புதுமைப்பித்தனின் சமகாலத் தேவை!

தமிழில் எழுத்தாளனாக எழ விரும்புபவர்கள் நிச்சயம் முன்னோடிகளை வாசித்திருக்க வேண்டும். இது இலக்கியம் கோரி நிற்கும் விஷயமா என்பதைக் காட்டிலும் சுயதர்க்கத்திற்கும் சுயமதிப்பீட்டிற்கும், எம்மரபின் நீட்சி நாம் என்பதை அறி்வதற்கும் பேருதவி புரியும். அதில் நவீன கதையாசிரியர்களில் முக்கியமானவர் புதுமைப்பித்தன். பள்ளி நாட்களில் துணைப்பாடப் பகுதியில் வாசித்த கதைகளோடு அவருடனான பரிச்சயம் முற்றுப் பெற்றிருந்தது. அதன் பிறகு புதுமைப்பித்தனை வாசித்தத்தில்லை

கதைகளுக்கான நவீன இலக்கியம் புதுமைப்பித்தனிடம் தொடங்குகிறது. இந்த ஒரு கூற்று பல்வேறு எழுத்தாளர்களால் தொடர்ந்து சொல்லப்பட்டு வருபவை ஆகும். இதை சமகாலத் தராசில் இட்டுப் பார்க்கும் தலைமுறையில் வந்தவன் நான். அந்த மதிப்பீடு புதுமைப்பித்தனை நெருங்குவதற்கு பெரும் சவாலாக இருந்தது. இருக்கிறது. அதைக் கடந்து வாசித்தபோது வேறு ஒரு புரிதலைக் கொண்டேன். வாசிப்பும் எழுத்தும் செல்லாக்காசின் இரு பக்கங்கள். சமகாலத்திலிருந்து அதை மதிப்பிட முனையும்போது அவை செல்லாக்காசாக மட்டுமே மிஞ்சும். காலம் தான் அதன் மதிப்பை தீர்மானிக்கிறது. காலத்தை வைத்தே அதன் நிலையையும் உணர்தல் அவசியமாகிறது.

புதுமைப்பித்தனை ஆரம்பிப்பதற்கு முன் எனக்குள் சில அடிப்படை கேள்விகள் இருந்தன. எல்லோரும் முன்னோடி என சொல்வதாலேயே அவருடைய கதைகளை வாசிக்க வேண்டுமா ? அதைக் கொண்டாட வேண்டுமா ? சமகாலத்தில் புதுமைப்பித்தனின் கதைகள் செல்லுபடியாகுமா ? வாசித்து முடிந்த பின் இப்போதிருக்கும் பார்வையில் என்னுள் முளைத்த இக்கேள்விகள் விடலைத்தனமானதாக தோன்றுகிறது. எழுத்தாளர்களுக்கும் சரி வாசகர்களுக்கும் சரி நவீன வாழ்க்கையை கதையின் வடிவில் கொடுத்து சென்றிருப்பவர் புதுமைப்பித்தன்.

அவருடைய கதைகள் சொற்களின் விளையாட்டாகவே படுகிறது. சொற்கூட்டங்களையும் அதன் வழியே அறிதல் மற்றும் அனுபவத்தை ஒன்றிணைத்து விதவிதமாக விளையாடியிருக்கின்றன அவருடைய கதைகள். மரபிலக்கியத்திலிருந்து நவீன வாழ்க்கை சார்ந்து பேச வந்த காலத்தில் கலாச்சார விழுமியங்களுடன் ஒன்றி எழுதும் போக்கும், அதை விமர்சிக்கும் போக்கும் கிளைபிரிகிறது. வாழ்க்கையை பேசுவது மட்டுமே நவீன இலக்கியம் அன்று. மாறாக நவீன வாழ்க்கையை காலத்தை வைத்தும் காலத்தோடும் பரிசீலிப்பதே நவீன இலக்கியம் எனும் விஷயத்திற்கு இவருடைய கதைகள் முன்னோடியாக அமைகிறது.என்வசம் இருப்பது வீ.அரசு தொகுத்து அடையாளம், பதிப்பகம் வெளியிட்ட புதுமைப்பித்தன் கதைகள் எனும் தொகுப்பு. இத்தொகுப்பில் அவருடைய கதைகளை மூன்றாக வகைப்படுத்தியிருக்கிறார். பல பரிமாணக் கதைகள், எளிய கதைகள், தழுவல் கதைகள் என மொத்தம் 102 கதைகளை தொகுத்திருக்கிறார். இந்த 102 கதைகள் அனைத்துமே காலம் கடந்து நிற்குமா எனில் அதை காலமே தீர்மானிக்கும். ஆனால் 102 இலிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வேறு வேறு வகைகளில், வடிவங்களில் கதை சொல்ல முயன்றிருக்கிறார்.

இவர் கதைகள் யதர்த்த வாழ்க்கையை களமாக கொள்ள முற்பட்டிருக்கின்றன. அதன் வழியே அக்காலத்திய தகவல்கள், நிகழ்வுகள், மனிதர்கள், நிலவியல் வர்ணனை போன்றவை விவரமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதே நேரம் இவை மட்டுமல்ல கதை எனும் தெளிவும் வாசகனை பிரமிக்க வைக்கிறது.

‘கல்யாணி’ என்றொரு சிறுகதை. பால்ய விவாகம் செய்த குழந்தையிடம் இருக்கக்கூடிய காதலை மையப்படுத்திய கதை. பெண்ணால் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலைக்கு சமூகம் காரணமாகிறது. சமூகம் வகுக்கும் கலாச்சாரம் காரணமாகிறது. இந்நிலையில் வாழ்க்கையும் காதலும் இருவேறு திசைகளாகின்றன. பால்ய விவாகம் குறித்த வர்ணனையும் கல்யாணியின் நிலையும் அக்காலத்தின் ஆகச் சிறந்த சான்றாக புனைவில் உருக்கொள்கிறது. சர்மாவின் மீதான காதலும் சுப்புவைய்யரை இரண்டாம் தாரமாக மணந்து கொள்ளுதலும் இரண்டு எல்லைகளை கல்யாணிக்கு தீர்மானிக்கின்றன. ஒன்று சுதந்திரம்  மற்றொன்று சம்பிரதாயம் எனும் எல்லை. இவ்விரண்டிற்கும் இடையில் பந்தாடப்படும் வாழ்க்கை கலியாணியினுடையது.

சற்று யோசித்தால் இந்த பந்தாட்டம் கல்யாணிக்கு மட்டுமானதல்ல. புதுமைப்பித்தன் மட்டுமல்லாமல் முன்னோடிகள் படைப்பித்த அத்தனை பெண் கதாபாத்திரங்களுக்கும் இந்த சங்கடம் அல்லது முரண் நீடித்த வண்ணமே இருக்கிறது. காலத்தைப் பொறுத்து இதன் உருவம் மாற்றம் கொள்கிறதே அன்றி இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

புதுமைப்பித்தனும் உயர்ந்த இடத்தில் வைக்கக்கூடிய ஒரு விஷயம் குடும்பம். சில மாதங்கள் முன்பு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் கதைகள் குடும்ப அமைப்பின் அடிப்படையிலே நிலைத்து நிற்கும் என்று கூறினேன். சிலர் விமர்சித்தனர். இந்த கூற்று என் முன்னோடிகள் எனக்கு கற்று தந்தது. அதில் புதுமைப்பித்தனும் விதிவிலக்கில்லை. குடும்ப அமைப்பு காலந்தோறும் மாற்றம் கொள்கிறது. அந்த மாற்றம் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையிலும் எடுக்கும் முடிவுகளிலும் எதிரொலிக்கிறது. வாழும் விதத்தை குடும்பமே தீர்மானிக்கிறது. நன்மையும் தீமையும் அறியாமையும் மண்டிக் கிடக்கும் ஊற்று அது. அங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் யார் எனில் பெண்கள் தான்.

புதுமைப்பித்தனின் கதைகளில் தோராயமாக பாதிக்கும் மேலான கதைகள் பெண்களை மையப்படுத்திய சிறுகதைகளாகவே இருக்கின்றன. குடும்பம் எனும் அமைப்பை ஒன்றிணைக்கும் புள்ளியாக பெண்ணே இருக்கிறாள். இருப்பினும் அதிகமான சட்ட திட்டங்களுக்கு, அதிகாரத்திற்கு ஆளாவதும் பெண்ணாக இருக்கிறாள். இந்த முரண் நீடிக்கும் வரை அல்லது இந்த குழப்பத்தின் முடிச்சு அவிழும் வரை குடும்பத்தை மையப்படுத்திய கதைகள் தமிழ் மரபில் நீடித்த வண்ணமே இருக்கும். பின்நவீனத்துவ இலக்கியம் மரபை உடைப்பதன் வழி குடும்பம் எனும் அமைப்பை உடைக்க யத்தனிக்கிறது. உடையும் பட்சத்தில் சின்னதொரு குடும்ப அமைப்பே உருவாகும் என்பதை புனைவுகள் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன. குடும்பம் வலுவான அதிகாரம்.

சமகாலத்தில் புதுமைப்பித்தனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை,
சமகலாத்தில் நிகழும் அரசியல்/சமூக நிகழ்வுகளை மதிப்பீடு செய்ய குடும்ப அமைப்பிலிருந்து பார்ப்பது வலிமையானதாய் அமையும்.

1. ‘கடவுளின் பிரதிநிதி’ சிறுகதையில் காந்தியத்தை பரப்ப மனிதர் ஒருவர் வருகிறார். காந்தி மீதிருந்த ஈர்ப்பு பலரை அவர் பேச்சு கேட்க கூட்டுகிறது. ஆனால் உடன் பயணிக்கும் சாதியத்தன்மை அவருடைய கருத்தை உள்வாங்குவதில் தடையாய் இருக்கிறது. இந்த முரணை அல்லது சாதியத்தை விளிம்பு நிலையிலிருந்தே எழுதுகிறார். இக்கதையில் வரும் மனிதர்கள் விளிம்பு நிலையில் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஒடுக்குமுறையை ஏற்கும் மனிதர்களை யார் உருவாக்குகிறார்கள் ? இந்தக் கேள்விக்கான பதிலை கதைகளின் வழியே கொடுக்கிறார்.

2. காலத்தைப் பொருட்டு மாறும் சமூக நிகழ்வுகளை காலத்தை வைத்து மட்டும் பார்க்காமல் அப்போது வாழ்ந்த மனிதர்களின் நிலையிலிருந்து அணுகுவது. கல்யாணி சிறுகதை பால்ய விவாகத்தை முன்னிறுத்தியது. ஆனால் கல்யாணியை வைத்து மட்டும் நகரும் சிறுகதை பெண்ணிற்கு இருக்கும் சுதந்திரமற்ற தன்மையை பேசுகிறது. அப்படி பேசும் பட்சத்தில் பால்ய விவாகம் இருந்த நேரமாகினும் சரி, அது நீங்கிய பிற்காகினும் சரி பெண்ணிற்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது எனும் உண்மையை நோக்கி நம்மை நகர்த்துகிறது.

