ஒளிந்துகொண்டிருக்கும் மானுடம்


கதைகளின் அடிநாதமாக இருப்பது மானுடம். அவை மனிதர்களுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை புனைவுகளின் வழியே எழுத்தாளர்கள் விடுவிக்கிறார்கள். இந்த ஆட்டம் சமூகத்தின் அரசியலாகிறது. அந்த அரசியல் சில சமயம் மானுடத்தை விழுங்கி மனிதர்களிடம் பிரபலம் அடைய மட்டுமே போதுமான பண்டமாகவும் உருவெடுக்கிறது. இவையனைத்தையும் எளிய மனிதர்களிடமிருந்தான கதைகளாக மா.சண்முகசிவா உருவாக்கியிருக்கிறார். மலேசிய எழுத்தாளரான சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பை ம.நவீன் தொகுத்திருக்கிறார்.
ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலை சுமந்த வண்ணம் வாசகனிடம் அறிமுகம் கொள்கிறது. ஒவ்வொரு கதையும் வேறு வேறு காலகட்டத்தை பிரதிபலிப்பதாய் அமைந்திருக்கிறது. அக்காலகட்டத்தின் சமூகமும், மலேசிய மண்ணில் இருக்கும் தமிழ் மக்கள் மையப்படுத்திய அரசியலும், அதன் வழியே அவர்களின் சிக்குண்ட வாழ்க்கையையும் நுண்மையாக விவரிக்கிறார். “துர்க்காபாய்” எனும் சிறுகதை இத்தன்மைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது. கர்ப்பமாகும் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அவளுடைய பிரசவமும் அதற்கு பின்னான குறுகிய வாழ்க்கையையும் கதை விவரிக்கிறது. அதனூடே அச்சிறுமியை மையப்படுத்தி லாபமடிக்க விரும்பும்  அரசியல் விஷயங்கள் பகடியாக சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் கடந்து மனிதர்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மானுடம் வெளிப்படும் இடங்கள் வாசிப்பிலும், வாழ்க்கை குறித்த புரிதலிலும் ஓர் ஆசுவாசத்தை அளிக்கிறது.
உடல் மீது செலுத்தப்படும் ஆதிக்கம், மாந்திரீக செயல்களை முன்வைத்து நிகழ்த்தப்படும் அதிகார வேட்கை, நம்பிக்கைகளின் மீது கட்டமைக்கப்படும் அரசியல் முதலிய பல நுட்பமான கதைகளை தனித்துவமான பார்வையில் முன்வைத்திருக்கிறார். அசோகமித்திரனின் “புலிக்கலைஞன்” சிறுகதைக்கு நிகரான தன்மையில் “ஒரு கூத்தனின் வருகை” சிறுகதையை ஒப்பிட முடிகிறது. தெருக்கூத்து வாழ்க்கையின் நினைவோடையும், அதன் அர்த்தமிழந்து இருக்கும் சமகாலத் தன்மையும், அதற்கு போட்டியாக முளைத்திருக்கும் திரை ஊடகம் குறித்த விமர்சனமும், தன் கலை அழிந்து போகிறது எனும் எண்ணம் கொடுக்கும் ஆற்றாமையும், கலைஞனாக மட்டுமே வாழ்வதில் இருக்கும் அசௌகரியமும், பணம் மதிப்பிழக்கும் கலையின் மீதான நம்பிக்கையும் என கதை நாயகனான கூத்தனின் வாழ்க்கை பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக வாசிப்பில் நிலைகொள்கிறது.
மலேசிய மண்ணின் வாசனையை அதன் ஈரத்துடன் சேர்த்தே சுமந்து வருகிறது மா.சண்முகசிவாவின் சிறுகதைகள்.

- இந்து தமிழ் திசை

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக