காந்தியை வரையும் சொற்கள்


காந்தியை வாசிப்பது கிட்டதட்ட இந்தியாவை வாசிப்பதற்கு சமமானதாகும். இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கியமான காலகட்டம் பலவற்றில் அவருடைய பங்களிப்பு முதன்மையானதாக இருந்திருக்கிறது. மேலும் காந்திய எழுத்துகள் பல ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவை மட்டுமின்றி காந்தி குறித்து எழுதப்பட்ட விஷயங்களும் லட்சக்கணக்கான பக்கங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் வழி காந்தியை எப்படி முழுமையாக அறிந்துகொள்ளலாம் எனும் கேள்வி வாசகனுக்கு நிச்சயம் எழும். காந்தியை அறிந்து கொள்ள விரும்பும் பலர் காந்தியின் எழுத்துகளிலிருந்தே துவங்குகின்றனர். விரைவிலேயே பரவலாக சொல்லப்படும் காந்தி குறித்த அவதூறுகளில் விழுந்து அவரை எளிதில் கடந்து விடுகின்றனர். எளிதில் கடந்து செல்லக்கூடியவர் அல்ல காந்தி என்பதை அவர் குறித்த பன்முகப் பார்வைகளின் வழியே “அன்புள்ள புல்புல்” எனும் நூல் மூலம் சுனில் கிருஷ்ணன் கூற முற்பட்டிருக்கிறார்.



காந்தி குறித்து பரவலாக அறியப்படும் எதிர்மறையான விமர்சனங்களாவன,
  • வன்முறையை கைவிட்டு ஏன் சத்தியாகிரக போராட்ட முறையை மேற்கொண்டார் ?
  • அகிம்சையை வாழ்க்கை லட்சியமாக கொண்ட காந்தி பகத் சிங் மற்றும் அவரது சக போராளிகளின் தூக்கு தண்டனை குறித்து வாய் திறக்காதது ஏன் ?
  •  பிரிவினையை எதிர்த்த காந்தி தன் கடைசி உண்ணாவிரதத்தை பிரிவினை சார்பாக (பாகிஸ்தானிற்கு சேர வேண்டிய 55 கோடி ரூபாயை கொடுக்க வேண்டி) மேற்கொண்டது ஏன் ?


இது போன்று அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை விரிவாக ஆராய்கிறார். மேலும் அதற்கு துணையாக காந்தி குறித்து மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளை எடுத்தாள்கிறார். நூலில் முன்வைக்கப்படும் விளக்கங்களும் தரவுகளும் வெறும் காந்தியின் சார்பாக மட்டும் தேங்கிவிடாமல் காலம் கடந்தும் கடத்தப்பட்டாமல் கைவிடப்பட்ட வரலாற்றுப்பிழைகளை கோடிட்டு காட்டுகிறது.

காந்தி சுதந்திரத்திற்காக போராடிய மனிதரல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமான வாழ்வியலை மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் போராடியவர். அவருடைய போராளி கூட்டத்தில் அல்ல. தனிமனிதனிடமே அடைக்கலம் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு மனிதனிடமும் மாற்றத்தை காண விழைந்த காந்தி கல்வி, சுகாதாரம், உணவு, எளிய வாழ்க்கை முறை முதலியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினார். இவற்றுள் பல விஷயங்கள் வெறும் கனவாக தேங்கிவிட்டது எனும் குரலையும் நூலின் பல இடங்களில் காண முடிகிறது.

காந்தியின் சத்தியாகிரக போராட்ட முறை பற்றிய நான்கைந்து கட்டுரைகள் நூலில் வாசிக்க கிடைக்கின்றன. அவை நுணுக்கமாக சத்தியாகிரகம் எனும் போராட்ட வடிவத்தை ஆராய முற்படுகிறது. வன்முறையை பிரயோகிக்கும் ஒருவனிடம் வன்முறையை பிரயோகித்து எளிதில் ஆட்சியையோ நாட்டையோ பிடித்துவிடலாம். கைபற்றியபின் ஆளுபவர்கள் முன்பிருந்ததை காட்டிலும் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள். அப்போது மக்களுக்கு முன்பிருந்தவர்களிடம் இருந்ததைக் காட்டிலும் அதிகமான பயம் இருக்கும். ஆளுபவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி மேலும் அதிகமாகும். அங்கு அன்பு இருக்க வாய்ப்பில்லை. இந்த அன்பை அடையாளம் கண்டு அதை ஆயுதமாக்கியவர் காந்தி என்கிறார். ஒத்துழையாமை போராட்ட வடிவத்தை பற்றி எரிக்கா என்பவரின் நெடிய ஆய்வின் வழியே காந்தியின் ஒத்துழையாமை போராட்ட முறையை ஒப்பிடுகிறார். அதன் வெற்றிகளையும் பல மக்களிடம் சென்று சேர முடியாத தோல்விகளையும் கணக்கிட முயல்கிறார். அவருடைய செயல்பாட்டிற்கு ஒப்பீடுகளின் வாயிலாக இக்கட்டுரைகள் வடிவம் கொடுக்க முயல்கின்றன. அன்று இயல்பாக நிகழ்ந்த செயல்பாடுகள் இவ்வடிவ நேர்த்திகளுக்கு பின் பேருருவங்களாக எழுச்சி கொள்கின்றன.

‘ஒத்துழையாமை போராட்டங்கள்’ எனும் கட்டுரையை தொகுப்பின் முக்கியம் வாய்ந்த கட்டுரையாக கருதுகிறேன். தரம்பாலின் எழுத்துகளிலிருந்து நுட்பமான விஷயங்களை எடுத்து ஒத்துழையாமை எனும் வடிவத்தை இந்திய மரபாக நிறுவ முயல்கிறார். காந்தியின் போராட்ட வடிவம் அவருடையதன்று. மாறாக இந்திய மண்ணில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு வாழ்வியல் முறை என்பதை பல்வேறு போராட்டங்களின் விரிவான தகவல்களின் வழியே பகிர்கிறார். மேலும் ஆங்கிலேயர்களுக்கு முன்பு ஆண்டு வந்த மன்னர்களிடம் ஒத்துழையாமை போராட்டங்கள் எளிமையாக வெற்றி அடைந்திருக்கின்றன. மக்களை நம்பியே மன்னரின் ஆட்சி நிகழ்ந்திருக்கிறது. அப்போது மக்களுக்கும் மன்னருக்குமான இடைவெளி குறைவு. மேலும் மன்னருக்கு மக்கள் தம்மை தகர்த்து எறிந்துவிடுவார்கள் எனும் பயம் இல்லை. அதே ஆங்கிலேயர்களிடம் இந்த பயம் இருந்ததனாலேயே ஒத்துழையாமை போராட்டங்களை புரிந்து கொள்ளமுடியாமல் விழித்திருக்கின்றனர். மக்களுடன் ஆட்சியதிகாரங்களில் இருப்பவர்களை பெரிய இடைவெளியில் அமர்த்த முயற்சி மேற்கொள்கின்றனர். அங்கே ஒத்துழையாமை ஓர் ஆயுதமாக உருவம் கொள்கிறது என்பதை விளக்கும் பக்கங்கள் உலகிற்கு இந்தியா பேராயுதமொன்றை நல்கியிருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

ஒவ்வொரு கட்டுரையும் காந்தி குறித்தும் அல்லது காந்தியத்தை குறித்தும் வேறுவேறு எழுத்தாளர்கள் எழுதியவற்றிலிருந்து அல்லது ஆய்வுகளிலிருந்து பேசப்படுகிறது. ஆனால் அதில் சுனில் கிருஷ்ணன் எடுக்கும் நிலைப்பாடு சமகாலத்தன்மையில் காந்தியின் தேவை என்ன எனும் கேள்விக்கு விடையறுப்பதாக அமைகிறது.  எதிர்மறை விமர்சனங்களால் மட்டுமே பெரிதாக அறியப்படும் காந்தி அனைவராலும் அறியப்பட வேண்டியவர், விவாதிக்கப்பட வேண்டியவர் என்பதை இந்நூல் சுட்டும் பல்முனைப் பார்வை தெளிவுறப் பேசுகிறது.

இந்நூல் காந்தி குறித்த அறிமுக நூலன்று. மாறாக சிறிதாக அறியப்பட்ட காந்தியை எவ்வழியில் அணுகலாம் எனும் கேள்விக்கு பாதை காட்டும் எளிய நூல். சொற்களால் கசடுகளை நீக்க முயன்று வரையப்படும் காந்தியின் ஓவியத்தை இந்நூலில் வாசகர்களால் கண்டுகொள்ளமுடியும்.

- இந்து தமிழ் திசை
- 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a Comment

கருத்திடுக