ஒன்பதாவது திசை


ஏற்கனவே ’கடவுள்!’ என்றும் ‘வாழத் தகுதியற்றவன் நான்’ என்றும் சில கட்டுரைகளளில் கடவுளை எதிரியாக்க வேண்டும் என்ற ஆசையில் எழுதியுள்ளேன். இதில் இன்று படித்த ஒரு பத்தியில் இன்றைய இளைஞர்கள் சமூகத்தில் ஒரு மதிப்பினை பெறுவதற்காக தன்னை நாத்திகன் என பிரகடனப்படுத்துகிறார்கள் எனக் கூறியிருந்தனர். அதனை வாசித்தவுடன் எனக்குத் தோன்றியது நல்ல வேளை அந்த ஆட்டுமந்தையில் சிக்காமல் தப்பித்துவிட்டேன் என. நான் எனது கட்டுரைகளிலேயே ரெண்டுங்கெட்டான் என பலமுறை தண்டோரா அடித்து விட்டேன். ஒருவகையில் கூற வேண்டுமெனில் இந்தக் கட்டுரை அத்தகைய ரெண்டுங்கெட்டானின் வெளிப்பாடு தான். எனது முழுமுதற் குறிக்கோள் கடவுளை எதிரியாக்குவது. அது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. ஏதாவது ஒரு மதத்தினை பற்றி முழுதும் தெரிந்திருந்தால் கூட கடவுளை தாராளமாக எதிர்த்து விடலாம் ஆனால் நான் தான் என் குணத்தினை போல ரெண்டுங்கெட்டான் ஆச்சே !
புத்தகம் படிக்கும் பழக்கத்தினால் எனக்கு இஸ்லாமிய மதம் பிடித்து போனது. அதுவும் ‘கடவுளும் நானும்’ என்னும் புத்தகத்தின் மூலமாக. ஒரு சராசரி இந்தியனைப் போல் தான் நானும் நினைத்து கொண்டிருந்தேன் இஸ்லாமியர்களின் பரவல் போர்களின் மூலமாகத் தான் நடந்தது என. இந்த நூலின் வழியாகத்தான் நான் அறிந்து கொண்டேன் அது பரவியதற்கு காரணம் போர்கள் இல்லை இந்தியாவில் வாழ்ந்த சூஃபிகள் என்று. அவர்கள் அனைவரும் ஞானிகள் என அறியப்படுகிறார்கள். இன்னும் சிலரிடம் கேட்டால் சூஃபிகள் மேஜிக் தெரிந்தவர்கள் என சொல்கின்றனர். இதுவும் ஒரு வகையில் உண்மைதான். துக்ளக்கின் காலத்தில் ஒரு சூஃபியின் தலையினை வெட்டிவிட்டாராம் துக்ளக். அந்த சூஃபியோ தன் தலையினை தானே எடுத்து கொண்டு அந்த ஊர் எல்லைக்கு சென்று ஜீவ சமாதி அடைந்தாராம். இது அனைத்தினையும் முதலில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இன்றும் நாகூரில் சூஃபிகள் வாழ்கிறார்களாம். அதே போல் குரானின் ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் ஒரு இசை பொதிந்துள்ளதாம். அந்த இசையினை உணரும் போது all mighty எனக் கூறப்படும் சக்தியுடன் ஐக்கியமாகலாம் எனக் கூறியுள்ளார். இது உண்மையா என என் நண்பனிடம் கேட்டால் அவன் உணர்ந்ததில்லை என்றான். இதற்கு பிறகு வருகிறேன். இது போன்ற சுவாரஸ்யமான விஷயங்கள் தான் என்னை இஸ்லாமிய மதத்தின் பக்கம் ஈர்த்ததற்கு காரணமாக அமைந்தது.
இப்போதும் கூட “நம்பிக்கையுள்ளவர்களுக்கு மத்தியில் : ஒரு இஸ்லாமியப் பயணம் (AMONG THE BELIEVERS : AN ISLAMIC JOURNEY) என்னும் தொகுப்பினை வாசித்து கொண்டிருக்கிறேன். இதனை இயற்றியவர் உலக இலக்கியவாதி வி.எஸ் நைப்பால். இதில் பாகிஸ்தான், ஈரான், மலேஷியா என தன் பயணத்தினை பற்றியும் இஸ்லாமிய அனுபவத்தினை பற்றியும் கூறியுள்ளார். பாதி தான் வாசித்துள்ளேன். இதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் என்னை மத விவாதத்தினுள் இழுக்கிறது. நைப்பால் பாகிஸ்தானிற்கு சென்ற போது அங்கே கிறிஸ்துவினை பற்றி விவாதம் ஒன்று நடந்திருக்கிறது. அதில்
“கிறிஸ்து சிலுவையில் சாகவில்லை. சிலுவையிலிருந்து கீழிறக்கிய போது அவர் கோமாவில் தான் இருந்திருக்கிறார். அதனை காடாத் துணியானது நிரூபித்து விட்டது. அதிலிருந்த இரத்தத் துளிகள் உயிருள்ள மனிதனின் உடம்பிலிருந்து வருவது தான் என்று. கிறிஸ்துவின் கை மற்றும் கால்களினை சரி செய்த பின் இஸ்ரேலின் கடைசி பழங்குடியினருக்கு தன் உபதேசங்களை நிகழ்த்தியிருக்கிறார். வட இந்தியாவின் காஷ்மீருக்கு வந்து தன் 120 வது வயதில் உயிர் துறந்திருக்கிறார். இன்றும் சில இஸ்லாமியர்கள் உண்மையான மதத்தினை மீட்டெடுக்க கிறிஸ்து திரும்புவார் எனக் கூறுகின்றனர்”.                                                        எதற்காக கிறிஸ்து இஸ்லாமியர்களின் விவாதக் கருவாக இருக்க வேண்டும் என இதன் மறுபக்கத்தினை(contrast) கூறி தொடர்கிறேன்.
கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் தேகத்தினை விட்டு ஆவி பிரிந்து நாற்பது நாட்கள் போதனைகளுடன் உலகினைச் சுற்றி பின் சாந்தியடைந்திருக்கிறார். இது பைபிள். இது போன்ற நேரத்தில் சாமான்யனான ஒருவன் இந்த இரண்டினையும் படித்தால் மதத்தினைப் பற்ரி என்ன அறிந்து கொள்ள முடியும் ? இப்போது இஸ்லாமியர்களின் விஷயத்திற்கு வருகிறேன். உலகத்திலுள்ள அனைத்து மத சனாதனத்தின் அடிப்படையிலும் சொர்கத்திலுள்ள உயிர் தான் இரண்டாவது முறையாக பூமிக்கு வர தகுதியுடையது. கிறிஸ்துவோ இறந்து விட்டார். ஆக எதிர்காலம் தவறாக கணிக்கப்பட்டுள்ளது. எப்படியெனில் 120 ஆண்டுகள் மனிதனாக வாழ்ந்துள்ளார். 120 என்பது மிக நீண்ட ஆயுள். இதனை ஏற்பதும் சற்று கடினமான விஷயம் தான். உலகத்தில் கிறித்துவம் மற்றும் இஸ்லாமிய மதம் தான் ஒரே கடவுள் என தன் கடவுளின் கொள்கைகளில் அசராமல் நிற்பது. இதனை இரு மதங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் சண்டையா எனப் பார்த்தால் அடுத்த பத்தியில் கூறுகிறார்,                                                    “கிறித்துவத்தில் கிறிஸ்து என்றால் இஸ்லாமில் அஹ்மதி. கிறிஸ்து மோஸஸ் காலத்திலிருந்து 1300 ஆண்டுகளுக்கு பின் தோன்றியுள்ளார், அஹ்மதி நபிகள் காலத்திலிருந்து 1300 ஆண்டுகளுக்கு பின் தோன்றியுள்ளார். கிறிஸ்து ரோமன் குடியேற்றத்தில் பிறந்தவர், அஹ்மதி ப்ரிட்டிஷ் குடியேற்றத்தில் பிறந்தவர்”                                                                                   இதில் இன்னும் நிறைய ஒற்றுமைகளை கொண்டுவரமுடியும். இந்து மதத்திற்கும் கிறித்துவ மதத்திற்கும் பெரிய