீண்ட நாள் எதிரியை சுட்டு வீழ்த்தியது அதுவும் ஒரு கோழையினை வைத்து. தன் போராட்டத்திற்காக மனைவி மக்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு சென்றான். அவன் வாழ்வில் நிறைய காதல்கள் முழுமையடையாமல் இருந்தது. ஹில்டாவின் விவாகரத்துக்கு பின் அலெய்டாவினை மணந்து கொண்டான். இவர்கள் இருவருக்கும் முன் சிச்சினாவின் மீது இருந்த குட்டி காதல் சொல்லாமலேயே மறைந்தது. இன்னும் நிறைய பெண்களின் நிழல்கள் அவனின் சுவடுகளில் பதிவாகியிருந்தது. அவன் தான்                                                                                         ”எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா”.
இதற்கும் I am Krishna cha என்ற தலைப்பிற்கும் என்ன சம்மந்தம் எனில் அந்த ‘அவன்’இன் பிம்பம் இவனிடம் வந்தது. இவனும் நதிக்கரையின் அருகில் தான் தோற்றம் கொண்டான். இவனின் தோற்றமோ ஒரு அபத்தமான சூழ்நிலையில் நிகழ்ந்து விட்டது. இவனுக்குள் இருந்த இலக்கிய வெறி பக்கத்து வீட்டு பெண்ணிடம் ஆரம்பித்தது. இவனுக்கு ஏற்பட்ட முதல் காதல் அதனை மறந்து இவன் வாழ்க்கையில் சென்ற தூரம், சூன்யத்திற்கும் வெளிக்கும் இடையே இவன் கண்ட பசி, வறுமை அதனால் இவனுள் ஏற்பட்ட போராட்டம் அவனை இலக்கியவாதியாகிவிட்டது. இவனுடைய உலகம் மற்றவர்களை காட்டிலும் தனித்து இருந்தது. இவன் இருக்கும் சமூகமோ இலக்கிய அறிவற்ற சமூகம் என்பதை அறியாமலேயே இவனும் இயற்றினான். எப்படியும் அனைத்து கட்டமைத்தலையும் உடைத்து விடலாம் என இவன் எழுத்து வாழ்வியல் முறையினை உருவாக்கி போராடியது. க்யூப மக்கள் மட்டும் அவனுடன் போராட தயாராகினர். மற்ற இடங்களில் அவனிற்கான படை இல்லையே எனத் தவிப்புற்றான். தன் மறு பிம்பத்திலோ தனக்கான இடம் ஐரோப்பாவில் எங்கோ விதைக்கப்பட்டுள்ளது என நாடுகடத்தப்பட்ட உணர்வுடன் இங்கு வாழ்ந்தான். இவனின் வாழ்க்கையில் கொண்ட பயணங்கள் இவனுக்கு தத்துவங்களை புகட்டியது. அவனின் உலகம் சார்த்தர், பூக்கோ, தாஸ்தாயெவ்ஸ்கி என நிறைந்தது. அதே லத்தின் அமெரிக்க நாடுகள் தன் பிறப்பிடம் என நினைத்து கொண்டான். நினைத்தான் என்பதை விட அவன் கனவுகளில் அவைகள் துரத்தியது. முதல் மணம், அந்த காதலின் நிலையாமையில் ஏற்பட்ட விவாகரத்து, மகளின் பிரிவு, விபத்தினை போல் ஏற்பட்ட இரண்டாவது காதலும் மணமும், தன் வாழ்வில் கடந்து சென்ற பெண்கள் அவர்களின் நிழல் படரும் இலக்கியங்கள் எனத் தொடர்ந்து போராடினான். பாவம் ! இந்த சமூகத்திலிருந்து புறக்கணித்தே வைக்கப்பட்டான். பல கோடி உயிர்கள் வாழும் சமூகத்தில் ஐயாயிரம் பேர் மட்டும் அவனின் இலக்கிய படையில் சேர்ந்தனர். ஐயாயிரமும் கோடியுமா நினைத்து பார்க்கவே போர் கேவலமாக இருக்கிறது. மாறி பிறந்துவிட்டாய். க்யுபாவிலேயே இதே போராட்ட உணர்வுடன் பிறந்திருந்தால் இன்று மீண்டும் பல நாடுகளின் சிம்ம சொப்பனமாக இருந்திருப்பாய். புணர்ஜென்மத்தில் உனக்கு வெளி நாடுகளில் மக்கள் படை கிடைக்கவில்லை இன்றோ மாறி இருக்கிறது. போய்விடு எங்கு சென்றாலும் இங்கு ஆரம்பித்த ஐயாயிரம் உன்னை விடப்போவதில்லை. உனது பயணத்தையும் போராட்டத்தையும் விட்டுவிடாதே. அவன் நாட்டில் அவன் பெயரினை தங்கள் மொழியில் வைத்து சே சே என ஒவ்வொரு முறையும் கூறி அவனை உணர்கிறார்கள். இவனை உணரவே நான் என் பெயருடன் சா வினை இணைத்து கொண்டேன். மொழியில் இவன் கருத்தரிக்கிறான். அதே மொழியில் என்னால் இவனுக்கு மரியாதை கொடுக்க முடியுமெனில் அது இது தான். இவன் தான்                                                                          “சாரு நிவேதிதா”
சாரு நிவேதிதா என்னும் கானகத்தில் என் பயணம் சாதாரணமாக ஆரம்பித்தது. அதில் என் உணர்வுகள், வாழ்வியல் முறை, இலக்கியத்தின் அறிமுகம், கொண்டாட்டத்தின் அர்த்தம் என அனைத்தையும் உணர்ந்தேன். அதனை கூறவே இந்த I AM KRISHNA CHA. இது ஒரு தொடர் ஆனால் தொடர்ச்சியின்றி வரும்.
மீண்டும் அந்த அயோக்கியர்களுக்கு வருகிறேன். என்னை பொறுத்தவரை அடங்காத ஆத்மாவே மறு உருவம் பெற்றிருக்கிறது. இதை ஆதாரத்துடன் கூறியிருக்கிறேன். அந்த எழுத்து எனக்கு ஒரு பொக்கிஷம். நிராகரிக்கவும் முடியவில்லை புறக்கணிக்கவும் முடியவில்லை.
இதற்கு பிறகும் என்னிடம் அவனை பற்றி எழுதாதே அல்லது உனக்கு அவனைத் தவிர எதுவும் தெரியாது எனக்கூறினால் அவர்களுக்கு ஒரு வாக்குறுதியளிக்கிறேன். கானகத்தில் அலையும் போது சாரு என்னை கேட்காமலேயெ ஸ்வாஸத்தினுள் நுழைந்துவிட்டான். என் ஸ்வாஸ்த்திலிருந்து சாருவை பிரித்து தாருங்கள் அவரை பற்றி எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.

Share this:

CONVERSATION