கதாபாத்திரங்களின் கதைகள்


திரைக்கதாபாத்திரங்கள் வாழ்க்கையோடு நெருக்கமானவை. திரைப்படங்கள் காலத்தால் மறக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து சில கதாபாத்திரங்கள் மட்டும் எப்போதும் மனதோடு ஒன்றியிருக்கும். சில நேரங்களில் திரையில் தோன்றும் மனிதர்கள் கற்பனையில் நண்பர்களாகிறார்கள், சில நேரங்களில் தங்களது வாழ்க்கையை சீர்படுத்திக்கொள்ள உதவும் ஆசிரியர்களாக வலம் வருகிறார்கள். தான் பார்த்த திரைப்படங்களிலிருந்து சில தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களையும், அவர்களின் வாழ்க்கை நிலைப்பாடுகளையும் உலகியலுடன் ஒன்றிணைத்து மணி.எம்.கே.மணி எழுதியிருக்கும் புத்தகம் “வேறு சில ஆட்கள்”.
அன்றாடம் நாம் காணும் மனிதர்களிடமிருந்தும், சுயமாக வைத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைக் குறித்த புரிதல்களிலிருந்தும் வேறுபட்டு நிர்கும் மனிதர்கள் திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள்.. பல நேரங்களில் அவர்களின் முடிவுகள் சரிவரப் புரியாமல் நழுவி விடுகின்றன. அவர்களின் நிலைப்பாடுகள் கேள்விகளோடு தொக்கி நிற்கின்றன. இந்நூலில் திரைப்படங்களின் கதையையும், அதில் முதன்மைப்பெறும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விரிவாக விளக்குகிறார். திரையில் மௌனமாக எழும் கேள்விகளுக்கு கட்டுரை வழியே விடை காணமுயலுகிறார். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் வாழ்க்கைக் குறித்த புரிதல்களுடன் தான் குறிப்பிடும் கதாபாத்திரம் வேறுபட்டு இருப்பதை விளக்கும் இடங்கள் நூலின் தனித்துவமாக அமைகிறது. மேலும் வாசகர்கள் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களை நினைவு கூறுவதற்கும் எவ்வகையில் திரை நாயகர்களை புரிந்துகொள்ள முயலலாம் என்பதற்கும் இந்நூல் வழியமைத்து கொடுக்கிறது.

- இந்து தமிழ் திசை

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக