உலகமயமாக்கலுக்கு பின் அனைத்து நாடுகளுக்கும் இடையே பெரும் சந்தை உருவாகிறது. அனைத்து பொருட்களும் அதன் மூலதனமாகின்றன. மக்களின் நுகர்வை சீண்டி அதற்கு விலையை நிர்ணயிக்கத் துவங்குகின்றன நிறுவனங்கள். உலகின் சந்தையே முதலாளித்துவத்தின் முதல் படி. நுகர்வு அனைத்திற்கும் விலை நிர்ணயிக்கப்படும் தருணத்திலிருந்து முதலாளித்துவம் தன் பேருருவை காண்பிக்கத் துவங்குகிறது. காலப்போக்கில் பண்டங்களிலிருந்து நகர்ந்து இயற்கையை மூலதனமாக நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளத் துவங்குகின்றன. அதன் பரிணாமத்தில் மக்களின் அடிப்படை விஷயங்கள் சந்தைப் பொருளாகின்றன.
அவ்வகையில் நீர் உலகம் முழுக்க சந்தைப் பொருளானது எப்படி என்பதை இரா.முருகவேளின் “நீலத்தங்கம் தனியார்மயமும் நீர் வணிகமும்” எனும் நூல் விவரிக்கிறது. தமிழகத்தில் தனியார்மயமாகும் குடிநீரின் நிறுவனமான சூயஸை விவரிப்பதாக நூல் துவக்கம் கொள்கிறது. ஆனால் குடிநீர் தனியார் வசம் சென்றதற்கான தேவையை அலசுகிறார். உலகம் முழுக்க குறுக்கும் நெடுக்குமான ஓடும் நதிகளை சீராக்கி குடிநீர் வழங்க முடியும் என நினைக்கும் ஒரு பன்னாட்டு மூளையே அதனை வணிகப் பொருளாக்குகிறது. 24 மணிநேர குடிநீர் எனும் விளம்பரம் உலகம் முழுவதற்குமானதொரு சொல்லாடலாக நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் 24 மணி நேரமும் நீரை இடைவிடாமல் பயன்படுத்தப்போவது யார் எனும் கேள்வி பெரும்சிந்தனையை உருவாக்குகிறது.
மேலும் தனியாமயமாகும் சந்தையின் மூலதங்கள் பெருவாரியாக அதற்கு முன்னர் அரசின் வசம் இருந்திருக்கிறது. வர்க்க ரீதியான சமூக பிரிவுகளால் அனைத்தும் இலவசமாகவோ சலுகையாகவோ வழங்கவியலாத நிலையும், அல்லது சீரற்ற வழங்குதல்களையும் மேற்கொள்ளும் அரசிடமிருந்து சீரான வழிமுறைகளை சொல்லி நீராதாரங்களை தனியார் நிறுவனங்கள் தன்வசமாக்கிக்கொள்கின்றன. இதற்கு உதாரணமாக டில்லியில் தனியார்மயத்திடமிருந்து காப்பாற்றப்பட்ட குடிநீரை ஆசிரியர் முன்வைக்கிறார். ஆம் ஆத்மி கட்சியினரால் அரசியல் முன்மொழிவாக சொல்லப்பட்ட இலவச குடிநீர் குறிப்பிட்ட அளவை முன்வைத்து மக்களுக்கு இப்போதும் வழங்கப்படுகிறது. பாராட்டப்பட வேண்டிய ஆம் ஆத்மியின் செயல்களை விவரிக்கும் வழியே அதற்கு பின்னிருக்கக்கூடிய சித்தாந்த சிக்கலளையும் விவரிக்கிறார். அரசிற்கு லாபநோக்கம் கிடையாது. சேவையே அதன் அடிநாதம். ஆனால் தனியார் நிறுவனங்களுக்கோ லாபமே நோக்கம். அவர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கும் மக்களின் மேல் கரிசனம் காட்ட வேண்டிய தேவை என்ன ? இயற்கை வளம் பண்டமாகும் போது அதை நுகரும் மக்களிடம் பிரதிபலிக்கும் ஏற்றத்தாழ்வுகள் நிறுவங்க்களால் வளங்களின் மீதும் ஏற்றப்படுகிறது. அதுவே நீருக்கும் ஏற்பட்டது.
இங்கே நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களின் நிலையையும் விவரிக்கிறார்.. குடி நகர்த்துதலுக்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் நீர் எத்தகைய இடங்களை வகிக்கிறது என்று பேசப்படும் பகுதிகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நீரை இலவசமாகவோ சலுகையகவோ வழங்கும் நிலை தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும் போது அவர்களுடைய லாபம் ஆட்டம் காணத் துவங்குகிறது.. அதே அவ்வகையான மக்கள் நிறுவனங்கள் நீர் வழங்கும் இடத்தில் இல்லையென்றால் நிலையான வருமானத்தை நிறுவனத்தால் தக்க வைத்துக்கொள்ள முடியும் எனும் வணிக நோக்கம் மக்களுக்கு எதிரான சதியாக மாறிவிடுகிறது.
உலகம் முழுக்க நிகழ்ந்த நீர் தனியார்மயமாகும் இடங்களில் அவை ஏற்படுத்திய விளைவுகளையும், தங்களின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டி அந்நிறுவனங்கள் முன்னெடுத்த செயல்பாடுகளையும், அவை எந்த வகையில் எல்லாம் இயற்கையை மாசுபடுத்துகிறது என்பதையும், சுரண்டலின் உண்மையை அறிந்தவுடன் மக்களின் எதிர்வினையையும் ஆசிரியர் நூலில் பதிவு செய்கிறார். இந்தியாவில் நிகழ்ந்த போராட்டங்களையும், இன்னமும் குறிப்பாக தமிழகத்தில் நிகழ்ந்த நீர் வணிகம் குறித்த தகவல்களும் நூலில் நிரம்பி இருக்கின்றன. இந்நூல் எந்த நிறுவனத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றவில்லை. மாறாக அவர்களின் சிந்தனையை கேள்விக்குட்படுத்துகிறார். நீர் பருகுவது மனிதர்களின் அடிப்படை தேவையெனில் அதை காப்பதும் அவர்களின் கடமை. ஒவ்வொரு மனிதர்களுக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வும் அரசு செய்ய வேண்டிய, அல்லது அரசிடமிருந்து மக்கள் கோர வேண்டிய விஷயங்களையும் வெளிச்சமிட்டுக்காட்டுகிறது நீலத்தங்கம்.
- இந்து தமிழ் திசை
- இந்து தமிழ் திசை
1 கருத்திடுக. . .:
I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Post a comment
கருத்திடுக