ஒற்றுமை இருக்கிறது. இந்து மதத்தில் கிருஷ்ணர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் அங்கே கிறிஸ்து. அப்போது ஒரே தத்துவத்தின் பல படிநிலைகள் தான் மதமும் அதன் பிரிவும் எனக் கூறுவதில் தவறில்லையே ! குரானில் இருக்கும் இசை பைபிளில், வேதங்களில், குருக்ரந்த் சாஹிபில் நிச்சயம் இருக்கும். ஏதாவதொரு மூலையில் யாராவது ஒருவன் அதனை உணர்ந்து கொண்டு தான் இருப்பான். அப்படியிருக்கையில் இது போன்ற விஷயத்தினை நம்பிக்கையுள்ளவர்களுக்கு மத்தியில் கூறி இக்காலத்திய சமூகம் மற்றவர்களை நாத்திகனாக மாற்ற முயற்சி செய்கிறது. நைப்பால் இதனை எழுதும் போது அடுத்தவனை நாத்திகனாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நிச்சயம் எழுதியிருக்க மாட்டார். இந்த சமூகத்தில் நானும் சிக்கி விட்டதால் இப்படியொரு கட்டுரையினை எழுதி கொண்டிருக்கிறேன். நீங்கள் நினைப்பது போல் நாத்திகம் என்பது தத்துவம் அல்ல அது ஒரு வாழ்வியல் முறை.
ஒரு காயினை சுண்டுகிறீர்கள். தலைப்பக்கம் மேலுள்ளவாறு விழுகிறது. மறுபக்கம் நம் கண்களுக்கு தெரிவதில்லை. ‘தலை’ தான் சரி என நம்பிவிடுகிறோம். அந்த தலை தான் நீங்கள் நம்பும் மதக்கதைகள். அதன் மறுபக்கத்தினை உங்களுக்கு காட்டுகிறேன் என தத்துவார்த்த ரீதியாக சொன்னால் என் வாசிப்பு அனுபத்திலிருந்து பதிலினை கொணர்ந்து கூற முடியும். இந்த பதிலையும் எதற்காக எழுதுகிறேன் என்பதையும் ஒரு சம்பவத்தினை கூறி பின் கூறுகிறேன்.
‘2006 ஆம் ஆண்டு டான் ப்ரௌனின் எழுத்தினை திரையில் DA VINCI CODE என படமாக்கினார் ரான் ஹாவர்ட். இதனை உலகமே எதிர்த்தது. ஏனென்று பார்த்தபின் தான் புரிந்தது இப்படம்/இக்கதை கிறிஸ்து கடவுளல்ல சாதாரண மனிதன் தான் எனக் கூறுகிறது. இதனை லியோனார்டா டாவின்ஸியின் படத்தினை வைத்து நிரூபிக்கிறது. அக்கதைப்படி பைபிளில் கூறப்படும் மகதலீனா மரியாள் என்னும் வேசிதான் கிறிஸ்துவின் மனைவி. இதனை எப்படி நம்புவது என யோசித்த போது தான் அதன் நிரூபனத்தினையும் காட்டினர். டாவின்ஸ்யின் கடைசி விருந்து ஓவியத்தில் கிறிஸ்துவின் வலப்புறம் இருக்கும் பெண்மணியினை தொழில்நுட்பத்தின் மூலம் இடப்பக்கம் போட்டால் கிறிஸ்துவின் தோள்களில் சாய்வது போல் வரும். மேலும் கிறிஸ்துவின் இடப்பக்க அங்கியும் அப்பெண்மணியின் வலப்பக்க அங்கியும் ஒரே நிறம். அந்த பெண்மணிதான் மகதலீனா மரியாள் என்கின்றனர். அது எப்படி எனத் தெரியவில்லை. கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த போது மகதலீனா மரியாள் கர்ப்பமாக இருந்திருக்கிறாள். இது சில பேருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். கிறிஸ்து இறந்தபின் பேகன் இனத்தவர்களின் படையெடுப்பில் ரோம் நகரமே பீதியில் இருந்தது. அதில் மகதலீனாவினை காப்பாற்றி சிலர் மகப்பேறு பார்த்துள்ளனர். குழந்தை மட்டும் பிறந்தது அவள் இறந்துவிட்டாள். இது வெளியில் தெரியக்கூடாது என சபையினை கான்ஸ்டாண்டைன் மன்னனின் தலைமையில் கூட்டி மக்கள் கடவுளாக மதித்து கொண்டிருக்கும் மனிதனை உண்மையில் கடவுளாக்கலாம் என கட்டு கதைகளை தொகுத்தனர். அது தான் பைபிள்.”                     ஆக கிறிஸ்து கடவுளல்ல என கூறிவிட்டனர்.
இதனை பார்த்த போது இது தான் உண்மை கிறித்துவம் ஒரு மதமே அல்ல என நம்பினேன். எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கிறித்துவப் பள்ளியிலேயே படித்து வந்ததால் மாஸ், ஆங்கில வழிபாடல்கள், அடிக்கடி கேட்கும் அல்லேலூயாக்கள் என அனைத்தும் கிறிஸ்துவின் பக்கம் வெறுப்பினை ஏற்பட வைத்தது. அது போன்ற நேரத்தில் இப்படியொரு படத்தினை பார்த்தால் கண்டிப்பாக நம்பத்தான் தோன்றும். அதன் படியே நானும் நம்பினேன். இப்படியே சில காலம் போன போது ‘அக்னிச் சிறகுகள்’ படித்து கொண்டிருந்தேன். அப்போது தான் இந்த மதப்பிரச்சினை என்னுள் மீண்டும் எழுந்தது. அந்த நூலில் ஏதோ ஒன்றை நிறுவுவதற்காக கேரளத்திலுள்ள மகதலீனா மரியாளின் தேவாலயத்தினை இடிக்கலாம் என எழுதியிருந்தார். டக்கென்று எனக்குத் தோன்றியது ‘மகதலீனா மரியாளுக்கு தேவாலயமா ? அவள் வேசி தானே ?’. அத்திரைப்படம் பொய்யா எனத் தோன்றியதே தவிர ஊர்ஜிதம் ஆகவில்லை. கல்லூரி நூலகத்தில் யதேச்சையாக ‘the spiritual life’ என்னும் புத்தகத்தினை புரட்டும் போது அதில் ‘ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு மகதலீனா மரியாள் இருக்கிறாள்’ என்னும் வாக்கியம் இதனை பின்தொடர்ந்து தேட வைத்தது. அப்போது தான் பைபிளிற்கு சென்றேன்.பைபிளினை வாசிக்கவில்லை தோழி என்னிடம் கூறினாள்.
“மகதலீனா மரியாள் ஒரு வேசி தான். அவளின் வேசித்தனத்தை அனைவரும் தூற்றினர். ஒருமுறை அவளை அடிக்கும் போது கிறிஸ்து காப்பாற்றியிருக்கிறார். தன் தவறினை உணர்ந்தவுடன் வேசித்தனத்தினை விட்டுவிட்டாள். யோஹானின் விருந்து ஒன்றில் கிறிஸ்துவும் இன்னும் சில செல்வந்தர்களும் பங்கேற்றுள்ளனர். அங்கு இவள் வந்தவுடன் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் விலையுயர்ந்த பொருளாக கருதப்பட்டது பரிமளத்தேன். அதனை கிறிஸ்துவின் கால்களில் கொட்டி தன் கூந்தலினை கொண்டு கழுவி விட்டிருக்கிறாள். அனைத்து செல்வந்தர்களும் திட்ட ஆரம்பித்தனர். உடனே கிறிஸ்து ‘நீங்கள் உலக ஞானத்தில் பார்க்கிறீர்கள் அவள் ஆன்மீக ஞானத்தில் பார்க்கிறாள். அவளுக்கான் முக்தி நிச்சயிக்க பட்டுவிட்டது’ எனக் கூறியுள்ளார். கிறிஸ்துவினை சிலுவையில் அறைந்தபின் ரோம் நகரத்தில் அரசியல் ரீதியான பிரச்சினை உண்டாகியிருக்கிறது (அது பேகன் இனத்தவர்களின் படையெடுப்பா எனத் தெரியவில்லை). அப்போது கிறிஸ்துவின் சீடர்களை இவள் தான் காப்பாற்றியிருகிறாள். மேலும் பைபிள் அசரீரியின் வார்த்தையில் புனித நீரினால் எழுதபட்டது,இதற்கு பிறகு குட்டி குட்டி கதைகளில் மகதலீனா மரியாள் இடம் பெறுகிறாள்”                                                    என தோழி கூறினாள்.
ஒரு புகைப்படத்தினை வைத்து கிறித்துவ மதத்தினையே இழிவு படுத்த நினைத்துள்ளனர். அதனை வரந்த ஓவியர் கிறிஸ்துவின் காலமும் அல்ல கடைசி விருந்தினை நேரில் பார்த்தவரும் அல்ல. அப்படியெனில் ஒன்று அது கற்பனையாக இருக்க வேண்டும் அல்லது ஏதேனும் குறிப்புகளின் மூலம் வரைந்ததாக இருக்க வேண்டும். கிறிஸ்து இறந்தபின் உருவ வழிபாடு ஆரம்பித்துவிட்டது அதனால் குறிப்புகள் மாறிப்போய் கூட இருக்கலாம்.
இவையனைத்தையும் பார்க்கும் போது இருத்தலுக்கும் இருத்தலின்மைக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் தெரிகிறது. ஒரு மரத் தமிழன் மதம் ஒரு கற்பிதம் என்றான். இன்று நானும் அதைத்தான் கூறுகிறேன் கடவுள், மதம், இனம், குலம், ஜாதி, நாகரீகம், கலாச்சாரம் அனைத்தும் மனிதனால் கட்டமைக்கப்பட்ட உருவங்கள். கற்பிதம் என நம்புபவன் பகுத்தறிவாதியாகிறான். உணர்வு என நம்புபவன் ஆத்திகனாகிறான். இதில் மக்களுக்கு என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை தன் தத்துவத்தினை அடுத்தவனுள் புகுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள்.
தத்துவார்த்தமான பதிலினை என் வாசிப்பு அனுபவத்திலிருந்து கூறுகிறேன் என சொல்லியிருந்தேனே அது என்னவெனில் மதம் கற்பிதம் உணர்வு என அனைத்தையும் தாண்டி அது ஒரு இயல்பு. நீ சிரிக்கிறாய் எனில் அதனை உன்னால் நிரூபித்து காட்ட முடியுமா ? நிச்சயம் முடியாது. மீரி இதனை சவால் என எடுத்து கொண்டு ஒரு மீடியத்தினை வைத்து நிரூபித்து காட்டினாலும் அந்த நிரூபனம் இருக்குமே தவிர உன் சிரிப்பு இருக்குமா ? சிரிப்பினை போன்றது தான் மதம். மனித இனத்திற்கு கிடைத்த பிரசாதம். பிடித்தவன் எடுத்து கொள்கிறான் பிடைக்காதவன் நிராகரிக்கிறான். நிராகரிப்பவனை புறக்கணிப்பதாலும் ஏற்பவனின் மூளையினை மழுங்கடிப்பதாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. சிருஷ்டியும் நிற்கப் போவதில்லை. இதனால் தான் இந்த அனைத்து முடிச்சிகளிலிருந்தும் என்னை விடுவித்து கொண்டு நாத்திகத்தின் திசையினை தேடிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் ஆரம்பத்திற்கே வருகிறேன் அந்த நைப்பால் எழுதிய புத்தகத்தில் என்னை போன்றோருக்கான வரியும் ஒன்று உள்ளது. அது,                                                              “1989 ஆம் ஆண்டு உலகம் கிறிஸ்துவின் வருகைக்காக் காத்திருந்து சோர்ந்து விடுவார்கள், ஈரானியர்கள் பன்னிரெண்டாவது இமாமிற்காக காத்திருந்து சோர்ந்து விடுவார்கள்,                                                                அப்போது உலகம் எங்களைப் போல் மாறும்”
[பின் குறிப்பு : இந்து மதத்தினை அதிகம் எழுதாதற்கு காரணம் அம்மதம் ஒரு முடிச்சியினுள் ஆயிரம் முடிச்சுகளை பொதித்து வைத்திருக்கும். அதனை விடுவிக்கும் திறமை என்னிடம் இல்லை]
ஒன்பதாவது திசையினை விரைவில் கண்டறிவேன்.

Share this:

CONVERSATION