3. தொன்மம், புராணக் கதைகளை மீட்டுருவாகம் செய்யும்போது சமகால கருத்தியல்களிலிருந்து பார்ப்பது அவசியமாகிறது. இது சில கதைகளை மரபு எனும் காரணத்தினாலேயே ஏற்றுகொள்வதிலிருந்து விடுதலையளிக்கிறது. அகல்யை, சாப விமோசனம், ஆற்றங்கரைப் பிள்ளையார் முதலிய கதைகள் பழைய கர்ண பரம்பரைக் கதைகளுக்கு நவீன கருத்தியல்களை அளிக்கிறது. மரபை பரிசீலிப்பது நவீனத்தின் பிரதான செயல்களுள் ஒன்று. இவை வாய்மொழிக் கதைகளுக்கும் பொருந்தும். எ.கா.வேதாளம் சொன்ன கதை, காலனும் கிழவியும் முதலியன.

4. நிறுவப்பட்ட மதிப்பீடுகளை பரிசீலனை செய்வது. கோபாலய்யங்காரின் மனைவி சிறுகதையில் சாதீயத்தை வெளிப்படையாக சாடுகிறார். இடைச்சியை மணம் செய்த பிராமணனின் கதை. ஆனால் அக்கதை ஒரு காதல் கதை. Lust கதை என்றும் சொல்லலாம். ஆனால் அவர்களுக்குள் இருக்கக்கூடிய காதலின் ஸ்பரிசம் சமூக மதிப்பீடுகளின் மீதான விமர்சனம்! இந்த மதிப்பீடுகள் காலம் பொருத்து மாறக்கூடியவை. இப்போது சாதியம் சார்ந்த மதிப்பீடுகள் புதுமைப்பித்தன் அணுகிய வண்ணம் நிச்சயம் இருக்காது. ஆணவக் கொலைகள் மலிந்திருக்கக்கூடிய காலகட்டத்தில் அதன் உருவம் வேறு விதத்தில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் அதை எழுத வேண்டும் எனும் நிர்பந்தத்தையும் எப்படி எழுதலாம் எனும் எடுத்துக்காட்டையும் புதுமைப்பித்தன் அளிக்கிறார்.

இது போன்று மேலும் சில விஷயங்களை வாசகர்கள் அடுக்கக்கூடும். இவை புதுமைப்பித்தனுக்கு மட்டுமானதன்று. மாறாக அனைத்து முன்னோடிகளின் படைப்பும் இவ்வகைமைகளுக்குள் சிக்க வல்லவை. ஆனால் நவீன இலக்கியத்தின் ஆரம்பத்திலிருந்து தமிழ் இலக்கியத்தின் நீரோட்டத்தை வரையறுத்த தீர்க்கதரிசியாக பரீட்சார்த்த முயற்சிகள் செய்த முன்னத்தி ஏராக புதுமைப்பித்தன் எனக்குள் உருவம் கொள்கிறார். அவருடைய கதைகளுக்கு அவர் கொடுக்கும் விளக்கம், நவீன இலக்கியத்திற்கான விளக்கமாக பரிணமிக்கிறது. அதாவது,

“அவரவர் மனசுக்கு உகந்த ரீதியில் இருப்பவைகளே புதுமை எனக் கொள்ளப்படுகின்றன. நான் பொருள் கொடுக்கும் பித்தம்தான் அதில் புதுமை. என் கதைகளின் புதுமை அதுதான்”

புதுமைப்பித்தனின் நீட்சி பல்வேறு கோணங்களில் நீடித்திருக்கின்றன. சமகாலத்தின் நோக்கில் அவரின் விதைகள் விருட்சமாகியிருக்கின்றன. ஆனாலும் விதையை அறிவது அடிப்படை எனும் நோக்கில் புதுமைப்பித்தன் எழுத முனைபவர்களுக்கும், நவீன இலக்கியத்தை நுகர ஆசைப்படுபவர்களுக்கும் மகத்தான முன்னோடியாக திகழ்கிறார்.

பி.கு :  சில வாரங்களுக்கு முன்பு புதுமைப்பித்தனின் “அகலிகை” மற்றும் “சாப விமோசனம்” சிறுகதைகளைப் மையப்படுத்தி எழுதியிருந்த பதிவு - http://www.kimupakkangal.com/2018/06/blog-post_23.html?m=1

Share this:

CONVERSATION